தொடர்கள்
கற்பனை
மிஸ்டர் ரீல்... ஜாசன்

20201020174858268.jpeg

இயக்குனர் மற்றும் விஜய் கட்சித்தலைவர் மற்றும் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை மிஸ்டர் ரீல் சந்திக்கப் போனபோது, அங்கு நடிகர் விஜய்யும் இருந்தார்.

“வாப்பா” என்ற எஸ்.ஏ. சந்திரசேகரிடம்... “உங்க பையன் கட்சி எல்லாம் வேணாம்னு சொல்லும்போது, சின்ன குழந்தை மாதிரி இந்த வயசுல இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது சரியா?

கட்சி தொடங்கிய அன்றைக்கே பொருளாளர் பதவியை உங்க மனைவி ராஜினமா செஞ்சிட்டாங்க, மாநிலத் தலைவர் டாடா காமிச்சிட்டு போயிட்டாரு...! இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கட்சி தேவையா?” என்று மிஸ்டர் ரீல் கேள்விகளை அடுக்க...

“நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா... என் பேச்ச நானே கேட்க மாட்டேன்” என்று எஸ்.ஏ. சந்திர்சேகர் சொல்ல... விஜய், அவரை முறைத்தார்.

“நீ என்னை பார்த்து முறைக்காத. நான் ஒரு ரசிகன், அப்படித்தான் இருப்பேன். நான் என் பையன் பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறேன். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது. இது பத்தி நான் வக்கீல் யோகிபாபுகிட்ட ஆலோசனை கேட்டுட்டேன். ‘நீங்க கட்சி நடத்துங்க, சர்க்கார் அமையுங்க, தேர்தல்ல கில்லி மாதிரி நீங்க ஜெயிங்க, எல்லோரும் மெர்சல் ஆயிடுவாங்க. 2021 தேர்தல் உங்களுக்கு மாஸ்டர் அப்படின்னு சொல்லி அட்வகேட் பிகில் ஊதிட்டாரு” என்று சொல்ல... நடிகர் விஜய் “அம்மா” என்று கத்த.... உடனே எட்டிப் பார்த்தார் ஷோபா சந்திரசேகர்.

நொடி கூட தாமதிக்காமல் “நீ வா செல்லம்.. அப்பா உனக்கு பிரஷர் ஏத்தப் பாக்குறாரு. நீ முதல்ல உன் கார் ஏறி உன் வீட்டுக்குப் போ. உனக்குப் பிடிச்ச சாப்பாட்டை அம்மா கேரியர்ல அனுப்பி வெக்கறேன். இனிமே இந்த மனுஷன் கிட்ட பேசக்கூட நீ வராத” என்று மகனை அணைத்தபடியே வாசலுக்கு அழைத்துப் போனார்.

“உங்க கட்சி யாருடன் கூட்டணி” என்று மிஸ்டர் ரீல் கேட்க..

“மக்களுடன் தான்”

“வர வர எல்லாக் கட்சியும் மக்களுடன் கூட்டணி வச்சா... மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் பாவம், எங்க போவாங்க? இந்த வைகோ, திருமாவளவன், காங்கிரஸ் எல்லாம் எதிர்காலத்தில் ரொம்ப கஷ்டப்படுவாங்க போல இருக்கே!” என்று யோசித்தபடியே மிஸ்டர் ரீல் அடுத்து எடப்பாடி வீட்டுக்குப் போனார்.

“எல்லோரும் ஏழரை என்றால் சனியன்னு சொல்வாங்க, சரியான ஏழரை என்பார்கள்... இந்த ஏழரையை ஏன் கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க என்பார்கள்.. ஏழரை நாட்டு சனி எப்போ தான் விடும் என்று அலுத்துக் கொள்வார்கள். ஆனால் ஏழரை எனக்கு ராசியான நம்பர், அதான்பா...7. 5% எனக்கு ராசியான நம்பர்” என்று எடப்பாடி குதூகல மூடில் இருந்தார்.

உடனே மிஸ்டர் ரீல்... “நீங்க முரசொலி பாக்கலையா... 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டையே, ஸ்டாலின் சொல்படிதான் நீங்க செய்தீங்கன்னு ஸ்டாலின் சொல்றாரு” என்று சொல்ல... உடனே எடப்பாடி எகத்தாளமாய் சிரித்து “அவர் மனைவியே அவர் பேச்சைக் கேட்காம சாமி கும்பிடப் போறாங்களாம்! இதுல இவர் பேச்சை நான் கேட்கிறேனாமா? அந்தாளுக்கு வாய்தான் குழறல்னு நினைச்சேன். மனசும் பிழறலா அவருக்கு?... தினமும் எதையாவது பெனத்தலேன்னா அவருக்கு தூக்கம் வராது போல...பாவம் ஏதோ சொல்லிட்டுப் போகட்டும்” என்றார் கூலாக.

“அமித்ஷா வருகிறாறே” என்று மிஸ்டர் ரீல் ஆரம்பிக்க...

“வரட்டும், அதுக்கு என்ன..? அமித்ஷா வராரு வராருனு எல்லோரும் எதுக்கு பயம் காட்டறிங்க... அவர் என்ன ரெண்டு கண்ணு பூச்சாண்டியா? நான் சின்னம்மாவையே.. சாரி, சசிகலா வந்தாலே.. எனக்கென்ன மனக்கவலைனு தைரியமா பேட்டி தரேன், பார்த்தீங்க இல்ல... எனக்கு அமித்ஷா பயமில்லை, சசிகலா பயமில்லை. அந்த பயம் எல்லாம் போக ரெண்டு தாயத்து கட்டி இருக்கேன். சூரப்பா, வீரப்பா மாதிரி பேசினாரு. இப்ப அவர் மேலேயே விசாரணை கமிஷன் போட்டுட்டேன் பார்த்தே இல்ல” என்று கேட்ட முதல்வரிடம்...

“எப்படி அந்த தைரியம் உங்களுக்கு வந்தது..? அதற்கு என்ன தாயத்து கட்டி இருக்கீங்க?” என்று மிஸ்டர் ரீல் கேட்க...

“அதுக்கு தாயத்து எல்லாம் இல்லை.. நெல்லிக்காய், வேப்பம் கொட்டை, புளியங்கொட்டை, பூசணி விதை இதையெல்லாம் வறுத்து பொடி பண்ணி, காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தண்ணி குடிச்சா தானா தைரியம் வரும். இப்பிடித்தான் நேத்து முந்தா நாள் பாருங்க...ஆளுநர் போன் பண்ணாரு. ‘ஒரு நடை ராஜ்பவன் வந்துட்டு போங்க, உங்ககிட்ட பேசணும்’னு கூப்பிட்டார். ‘ராஜ்பவன் எல்லாம் வர முடியாது, எதுவா இருந்தாலும் போன்ல சொல்லுங்க’ அப்படின்னு தைரியமா சொன்னேன். அப்புறம் போனாப் போகுது வயசுல பெரியவராச்சேன்னு நானே பரிதாபப்பட்டு சேலம் போற வழியில ராஜ்பவன் வாசல்ல வண்டியை நிறுத்தறேன்... வாச கேட்டுக்கு வந்து என்ன சொல்லனுமோ சொல்லிவிட்டுப் போங்கன்னுட்டேன்!” என்றார் எடப்பாடி.

“நம்ப முடியலையே” என்று மிஸ்டர் ரீல் விழித்தபோது...

“இப்போ கூட ராஜ்பவன் வழியாத்தான் சேலம் போறேன். வா அங்கே என்ன நடக்குதுன்னு நீயே நேரா பாரு”

மிஸ்டர் ரீல் முதல்வர் காரில் ஏறினார்.

ராஜ் பவன் வாசலில் முதல்வர் கார் நிற்க... ஆளுநர் வந்து முதல்வருக்கு பூங்கொத்து தர, முதல்வரும் காரை விட்டு இறங்காமல் அதை வாங்கிக் கொண்டு, ஆளுநரை பார்த்து “பெரியவரே...கார் டிக்கியில நீங்க கையெழுத்து போட வேண்டிய கோப்புகள் எல்லாம் இருக்கு. போட்டு உடனே அனுப்புங்க” என்று சொல்ல... ஆளுநர் கார் டிக்கியை திறந்து கோப்புகளை எடுத்து வந்து, கார் மேலே வைத்து... “ இதோ இங்கேயே இப்பவே கையெழுத்து போடுறேன்” என்று சொல்லி மடமடவென கையெழுத்துப் போட்டு, மீண்டும் அந்த கோப்புகளை கார் டிக்கியில் அவரே கொண்டு போய் வைத்துவிட்டு, முதல்வரை பார்த்து கும்பிட்டு... “இந்த சூரப்பா மேட்டரு...” என்று தலையைச் சொறிந்த படியே ஆரம்பிக்க...

“சூரப்பா பத்தி மட்டும் பேசாதீங்க... நான் அப்புறம் பி.எஸ். வீரப்பாவா மாறிடுவேன்” என்று சொல்லிவிட்டு, “டிரைவர் வண்டிய எடு” என்று எடப்பாடியார் சொல்ல... டிரைவர் வண்டியை எடுக்க... கார் முன் விழுந்து கும்பிட்டார் ஆளுநர்.

காரிலிருந்து இறங்கிய மிஸ்டர் ரீல் ஆச்சர்யம் பிளஸ் அதிசயத்துடன் நடந்தவற்றையெல்லாம் வாய் பிளந்து பார்த்து நிற்க...எடப்பாடியாரின் கார் சேலத்துக்கு அதி வேகமாக ஜூட் எடுத்தது!