வாழ்க்கைக் குவியலில் நாம்
பொறுக்கி எடுக்க ஏராளங்கள்
இருக்க ஏன் இந்த குளறுபடிகள்?
திராட்சைக் கொடி எட்டாத நரி
‘சீ பழம் புளிக்கும்’ என்று நீங்கும்
கதை அறிந்த நாம் ஒற்றைத்
தூண்டிலில் சிக்கி உயிர் விடும்
கோழையாய் மாறுவது ஏன்?
மருத்துவத்தை உயர்த்தவா? இல்லை
மற்றவற்றை தாழ்த்தவா?
குற்றம் சமூகத்திடமா?
கனவுக் கோட்டை எழுப்பி
அதில் பிள்ளைகளை
சிறைப்படுத்தும் பெற்றோரிடமா?
கல்வி முறையா? அதன் குறையா?
கோட்டை தகர்ந்தது முற்றிலுமாய்.
‘பிள்ளையொன்று இருந்தால் போதும்’
என்ற பாரதி தாசன் ‘குடும்ப விளக்கு’
வரிகள் படிப்பில்லா பிள்ளையின்
உயிர் மதிப்பை உணர்த்தும்.
எதையும் உணராமல் ஏட்டை புரட்டும்
பழக்கம் சென்ற தலைமுறையில் இல்லை.
வாழ்க்கை பாடம் கற்க நேரம் உண்டு
வீட்டுப் பாடம் இல்லாததால்!
உணர வேண்டுவோர் பட்டியல் நீளும்
‘நீட்’ தற்கொலைகள்
முற்றுப் பெறும் வரை!
Leave a comment
Upload