தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 14 - மதன்

பிரோஸ் துக்ளக்..

கடைசி டெல்லி சுல்தான்..!

20201020195310614.jpeg

யார் மீதாவது துளி சந்தேகமோ, ஆத்திரமோ வந்தால் உடனடியாக அவருடைய தலையைச் சீவச் சொல்லி ஆணையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த முகமது பின் துக்ளக், கடைசிவரை ஒருவர்மீது மட்டும் மிகுந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்தார். அவர்தான் பிரோஸ் துக்ளக். முகமது பின் துக்ளக்கின் ஒன்றுவிட்ட சகோதரர் - சொந்த சித்தப்பா மகன். அதற்கேற்ப, பிரோஸ் துக்ளக்கும் சற்றும் பதவிமீது ஆசைப்படாமல், எந்த நிர்ப்பந்தத்திலும் கட்சி மாறாமல் ‘என் பணி - அண்ணன் முகமது பின் துக்ளக்குக்குப் பணிசெய்து கிடப்பதே’ என்று விசுவாசமாகப் பணியாற்றி வந்தார்.

முகமது பின் துக்ளக் நன்றி மறக்கவில்லை. இறப்பதற்குமுன் பிரோஸ் துக்ளக்கைச் சைகையால் அருகில் அழைத்தார். அவர் கரத்தை அன்புடன் பிடித்தவாறு, படுக்கையைச் சுற்றி நின்ற அமைச்சர்களிடம், “எனக்குப் பிறகு பிரோஸ்தான் ஆட்சிக்கு வரவேண்டும்...” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடினார். பிரோஸ் துக்ளக் நாற்பத்தைந்து வயதைக் கடந்த நிலையில், திடீரென்று அவருக்கு ராஜயோகம் வந்து சேர்ந்தது! திகைத்துப் போனார் பிரோஸ். அவருக்கு மன்னராவதில் உண்மையிலேயே விருப்பமில்லை! “என்மீது வைத்த அன்பின் காரணமாக மன்னர் எதையோ சொல்லிவிட்டார்” என்று கழற்றிக்கொள்ளப் பார்த்த அவரை, பிரபுக்கள் வற்பறுத்தி வாரிசாகப் பொறுப்பேற்க வைத்தார்கள். இதெல்லாம் நிகழ்ந்தது டெல்லிக்கு மிகத் தொலைவில், சிந்து மாகாணத்தில் - யுத்தகளத்தில்.

முகமது பின் துக்ளக் இறந்த செய்தியும் பிரோஸ் வாரிசாகச் தேர்ந்ததெடுக்கப்பட்ட செய்தியும். டெல்லிக்குப் போய்ச் சேர... அங்கே திடீரென்று ஒரு குட்டிச் சோதனை கிளம்பியது! மறைந்த முகமது பின் துக்ளக்கின் உறவினரான க்வாஜா ஜஹான் என்பவர், தன் தொண்ணூறாவது வயதில் சும்மாயிருக்காமல், ஒரு ஆறு வயதுப் பையனை ‘முகமது பின் துக்ளக்கின் மகன்’ என்று அறிவித்து, அரியணையில் அமர்த்தினார்!

சிந்து நதிக்கரையில் மங்கோலியர்களைச் சமாளித்துக் கொண்டிருந்த பிரோஸ் துக்ளக், உடனே டெல்லிக்குத் திரும்ப முடியாத நிலை! அப்போதைக்கு எதிரிகளைச் சமாளித்துத் துரத்திவிட்டு, டெல்லியை நோக்கிக் கிளம்பினார் பிரோஸ்.

பாதி வழியில் பிரோஸ் துக்ளக்கை தூதுவர்கள் வந்து பிரோஸ் துக்ளக்கை எதிர்கொண்டனர். புதிய சுல்தான் டெல்லியில் பதவியேற்று விட்டாரென்றும் ஆகவே, பிரோஸ் துக்ளக் டெல்லிக்கு வந்து சேர்ந்த கையோடு தன் வணக்கங்களை முறைப்படி தெரிவிக்க வேண்டும்' என்றும் சொல்ல... ‘சரி, போகட்டும்’ என்று அப்போதுகூட பிரோஸ் பொறுப்பிலிருந்து கழன்று கொள்ளப் பார்த்ததாகக் கேள்வி!

ஆலோசகர்கள் விடவில்லை. “மறைந்த சுல்தானுக்கு வாரிசு எல்லாம் கிடையாது. இதெல்லாம் க்வாஜா ஜஹான் என்ற கிழம் செய்த ‘செட்டப்!’ ” என்று பிரோஸுக்கு எடுத்துச் சொன்னார்கள். வழிக்கு வந்த பிரோஸ் துக்ளக், ஒருவழியாகப் பெரும்படையுடன் டெல்லி எல்லையில் நுழைய…
தலைநகரத்து மக்களும் அரண்மனையிலிருந்த பிரபுக்களும் கூடி நின்று கரவொலியுடன், பிரோஸ் துக்ளக்கை கோலாகலமாக வரவேற்றனர். பயந்துபோன முதியவர் க்வாஜா ஜஹான் ‘என்ன, ஏது’ என்று பார்க்காமல், அரியணையில் அமர்ந்திருந்த சிறுவனைக் கீழே இறக்கிவிட்டு, குதிரையிலிருந்து குதித்துக் கம்பீரமாக அரண்மனைக்குள் நுழைந்த பிரோஸ் காலடியில் தன் தலைப்பாகையை வைத்து மண்டியிட்டு வணங்கி மன்னிப்புக் கேட்டார்!

‘தொண்ணூறு வயது கிழவருக்கு என்னதான் தண்டனையைக் கொடுத்துத் தொலைப்பது..?’ என்று நினைத்தாரோ என்னவோ... பெரியவருக்கு மன்னிப்பு வழங்கினார் பிரோஸ் துக்ளக் (உண்மையில், சில நாட்கள் சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அந்தப்புரத்தில் இருந்த ஒரு ராணிக்கும் முகமது பின் துக்ளக்குக்கும் பிறந்த நியாயமான வாரிசுதான்’ என்று துக்ளக் காலத்தில் வாழ்ந்த சில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், ‘திடீர் திடீரென்று குழந்தைகளையெல்லாம் பட்டத்தில் அமர்த்தும் விளையாட்டெல்லாம் இனி வேண்டாம்!’ என்று பெரியவர்கள் முடிவு எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது!).

பெரியவருக்கு மன்னிப்பு வழங்கிய பிரோஸ் துக்ளக், அவரை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லி வெளியூருக்குச் சில வீரர்களின் துணையோடு அனுப்பி வைத்தார். போகிற வழியில் முதியவரைத் தீர்த்துக் கட்டினார்கள் அவர் கூடச் சென்றவர்கள். பிரோஸ் ரகசியமாக அந்த வீரர்களிடம் கண்சிமிட்டி அனுப்பினாரா, இல்லையா என்பது பற்றித் தகவல் இல்லை!

செப்டம்பர் 14, கி.பி.1351-ல் ஜொலிக்கும் வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட மகுடம், சுல்தான் பிரோஸ் துக்ளக் தலையில் ஏறி அமர்ந்தது.

பழைய டெல்லி சுல்தான்களின் வீரம், சாமர்த்தியம், போர்த்திறன், வஞ்சகம், ராஜதந்திரம், கொலைவெறி எதுவும் பிரோஸ் துக்ளக்கிடம் இல்லை. இருப்பினும், இந்தச் சுல்தான் டெல்லியில் அமர்ந்து ஆண்டது முப்பத்தேழு ஆண்டுகள்!

பல மன்னர்கள் ஆட்சியில் சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விஸ்தரிப்பதுண்டு. பிரோஸ் துக்ளக் ஆட்சியில் அது குறுகிக்கொண்டே போனது. டெல்லியின் பிடியிலிருந்து இந்தியாவின் தெற்குப் பகுதி அடியோடு நழுவியது. அதைத் தடுக்க பிரோஸ் துக்ளக் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருந்த ஷாம்ஷுதீன் இலியாஸ், கிழக்கு வங்கத்தையும் கைப்பற்றி, தன்னைச் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். ‘இதைச் சும்மா விடக்கூடாது’ என்று எல்லோரும் எடுத்துச் சொல்லவே, வேண்டாவெறுப்பாக 70,000 குதிரை வீரர்கள் கொண்ட ஒரு படையுடன் கிளம்பினார் பிரோஸ் துக்ளக்.

1353-ம் ஆண்டின் கடைசியில் நடந்த இந்த வங்காளப் போரில் ஷாம்ஷுதீன் தோற்றுத் திரும்பி ஓடி, கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டார். கோட்டையை உடைத்துக் கொண்டு முன்னேறியிருந்தால், வங்காளம் பிரோஸ் காலடியில் துவண்டு விழுந்திருக்கும். ஆனால், சுல்தான் திடீரென்று மனதை மாற்றிக் கொண்டார். “போரில் வெற்றி பெற்றாகி விட்டது... டெல்லி திரும்பலாம்” என்று ஆணையிட்டார். படைத் தளபதிகள் திகைத்துப்போனார்கள். பிரதம தளபதியான தார்தார்கான், “இப்படி ஒரு வாய்ப்பைக் கோட்டை விடுவதா?” என வெறுத்துப் போய்த் துணிச்சலோடு உரக்கவே கேட்டதாகத் தகவல். ஆனால், பிரோஸ் துக்ளக் டெல்லி திரும்புவதில் பிடிவாதமாக இருந்தார்.

பிரோஸ் துக்ளக்கின் ஆஸ்தான அரசியல் குறிப்பெழுத்தாளரான ஸிராஜ் அபீஃப் என்பவர், ‘ஷாம்ஷுதீன் இலியாஸ் தோற்றவுடன் கோட்டைக்குள்ளிருந்து பெண்களும் குழந்தைகளும் பெரும் குரலெடுத்துக் கதறினார்கள். அது வெளியிலிருந்த பிரோஸ் துக்ளக் காதில் விழுந்துவிட்டது. சற்று மனக்கலக்கம் அடைந்துவிட்டார் சுல்தான்.
கோட்டைக்குள் டெல்லிப் படை புகுந்துவிட்டால், பிறகு வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாது... புகுந்து விளையாடி விடுவார்கள் என்பது பிரோஸுக்குத் தெரியும்!” என்று குறிப்பிடுகிறார். இப்படி, ஒருவித தர்மசங்கடத்துடனும், விருப்பமில்லாமலும் படைக்குத் தலைமை வகித்தால் எப்படி சாம்ராஜ்யம் குறுகாமல் போகும்...?!

ஆறு வருடங்கள் கழித்து, மறுபடியும் பிரோஸ் துக்ளக் வங்காளத்தை நோக்கிப் படையெடுக்க வேண்டிவந்தது. ஷாம்ஷுதீன் இலியாஸ் இறந்தபின் பதவிக்கு வந்திருந்த அவரது மகன் சிகந்தர்ஷா - தந்தையைவிட அடாவடித்தனத்துடன், “வங்காள எல்லையை விஸ்தரிக்கப் போகிறேன்!” என்று படையைத் திரட்டிக்கொண்டு பிரச்னைகளை ஏற்படுத்தியதுதான் காரணம்!

“டெல்லிப் படையுடன் நேருக்கு நேர் எதிர்த்து வெல்ல முடியாது. ஆகவே, முழுக் கவனத்தையும் தற்காப்பு நடவடிக்கையில் செலுத்துவோம்! என்று முடிவெடுத்திருந்த சிகந்தர்ஷா, தன் கோட்டையிலிருந்து வெளியே வரவே இல்லை! தொடர்ந்து சில மாதங்கள் முற்றுகையிட்டும் பிரோஸ் துக்ளக் படையால் கோட்டையைக் கைப்பற்றவும் முடியவில்லை.
உள்ளே நுழைய விடாமல் டெல்லி வீரர்கள்மீது வங்காள வீரர்கள் தொடர்ந்து அம்புகளையும் ஈட்டிகளையும் எய்து ஆவேசமாகத் தடுத்தார்கள். இந்த நெருக்கடியான நிலையில், சிகந்தர்ஷா புன்முறுவலுடன் எதிர்பார்த்ததைப் போல... இயற்கையும் அவர் துணைக்கு வந்து சேர்ந்தது. திடீரென்று ஆரம்பித்தது அசுரத்தனமான புயல்... பிறகு, பயங்கர மழை! வீசிப் பாய்ந்தது வெள்ளம். (இன்றைக்கும் வங்காளத்தில் மழை, வெள்ளம் என்று ஆரம்பித்தால் அதுபற்றிச் சொல்லத் தேவையில்லை அல்லவா?!) விளைவாக, டெல்லிப் படை சேற்றிலும் இடுப்பளவு நீரிலும் தட்டுத்தடுமாறிப் பின்வாங்க நேர்ந்தது!

‘டெல்லிக்குத் தோல்வியோடு திரும்ப வேண்டாம்’ என்று முடிவு கட்டிய பிரோஸ் துக்ளக் சுதாரித்துக்கொண்டு ஒரிஸ்ஸா நோக்கிப் படையுடன் திரும்பினார். ஒரிஸ்ஸாவை ஆண்டுவந்த இந்து அரசருக்கு அவ்வளவாக போர் புரிந்து பழக்கமில்லை! ஆகவே, தெலுங்கானாவுக்கு அவர் தப்பியோட... டெல்லி வீரர்களின் அத்தனை கோபமும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் மீது திரும்பியது. கோயில் நாசமாக்கப்பட்டது. பிறகு, அமைதியடைந்த பிராஸ் துக்ளக், ஒரிஸ்ஸா காடுகளில் வேட்டையாடிச் சில நாட்கள் பொழுதுபோக்கினார். அங்கே, டெல்லிக்குக் கொண்டு செல்வதற்காக முப்பது யானைகள் வளைத்துப் பிடிக்கப்பட்டன. தப்பியோட பார்த்த இரண்டு யானைகளை, சக வீரர்களுடன் சுல்தான் துரத்திச் சென்று கொல்ல வேண்டி வந்தது!

‘பிரோஸ் துக்ளக் தலைநகரைவிட்டுக் கிளம்பி மூன்று ஆண்டுகள் ஆகியும், அங்கே சுல்தானுக்கு எதிராகச் சதித் தட்டம் ஏதும் கிளம்பவில்லையா?’ என்று இதுவரை படித்து, அரசு வழிமுறைகளில் பழக்கப்பட்டு விட்ட வாசகர்கள் வியக்கலாம்! முகமது பின் துக்ளக்குக்குப் பிரோஸ் துக்ளக் ஆலோசகராக அமைந்தது போல, பிரோஸுக்கு கான்ஜஹான் மக்பூல் என்ற திறமையான - விசுவாசமான அமைச்சர் வாய்த்திருந்தார். இவர் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இந்து. பிற்பாடு, பிரோஸுக்கு நண்பராகி இஸ்லாமிய மதம் மாறியவர். அவர் கையில் டெல்லி நிர்வாகம் கட்டுக்கோப்புடன் இருந்தது, பிரோஸ் செய்த அதிர்ஷ்டமே! ஆனால், இந்த அமைச்சருக்கு ஒரு வீக்னெஸ் மட்டும் உண்டு. அது - அழகான பெண்களைச் சேகரிப்பது! அமைச்சருடைய பிரத்தியேக அந்தப்புரத்தில் பல்வேறு நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் அழகிகள் இருந்தனர். மனிதர் நிர்வாகத்தையும் அருமையாக கவனித்து கொண்டு, இத்தனை பெண்களை எப்படி முறைபோட்டுச் சமாளித்தார் என்பது பற்றிச் சரித்திரக் குறிப்பு எதுவுமில்லை!

சுகமான அமைச்சரை விட்டுவிட்டுச் சுல்தானுக்கு வருவோம்...

டெல்லிக்கு வடக்கே காஷ்மீர் அருகே காங்ரா பிரதேசத்தில் நாகர்கோட் ராஜ்யத்தை ஆண்டுவந்தார் ஒரு இந்து மன்னர். கொஞ்ச காலமாகவே அவர் தன்னிச்சையாக நடந்து கொண்டு, டெல்லியின் மேலாட்சியை அலட்சியப்படுத்தியதால், அவரை வழிக்குக் கொண்டுவர பிரோஸ் துக்ளக் ஒரு படையுடன் கிளம்பவேண்டி வந்தது. இமயமலைச் சாரலில் தொடர்ந்து ஆறு மாதங்கள் இந்து மன்னரின் கோட்டை, டெல்லிப் படையின் முற்றுகைக்கு உள்ளானது. கடும் பனியிலும், ஐஸ்கட்டி மழையிலும் பிரோஸ் படை வீரர்கள் மிகவும் சிரமப்பட்டுப் போனார்கள். இருப்பினும், பிரோஸ் துக்ளக் இந்த முறை பின்வாங்காமல் உறுதியோடு நிற்க… கடைசியில் கோட்டைக்குள் உணவுப்பொருள் சப்ளை குறைந்து போக... இந்து மன்னர் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்டார். தொடர்ந்து டெல்லிக்குச் சமர்த்தாகக் கப்பம் கட்டி, அடக்கமாக நடந்து கொள்ளும்படி புத்திமதி சொல்லி விட்டு, அந்த மன்னரை மன்னித்து அனுப்பினார் பிரோஸ் துக்ளக் (சில மன்னர்களைப் போலத் தேவையில்லாத கொலைவெறியை - எதிரி இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி - காட்டியதில்லை பிரோஸ் துக்ளக் என்று பல ேபராசிரியர்கள் பாராட்டுகிறார்கள்!).

அதே சமயம், மத விஷயங்களில் மிகவும் தீவிரம் காட்டினார் இந்த சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல இந்துக் கோயில்கள் இவர் ஆட்சியில் உடைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை!

இந்து மன்னரை மன்னித்தாலும், நாகர்கோட்டில் இருந்த ஜ்வாலாமுகி ஆலயத்தை மன்னிக்கவில்லை பிரோஸ் துக்ளக் (இந்தக் கோயிலுக்குச் சுவையான ஒரு பின்னணி உண்டு. அந்தக் கோயிலில் இருப்பது. கி.மு.327-ல் இந்தியாவுக்குப் படையெடுத்த கிரேக்க மன்னர் அலெக்ஸாந்தரின் மனைவி நெளஷாபாவின் உருவச்சிலைதான் என்றும், அவர் விட்டுவிட்டுப் போன அந்தச் சிலைதான் பிற்பாடு ‘ஜ்வாலாமுகி’ என்ற இந்துப் பெயரில் வழிபடப்பட்டது என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது!).

டெல்லிப் படையிடம் வகையாகச் சிக்கிய ஜ்வாலாமுகி ஆலயம் உடைக்கப்பட்டது. அதற்குமுன், அந்தக் கோயிலில் பணிபுரிந்த இந்துக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கூடவே, கோயிலைச் சேர்ந்த பெரிய நூலகம் ஒன்றிலிருந்த மதம், தத்துவம், வானியல், மருத்துவம்... இப்படி அநேகமாக எல்லா ‘சப்ஜெக்ட்’டுகளைப் பற்றிய சுமார் 1,300 புத்தகங்களும் ஓலைச்சுவடிகளும் பத்திரமாக அகற்றப்பட்டன. பிற்பாடு அதிலிருந்து முந்நூறு சமஸ்கிருதப் புத்தகங்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்க்க, ஆஸுதீன் கலீத் கானி என்னும் அறிஞரை நியமித்தார் சுல்தான்!

தவிர, மீரட் நகரிலும் வடக்கே அம்பாலாவிலும் இருந்த இரண்டு அசோக ஸ்தூபிகளை மிகுந்த செலவில் சிரமப்பட்டு டெல்லிக்கு கொண்டுவர ஏற்பாடுகளைச் செய்தவர் பிரோஸ் துக்ளக். அதில் ஒரு ஸ்தூபியில் எழுதியிருந்த வார்த்தைகள் என்னவென்று புரியாததால் அதைத் தெரிந்துகொள்ள, மிகுந்த ஆர்வத்துடன் பல அறிஞர்களை வரவழைத்தார் துக்ளக். யாராலும் அதைப் படிக்க முடியவில்லை என்பதில் பிரோஸுக்கு மிகுந்த வருத்தம்.

சில பிராமண அறிஞர்கள் மட்டும் “இந்த ஸ்தூபிகளை நல்லபடியாகப் பேணிக் காத்தால் மிகுந்த அதிர்ஷ்டம் என்று மட்டும் ஒரு குறிப்பிலிருந்து புரிபடுகிறது” என்று ஒரு போடு போட.... அவற்றில் ஒரு ஸ்தூபி, டெல்லிக்கு அருகே பிரோஸ் துக்ளக் கட்டிய - ‘பிரோஷ்ஷாபாத்’ என்று அழைக்கப்பட்ட புதிய தலைநகரின் கோட்டை உச்சியில் பொருத்தப்பட்டது! மற்றொன்று, டெல்லிக்கு அருகே ஒரு பூங்காவில் பொருத்தப்பட்டதாகக் கேள்வி. (பிற்பாடு மொகலாய மன்னர் ஷாஜஹான் ஆட்சியில் ஷாஜஹானாபாத் - அதாவது, இன்றைய பழைய டெல்லி - கட்டப்பட்டபோது, பிரோஷ்ஷாபாத் நகர் கோட்டையில் இருந்தும் அரண்மனையில் இருந்தும் கற்கள் பெருமளவில் பெயர்த்து எடுக்கப்பட்டு, புதிய தலைநகரிலும் அங்கு எழுப்பிய செங்கோட்டையிலும் பயன்படுத்தப்பட்டது. ஆகவே, இன்று மிகவும் சிதிலமடைந்து குற்றுயிராகக் கிடக்கும் - ‘பிரோஷ்ஷாபாத்’ நகரைத்தான் டெல்லிக்கு அருகே நாம் காண முடியும்!).

பொதுவாகவே சுல்தான் ஆட்சியில் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். திரும்பத் திரும்ப டெல்லி மண் ரத்த மயமானதைக் கண்டதாலோ என்னவோ, குடிமக்கள் பிரோஸ் துக்ளக்கின் நிதானமான ஆட்சிக்கு முழு அங்கீகாரம் தந்தனர். அதற்கேற்ப, சுல்தானும் விவசாயிகளுக்கு இருந்துவந்த வரிச்சுமையைப் பெருமளவுக்குக் குறைத்தார். கூடவே, நீர்ப்பாசன வசதிகளை ஏராளமாகச் செய்து தந்தார். பதிலுக்கு விவசாயிகள் நல்ல உழைப்பை நாட்டுக்குத் தந்து, தாங்களும் வசதியாகவே வாழ்ந்தனர்!

டெல்லியின் சுற்றுப்புறச் சூழலிலும் அக்கறை காட்டினார் மன்னர். தலைநகரைச் சுற்றிலும் அவர் உருவாக்கிய பூங்காக்களின் எண்ணிக்கை 1,200-க்கு மேல்!

முதன்முதலில் இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் (எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்!) ஆரம்பித்தவர் பிரோஸ் துக்ளக்தான். ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதியுதவித் திட்டம், விதவைகளுக்கு மாதந்தோறும் இலவசத் தொகை தருவது, ஆதரவில்லாத குழந்தைகளுக்கு காப்பகம் மற்றும் சத்துணவு... போன்ற பல்வேறு நல்ல திட்டங்கள் பிரோஸ் துக்ளக் ஆட்சியில் அமலுக்கு வந்தன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சுல்தான் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் (நீர்ப் பாசனத்துக்கு) 50, மசூதிகள் 40, கல்லூரிகள் 30, ஏரிகள் 30, இலவச மருத்துவமனைகள் 100, பொதுக் குளியல் கூடங்கள் 100, பாலங்கள் 150... சரி, ரொம்ப நீட்டிக்கொண்டு போகாமல் இதோடு நிறுத்திக்கொள்வோம்!

டெல்லியில் அரியணையில் அமர்ந்து உருப்படியாக ஆண்ட கடைசி சுல்தான் பிரோஸ் துக்ளக்தான்! கடைசிவரை அமைதியாக ஆட்சிபுரிய விரும்பிய மன்னரை, அவர் வாரிசுகள் நிம்மதியாக வாழ விடவில்லை. பதவிச் சண்டையில் இறங்கினார்கள். படை பிரித்துக் கொண்டு டெல்லி வீதிகளில் மோதிக் கொண்டார்கள். தொண்ணூறு வயதை நெருங்கிக் கொண்டிருந்த பிரோஸ் துக்ளக் செய்வதறியாமல் மிகுந்த வெறுப்புடனும் கவலையுடனும் இதையெல்லாம் பார்த்தவாறு உயிரைவிட்ட தேதி: செப்டம்பர் 20, கி.பி.1388!

பிரோஸ் துக்ளக் மறைவைத் தொடர்ந்து, குதூப்மினார் உயரத்துக் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற டெல்லி சுல்தான் ஆட்சி, மெழுகுவர்த்தி உயரத்துக்குக் குறுகி... பிற்பாடு வந்த சில்லறை மன்னர்களால் மேலும் உருக்குலைந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டது!

இப்படிப் பெரும் சாம்ராஜ்யங்கள் சிதைந்த போவதும், உதிரிகள் ஆட்சிக்கு வந்து அலங்கோலப்படுத்துவதும், பிறகு வேறு புத்தம்புதிய சாம்ராஜ்யங்கள் உருவெடுப்பதும்... இதற்கான உதாரணங்கள் வரலாற்றுப் பக்கங்களில் நிறையவே இருக்கின்றன!