கிரியா ராமகிருஷ்ணன்
தமிழ் புத்தகப் பதிப்பு இன்று மிகப் பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இருண்டு கிடந்த இந்த உலகில் தன் நுழைவின் மூலம் பிரகாச விளக்கேற்றியவர் கிரியா ராமகிருஷ்ணன்... புத்தகங்களின் உள்ளடக்கத்தை மட்டுமின்றி, அதன்உருவாக்கத்திற்கும் புத்துயிர் ஊட்டி எல்லோரையும் ஈர்க்கும் வகையில் மாற்றிய முன்னோடி. புத்தகப் பதிப்பில் என்னென்ன தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டோ அனைத்தையும் தன் க்ரியா பதிப்பக வெளியீடுகளில் அவற்றை பரிட்சித்து பார்த்து, மற்றவர் தொடர வழி வகுத்து பல இளம் பதிப்பாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் நம்பிக்கையளித்தவர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட தன் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்து அவர் உருவாக்கிய ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ தமிழ் உள்ள வரைக்கும் தமிழர் மனதில் அவரை நிலைத்திருக்கச் செய்யும்.
ராமகிருஷ்ணன் பிறந்தது சென்னையில். லயோலாவிலும், ஜெயின் கல்லூரியிலும் படித்தார். கல்லூரிக் காலத்தில் சா.கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி நண்பர்களானார்கள். இவரை, இளகிய வாசிப்பினை நோக்கி நகர்த்தினார்கள். அகிலன், நா.பா, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்து, தேர்ந்த இலக்கிய அறிவு வாய்த்தது. நான்கு பேரும் இணைந்து ‘இலக்கிய சங்கம்’ என்றொரு அமைப்பைத் தொடங்கி, தேவநேயப் பாவாணர் நூலகத்தில் வாசிப்புக் கூட்டங்களை நடத்தினார்கள்.
சரியாய் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி நேரத்தில் முடிக்கும் அந்த கூட்டங்களில் கவிதை, கதை, கட்டுரைகள், இசை, ஓவியம், நாடகம் குறித்தெல்லாம் விவாதித்திருக்கிறார்கள். அதுவே, எழுத்து, மொழி பெயர்ப்பு என பல முயற்சிகளை நோக்கி ராமகிருஷ்ணனை நகர்த்தியது.
வேலைக்காக தலைநகர் டெல்லியில் தங்கியபோது கிடைத்த வெங்கட்சாமிநாதனின் நட்பு, சர்வதேச கலைவடிவங்களின் மீதான அறிவையும், நுட்பமான பார்வையையும் தந்தது.. டெல்லியிருந்து சென்னை திரும்பிய ராமகிருஷ்ணன், ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன், முத்துசாமி, பாலகுமாரன், எல்லோருடனும் இணைந்து ‘கசடதபற’ இதழைக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியத் தளத்தில் ‘கசடதபற’ பெரும் வரவேற்பினைப்பெற்றது..
‘கசடதபற’ தந்த அனுபவத்தில், தன் வேலையை விட்டு தோழி ஜெயலட்சுமியோடு இணைந்து 1974-ல் க்ரியா பதிப்பகத்தை தொடங்கினார் ராமகிருஷ்ணன். ‘தமிழ் பதிப்புத்துறையில் எவரும் செய்யத் தயங்கும் விஷயங்களை செய்வதே க்ரியாவின் இலக்காகத் தீர்மானித்தோம்’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன்..
ராமகிருஷ்ணனின் வித்தியாசமான தொழில் நுட்பத்தில் வெளிவந்த முதல் நூல் ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’ கவிதைத் தொகுதிதான். ஆனால் க்ரியாவின் முதல் வெளியீடு, நா.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’. இதில் அவரின் மூன்று நாடகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஒரு பக்கம் பதிப்புப் பணிகள் நடக்க, அகராதி உருவாக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டார் ராமகிருஷ்ணன். முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்து கிட்டத்தட்ட ஒரு கோடி வார்த்தைகளை அட்டவணைப் படுத்தியிருக்கிறார். இப்போதும் அவருடைய இணையதளத்தில் எவர் வேண்டுமானாலும் புதிய வார்த்தைகளை பதிவு செய்யலாம். தகுந்த ஆய்வுக்குப் பிறகு அதை ஆவணப்படுத்துவார். தற்போது வெளிவந்துள்ள பதிப்பில், திருநர் வழக்குச் சொற்கள், இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு பதிப்பாளராக மட்டுமின்றி, ஒர் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் இயங்கியவர் ராமகிருஷ்ணன். தரமணி ரோஜா முத்தையா ஆய்வு நூலக உருவாக்கத்தில், இவரின் பங்கு முக்கியமானது. ‘கூத்துப்பட்டறை’ துவக்க கட்டமைப்பிலும் மிகுந்த உழைப்பை தந்தவர். ‘மொழி அறக்கட்டளை’ என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மரபுத்தொடர் அகராதியை வெளியிட்டார். அகராதிகளை ப்ரெய்லி மொழியில் கொண்டுவந்தார். தன் இணையப் பக்கத்தில் ஒரு சொல்வங்கியை தனிப்பட்ட முறையில் உருவாக்கி வைத்தார்.
சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1978ஆம் ஆண்டிலிருந்து இந்தி, வங்கமொழி, கன்னடம், என பல மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் வெளியிட்டு வந்தார்.
தமிழகத்தில் பதிப்பாளர்கள் நிலை குறிப்பாக தமிழ் பதிப்பாளர்கள் நிலை குறித்து அவரின் கருத்துக்களை, அவர் வார்த்தையிலே தந்திருக்கிறேன். அது ஒன்றே அவரின் தமிழ் படிப்புக்கான ஆர்வத்தை விளக்க போதுமான ஒன்று.
“அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர், முக்கியமான தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் ஒருவர், க்ரியா அகராதியின் முதல் பதிப்பு வெளியான மறு ஆண்டு அகராதி வாங்க வந்தார். அகராதியை வெகுவாகப் பாராட்டினார். தனக்கு இரண்டு பிரதிகள் வேண்டும் என்றார். தனக்குக் கூடுதல் கழிவு வேண்டும் என்றார். எனக்குக் கோபம் வந்தது. “இந்த மாதிரி தரத்தில், இவ்வளவு பெரிய புத்தகத்தை இதே 170 ரூபாயில் அமெரிக்காவில் வாங்க முடியுமா?” என்று கேட்டேன். (அப்போதைய நிலவரப்படி, இந்திய விலைக்கு நிகரான அமெரிக்க விலை ரூ.900.) உலகம் எல்லாம் பார்த்தவர்கள், விலைவாசிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், இங்கே வந்ததும் 20 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கும் பேரம் பேசுவதுதான் அவலம்”.
“மிக அண்மையில், சென்னை புத்தகக் காட்சிக்கு க்ரியா அரங்குக்கு ஒருவர் வந்தார். மிகத் தரமான உடைகளை, மிகக் கச்சிதமாக அணிந்திருந்திருந்த அவர், க்ரியா அகராதியை நீண்ட நேரம் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்து கேட்டார்: ‘இவ்வளவு அருமையான அகராதியை வெளியிட்டிருக்கிறீர்களே, ஏன் இதை நீங்கள் இலவசமாக எல்லோருக்கும் தரக் கூடாது?’ எனக்குப் பதில் பேச நா எழவில்லை.”
“இந்த அவல நிலைக்குச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் காரணம். புத்தகம் என்பது ஒருவர் எழுதி ஒருவர் வெளியிடுவதால் உருப்பெற்றுவிடுவதில்லை. அது சமூகத்தில் வேர்விட்டுத் தனக்கான ஆகிருதியை வளர்த்துக் கொள்ள, எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைத் தாண்டி, கல்வி அமைப்பு, ஊடகங்கள், குடும்பம் என்று எல்லா அங்கங்களும் இடம்தர வேண்டும். புத்தகங்களுக்குச் சமூக அந்தஸ்து ஏற்பட வேண்டும். இந்த அந்தஸ்து கிடைக்க, பதிப்பாளர்களும் தங்கள் தொழிலைத் தொழில் திறனோடு மேற்கொள்ள வேண்டும். மாற்றம் ஏற்பட யார், எங்கிருந்து தொடங்குவது?”
- ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன்,
தன்னுடைய 74 ம் வயதில் இந்த ஆண்டு நவம்பர் 17 அன்று மறைந்த அந்த பதிப்பாளருக்கு, தனித்தமிழகராதி போல என்றுமே இறப்பில்லை.
Leave a comment
Upload