- 2 -
காவிரி மைந்தன்
ஆம் என்றாய் அவசரமாய்!
அன்பிற்கினியவளே..
உனை நோக்கி நகர்கின்ற என்னுள்ளம் பாரடியோ!
உவகைப் பண் பாடுகின்ற நாள்தான் தினமடியோ!
எண்ணத்தில் உள்ளவற்றை எழுதியெழுதிக் காட்டுகின்றேன்!
உன்னருமை நானறிவேன்! உயிரே நீ அறிவாயோ?
கண்மூடித் தவமிருந்தால் நீ தானே காட்சி தருகின்றாய்!
கட்டித்தழுவ வந்தால் என்னுரிமை ஆகின்றாய்!
பல்வேறு நிலைகளிலும் பாவையுந்தன் நினைவலைகள் - பாய்ந்துவரும் நதிபோல என்னில் கூடும் காட்சிகளே!
என்னை எழுத வைப்பவள் நீ என்பதால் நான் என்ன எழுதவேண்டும் என்றுகூட நீயே தீர்மானிக்கிறாய்!
எண்ண அலைவரிசைகள் ஒன்றாக இருப்பதனால் இதில் யார் நினைப்பதை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிட முடியாது!
அன்பின் நிலை பற்றி அணுவளவும் பேதமில்லை.. உன்னை உயிராக நான் விரும்புகிறேன் என்பது நாம் பரிமாறிக் கொள்ளும் ஒற்றை வாசகம்தான்!
தேடிக் கிடைத்த நீ மீண்டும் தொலைந்துபோகமாட்டாய்!
என் கரங்கள் பற்றிக்கிடப்பாய்! என் இதயம் இணைந்து துடிப்பாய்!
என் கண்கள் அருகே நடப்பாய்! என்னை மட்டும் அணைப்பாய்!
இதழ்ப்பூவைத் திறப்பாய்! இன்பரசம் கொடுப்பாய்! அன்பின்வசம் ஆவாய்! ஆசைநலம் பாடுவாய்! அச்சம் வெட்கம் துறப்பாய்!
பகலைக்கூட இரவாக்குவாய்.. உன் கூந்தலால் எனைமூடி!
இரவைக்கூட பகலாக்குவாய் உன் கண்களின் வெளிச்சத்தால் அந்தசுகம் கோடி!
இரவோ பகலோ எனை நினைந்து நீயும்.. உனை நினைந்து நானும் இருப்பது உண்மைதானே!
எப்போது சந்திக்கப்போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு இருவர் மனதிலும் எழுகின்ற அலைதானே!!
முரசுகொட்டும் ஆசைகள் மனதுக்குள் எழுப்புகின்ற ஒலி நம் காதுகளுக்கு மட்டும்தானே!!
இன்னொரு முறை.. இன்னொரு முறை.. என்று ஏங்கித்தவிக்கும் இதயம் எதற்கென்று உனக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்?
இதுபற்றிய சிந்தனைகள் தொகுக்கப்பட்டால் காதலின் நியதிகள் வகுக்கப்பட்டுவிடும் என்று என் காதில் ரகசியம் வந்து நீ சொன்னபோது.. அணுவணுவாய் காதல் உன்னால் சுகிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தேன்!
அன்பின் சிகரங்களை அடிக்கடி நாமிருவரும் தொட்டு உணரவேண்டும் என்றேன்! அது எங்கே இருக்கிறது என்றாய்?
உன் மனதிலும் என் மனதிலும்.. என்பதுதான் என்று தொட்டுக்காட்டினேன்!
ஆம் என்றாய் அவசரமாய்!!
சரிவிகிதக் கலவையில் இதயம் இணையும்போது காதல் சரித்திரம் தொடங்குகிறது!
பூமழை.. புன்னகை.. குளிர்சாரல், இவையெல்லாம் காதலுக்கு அந்தாதி பாடும்!
எங்கிருந்து விட்டோமோ அங்கேயே நம்மைச் சேர்த்து வைக்கும்!
வேண்டும் போதெல்லாம் கேட்க நினைக்கின்றேன் என்று நான் சொல்லியபோது.. நீ தீண்டும்போதெல்லாம் என்னைத் தருகின்றேன் என்றாய்!
அன்பின் அரவணைப்பில் மூழ்க வைக்கும்போதுதான் இன்பம் என்னவென்று அறியமுடிகிறது!
அடியே இந்தப் பரவச சுகம் பெறுவதற்குத்தானே பிறவியெடுத்தோம் என்பதை மறுப்பாயா என்றேன்! ம்ஹும் என்று தலையை ஆட்டினாய்!
சுத்த (த) சன்யாசி என்றொரு ராகமாம்.. பெயரில்தான் சன்யாசி.. ஆனால் அந்த ராகம் சுகமானது என்பதுதான் உட்பொருள்! ஒரு சுகமான ராகத்திற்கு ஏன் இப்படி பெயர் வைத்தார்களோ என்று வம்புக்கு இழுத்தேன் உன்னை!
நேரடியாகத் திட்ட வேண்டியதுதானே.. ஏன் இப்படி சுற்றி வளைத்து என்று கோபம் கொண்டாய்!
உரிமையில் சொல்லும்போதுதான் உணர்வுகள் பெருமை பெறும்! கடமைக்கு சொல்ல எனக்கு கடுகளவும் தெரியாதே என்றேன்!
மொழியிடம் உங்களுக்கு ரகசிய உடன்பாடு இருக்கும்போல.. எதையுமே உங்களுக்கு சாதகமாய் வளைத்து விடுகிறீர்கள் என்றாய்!
உன்னையும்தான் என்றேன் உடனடியாய்!
என் கண்ணுக்கு அருகே நீயும் உன் கண்களை வைத்துக்காட்டி என்னடா என்று செல்லமாய் கொஞ்சும் நேரம் காதலின் கோடி சுகம்..
போதும் என்று சொல்ல முடியாத போதை தருகின்றாய்!
ராதை நீயென்றே மையல் கொள்கின்றேன்!
யாதும் நானறிவேன் என்று எந்தன் தோள் சாய்ந்தாய்!
பூங்கொடியொன்று செங்கனிகளோடு என்மீது சாய்ந்தபோது..
என் நிலை என்னவென்று நீயே சொல்லடி மாது!!
Leave a comment
Upload