தொடர்கள்
பொது
காதல் மன்னனுக்கு ஒரு கனகாபிஷேகம்..! - வேங்கடகிருஷ்ணன்

20201020165604354.jpg

புதுக்கோட்டை ராமசாமி கணேசன் - யாரோ விடுதலை போராட்ட வீரர் பற்றி சொல்லப்போகிறேன் என்று நினைத்தால், ஸாரி. நம்ம காதல் மன்னர் ஜெமினி கனேசனின் இயற்பெயர் அது தான்.

1920 நவம்பர் 17 ம் தேதி பிறந்தவருக்கு இது நூற்றாண்டு.

இளமைக்காலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தவர் ஜெமினி. அவரின் அத்தை புகழ்பெற்ற சமூக சேவகியான முத்துலட்சுமி ரெட்டி தனது அம்மா மற்றும் தம்பி மனைவியின் அவல நிலை கண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி சட்டம் இயற்றச் செய்தவர். அவர் உதவியோடு தான், ஜெமினி பள்ளிக் கல்வி பயின்றார். பின்னர் திருச்சியில் அவருக்கு பெண் கொடுக்க வந்தவர் அவரை மருத்துவக் கல்வியில் சேர்த்து விடுவதாக வாக்கு தர.. அவர் பெண் அலமேலுவை மணந்து கொண்டார். அவரே ஜெமினி கணேசனின் முதல் மனைவி. அவரை ஜெமினி “பாப்ஜி” என்று அழைப்பார்.

ஜெமினியின்முதல் கனவு ஒரு டாக்டர் ஆவது. 1940-ல் திருச்சிக்கு சென்று அலமேலுவை சந்தித்தார். அலமேலுவின் தந்தை தன் மகளை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் ஒரு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக உறுதியளித்தார். ஜெமினி உடனே அதற்கு சம்மதித்து 1940 ஜூன் மாதம் அலமேலுவை கைப்பிடித்தார். அந்த திருமணம் நடந்த ஒரு மாதத்திற்குள் அலமேலு தன் தந்தையையும், சகோதரியையும் பறிகொடுத்தார். ஜெமினியின் டாக்டராகும் கனவு அன்றே சிதைந்தது.

குடும்பத்தை காப்பாற்ற வேண்டி அவர் வேலைக்கு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்திய விமானப்படையிலிருந்து அழைப்பு வந்தது. அலமேலுவின் விருப்பத்திற்கு எதிராக அதில் சேர கணேசன் டெல்லி சென்றார். நெல்லையில் அவருடைய தாய் மாமா நாராயணசாமியை சந்தித்தார். அவர் ஜெமினியை ஒரு ஆசிரியர் ஆகும்படி அறிவுரை சொன்னார். முடிவாக ஜெமினி சென்னை திரும்பி மாமாவின் சிபாரிசில் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

பிறகு 1947-ல் புகழ்பெற்ற ஜெமினி ஸ்டூடியோவில் காஸ்டிங் எக்ஸிக்யூட்டிவ் ஆக பணியில் சேர்ந்தார். அங்கிருந்துதான் அவருக்கு ஜெமினி என்ற பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டது. அதுவரை கணேசனாக இருந்தவர் ஜெமினி கணேசன் ஆனார்.

20201020165650566.jpg
1947 - முதல் படம் மிஸ் மாலினி. அதில் அவருடைய இரண்டாவது மனைவியான புஷ்பவல்லியோடு எதிர்பாராமல் இணை சேர்க்கப்பட்டார். அது வசூலில் சுமாராகப் போனாலும், அன்றைய காலத்திற்கு முற்பட்டது என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், அதனுடைய ஒரு நெகடிவ் கூட இப்போது இல்லை.

பின்னர் படிப்படியாக சக்கரதாரி, தாயுள்ளம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் சக்கரதாரி படத்தில் கிருஷ்ணராக நடித்தார். 1953ல் வெளிவந்த தாயுள்ளம் படத்தில் வில்லனாக நடித்தார். அதுதான் அவரை விமர்சகர்கள் இடையேயும், பொதுமக்களிடையேயும் நடிகராக நிலைநிறுத்தியது. ஜெமினியின் ‘மூன்று பிள்ளை’கள் படத்தில் நடித்தாலும், அது பெரிய அளவுக்கு அவர் பேர் சொல்லவில்லை.

ஜெமினிக்கு முதல் ஹிட் “மனம் போல் மாங்கல்யம்”. அதில் அவர் இரட்டை வேடம் தாங்கி நடித்தார். இதில்தான் ஒரு நாயகனுக்கு, அவருடைய மிகப் பொருத்தமான ஜோடி என்று வர்ணிக்கப்படும் சாவித்திரி இணை சேர்ந்தார். அந்த படத்திலிருந்து, தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வரத்தொடங்கினார் நம்ம ஜெமினி.

ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் விரியும் அவருடைய திரையுலக சரித்திரத்தில், பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அவரது ஆரம்பகால வெற்றிகள் மாயாபஜார், அபிமன்யு, கப்பலோட்டிய தமிழனில் சண்டைக்கார மாடசாமி, பெண்ணுரிமை பற்றி அற்புத வசனம் பேசும் வாலிபராக களத்தூர் கண்ணம்மா(கமலஹாசனின் முதல் படம்) என பற்பல!

ஜெமினியின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன். இதில் சிவாஜிக்கு, நேரெதிர் நின்று பேசும் பாத்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தார். இது பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வென்றது.

இன்றும் யூடியூபில் அதிகமாக பார்க்கப்படும் பாடல்களில் ஒன்றான ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ போட்டி பாடல், ஜெமினியின் மிகப் பெரிய வெற்றிப் படம். அடுத்து அவர் நடித்த சரித்திரப் படமான ‘பார்த்திபன் கனவு’ ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆனால் வருமானத்தில் அவ்வளவாக எடுபடாத படம்.

கதாநாயகன் ஜெமினியை ‘காதல் மன்ன’னாக்கிய படங்கள் பலவற்றில் தேனிலவு, கொஞ்சும் சலங்கை, நான் அவன் இல்லை, மீண்ட சொர்க்கம், சாந்தி நிலையம், வாழ்க்கை படகு, கற்பகம், ராமு, தாமரை நெஞ்சம், புன்னகை ஆகிய படங்கள் தான். அன்றைய புகழ்பெற்ற கதாநாயகிகளில் அவரோடு நடிக்காதவர்கள் யார் என்பதை விரல்விட்டு சொல்லிவிடலாம். அஞ்சலிதேவி, புஷ்பவல்லி, பத்மினி, வைஜயந்திமாலா, சாவித்திரி, தேவிகா, விஜயகுமாரி, சரோஜாதேவி, ராஜஸ்ரீ, காஞ்சனா, ஜெயந்தி, கே.ஆர் விஜயா, பாரதி, ஜெயலலிதா என்று அந்தப் பட்டியல் மிக நீளம்.

இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அதில் அவர் பெரிதாக ஈடுபாடு காண்பிக்கவில்லை. அவருடைய மிஸ்ஸியம்மா, ‘மிஸ் மேரி’ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. 1957ல் அது மிகப்பெரிய ஹிட். ஆனாலும் தொடர்ந்து நடிக்கவில்லை. அதிகபட்சம் நான்கு படங்கள்தான் இந்தியில் அவர் செய்தது.

20201020170318680.jpg

இன்றைய இளம் ரசிகர்கள் ஜெமினியை ஒரு குணச்சித்திர நடிகராகவும், ஒரு வயதான தாத்தாவாகவுமே அறிந்திருப்பார்கள். பாலச்சந்தர் தான் அதையும் துவக்கி வைத்தார். ஜெமினியின் முதிய தோற்றத்திற்கு ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தின் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை கேரக்டர்தான் இப்போதும் நம் கண்முன்னே முதலில் வந்து போவார்.

தவிர ‘அவ்வை சண்முகி’யில் வயதான காதலன், கார்த்திக்கின் தாத்தாவாக ‘மேட்டுக்குடி’ என அவர் தேர்ந்தெடுத்து செய்த அந்த பாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நிழலாடுகின்றன.

எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்து கொள்ளக் கூடிய நடிகர் அவர். டைரக்டர்ஸ் டிலைட் என்று கே.பாலசந்தரால் புகழாரம் சூட்டப்பட்டவர் ஜெமினி. முக்கியமாக ஜெமினியின் நல்ல குணம், யாரையும் தனக்கு போட்டியாக கருதாமல் நிறைய பேரை வளர்த்துவிட்டது போன்றவை அவர் செய்த சத்தமில்லாத சாதனைகள்!.

பட உலகினரால் காதல் மன்னன் என் வர்ணிக்கப்பட்ட ஜெமினியின் நிஜ வாழ்க்கையிலும் நிறைய பெண்கள் வந்து போனாலும், நிலையாய் அங்கேயே நின்றது பாப்ஜியும் சாவித்திரியும் தான். அவருடன் நடித்த போதே, நடிகையர் திலகம் சாவித்திரி அவரால் ஈர்க்கப்பட்டு... அவருடன் திருமண வாழ்க்கையை துவக்கினார். அவருக்கும் சாவித்ரிக்கும் இரண்டு குழந்தைகள் உண்டு. உலகம் அறியப்பட்ட ஜெமினியின் மூன்று மனைவிகள்(அலமேலு, புஷ்பவள்ளி மற்றும் சாவித்திரி) மூலம் ஜெமினிக்கு பிறந்த ஒரே ஆண்மகன் சதீஷ். அவர் சாவித்திரி மூலம் பிறந்தவர் தான். மற்றவர்கள் அனைவருமே பெண்கள்தாம்!

ஜெமினியின் வாரிசுகளில் மிகப் பிரபலமானவர் டாக்டர் கமலா செல்வராஜ். இவர் அவரது முதல் மனைவிக்கு பிறந்தவர். செயற்கை கருத்தரிப்பு முறை பிரசவங்களில் பல அரிய ரிகார்டுகள் செய்தவர். தவிர, புஷ்பவல்லியின் மகளான இந்தி நடிகை ரேகாவும் நமக்கு மிகவும் பரிச்சயமானவரே. முதல் மனைவிக்கு பிறந்த கடைசி மகள் டாக்டர் ஜீஜீ தான் அறிமுகமான படத்தில் கார்த்திக்குடன் நடித்திருந்தாலும் பிற்பாடு எய்ட்ஸ் ஆராய்ச்சியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு ‘எய்ட்ஸ் எரிமலை” எனும் ஒரு தொடரினை ஜூனியர் விகடன் பத்திரிகையில் எழுதும் அளவிற்கு மிகவும் பிரபலமானார்.இன்றும் இவரது புத்தகம் பெரிதும் மதிக்கப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் அசோக்குமார் டைரக்ட் செய்ய தனது தந்தையை பற்றி “காதல் மன்னன்” என்ற பெயரிலேயே ஒரு ஆவணப்படத்தை எடுத்தார் டாக்டர். கமலா செல்வராஜ், அது திரையுலக பிரமுகர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இதை சரியானதொரு ஆவணப்படம் என்று பாராட்டினர்.

20201020170421659.jpg

சமீபத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் வகையில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்து ‘மகாநடிகை’ என்ற படம் வெளிவந்தது. அது திரையுலகினரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. இருப்பினும் ஜெமினியின் முதல் மனைவி குடும்பத்தினர், குறிப்பாக டாக்டர் கமலா செல்வராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யூடியூபில் வருத்தமும் கோபமுமாக தனது பேட்டிகளை அளித்திருந்தார்.

20201020170458273.jpg
வாழ்நாள் சாதனைகள் நிறைய செய்த ஜெமினி கணேசனுக்கு, மத்திய அரசு 2006 ஆம் ஆண்டில் தபால் தலை ஒன்றை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

தமிழ்நாடு சிறந்த நடிகர் விருது, எம்ஜிஆர் விருது, பத்மஸ்ரீ விருது, ஃபிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, எம்ஜிஆர் தங்கப்பதக்கம், கலைமாமணி விருது என பல விருதுகளால் அவர் கௌரவிக்கப்பட்டவர்.

அருமையானதொரு தனிக்குரலுடன் பிரகாசித்த பாடகர்கள் பி.பி. சீனிவாசும், ஏ.எம். ராஜாவும் அவருக்கு கச்சிதமாய் அமைந்துவிட்ட குரல்கள். இன்றும் (60, 70 ரசிகர்கள் போல) ஜெமினியின் பாடல்கள் ரசிக்கப்படுவதற்கு காரணம் காதல் மன்னரின் நீண்ட கால திரை இருப்பும், அவரது வெகு களையான முகமும் தான். காதல் மன்னனாக திரையுலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்ட ஜெமினிக்கு இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால்... உடலுக்கு நூறு வயது மட்டுமே! ஆயின், தமிழ்த் திரையுலகில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அவர் புகழுக்கோ இன்று பல நூறு வயது!