இந்த கால குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கணினியும், இணையமும் தகவல் சுரங்கங்களின் வாசல்களாக விரிய, அனாயசமாக அறிவென்னும் பொக்கிஷத்தை அகழ்ந்து எடுக்கிறார்கள்.
அதே சமயம், சென்ற வார செய்தி ஒன்று நம் கவனத்தை ஈர்த்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த அர்ஹம் ஒம் தல்சனியா என்னும் ஆறு வயது சிறுவன் பைதான் (Python) மொழியில் ‘நிரல்’ (Program) எழுதி ‘உலகின் இளம் ப்ரோகிராமர்’ என்று கின்னஸில் இடம் பிடித்த செய்தி அது. கணினி என்னும் தொழிற்நுட்ப வளர்ச்சியுடன் மனித அறிவு போட்டி போடும் காலங்களில் வாழ்ந்து வருவது பெருமிதத்தையே தருகிறது. பிறந்த குழந்தை விரல்களைக் குவித்து, உணவை உண்ணும் முன் மவுசைப் பிடித்து கம்ப்யூட்டரில் விளையாடுவதைக் கூட நாம் காண்கிறோம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை வேறு. அப்போதுதான் அலுவலகங்களில் கணினி எட்டிப் பார்க்க துவங்கியது. கணினி படிப்பும், பயிற்சி நிலையங்களும் ஆரம்ப நிலையில் இருந்த ‘டாஸ்’ (DOS Comments) காலம். அக்காலத்தில் கணினியில் படித்து, தானே ஒரு மென்பொருள் நிறுவனத்தை துவக்கி, அதை வெற்றிகரமாக நடத்தி வந்த பெண்மணியே இவ்வாரம் நாம் சந்திக்கும் சிறப்பு விருந்தினர். ஆம், கணினி உலகில் பெயர் பதித்த, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் நிறுவனர் காம்கேர் புவனேஸ்வரி அவர்களை நாம் விகடகவி வாசகர்களுக்காக தொடர்பு கொண்டு உரையாடினோம்.
புவனேஸ்வரி அவர்கள் இந்த துறைக்கு வந்த விதத்தை மிக அழகாகக் கூறினார். “நான் பிறந்தது கும்பகோணம். அப்பா வி.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் துணைக்கோட்ட பொறியாளர். அம்மா கே. பத்மாவதி அதே துறையில் சீனியர் தொலைபேசி கண்காணிப்பாளர். பெற்றோரின் பணி காரணமாக மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விருதாச்சலம், சீர்காழி, திருவாரூர், திருச்சி என பல்வேறு ஊர்களில் வசிக்க வேண்டி இருந்தது. இருவரும் ‘ஷிஃப்ட்’ முறையில் பணி செய்ய வேண்டி இருந்ததால், மூத்த பெண்ணான நானும், தம்பி, தங்கையும் எங்கள் நேரத்தை நிர்வகிக்கவும், சுய சார்புடன் விளங்கவும் இளமையிலேயே பயிற்றுவிக்கப்பட்டோம்” என்கிறார்.
பள்ளி படிப்புக்கு பின் அப்போது மிகவும் பிரபலமாகாத கணினி படிப்பில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். பின்னாளில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். அரசுப்பணி, ஆசிரியப்பணி என்று அந்நாட்களில் இருந்த வாய்ப்புகளை விட்டுவிட்டு ‘காம்கேர்’ மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு துவக்கினார். ஆண்களே தள்ளாடும் துறையில், தனி ஒரு பெண்மணியாக 28 ஆண்டுகளாய் சாதித்து வருகிறார். புவனேஸ்வரி என்ற பெயருடன் ‘காம்கேர்’ இணைந்து ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்னும் ஒற்றைச் சொல்லாய் இன்றும் கணினித் துறையில் வலம் வருகிறது.
ஆரம்ப காலத்தில் காம்கேர் சந்தித்த சவால்களும், சிரமங்களும் பல. ஆனால் அச்சவால்களை தன்னம்பிக்கை, துணிவு மற்றும் கணினியில் ஆழ்ந்த அறிவால் எதிர் கொண்டார். ‘விண்டோஸ்’ திறக்காத காலத்தில் டாஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்திலியே C, C ++ கொண்டு ஓவியங்கள், கார்ட்டூன்கள் வரைந்தும், தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியதும் பின்னர் ‘பிளாஷ்’, ‘மாயா’ மென் பொருட்களைக் கொண்டு அனிமேஷன் படங்களை உருவாக்கியதும் காம்கேர் நிறுவனத்தின் சாதனைகள்.
இன்று பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டு ப்ராஜெக்ட்டுகளை எடுத்து செய்து கொடுத்து வணிக நோக்கில் செயல் படுகையில், நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை இந்திய நாட்டுக்காகவே நம் நாட்டு தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதுதான் இவருடைய சிறப்பும், இவரது நிறுவனத்தின் சிறப்பும். கணினித் தொழில்நுட்பத்தை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் தங்கள் நிறுவன தயாரிப்புகள், புத்தகங்கள், ஆடியோ, வீடியோ தயாரிப்புகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் கொண்டு சேர்த்தவர் காம்கேர் புவனேஸ்வரி.
பல நிறுவனங்களுக்கு மென் பொருள் தயாரித்து தருவதும், இணைய தளம் வடிவமைத்து தருவது உள்ளிட்ட பணிகளுடன், கம்ப்யூட்டர் தொடர்பான நூற்றி இருபத்தைந்துக்கும் மேலான நூல்களை காம்கேர் புவனேஸ்வரி எழுதி உள்ளார். இவை இந்தியாவெங்கும் பள்ளி, கல்லூரிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்டு, கணினி அறிவைப் பரப்பி வருகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பல நாடுகளில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களில் பல நூலகங்களிலும், பாடதிட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் மாணவர்களுக்கான கல்வி சி.டி-க்கள் விலை சில நூறுகளில் இருந்த காலத்தில் 99 ரூபாய்க்கு இத்தகைய சிடிகளை வெளியிட்டார். குறைந்த விலை சிடிக்களை அறிமுகப்படுத்தியதில் முதன்மையானவர்..
அவர் “இந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அடுத்தடுத்து இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் என தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன. அனிமேஷனில், விளக்கத்துடன் நாங்கள் தயாரித்த கந்தர் சஷ்டிக்கவசம், திருக்குறள், திருவாசகம் போன்றவை எங்களின் ஆகச் சிறந்தப் படைப்புகளானது” என்று தம் படைப்புகளை பட்டியலிடுகிறார்.
இந்த படைப்புகளுடன் நம் குழந்தைகள் வளர்ந்ததும் இவரது டுடோரியல் சிடிக்கள் உடன் நம் கணினி அறிவு வளர்ந்ததும் நாம் நினைவு கூர்கிறோம்.
மிகச் சிறிய வயதில் இருந்தே படிப்பதையும், எழுதுவதையும் புவனேஸ்வரி தம் வழக்கமாக கொண்டுள்ளார். பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை வேலையில் மூன்று மணிக்கே எழுந்து, தனது நிறுவன வேலைகளை ஆன்லைனில் செய்வது, நிரல் எழுதுதல், இவற்றுடன் படிப்பதையும், எழுதுவதையும் பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார். அதன் விளைவாக, இவர் முகநூலில் தொடங்கிய புதிய முயற்சியே ‘தென்கச்சி சுவாமிநாதனை’ நினைவுபடுத்தும் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் எழுதும் பதிவுகள். சென்ற வருடம் 365 பதிவுகள். ஒருநாள் தவறாமல், காலை ஆறுமணிக்கே இவர் வெளியிட்டு வந்தார். இந்த பதிவுகள் முகநூல் நண்பர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வாழ்வியல் , நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை விதைக்கும் அனுபவங்கள், உளவியல் சித்தாத்தங்கள் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், சினிமா, உடல்நலம், மனநலம் என பல பொருள்களில் எளிய தமிழில் எழுதியது அற்புதமாக இருந்தது.
இந்த வருடம் முதல் நாளில் இவர் ‘ஹலோ வித் காம்கேர்’ என்னும் புதிய தொடரை முக நூலில் ஆரம்பித்தார். ‘இந்த நாள் இனிய நாள்’ போன்ற தொடர் என்றாலும், வாசகர்களின் கேள்விக்கு விடை தரும் பாணியில் அமைத்தவர், அதை அடுத்த கட்டமாக காம்கேர் டிவி என்னும் தங்கள் நிறுவன யூடியூப் சானலில் வீடியோ பதிவாகத் தருகிறார். இந்த பதிவும் விடிந்ததும் காலை ஆறு மணிக்கு நம் கணினியைத் தட்டுகிறது.
வாழ்க்கைத்தளத்தில் இருந்தே இக்கேள்விகள் பிறக்கின்றன. அவற்றுக்கு விடையையும் அந்த தளத்தில் இருந்தே தன் பார்வையில் தருகிறார். நல்ல விஷயங்களைப் பற்றி பேசவும், கேட்கவும், படிக்கவும் நேரமின்றி மக்கள் ஓடிக் கொண்டிருக்கும் காலத்தில் ‘பேசாப் பொருளைப் பேச வந்தேன்’ என்று நல்ல கருத்துக்களை மக்களிடையில் எடுத்துச் செல்லும் அழகான பணியை 100% நேர்த்தியாக செய்கிறார் . இவரது நூல் அறிவும், அனுபவ அறிவும், வாழ்க்கை குறித்த இவரது அணுகு முறைகளும் இந்த வீடியோ பதிவுகளில் தெளிவாக தெரிகிறது.
கடின உழைப்பு, நிறுவன வளர்ச்சியில் சமரசம் செய்து கொள்ளாத அர்ப்பணிப்பு, தினம் தினம் புதிதாக வரும் கணினி தொழிற்நுட்பங்களை வசப்படுத்துதல் என்று ஓய்வின்றி உழைக்கும் காம்கேர் புவனேஸ்வரியின் வாழ்க்கையே அழகான முன்மாதிரியான வாழ்க்கை. டெம்ப்ளேட் முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை நெறியாக கொண்டு வாழ்பவர். தன்னை வளர்த்த சமூகத்துக்கு நன்றி செய்யும் வகையில் தன் எழுத்துப்பணியை தினம் தொடர்கிறார். ஒரு பதிப்பாளராக பல நூல்கள் வெளியிட்டு உள்ளார். ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இ-புத்தகங்கள், மொபைல் ஆப்’கள் என்று இவர் தன் வானத்தை விரித்துக் கொண்டே போகிறார். சின்னத்திரை மற்றும் ஊடகங்களில் பெரிய பெயர் பெற்ற பின்னும் அப்புகழை தன் தலையிலோ, மனத்திலோ ஏற்றுக்கொள்ளாமல் பயணத்தைக் தொடர்வது இவரது தனிச் சிறப்பு.
சமூகத்தின் மேல் இவர் கொண்ட அக்கறையும், அன்பும் அளப்பரியது. இவரது தாய் தந்தை பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்னும் அறக்கட்டளையை நிறுவி சமுதாயப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். “இந்த அறக்கட்டளை வழியாக மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவதை நோக்கமாகக் கொண்டோம். பார்வையற்றோர், மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ஸ்கிரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ உருவாக்கியுள்ளோம். தவிர வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம்” என்று அடக்கத்துடன் கூறிக் கொள்கிறார் புவனேஸ்வரி.
முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் கணினித் துறை வளர்ச்சி என்பது கற்பனைக்கெட்டா உயரத்துக்கு சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. உலக மயமாக்கலும், தாராளமயமாக்கலும் உலக நிறுவனங்களை இந்தியாவுக்குள் வரவழைத்தன. இந்த பெருவெளிச்சத்தில், துவக்கத்தில் இத்துறையில் தீபம் ஏற்றியவரை சிலாகிப்பது தருமம். இப்போது கணினி இல்லாத துறைகள் இல்லை. இந்த வளர்ச்சியில் தனி ஒரு பெண்மணியாக சாதித்த, சாதித்து வரும் காம்கேர் புவனேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்தும், நன்றியும் கூறி விடைபெற்றுக் கொண்டோம்.
Leave a comment
Upload