நான்காவது முறையாக முகத்தைக் கழுவி இமாமி ஃபேர்னெஸ் கிரீம் ஈஷிக் கொண்டிருந்த 15வயது மகனை விடாமல் கவனித்துக் கொண்டிருந்தான் ஹமாதுத்தீன். பின் சப்தமாக “பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே!” என அறிவித்தான்.
தந்தையை முறைத்தபடி தாயிடம் ஓடினான் ரிஜ்வான். “பாரும்மா... அத்தா காமென்ட் அடிக்கிறதை! வரவர அத்தா அடிக்ற லூட்டி தாங்க முடியலம்மா. எப்ப பார் அறிவுரை! பேசாம அத்தாவுக்கு சின்ன விஜயகாந்த்ன்னு பேர் வச்சிரலாம்...”
“என்னஜி... பையனின் புகார் சரிதானா?” வினவினாள் குத்ஸியா. உடன் மகள் ரைஹானாவும்.
“இல்ல... தப்பு... நான் கேக்கற கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லச் சொல்லு!”
“ஆரம்பிச்சிட்டாரய்யா ஆரம்பிச்சிட்டாரய்யா!”
“என்னுடைய உயிரணுவாலயும் அம்மாவோட முட்டைக்ருவாலயும் தான நீ இந்த உலகத்ல பிறந்த ரிஜ்வான்?”
“ஆம்!”
“என்னுடைய பரம்பரை வியாதிகள் ஜீன் வழியாக உனக்கு வருகிறது இல்லையா?”
“ஆம்!”
“நான் சார்ந்திருக்கும் மதம் உன்னுடைய மதமாகிறது!”
“ஆம்!”
“என்னுடைய தாய் மொழி உனது தாய்மொழி ஆகிறது!”
“ஆம்!”
‘எனது நாடு உனது நாடாகிறது!”
“ஆம்!”
“எங்கள் இருவழி உறவினர்கள் உனக்கு உறவினர்கள் ஆகின்றனர்!”
“ஆம்!”
“எங்க சொத்தில சட்டப்படி உரிமை உனக்கு வந்திருது!”
“ஆம்!”
“உன்னை படிக்க வச்சு ஆளாக்கி- வேலை வாங்கி குடுத்து-கல்யாணமும் பண்ணி வைச்சு - சொத்தை பிரிச்சுக் குடுக்கறது மட்டும் எங்க வேலை இல்லை மகனே... உன்னை நாட்டின் சிறந்த குடிமகனாக்குவது... உன்னை நமது மதத்தின் முழுமையான விசுவாசியாக்குவதும் எங்க வேலைதான். மகன், மகளிடமிருந்து போலி மரியாதை விரும்பி விலகி நின்றது அந்த காலம். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி முத்தம் கொடுத்து அவர்களை நல்வழிபடுத்துவது இந்தக்காலம்!”
மகன், மகள், மனைவி மௌனித்தனர்.
“மகனே! சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடி போன்றதாகும். குழந்தைகள் நேசம், மரியாதை, நிமித்தம் கட்டுப்பட வேண்டும். வயதில் பெரியவருக்கு, ஆசிரியர்களுக்கு மரியாதை செய். சக முஸ்லிம்களுக்கும் மதக் குருமார்களுக்கும் ஸலாம் சொல்லி பதில் ஸலாம் பெறு என்றேன். ‘உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள், பத்து வயதாகியும் அவர்கள் தொழுகாவிட்டால் அவர்களை அடியுங்கள்! - என்கிறார் நபிகள் நாயகம். தினமும் பள்ளிக்கூடம் போய் கொண்டே, மாலை நேரங்களில் மதர்ஸா போ. வெள்ளிக்கிழமைகளில் ஜுஆம்மாதொழுகை தொழு- என்கிறேன்!”
“இதெல்லாம் நீங்க சொல்லாமலே செய்யத்தானே செய்றேன்!”
“சில ஷார்ட் கம்மிங்ஸ் இருக்கு. அதை தவிர்க்கவே அறிவுரைகள். ‘நற்பாக்கியம் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கிறது. ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து கிடைக்கிறது!’ –என்றார் நபிகள் நாயகம். மகனோ, மகளோ எதை படிக்கிறார்கள், எதை எழுதுகிறார்கள். எவ்வகை நண்பர்களுடன் பழகுகிறார்கள். அவர்களின் உணவுபழக்க வழக்கங்கள் என்னென்ன என்பவற்றை மௌனமாக கண்காணிக்க வேண்டும். கண்காணிக்கிறேன் நான்!”
“இவ்வளவு பேசுகிறீர்களேத்தா... உங்களது பதினைந்தாவது வயதில் நீங்கள் ஒழுங்கான மாணவனா, ஒழுங்கீனமான மாணவனா?”
“ஒழுங்கீனமானவன்தான். என் தந்தை அன்பாய் என்னை ஒருமுறை கூட தொட்டதோ முத்தம் கொடுத்ததோ கிடையாது. கருணை காட்டாதவர், கருணை காட்டமாட்டார் என்பது அவருக்கு தெரியாது. ‘நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும், பெரியவர்களின் கடமைகளை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்’ - என்றார் நபிகள் நாயகம். அதுவும் எங்கத்தாவுக்கு தெரியாது. எதற்கெடுத்தாலும் அடிப்பார். அப்படிப்பட்ட பொறுப்பற்ற தந்தையாக நான் இருக்க விரும்பவில்லை மகனே!”
மகனின் தலைக்கேசத்தை கோதிக் கொடுத்தான் ஹமாதுத்தீன்.
“எனக்கும் அம்மாவுக்கும் சிறு வயதிலேயே சொத்தை பல் வந்திருச்சு. அதனால உங்களுக்கு பற்பராமரிப்பு சொல்லிக்கொடுத்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை டெண்டல் செக்கப் அனுப்பி வருகிறேன். வாரம் ஒரு முறை கைகால் நகங்களை வெட்டச் சொல்கிறேன். சாப்பாட்டை சிந்தாமல், சிதறாமல் சாப்பிடச் சொல்கிறேன். தினமும் அரைமணி நேரம் விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரத்துக்கு மேல் டிவி பார்க்கக் கூடாதென ஆணை பிறப்பித்துள்ளேன்...”
“ஆமாம்!
“திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வாங்கிக் குடுத்துள்ளேன்- அர்த்தம் புரிந்து படிக்க. எனது அறிவுரைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக நானும் அம்மாவும் உங்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியாக நடந்து கொள்கிறோம். குழந்தைகள் சமத்துவமாயும் நீதமாயும் வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக உனக்கும், அக்காவுக்கும் இடையே பாரபட்சமில்லாத அன்பை பொழிகிறோம். உபகாரம் மகிழ்ச்சி போதுமென்ற தன்மை கற்றுத் தருகிறோம்!”
“எல்லாம் சரித்தா... உங்க அறிவுரையெல்லாம் ஓவர் டோஸாயிருக்கே?”
‘சிரித்தான் ஹமாதுத்தீன்.’ “நான் அப்படி நினைக்கல மகனே... எனது அறிவுரைகள் திருக்குறளை விட சுருக்கமானவை. ஒரே நாளில் எல்லா போதனைகளையும் நான் உன்மேல் அள்ளிக் கொட்டுவதில்லை. நான் அறிவுரை சொல்லும்போது நீ எதிர்கேள்வி கேட்டால் அதற்கு சளைக்காது பொறுமையாய் தேவையான விளக்கங்களை தருகிறேன். எனது அறிவுரைகளை சித்த மருந்து வடிவத்தில் தருகிறேன்-சிறிது சிறிதாய் நீண்ட காலத்துக்கு முழுமையான நிவாரணத்துக்கு!”
“நல்லவேளை. உங்களோட அம்மாவும் சேர்ந்து அறிவுரை மழை பொழியவில்லை!’’
“நன் நடத்தையே ஒரு தந்தை, தம் மகன் மகளுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு என்கிறது நம் வேதம். குழந்தைகளின் நன் நடத்தைக்கு முழு பொறுப்பாளி தந்தைதான். அம்மா சொல்லாமல், கற்றுத்தருவதை நான் சொல்லி கற்றுத்தருகிறேன்!”
“சில நேரம் அதிக அறிவுரைகளாலே குழந்தைகள் தீயவழி பக்கம் தாவி விடும் இல்லையாத்தா?
“தினம் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். தினமும் தண்ணீர் ஊற்றுவதால் பூஞ்செடிகளின் வேர் அழுகி விடாதா-என கேட்கிறாய். 99சதவீத பூஞ்செடிகள் அழுகி விடாது!”
“எங்களுக்கு கூறும் அறிவுரைகளை மற்ற குழந்தைகளுக்கும் கூறுகிறீர்களா?”
“கூறுகிறேன்... ஆனால் கட்டாயக் கடமையாக அல்ல...”
“எங்களுடைய எந்த வயதில் எங்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துவீர்களத்தா?”
மௌனித்தான். மகன், மகளை ஆழமாக பார்த்தான். கண்களில் கண்ணீர் பொங்கியது. “உங்களுக்கு நூறு வயதாகும் வரை அல்லது நான் மௌத்தாகும் வரை!”
“அத்தா! ஏன் அபசகுனமா பேசுறீங்க?”
“இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது. மறு உலக வாழ்க்கையோ நித்யமானது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இளைப்பாறுதல்தான் வாழ்க்கை மகனே. மரணத்தை வாவா என வரவேற்கவும் கூடாது. மரணமே எனக்கு வராதென கொக்கரிக்கவும் கூடாது”
தந்தையின் கன்னத்தில் மகனும் மகளும் முத்தமிட்டனர்.
“எதுக்கு திடீர்னு முத்தம்?”
“உங்களின் இத்தனை நாள் அறிவுரைகளை மகிமைப்படுத்திவிட்டது இன்றைய உங்களின் வாதம் ஹாட்ஸ் ஆப்!”
“விஜயகாந்த்ன்னு கிண்டல் பண்ணின ரிஜ்வான்?”
“சும்மா உங்களை உசுப்பேத்த!”
“இப்ப நான் கேக்றேன்... நான் சொல்ற அறிவுரைகள் உனக்கு எதாவது ஒரு விதத்தில் உதவியிருக்கா?”
“ஏனில்லை? தேன் ஆயிரம் நிவாரணங்களை அளிக்கும். பத்துலட்சம் வியாதிகளை போக்கும் என்பீர்கள், உங்களது அறிவுரை தேன் போல. நீங்கள் எதனைச் சொன்னாலும் நம்பிவிடாமல் அதே சமயம் புறக்கணித்தும் விடாமல் அதனை ஆராய்ந்து உண்மையை உறுதி படுத்திக் கொள்கிறேன். நான் கண்மூடித்தனமான முஸ்லிம் அல்ல. மததீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கும் மாடரேட் முஸ்லிம். நான் மதத்தால் முஸ்லிம். நாட்டால் இந்தியன் அத்தா!”
“சபாஷ்!”
“ஒரு தந்தையாக நின்று எனக்கு நன்நடத்தைகளை பரிசளித்தீர்கள் அத்தா. பதிலுக்கு நான் உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டாமா?”
“என்ன பரிசு?”
“மத நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும்’-என்கிற தலைப்பில் ஓர் ஆங்கில கட்டுரைப்போட்டி இந்திய அளவில் அறிவித்திருந்தனர் அத்தா. அப்போட்டியில் 16450 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அதில் நானும் ஒருவன். எனக்கு அப்போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது!”
“நிஜமா?”
“அல்லாஹ்வின் மீது சத்தியமா!”
பெற்றோரின் மீது மகனும் மகளும் பாய்ந்து கட்டிக் கொண்டனர்.
முத்தமழைக்கு இடையே ரிஜ்வான் “ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இயற்கையிலேயே பிறக்கிறது. அதனுடன் மனம் விட்டு பழகி அரவணைத்து அன்புகாட்டி ஊக்கமளித்து உற்சாகமூட்டி நீதமும் சமத்துவமும் பாவித்து கொடூரமின்றி நளினம் காட்டினால் அவை முன் மாதிரி முஸ்லிம்கள் ஆகும்!” என்றான்.
“வாரேவா என் சின்ன விஜயகாந்த்தே!” என கிண்டலாய் கூவினான் ஹமாதுத்தீன்.
Leave a comment
Upload