தொடர்கள்
ஆன்மீகம்
நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

20201019230202192.jpeg

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே மிகவும் சிறப்பானது வேதங்கள். வேதங்கள் நான்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த வேதங்கள் தோன்றிய விதம், அவைகளின் தொன்மை, மற்றும் அவை உலகிற்கு வழங்கும் சாரம் ஆகியவற்றை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

உலகச் சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன.

வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுள்ளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி ஆகும். வேதங்கள் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக வந்துள்ளன. இவை சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வேதங்கள் வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக் கூறபடுகின்றன..

வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. அவை ரிக், யஜூர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் ஆகும். வேதங்களை “மறை” என தமிழில் கூறுவர். இவை நான்மறை என்றும் கூறப்படுகிறது. இந்த நான்கு வேதங்களில் முதல் வேதமான ரிக் வேதத்தில் துதிப் பாடல்களும், யஜூர் வேதத்தில் யாகம் தொடர்பான செய்முறைகளும், ஸாம வேதத்தில் இசைப் பாடல்களும், அதர்வண வேதத்தில் பயனுள்ள துதிப் பாடல்களும் இருக்கின்றன. இதில் ரிக் வேதம் 21 பிரிவுகளாகவும், யஜூர் வேதம் 109 பிரிவுகளாகவும், ஸாம வேதம் 1000 பிரிவுகளாகவும், அதர்வண வேதம் 50 பிரிவுகளாகவும் ஆக மொத்தம் நான்கு வேதங்களும் 1180 பிரிவுகளாக உள்ளன. இது மட்டுமல்லாது ஒவ்வொரு வேதமும் தனித்தனியே நான்கு பிரிவுகளாக அதாவது மந்திரசம்ஹிதைகள், பிரம்மாணங்கள், ஆரண்யங்கள், உபநிஷதங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த வேதங்கள் தனி மனித ஒழுக்கத்தை கடவுளின் இருப்பை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறது. அபரிமிதமான அறிவையும், ஞானத்தையும், மந்திர சக்தியையும் தன்னுள் அடக்கியுள்ள இந்த வேதங்கள் நமது மனதையும், ஆன்மாவையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள செய்கின்றன.

வேத காலம்:

வேத காலத்தை யாராலும் உறுதியாகக் கணிக்க முடியாது. இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவானதாக கருதப்படுகின்றது. அந்தk காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ, நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ, அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்தப் பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது. அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள், மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள். இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்தது. வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது. வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.

வேதவியாசர்:

வேதங்கள் நான்கு எனப் பிரித்து வகுத்தவரும் வியாசரே; எனவே இவரை “வேதவியாசர்” என்பர். வேதவியாசர் பல கோடி மக்களின் நன்மையை உத்தேசித்தும், வேதங்களைக் காத்து இரட்சிக்கவும், அவற்றை நான்கு பகுதிகளாகத் தொகுத்து முறைப்படுத்தினார். வேதங்கள் கடல் போன்றவை என்பதனால் அவற்றை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, அவற்றை இன்ன பிரிவினர் படிக்க வேண்டும் என்ற புதிய பாதையை வகுத்தார். சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும், கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும், அவற்றை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், வேதத்தின் சாரமான தர்மத்தின் பெருமையைப் பறைசாற்றும், மகாபாரதம் எனும் இதிகாசத்தைப் படைத்தார். இது தவிர, ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், நாரத புராணம், கருட புராணம் உள்ளிட்ட, பதினெட்டு புராணங்களையும் எழுதினார்.

ரிக் வேதம்:

ரிக் என்றால் போற்றுதல் என பொருள்படும். வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம் போற்றப் படுகின்றது. இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும் இந்து தர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை இருக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர்.

ரிக் வேதம் எட்டு அஷ்டகங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 2024 வர்க்கங்கள், 10647 மந்திரங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. வேதம் என்றாலே செய்யுள் என்று தான் பொருள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ரிஷியின் பெயரை கொண்டது. ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக்வேதத்தில் 33 தெய்வங்களை அதாவது 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள் போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆகும்.

யஜுர் வேதம்:

“யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம் (வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, உரை நடையில் யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் துதி செய்ய ரிக் வேதம் உபதேசித்துள்ளது. ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது.

இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்களே ஆகும். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல் முறைகளையும் யஜூர் வேதம் விளக்குகின்றது.

இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. வேள்விகள் செய்யப்படுவது தெய்வங்களுக்காக எனவும், வேள்விகளில் உயர்ந்தது ஆன்மவேள்வியே (ஆத்மயக்ஞம்) என்றும் கூறப்படுகின்றது.

யஜூர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சுக்கில யஜூர் வேதம், கிருஷ்ண யஜூர் வேதம் எனப்படுகின்றன.

ஸாம வேதம்:

“ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும். ஸாம வேதத்தை கான வேதம் என்றே குறிப்பிடுகின்றனர். சடங்குகளின் போது இசைப்பதற்காகவே ஸாம வேதம் இயற்றப்பட்டதாகும்.

ரிக் வேதத்தில் ஸ்தோத்திரங்களாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ஸாம வேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையையும் பற்றி கூறுகிறது. ஸாம வேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசை வடிவில் ஒளிந்துள்ளது. ஸாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.

அதர்வண வேதம்:

அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரசித்திப் பெற்றது அதர்வண வேதம். அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படுகிறது. இதுவே நான்காவது வேதமாகும். ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. இது உரைநடையாகவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறன. ஏனைய மூன்று வேதங்களிலும் இல்லாத அநேக தேவதைகள், பலவிதமான கோரமான ஆவிகளைப் பற்றிய மந்திரங்களும் உள்ளன. இதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற பல விஷயங்கள் அதர்வண வேதத்திலிருந்து வந்தவை.

படைப்பின் விசித்ரத்தை பற்றிய ப்ருத்வீ ஸூக்தம்' இந்த வேதத்தில் வருகிறது. அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் மந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலை பற்றியது ஆகும்.

அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் சில சடங்குகளை தவறான நோக்கத்தில் உபயோகிக்க கூடாது.

வேதத்தின் நான்கு பிரிவுகள்:

ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகும்.

சம்ஹிதை என்பது தெய்வங்களுக்கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள் (சூக்தங்கள்), இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப்படும் பிரார்த்தனைகள் இதில் உள்ளன.

பிரம்மாணம் என்பது யாக யக்ஞங்கள் பற்றி அனுஷ்டிக்கப்பட வேண்டிய மந்திரங்கள் இவற்றில் உள்ளன.

ஆரண்யகம் என்பது தியானம், தவம் போன்றவற்றின் மேற்கோளாகவும் வழிகாட்டியாகவும், இறைவனைப் பற்றிய மேலான ஆராய்ச்சிகள், சிந்தனைகள், வெளியுலகம் அறியாத சில ரகசிய மந்திர தந்திர முறைமைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

உபநிஷதம் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். இவை ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. வேதத்தின் முடிவு (அந்தம்) தான் வேதாந்தம். இவை மிகவும் புகழ்ப்பெற்றவையாகவும், இந்து தர்மத்தின் மிக உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன. இதில் தத்துவ ஆராய்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிகள் உள்ளன.

கம்பர் இராமாயணத்தில் வேதம்:

கம்பர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல இடங்களில் நான்கு வேதங்களின் உயர்வு பற்றி எழுதியுள்ளார். இவர் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. அதில் ஒரு எடுத்துக்காட்டு

“புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்
என்னும் ஈது அருமறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி
மாதவம் அறத்தொடு வளர்த்தார்
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்
ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்
உறைவு இடம் உண்டு என உரைத்தல்.” — பால காண்டம்.

பொருள்:

இப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள் கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள்? நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.

‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சொர்க்கம்) - என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பர் கூறுவது சிறப்பு.

ஒருவரின், தியாக உணர்வு, தர்மத்தைக் கடைப்பிடித்தல், ஆன்மீக அடிப்படையிலும், அன்பின் அடிப்படையிலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஆகியன வேதங்களின் அடிப்படைக் கருத்துக்களாக அமைந்துள்ளன.

உலகம் அழிந்தாலும் வேதங்கள் அழியாது!!

“வேதங்களைப் போற்றுவோம்”