பரபரப்பாக மனிதர்கள் இயங்க எத்தனிக்கும் விடியற்காலை நேரம்... மின்சார ரயில்கள் சப்தமிட்டபடி இயங்கிக் கொண்டு இருக்க, பேரூந்து நிலைய நடைமேடையில் பத்திரிகை விநியோகஸ்தர்கள்... செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளை அவர்கள் படிப்பார்களா? தெரியாது. ஆனால் கடமையுணர்வோடு அடுக்கிக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வத்துடன் இருந்தனர்.
கிழிந்த மேல்சட்டை, பழுப்பு ஏறிய கிழிந்த ஜீன்ஸ், சிவப்பு பெல்ட், ஹவாய் செருப்பு, தோளில் ஒரு மூட்டை என தோற்றமே, குப்பைகளை பொறுக்கும் முனீஸ்ராஜ் வறுமையின் கோரப்பிடியில் இருக்கிறான் என்பதை பறை சாற்றியது.
மனித சமூகத்தின் தேவையற்ற கழிவுகளான பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், பால்பாக்கெட்கள் இத்யாதிகள்தான் அன்றைய பொழுதின் ஒருவேளை சாப்பாட்டையே அவனுக்குத் தீர்மானிக்கும். தெருக்களில் நடைப்பயிற்சி பழகுபவர்கள் சிலர் தங்கள் துணையுடனும், வளர்ப்பு நாயுடன் நடந்து கொண்டியிருந்தார்கள். திருப்பத்திலிருந்து வந்த இரு சக்கரவாகனத்தில் அலைபேசியில் பேசியபடி ஒருவர் வந்ததில், நிலைதடுமாறி நாயுடன் நடந்து சென்ற முதியவர் மீது மோதிவிட்டு நின்று திரும்பிப் பார்த்தவன், யாரும் அவனைக் கவனிக்காததை அறிந்து சென்றுவிட்டான்.
முதியவர் கையிலிருந்த நாயின் கயிறு விடுபட்டவுடன் அது இங்குமங்கும் சுற்றிச்சுழண்று குறைத்துக் கொண்டே தவித்தபடியிருந்தது.
இதனைக் கண்டு பதட்டமாய் முனிஸ் ஓடி வருவதைப் பார்த்ததும், அவனை நெருங்கவிடாமல் மேலும் அதிகமாக குறைத்தது நாய். அருகே வர பயந்து தன்னிடம் உள்ள மூலதனமான குப்பை மூட்டையை தூக்கி எறிந்ததும் அமைதியானது. அவர் நெற்றிப் பகுதியிலிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்ட முனிஸ், தன் கிழிந்த சட்டையை கழற்றி மேலும் கிழித்து அவரின் நெற்றியை சுற்றியவன், மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றான்.
முதலுதவிகள் செய்யப்பட்டு, நெற்றியில் தையலிட்டு மயக்க நிலையில் அவர் படுத்திருக்க, நினைவு திரும்ப காத்திருந்தான். கையிலிருந்த நூறு ரூபாயும் ஆட்டோவிற்கு கொடுத்ததில், குளிருக்கு ஒரு டீ கூட குடிக்க கையில் காசில்லாமல் வெற்று உடம்புடன் குத்துக்காலிட்டு மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்தான்.
முதியவர் அந்த பகுதியில் வி.ஐ.பியாக இருக்கவேண்டும், நல்லமுறையில் அவரைக் கவனித்தனர். முதலில் தகவலறிந்து பார்வையிட அவரின் மனைவி, பிறகு உறவினர், நண்பர்கள் என பலரும் வந்து பார்த்துச் சென்றனர்.
இவனைக்காட்டி ஏதோ பேசினார்கள். அவனின் தோற்றத்தைக் கண்டு பலர் முகம் சுளித்தார்கள்.
நூறு ரூபா திரும்பவும் கைக்கு கிடைத்துவிட்டால், நாமும் போயிடலாம் என பரிதாபமாக உட்கார்ந்திருந்தான் முனீஸ்.
போலீஸ் ஜீப் வந்தது. அதிகாரிகள் உள்ளே சென்று மருத்துவரிடம் ஏதோ விசாரித்துவிட்டு, இவனைப் பார்த்துப் பார்த்து பேசினார்கள். இவனிடம் வந்த காவலர் ஒருவர், ‘வா போகலாம்’ என்று கூப்பிட்டு பிடறியில் கைகொடுத்து அவனை இழுத்துச் சென்றார்.
“எனக்கு என் நூறு ரூபா வாங்கனும், அதான் உட்காந்திருந்தேன் எங்க போறோம்?” என முனீஸ் கதறினான்…..
ஏழை சொல்லுறதை இறைப் பணி கேட்குமா? கேட்கலை.
“அவரது கழுத்தில் இருந்த இருபதுபவுன் டாலர் வைத்த சங்கிலியை காணலையாம், ஐயா யாரு தெரியுமில்லே? உயர் காவலதிகாரியோட அப்பா. நீ எடுத்திருந்தால் ஒழுங்கு மரியாதையாகக் கொடுத்திடு. இல்லைன்னா... அந்த ஆட்டோகாரன், பைக்காரன் எல்லாம் கூட்டுக் களவானிகள்னு கேஸைப் போட்டு முட்டியைப் பேத்திடுவோம்” என மிரட்டி அவனை அடிக்கவும் செய்தனர்.
உதடு வீங்கியபடி “நான் செய்யலீங்க, என்னை விட்டுடுங்க, நான் குப்பை பொறுக்கிறவன், முதுகில குப்பையை சுமேப்பேன், என் மனசிலே இல்லைய்யா” என கூறினான். இல்லை… இல்லை கதறினான்.
“குப்பை பொறுக்குகிற உனக்கு அந்த அதிகாலை நேரத்தில் என்னடா அங்க வேலை? கதை வுடறியா?” என மேலும் சில அடிகளும், உதைகளும் விழ... அந்த நேரத்தில் அலைபேசி ஒலிக்கவே, சற்றே ஓய்வு எடுத்தனர் காவல் அதிகாரிகள்.
“தப்பித்தோமடா சாமி. நகை அவங்க வீட்டில்தான் இருக்காம். கழட்டி வைத்து விட்டுதான் வாக்கிங் போயிருக்கிறார்” என போனில் வந்த செய்தியை வைத்து நிம்மதி அடைந்தனர் காவல்அதிகாரிகள்.
வந்த செய்தியை வெளிக்காட்டாமல், “சரி உன் அட்ரெஸ் சொல்லு? அந்த பைக் நம்பர் பார்த்தியா?” எனக் கேட்டு அவனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
தாடையையும் முதுகையும் தடவிக்கொண்டே, கண்கள் கலங்க பரிதாபமாக தெருவில் இறங்கி நடந்தான் முனீஸ்ராஜ்.
வழக்கம்போல் மறுநாள்.. அந்தத் தெருவில் குப்பை பொறுக்கச் சென்ற முனிஸை பார்த்த முதியவர் வீட்டு நாய், இங்குமங்கும் ஓடி தவியாய் தவித்து, பின் கதவேறி தாவியதில் அவர்களின் வீட்டுக்கதவில் மாட்டியிருந்த ”நாய்கள் ஜாக்கிரதை" பதாகை கழன்று விழுந்து தொங்கியபடியிருந்தது.
வாலை ஆட்டியபடி ஓடி வந்த அந்த ஜீவன் மட்டும், முனிஸின் காலை கட்டிக்கொண்டு, அன்பின் வெளிப்பாடாய் தன் நாவால் நக்கி நக்கி விளையாடியது.
Leave a comment
Upload