சஹானா (தொடர்ச்சி)
சாருலதாமணி
ஒரு பாடல் காட்சியில் எல்லாமே அற்புதமாக அமைவது என்பது சற்று அபூர்வமான ஒன்று. பாடல் வரிகள், இசை, காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள் தேர்வு... இப்படி சில விஷயங்கள் உள்ளன. ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அப்படியொரு பிரமிப்பான காட்சியை கொண்டு வந்திருப்பார் ‘அழகே சுகமா’ பாடலில்! இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் சஹானாவை தேர்ந்தெடுத்தது மிரட்டலான விஷயம். சில இடங்களில் த்வஜாவந்தி ராகத்தையும் கலந்திருப்பார். பெரிய ஹோட்டல்களில் தயிர்வடை கேட்கும்போது, அதன் தலையில் பூந்தியை தூவி எடுத்து வருவார்களே... அப்படி ஒரு கற்பனை இசைப்புயலுக்கு! ஸ்ரீனிவாஸும், சாதனா சர்க்கமும் காதலை ஆராதித்திருப்பார்கள். பட்டு கத்தரித்தது போல் என்பார்களே அது போன்றதொரு அழகு, மென்மை! ஸ்ரீனிவாஸுக்கு அந்தக் கால ஏ.எம். ராஜா போன்ற இதமான குரல். ‘தலைவா சுகமா.. சுகமா..’ என்று சாதனா, சஹானாவை மேலே போய் நிறுத்தும்போது, ‘மூக்குத்தி அம்மன்’ நயன்தாராவின் பேரழகு. கவிஞர் வைரமுத்து பாட்டு நெடுகவே மாறுபட்டு சிந்தித்திருப்பது புரியும். ‘வீடு வாசல் சுகமா, உன் வீட்டு தோட்டம் சுகமா, பூக்கள் எல்லாம் சுகமா, உன் பொய்கள் எல்லாம் சுகமா..’ என்று நாயகி அடுக்குவது எல்லாம் ரசனையானவை. காதலர்களின் பிரிவு ஏக்கத்தை இவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடல் அப்புறம் இதுவரை நான் கேட்கவில்லை! எல்லாவற்றையுமே ‘குத்தாக’ கம்போஸ் செய்ய நினைத்தால் ‘சத்தான’ பாட்டு எப்படி கிடைக்கும்?
சாதனா சர்க்கம்
டைரக்டர் கே.பி. பெரிய சஹானா ரசிகரா இருந்திருக்க வேண்டும். தனது ஒரு சீரியலுக்கே அந்த பெயரை வைத்தார். அப்புறம் ‘ரயில் சினேகம்’ என்ற சீரியலில் ‘இந்த வீணைக்கு தெரியாது, இதைச் செய்தவன் யாரென்று’ என்று சஹானாவில் வி.எஸ். நரசிம்மன் ஒரு பாடலை தந்திருப்பார். கொள்ளையழகு. பாட்டு முழுவதும் வீணை கொஞ்சிக் கொண்டே ஓடி வரும். வரிகள் கவிஞர் வைரமுத்து! ‘மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல் தானே..’ என்று முதல் சரணத்தில் வரும் கவிஞரின் ஒரு சுவையான வரியை அந்த சீரியல் வந்து 30 வருடங்கள் ஆனாலும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த ராக தேவதையின் ஜீவனை புரிந்துகொண்டு அனுபவித்து பாடியிருப்பார் சித்ரா.
சித்ரா
இளையராஜாவின் அபாரமான சஹானா எதுவும் இதுவரை என் காதுகளுக்கு எட்டவில்லை.
கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை இந்த ராகத்தில் ஏராளமான கீர்த்தனைகள் உள்ளன என்றாலும் சட்டென்று உடனே நினைவுக்கு வருவது தியாகராஜரின் ‘வந்தனமு ரகு நந்தனா’. இந்த ராகத்தில் அபரிமிதமாக இரக்க உணர்ச்சியும், கருணையும் கொட்டிக் கிடக்கும். அந்த உணர்வுகள் தியாகையரின் கீர்த்தனையில் அழகாக வெளிப்படும்! ‘கிரிபை நெலகோனா ராமுனி’ பாபநாசம் சிவனின் ‘சித்தம் இறங்காதா’, தஞ்சாவூர் சங்கர அய்யரின் ‘சரவண பவா’ உள்பட பல கீர்த்தனைகளை சொல்லலாம். தியாகராஜரின் ‘கிரிபை நெலகோனா’வை பாடகி சாருலதாமணி பாடி கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு வரியிலும் ராக லட்சணத்தை பிரமாதமாக கொண்டு வந்திருப்பார். படு திறமையான பாடகி. இந்த சபா அரசியல், நம்மூர் பாடகிகளின் போட்டி, பொறாமை எதுவும் தேவையில்லை என இளம் வயதிலேயே ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு போய் விட்டார். ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது, மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்துவது, கல்லூரிகளில் வகுப்பு எடுப்பது என்று பிரிஸ்பேனில் பிஸியாகிவிட்டார். அண்மையில் டாக்டர் பட்டம் கூட பெற்றுள்ளார் என்று முகநூலில் தெரிந்து கொண்டேன். மனமிருந்தால் மயிலாப்பூரைத் தாண்டியும் ஒரு உலகம் உள்ளது என்று நிரூபித்தவர்.
ஏ.கே.சி. நடராஜன்
பல வித்வான்கள், விதூஷிகள் சஹானா பாடி கேட்டிருக்கிறேன் என்றாலும் எனக்குள் ஆழமாக இறங்கி விட்டவைகளில் ஒன்று... சில வருடங்களுக்கு முன்பு மயிலாப்பூர் தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் கிளாரிநெட் மேதை ஏ.கே.சி. நடராஜன் வாசித்தது. எண்பதை கடந்த வயதில், தரையில் கூட அமர முடியாமல் நாற்காலியில் அமர்ந்து வாசித்தவர், இந்த ராகத்தை அமர்க்களமாக மெருகேற்றி கொண்டு போன விதம் அசாதாரணமானது. இப்படி மேதைகள் வாசிக்கும்போதுதான் இந்த ராகத்திற்கு இவ்வளவு ஜொலிப்பு விஸ்தாரம் உண்டா என்று திகைக்க வைக்கிறது. அவரது வயசு காலத்தில் எப்படி வாசித்திருப்பார் என அன்று அருகிலிருந்த பலர் கண்கலங்க பேசிக்கொண்டனர்.
நான் கேட்ட இன்னொரு அசுர சஹானா எதிர்பாராதது. சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் உள்ள சிவன் கோயிலில் ஒரு நடுத்தர வயது நாதஸ்வர வித்வான் வாசித்தது முகநூலில் பரபரப்பானது. கமலஹாசன் இதைக் கேட்டுவிட்டு ‘இதற்கு அந்த சிவன் இரங்காவிடில் வேறு எதற்கு இரங்குவான்’ என்று தனது வலைதளத்தில் கவிதையே எழுதியிருந்தார். அத்தோடு தன் கட்சிக்காரர் கவிஞர் சினேகனை சிவகங்கைக்கு அனுப்பி பார்க்கச் சொன்ன தகவலும் வந்தது. அந்த வித்வான் பெயர் பாகனேரி பில்லப்பன். பணம், பெருமை, அந்தஸ்து என அலையும் உலகில் திறமை தலைக்கேறாமல் தான் உண்டு தன் கோயிலுண்டு என வாழும் எளிமையான மனிதர். சுதா ரகுநாதனுக்கு கூட அவரது ராக ஆலாபனையை வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தேன். ‘எடுத்த எடுப்பிலேயே சொக்கிப் போனேன்’ என பதில் வந்தது. அன்று முதல் நேரம் கிடைக்கும்போது பில்லப்பனோடு பேசுகிறேன். ‘எங்கோ இருக்க வேண்டியவர்’ என்றேன் ஒரு நாள். ‘சிவனோடு தானே இருக்கேன் அண்ணே. இதைவிட சிறந்த இடம் உண்டா’ என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது! (ஞானமான செவிகள் வீடியோவை கிளிக்கவும்!)
இன்னும் பெருகும்...
Leave a comment
Upload