தொடர்கள்
கதை
சர்மாஜியின் கொரொனா வைத்திய சாலை! - 2 - கி.கல்யாணராமன்

20200819011149459.gif

சர்மாஜி பாட்டு பாடிக்கொண்டே குஷியாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

“கட்டி அடி கட்டி அடிடா.. கொரோனவை கண்டபடி கட்டி அடிடா..”

சர்மாஜியின் உற்சாகத்தைப் பார்த்ததும், அவர் மனைவி அபிதா, “என்ன சர்மாஜி குஷி பாட்டை மாற்றி பாடுகிறீர்கள்?”

“இது பாட்டு இல்லை.. என்னுடைய கொரோனா வைத்தியசாலையின் இரண்டாவது திட்டம்”

“நாசமா போச்சு. முதல் திட்டமே போன வழி தெரியல.. இந்த லட்சணத்துல இரண்டாவது திட்டம் வேறயா?”

“முதல் திட்டம் சரியா வராம போனதுக்கு நீதான் காரணம். இந்த திட்டத்தையும் நீ கெடுக்க வேண்டாம்...”

“அப்படி என்ன புது திட்டம்?”

“இப்ப நான் புதிதாக சில வைத்திய முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அதன்படி செய்தால் கொரோனா எங்க, எந்த ஊர்லேருந்து வந்ததோ அந்த இடத்துக்கே திரும்பி ஓடிவிடும்.”

“அது என்ன புது வைத்தியம்? உங்க வைத்தியம் எல்லாம் ஆளைக் காலி செய்வதுதானே?. அதுவும் ஒரு வைத்தியம் தான். ஆள் காலி ஆனால் கொரானவும் காலிதானே?”

“நான் உன்னிடம் சொல்லமாட்டேன். நீ என்னை எப்பவுமே கேலி செய்கிறாய். என்னுடைய திறமை உனக்குத் தெரியாது..”

“முதலில் திட்டம் என்ன சொல்லுங்க. பிறகு பார்க்கலாம்.”

“உனக்கு கொரோனா ஒரு கொழுப்பு, கண்ணுக்கு தெரியாத கொழுப்பு என்று தெரியுமா?”

“சரி. அதுக்கு இப்ப என்ன?”

“ அந்த கொரோனா கொழுப்பை அது உடம்புல எங்க இருந்தாலும் எடுத்துவிடலாம்!”

“எப்படி?”

“அதுதான் குஷி பாட்டு?”

“ஓ ..குஷி பாட்டு பாடினால் கொரோனா கொழுப்பு போய்விடுமா? யார் அவ குஷி? வடக்கத்திப் பாடகியா?”

“இல்ல.. குஷி பட பாட்டு. என் பாட்டை கவனித்தாயா.. கட்டி அடி கட்டி அடிடா.. கொரோனாவை கண்டபடி கட்டி அடிடா..”

“அதாவது கொரோனா இருக்கும் ஆளை கண்டபடி கட்டிப் பிடிக்கணும். அதுதானே?”

“இல்ல கண்டபடி கட்டி அடிக்கணும்.”

“நாம் அந்த ஆளை கட்டிக்கொண்டால் நமக்கு கொரோனா வராதா?”

“நாம் எதுக்கு கட்டிக்கணும்? கட்டி அடி அப்படீன்னா கட்டி அடிக்கணும். ஒரு மரத்துல கட்டி வைத்து அடிக்கணும்..”

“அடப்பாவி.. சரி.. எதால அடிக்கணும்?”

“சவுக்கால.. ஆனா அதுக்கு முன்னாடி சில வேலைகள் இருக்கு!”

“என்ன வேலை? அந்த ஆள் ஓடிப்போகாம பிடிச்சுக்கணுமா?”

“இல்ல அபிதா.. முதலில் அந்த ஆள ஒரு மரத்துல கட்டி வைக்கணும். அவுனுக்கு சவுக்கடி கொடுக்கும் ஆளையும் அவன் எதிரே நிற்க வைக்கணும். அதன் பிறகு, அந்த ஆளுக்கு எங்க வீட்டு பிள்ளை சினிமால நம்பியாரை எம்ஜிஆர் சவுக்கால் அடிக்கும் காட்சியை அடிக்கடி காட்டணும்...”

“அது எதுக்கு?”

“அத பார்த்தவுடனே அவனுக்கு வர பயத்துல அவன் உடம்பில் இருக்கும் கொரோனா கொழுப்பு ஓடிவிடும்.”

“அப்படி ஓடாவிட்டால்?”

“சவுக்கடி கொடுக்க வேண்டியதுதான். அப்படி கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா?”

“என்ன ஆகும்? ரத்தம் வரும். அனேகமா அந்த ஆள் பொழைப்பானா தெரியாது.”

“அதெல்லாம் இல்ல. கொரோனா கொழுப்பு வெளியாகி பறந்துவிடும்.”

“இது ரொம்ப கொடுமை..இந்த மாதிரி வன்முறை வைத்தியம் செய்வதை விட கொரோனாவே நல்லது.”

“உனக்கு என்னோட வைத்திய முறை புரியாது. பொறுத்திருந்து பார்...”

“என்ன பொறுத்திருந்து பார்ப்பது? அப்படி கொரோனா சரியாகவில்லை என்றால் நீங்க என்ன சொல்வீங்க? அடுத்தது அவன் உடம்புல உப்பை தடவு.. இல்லாவிட்டால் மொளகா பொடி பூசு.. கொரோனா போயிடும்.. இதுதானே?”

“ஹையா.. சூப்பர் அபிதா.. இப்பதான் நீ என்னோட வைத்தியம் பற்றி இப்பதான் தெரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறாய். வொண்டர்புல்..”

“கண்றாவி.. போதும் உங்க வைத்தியம்.”

“இரு என்னோட இரண்டாவது வைத்தியம் என்னான்னு உனக்கு சொல்லவேண்டாமா?”

“அது என்ன? கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு எடுப்பதா..? நீங்க கருட புராணம் படித்துவிட்டு இப்படி எதையாவது கற்பனை செய்துகொண்டு, இதுதான் வைத்தியம் என்று சொல்வதை நிறுத்துங்க.”

“இப்படி எல்லாம். சொல்லாதே. கொஞ்சம் சீரியஸாக கேள்...”

“சரி. சொல்லுங்க...”

“இதுக்கு பெயர் கோவிந்தா உருட்டு.”

“அது என்ன கோவிந்தா உருட்டு?”

“உனக்கு அது எல்லாம் தெரியாது. நீ பார்த்திருக்க மாட்டாய்.”

“சரி.. நீங்க பார்த்திருக்கிங்க இல்ல. அத சொல்லுங்க..”

“புரட்டாசி மாதம் தெருவில் மஞ்சள் துணி கட்டிக்கொண்டு, கையில் ஒரு நாமம் போட்ட சொம்பு வைத்துக்கொண்டு மண்ணில் உருண்டு கொண்டே கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.”

“சரி. போகட்டும். அதுக்கு என்ன இப்ப?”

“அது போல கொரோனா வந்த ஆள படுக்க வச்சு உருட்டனும். கையில ஒரு சொம்பு இருக்கும்.”

“யார் கையில? உங்க கையிலையா?”

“இல்ல... அந்த ஆள் கையில. கொரோனா படம் போட்ட சொம்பு இருக்கும். அவன் உருளும்போது கோவிட் போ.. கோவிட் போ அப்படின்னு சொல்லிக்கொண்டே உருளனும்.”

“அப்படி எவ்வளவு நேரம் உருளனும்?”

“நேரம் இல்ல.. ஒரு கிலோமீட்டர் தூரம் உருளணும்.”

“சரி. அப்புறம் என்ன செய்யணும்?”

“அவன் உருண்டு முடிக்கும்போது அவன் மேல மஞ்சப் பொடி உப்பு கலந்த தண்ணீர பூ வாளில எடுத்து தெளிக்கணும்..”

“அப்படி செய்தால் கொரோனா போயிடுமா?”

“கொரோனாவுக்கு மஞ்சள், உப்பு இதெல்லாம் பிடிக்காது. அதனால போயிடும். அப்படி போகாவிட்டால், அவன் நெற்றியில் சுக்கு, மிளகு, திப்பிலி அரைத்து பத்து போடணும். அப்ப கண்டிப்பா கொரோனா என்ன விட்டுடு அப்படின்னு கதறிக்கிட்டு ஒடிப்போயிடும்.”

“மண்ணாங்கட்டி.. நீங்களும் உங்க வைத்தியமும். நீங்க இந்த திட்டத்துல வெற்றி பெற்றால் உங்களை இந்த மாதிரி ஒரு கிலோ மீட்டர் உருட்டுவதாக பெருமாளுக்கு வேண்டிக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.”

“அய்யோ.. அதெல்லாம் வேண்டாம். நான் இன்னொரு ஜாலியான வைத்தியம் சொல்கிறேன்.”

“உங்க அகராதியில ஜாலியான வைத்தியம்தான் மிகவும் மோசமாக இருக்கும்.”

“அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம். நான் இன்னும் சொல்லவே இல்லையே...”

“சரி. சொல்லித்தொலைங்க.. எதோ உங்களோட கொஞ்சம் பொழுது போகட்டும்.”

“இது பிரியாணி ரோலர் கோஸ்டர் வைத்தியம்...”

20200819011415118.jpg

20200819011518363.jpg

“இது ஏதோ புதுசா இருக்கே.. சொல்லுங்க பார்க்கலாம்.”

“நான் தயாரிக்கும் பிரியாணியை கொரோனா ஆளுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். அப்படி அவன் சாப்பிட்ட பின்பு அவனை ஒரு பெரிய ரோலர் கோஸ்டரில் உட்கார வைத்து மூணு ரவுண்டு விட்டா போதும் . கொரோனா ஓடிவிடும்.”

“அப்படி அந்த பிரியாணியில் என்ன இருக்கு?”

“அது நான் வெஜ் பிரியாணி. அதில் எறும்பு உண்ணி, தவளை, பாம்பு, வவ்வால், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, மரப்பட்டை, மரப்பல்லி, ஓணான், கரையான், சிலந்தி பூச்சி இப்படி நிறைய சத்தான ஐட்டங்களை சேர்த்து செய்த பிரியாணி. இந்த பிரியாணி வயிற்றுக்குள் போனவுடன், கொரோனா ஆசையாக அதை சாப்பிட வரும். ஆனால் அதை சாப்பிட வரும்போது அது அந்த ஆளை விட்டு ஓடி விடும்.”

“அது ஏன்?”

“அவன் அப்பொழுது ரோலர் கோஸ்டரில் கண்டபடி வேகமாக சுற்றிக்கொண்டிருப்பான். அதனால் அவன் வயிற்றை பிரியாணி கலக்கிகொண்டிருக்கும். கொரோவனால் ஒன்றும் செய்யமுடியாது. அது வாய் வழியாக ஓடிவிடும்.”

“அதாவது, எலிக்கு மசால் வடை மாதிரி கொரோனவுக்கு பிரியாணிப் பொறி வைத்து பிடிப்பது. சரியா...”

“சூப்பர். சரியாக சொன்னாய். நீ தான் என் வைத்தியத்துக்கு உதவியாளர்.”

“நீங்க சொன்னது போல ஜகன் மோகினி சினிமாவில் வருவது போல பிரியாணி செய்தால், அந்த நாத்தம் தாங்காமல் நீங்களே ஓடிவிடுவீர்கள். பிறகு எப்படி வைத்தியம் செய்வது? உங்கள் மூளைக்கு எதோ ஆகிவிட்டது. முதலில் அதற்குதான் வைத்தியம் பார்க்கவேண்டும்.”
“அவசரப்படாதே. என்னுடைய அடுத்த வைத்தியத்தையும் கேட்டுவிட்டு சொல்...”

“இன்னமும் இருக்கா. சரி சொல்லுங்க...”

“இந்த வைத்தியத்தின் பெயர் புகை மண்டலி...”

“அதாவது, கொரோனா இருக்கும் ஆளை புகை பிடிக்கும்படி சொல்லவேண்டும். அதற்கு நீங்க ஸ்பெஷல் சிகரெட் தயார் செய்திருப்பீங்க இல்லையா?”

“பரவாயில்லையே. இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் சொல்ல வந்தது அது அல்ல..”

“வேற என்ன?”

“நாம் வீட்டில் பூஜை செய்யும் பொது ஹோமம் செய்வோம் இல்லையா. அதைப்போல் ஒரு அறையில் ஹோமம் செய்யவேண்டும். அந்த அறைக்குள் கொரோனா வந்த ஆளை உட்கார வைத்து அந்த புகையை நன்றாக இழுக்கும்படி செய்யவேண்டும்.

“சரிதான். அவன் அப்படியே மயக்கம்போட்டு விழுவான். அப்ப நீங்க உங்க வலையை எடுத்துக்கிட்டு போய் கொரோனாவை பிடித்துக்கொண்டு வந்து விடுவீர்கள் அப்படித்தானே?”

“அதெல்லாம் இல்லை. அந்த ஹோமத்தில் என்னவெல்லாம் போடவேண்டும் தெரியுமா?

“அதையும் சொல்லித்தொலைங்க...”

“ஹோமம் திகு திகு என்று பெரிதாக எரியும்போது, பிரியாணிக்கு போட்ட எல்லா ஸ்பெஷல் ஐட்டங்களையும் இந்த ஹோமத்தில் போடவேண்டும்.”

“அவ்வளவுதான். கொரோனா போகுதோ இல்லையோ.. அந்த ஆள் அங்க இருந்து ஓடிவிடுவான்.” ஒன்று மட்டும் மீண்டும் சொல்கிறேன் சர்மாஜி.. நான் உங்கள் முதல் திட்டம் பற்றி நான் உங்ககிட்ட சொன்னதையேதான் திரும்பவும் சொல்லத் தோணுது. குழந்தை மிகவும் அழுதால் அல்லது குறும்பு செய்தால், அதை பயமுறுத்த “பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்” என்று சொல்வதுண்டு. அதைப்போல யாராவது தேவை இல்லாமல் வெளியே சுற்றுவது, கை கால்களை கழுவாமல் இருப்பது, முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது என்று இருந்தால் அவர்களிடம், இப்படி சொல்வதை கேட்காமல் உனக்கு கொரோனா வந்தால், ‘சர்மாஜியிடம் வைத்தியம் பார்க்க அனுப்பிவிடுவேன்’ என்று சொன்னால் போதும். அவ்வளவுதான். பயந்து நடு நடுங்கி உடனே எல்லாரும்ஃப் அரசாங்கம் சொன்னபடியே கேட்பார்கள். இது போல ஆராய்ச்சி எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வேற உருப்படியான வேலை இருந்தா பாருங்க...இப்படியே போனா நான் உங்களை டைவர்ஸ் பண்ண வேண்டியிருக்கும்..ஜாக்ரதை” என கோபமாக சொல்லிவிட்டு அபிதா நடையைக் கட்டினாள்

சர்மாஜி தனது ஆராய்ச்சி வெளி உலகத்துக்கு தெரியாமல் போனது பற்றி மீண்டும் வருந்தினார்.