தொடர்கள்
மக்கள் கருத்து
மனைவியிடம் கடைசி சண்டை எப்போது போட்டீர்கள்...?! - .மக்கள் கருத்து... - தில்லைக்கரசி சம்பத்

20201020175431144.jpeg

மனைவியிடம் கடைசியாக எப்போது சண்டை போட்டீர்கள்?!..

இதுதான் இந்த வாரம் மக்கள் பேட்டி..

ரா.பாலசந்தரன், திருவான்மியூர்.

ஏங்க.. யாராவது தெரிஞ்சே புலி கூண்டுக்குள்ள இறங்கி ‘என்னைக் கடி.. உன்னைக் கடி’ னு அது முன்னாடி டான்ஸ் போடுவானா? இல்ல....நாம உயிரோட இருப்பது முக்கியமாங்க ..!

மா.கோபாலகிருஷ்ணன், சென்னை.

அது ஆச்சுங்க ஒரு முப்பது வருஷம். அப்ப கல்யாணம் ஆன‌ புதுசு .. அப்பெல்லாம் ரொம்ப பணிவா இருப்பா என் பொண்டாட்டி. அதை நம்பி நானும் அப்பப்ப என் கெத்த காமிபபேன் . அதே போல ஒரு நாள் என் பெரியப்பா குடும்பம் வந்திருந்தாங்க. இவ காப்பி கொடுக்கும் போது தவறி கீழே கொட்டிட்டா.. நானும் அன்னைக்கு எந்த மூட்ல இருந்தேன்னு தெரியல... அறிவுக்கெட்டவளேனு திட்டி, ஓங்கி கன்னத்துல அடிச்சிட்டேன். வந்தவங்க எல்லாம் போன பிறகு என் பொண்டாட்டி ஆடுனாளே ஒரு காளி ஆட்டம். இன்னைக்கு நினைச்சாலும் முதுகு விண்ணு விண்ணுனு வலி தெரிக்குது.. அன்னைக்கு உட்டது தாங்க... அதுக்கப்புறம் ஒரு வார்த்தை ஏன்னு அவளை கேட்டதே இல்லையே..!

சசிகுமார், காஞ்சிபுரம்.

மனைவியிடம் சின்ன சின்ன சண்டை என்பது சாம்பார் சாதம் மாதிரி தினமும் இருக்கும். பெரிய சண்டை என்பது பிரியாணி மாதிரி எப்போதோ 2/3 மாதத்துக்கு ஒரு முறை நடக்கும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அதை மறக்க முடியாது.

கடைசியாக நான் பிரியாணி சாப்பிட்டது, ஒரு மூன்று மாதத்துக்கு முன் இருக்கும். எனது மகளை மனைவி அடித்து விட, அதில் கோபம் கொண்ட நான் அவளை ஒரு அடி அடிக்க... பதிலுக்கு, எனக்கும் இரண்டு மூன்று அடி விழுந்தது தான் மிச்சம். பின்னர் என்ன?! ஒரு வாரத்துக்கு மேல இரண்டு பேரும் பேசாமல் இருந்தோம். அப்புறம் ஒரு வழியாக சமரசம் ஆகிவிட்டது.

சி.குமார், ராயப்பேட்டை.

2014-ல் எனக்கும் என் மனைவிக்கும் கடுமையான ஈகோ சண்டை வந்துடுச்சு. நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டேன். அப்ப என் குழந்தைக்கு 3 வயசு தினமும் மனைவி வீட்டு வாசல்ல போய் நின்னு குழந்தையை கூப்பிட்டு பார்க், கடைகள்ன்னு சுத்திட்டு திரும்பவும் கொண்டு போய் விட்டுடுவேன். இப்படியே நாலு மாசம் ஓடிடுச்சு. அந்த சமயத்தில் என் அம்மா இந்த விவகாரத்தில் தலையிட... இன்னும் மோசமா போய், பெரிய பஞ்சாயத்து ஆகிடுச்சு. இதை இப்படியே விட்டா சரியா இருக்காதுன்னு நான் என் மனைவிக்கிட்டே ஃபோன்ல பேசி அப்புறம் சமாதானமாகிட்டோம். அந்த நாலு மாசம் பிரிவுல, அம்மா வீட்ல இருந்ததால் நல்லா சாப்பிட்டு உடம்பு கொஞ்சம் வெயிட் போட்ருச்சு... நண்பர்களுடன் இரண்டு டூர் வேற போய்ட்டு வந்தது ஒரு ஜாலி அனுபவம்.

க.விக்னேஷ், சிங்கபெருமாள்கோயில்.

நாங்க அடிக்கடி சண்டை போட்டுக்குவோம்.. அப்புறம் சேர்ந்துக்குவோம்.. கொஞ்சம் கைகலப்பு மாதிரி தெரியும். அவ அடிக்க நான் ஓட, அப்புறம் நான் ஓட அவ அடிக்க செம காமெடியா இருக்கும். இருந்தாலும் அவளை போல ஒரு நல்ல மனைவியை பார்க்க முடியாது. வெளிக்காயம் வராத மாதிரி நமக்கு அடங்கி அடிப்பா.. ச்சே.. சாரி. அடங்கி நடப்பா..

ந.அருண்குமார், தஞ்சை.

தீபாவளி அன்னைக்கு கூட சண்டை தான் சார். என்னைக்கு தான் சண்டை இல்லாம இருந்தோம் ...? இந்த பொண்ணுங்களை நம்ம தலையில கட்டி உட்டு அவ பெத்தவங்க போயிடுறாங்க. இதுக அது வீட்ல அவங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சிகிட்ட போடுற எல்லா சண்டையையும் கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம ஒருத்தன்கிட்ட காமிச்சு உசுற வாங்குதுங்க...

ப்ரவீன், சென்னை.

கல்யாணம் என்பது ஆயிரங்கால பயிர் இல்ல சார்.. அது ஆயிரங்கால அமேசான் காடு.. ஒவ்வொரு நாளும் புலி, சிறுத்தை, கரடி, மானு, முயலு, அனக்கோண்டா பாம்புனு சம்சாரம் எடுக்குற பல அவதாரங்களை நாம கணிச்சு ஜாக்கிரதையா ‌நடந்துக்கனும். ஆனா பெரிய கொடுமை என்னன்னு கேட்டீங்கனா... எந்த மிருகம் இப்ப உள்ள இருக்குதுனு தெரியாத மாதிரி அப்படியே ஸ்மைல் பண்ணிக்கிட்டு நிப்பா பாருங்க.. என்னவோ பெரிய ஹாலிவுட் பேய் படம்.. பேய்ப்படம்..ன்னு சொல்றாங்க.. அதெல்லாம் ச்சும்மா... நம்ம முன்னாடி அவ வந்து நிக்கிறப்ப வரும் பாருங்க ஒரு பயங்கரமான உணர்வு. அது வார்த்தைகளில் அடங்காத ஒன்னு சார்.

மனோகரன், வண்டலூர்.

என்று ஒரு ஆண், மனைவியிடம் திட்டு வாங்காமல் லிஸ்ட்ல உள்ள எல்லா சாமானையும் வாங்கி மளிகைக் கடையிலிருந்து பாதுகாப்பாய் வீடு திரும்புகிறானோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்ததாய் சொல்ல முடியும் என மகாத்மா காந்தி சொல்லி இருக்காரு.. ‌ஏங்க முறைக்கிறீங்க..?? அப்ப சொல்லலையா..!!?? சரி விடுங்க யாரோ சொன்னாங்க...! நித்திய கண்டம் பூரண ஆயுசுனு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.

மாணிக்கம், மந்தைவெளி.

“நான் மூட்டை தூக்கும் கூலிவேலைக்கு போறதால, நைட் வீடு திரும்பும்போது ‘கட்டிங்’ மது அருந்துவது வழக்கம். இதனால என் மனைவிக்கும் எனக்கும் தூங்கற வரைக்கும் வாய்தகராறுதான். பசங்களும் அழுவாங்க.

இவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, தீபாவளிக்கு மொத நாள் மது குடிக்காம, வாங்கின கூலியில பசங்களுக்கு டிரஸ், மனைவிக்கு புடவை, ஸ்வீட், பலகாரம், பூ, பட்டாசு வாங்கிட்டு வீடு திரும்பினேன். இத பார்த்து என் பொண்டாட்டி இன்ப அதிர்ச்சியானாள்.

பின்னர் ‘நீ குடிச்சிட்டு வர்றதாலதானே திட்டுறேன். இனிமே குடிக்காம, உன் குடும்பத்துக்கு ராசாவா இரு’னு என்னை நிற்கவெச்சு திருஷ்டி சுத்தி போட்டாள். அன்னிலருந்து நோ மது… இதுவும் நல்லாத்தான் இருக்கு!”

மாளவிகா சந்திரன், நங்கநல்லூர்.

“எங்க வீட்டுக்காரு அவங்க அம்மாவுக்கு ஒரே பிள்ளை. எனக்கு 2 பசங்க. என் மாமியார் தனியா செங்கல்பட்டுல சொந்தமா ஒரு சின்ன வீட்டில் வசிக்கிறாங்க. தீபாவளி போன்ற பண்டிகை நாள்ல நாங்க குடும்பத்தோட கொண்டாடுவோம்.

இந்த வருஷம் ‘அங்க வசதி இல்ல. இந்த வருஷம் தீபாவளிக்கு நாங்க அங்க வரமாட்டோம்’னு நானும் பசங்களும் சொல்லிட்டோம். என் வீட்டுக்காரர் கோவிச்சுட்டு, அவங்கம்மா வீட்டுக்கு கிளம்பிப் போயிட்டார். 5 நாளாகியும் வீடு திரும்பலை. அப்புறம் அவருக்கு போன் செஞ்சி நானும் 2 பசங்களும் ‘ஸாரி’ கேட்ட பிறகு வீடு திரும்பினார்.

அவருக்கு பிடிச்ச குலோப் ஜாமுனை கொடுத்து ஐஸ் வைத்தேன். ‘நீ பண்ணது தப்புதான். என்னை பெத்தவளை அனாதையா விட்டுட்டு, நான் உங்ககூட இங்கே தீபாவளி கொண்டாட முடியுமா?’னு ஆதங்கப்பட்டார். என் மாமியார்கிட்ட ‘ஸாரி’ கேட்கணும். அவங்க என்ன சொல்லப் போறாங்களோ?”