கடந்த ஞாயிறன்று இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு நடத்தப்பட்டது . தமிழ்நாட்டில் 1.8 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்காக பதிவு செய்திருந்த நிலையில் முதல் நாள் சனியன்று மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை பரப்பியது .
இதையடுத்து நீட் தேர்வு குறித்த விவாதங்கள் அரசியல் கட்சியினரிடையே தீயாய் பற்றிக் கொள்ள... திங்களன்று சட்டசபையில் முதல்வர் இபிஎஸ் , “ மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணமே திமுக மற்றும் காங்கிரஸ் தான். திமுக அங்கம் வகித்த காங்கிரஸின் ஆட்சியின் போது கூடவே இருந்து எந்த எதிர்ப்பும் அன்று தெரிவிக்காமல் நீட் தேர்வை கொண்டு வந்து விட்டு, இப்போது தடை செய்யவேண்டும் என்று நாடகம் ஆடுகிறீர்களா?” என ஆவேசமாக கேட்டார். அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
“காங்கிரசின் ஆட்சியில் தான் நீட் தேர்வு முறை வந்தது. ஆனால் விருப்பமில்லாத மாநிலங்களுக்கு அதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்ததை நீக்கி, நீட் தேர்வை கட்டாயமாக்கியது பிஜேபி தான்” என காங்கிரஸ் சொல்ல... “நீட்டில் தமிழகத்துக்கு விலக்கு வேண்டும்’ என தமிழக அரசு ஏக மனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசு சார்பாக போட்ட உச்ச நீதிமன்ற மனுவுக்கு எதிராக வாதாடி ஜெயித்தாரே உங்கள் நளினி சிதம்பரம்” என இபிஎஸ் தெளிவாக பதிலளித்து மடக்க... “சபையில் இல்லாதவரை பற்றி பேசக் கூடாது” என கோபித்துக் கொண்டு காங்கிரஸாரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என வெளிநடப்பு செய்தனர்.
இந்தியாவிலேயே நீட் தேர்வை வைத்து அல்லோலகல்லோலப்படும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே...
மற்ற பின்தங்கிய ஜார்க்கண்ட், ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்கள் கூட நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கும் போது, வளர்ச்சி அடைந்த மாநிலமான தமிழகம் மட்டும் ஏன் எதிர்க்கிறது என நியாயமான கேள்விகள் எழுப்பப் படுகின்றன.
ஏன் என்று பார்ப்போம்...
முதலில் நீட்டுக்கு எதிராக முழக்கமிடும் ஆவேசக்காரர்களின் கருத்துக்களை கேட்போம்...
1 ) நீட் தேர்வை அனுமதிப்பதன் மூலம் 15% இளங்கலை (UG) 50% முதுகலை (PG) 100% சிறப்பு மருத்துவ படிப்புகள் (super speciality seats) என இவ்விடங்கள் மத்திய அரசின் மொத்த தொகுப்பிற்கு செல்கின்றன. இது தமிழகத்துக்கான நஷ்டம்தானே!
பின் தங்கிய மற்றும் வளர்ச்சி குறைந்த சிறிய வடநாட்டு மாநிலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகளில் சேர அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ‘நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன், ஊதி ஊதி சாப்பிடுவோம்’ கதை தான் இது! அதனால் அவர்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட தமழகம்தான் பொங்கி எழும்.
2 ) இந்தியா முழுமைக்கும் ஒரே பொதுத் தேர்வு என்பது மாநிலங்களின் உரிமைக்கு விழும் பலத்த அடி ஆகும். Quasi - federal policy என அழைக்கப்படும் வகையில் மத்திய அரசுக்கு மாநிலங்களை அடக்கி ஆள கூடுதல் அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனம் படி கல்வி உரிமை மாநிலங்களின் அதிகாரத்திற்கு கீழ் வருகிறது.
மத்தியரசின் ஆளுகைக்கு உட்பட்ட ஐஐடி போன்ற தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு பொது தேர்வு வைப்பது என்றால் நியாயம். ஆனால் அதே சமயம் மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்ட மாநில அரசின் வருமானத்தில் கட்டமைக்கப்பட்ட கல்லூரிகளின் சேர்க்கைக்கு மத்திய அரசு நாடு முழுமைக்கும் ஒரே பொதுத் தேர்வை கொண்டு வருவது எவ்வாறு நியாயமாகும்!!?
3 ) அடுத்ததாக CBSE, ICSE, State boards and IB (International Baccalaureate) என கல்வியின் தரம் பிரிக்கப்பட்டு, ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என மாணவர்கள் தங்களது செல்வ வளமைக்கு ஏற்ப படிக்கும் நாட்டில் ஒரே மாதிரியான பொதுத்தேர்வு வைப்பது எப்படி நியாயமாகும்? இது எப்படியென்றால் சாப்பிட்டிற்கே வழியில்லாதவனை, புஷ்டியாக சாப்பிட்டு முறையான பயிற்சி எடுத்தவனுடன் ஓட்ட பந்தயம் ஒடு என சொல்வது போலத்தான்.
4) கடைக்கோடியில் உள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் சமூகநீதி. அதன் அடிப்படையிலேயே 69% இட ஒதுக்கீடு இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நோக்கத்திற்கு அடி விழுகிறதாலேயே நாங்கள் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கிறோம்.
சரி. நீட் தேர்வு ஆதரவாளர்கள் சொல்வது என்ன?
1 ) நீட் தேர்வு வந்தால் மட்டுமே தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்.
2) கல்விக்கான மாநில ஒதுக்கிட்டை ஆய்ரம் கோடிக்கணக்கில் தருவதே மத்திய அரசுதான் என்பதை முதலில் நினைவு கொள்ளவும்! நீட் தேர்வுக்கு முன்பு வரையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ ஸீட்டை விற்று கொள்ளை லாபம் பார்த்தனர். அதை நீட் தேர்வு தடை செய்து விட்டது. எனவே தகுதியுடைய ஏழை மாணவர்கள் கூட தனியார் கல்லூரிகளில் இன்று தாராளமாக படிக்கலாம்.
3) நீட் தேர்வு தகுதியில்லாத மாணவர்களையே வடிகட்டுகிறது. அடிப்படை தகுதி இருந்து நீட் பாஸ் செய்து விட்டால் இட ஒதுக்கிட்டு முறைப்படியே இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அந்த அடிப்படை எங்கும் மீறப்படுவதில்லை
ஆனால் இதெல்லாமே தவறான வாதங்கள் என முண்டா தட்டுகிறது நீட் எதிர்ப்பாள அணி! அவர்கள் சொல்வது என்ன?!
நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு வைக்கப்படுகிறது. அதில் 500 க்கு மேல் எடுப்பவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் நிச்சயம் கிடைத்து விடும். ஆனால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இப்போதும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அதெப்படி என பார்ப்போமா?
ஒரு மாணவன் நீட் தேர்வில் 130 மதிப்பெண் எடுத்தாலே அவன் வெற்றி அடைந்ததாக அர்த்தம். +2 இறுதி தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் வைத்திருக்கும் பண வசதி படைத்த மாணவன் இந்த குறைந்த பட்ச நீட் தேர்வு மதிப்பெண்ணை வைத்து கொண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் லட்சக்கணக்கில் இருக்கும் கட்டணம் கட்டி உள்ளே நுழைந்து விடுவான். ஆனால் ஏழை நடுத்தர மாணவர்கள் 400 க்கு மேல் நீட் மதிப்பெண் பெற்று, கூடுதலாக +2 தேர்வில் 90% மதிப்பெண் வைத்திருந்தாலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வழி இல்லாததால் அங்கேயும் சேர முடியாமல் தவிப்பார்கள். இது தான் நிதர்சனம்..
இரண்டு வருடங்களுக்கு முன் “ஓட்டல் காவலாளியின் மகள் அழகு லட்சுமி நீட் தேர்வில் வெற்றி” என்று செய்தித்தாளில் வெளியானது.
அவர் எடுத்த நீட் மதிப்பெண் 420. அவரே +2 வில் எடுத்தது 1126/1200. இவை அழகுலட்சுமி வாங்கிய மதிப்பெண்கள். ஆனால், மருத்துவ இடம் கிடைக்கவில்லையே..இதற்கென்ன சொல்கிறீர்கள்?!
இதற்கு நீட் தேர்வினை ஆதரிப்பவர்கள் சொல்லும் பதில் இதுதான்!..
“எதிர்க்க வேண்டும் என ஒரே காரணம் கொண்டு எதிப்பவர்களே...நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்!...முன்பெல்லாம் மக்குபிளாஸ்திரி பணக்காரன் கூட அடிப்படை பிளஸ் டூ பாஸ் மார்க் கொண்டே மருத்துவ கல்லூரி அட்மிஷனை வெறும் பணத்தால் பெற முடியும். ஆனால் இப்போது அந்த பணக்கார மாணவருக்கும் அது மட்டுமே அடிப்படையல்ல. நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியதும் முக்கியம். அதே சமயத்தில் பணமில்லாத ஒருவர் அதிக நீட் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் இன்றைய சமூக வலைத்தளங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளே கூட தானாக அவர்களுக்கான தனியார் கல்லூரி கட்டணத்தை செலுத்த முன் வருமே சாமி! அழகுலட்சுமி ஏன் அதற்கு முயற்சிக்கவில்லை?..நீட் தேர்வு குறித்த எந்த ஒரு சென்சேஷனல் செய்திக்கும் நாக்கை தொங்கப் போட்டு காத்திருக்கும் ஊடகங்களிடம் அவர் பிரச்னையை பந்தி வைத்திருந்தாலுமே அவருக்கு நியாயமான தீர்வு கிடைத்திருக்குமே” என்பதுதான் அந்த பதில்! இது என்னவோ உண்மைதான்!(இது நம் மனசு)
சரி!..இதற்கு நீட் எதிர்ப்பாளர்கள் வேறு ஒரு தர்க்கத்தினை முன் வைக்கிறார்கள்...
நீட் தேர்வால் மாணவர்களா லாபம் அடைகிறார்கள்?..மற்ற சில ஆட்கள்தானே அதனை வைத்து பணம் பன்ணுகிறார்கள் என பொங்குகிறது இந்த கூட்டம்!..
நீட் தேர்வால் பெரும் லாபம் அடைபவர்கள்...
நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தான். கோடிக்கணக்கில் பணம் புரளும் வியாபாரமாக அவை திகழ்கின்றன
“கோட்டா” (kota) எனும் நீட் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ1700 கோடிகள். ஆலன் (Allen) பயிற்சி நிறுவனத்தில் இயற்பியல் தலைமை ஆசிரியராக பணிபுரிபவருக்கு 5 கோடிகள் வருட சம்பளம். FIIT JEE AAKASH போன்ற எண்ணற்ற தனியார் பயிற்சி மையங்களும் இருக்கின்றன.
இந்தியக் கல்வி அமைப்பிற்கும் மாணவர்களுக்கும் இடையே வந்து அமர்ந்து, வருடத்திற்கு 10,000 கோடிகளுக்கு மேல் மாணவர்களை சுரண்டி கொள்ளை அடிக்க இவர்களுக்கெல்லாம் யார் அனுமதி தந்தது? சிபிஎஸ்இ சிறந்த பாடத்திட்டம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களும் கோச்சிங் போனால் தான் தலை சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை எவ்வாறு ஏற்பட்டது?
இதற்கு நீட் ஆதரிப்பாளர்கள் சொல்லும் பதில் இதுதான்!
“வருடா வருடம் இந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களும், தமிழக அரசின் மெட்ரிகுலேஷன் திட்டம் மூலம் படிக்கும் மாணவர்களும் கூட ஏராளமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ கல்லூரியில் இடம் பெறும் பட்டியல் அறிவீர்களா சாமி?! இவர்களில் பலரும் எந்த கோச்சிங் செண்டருக்கும் போகாமலே கூட தேர்வாகிறார்கள். அது தெரியுமா? உடனே என்னிடம் அவர்களைப் பற்றிய புள்ளி விவரம் உண்டா என சண்டைக்கு வராதீர்கள். எப்படி கோச்சிங் செண்டர் போய் பல லட்சங்கள் செலவழித்தே இவர்களெல்லாம் வெற்றி கண்டார்கள் எனும் புள்ளி விவரம், வாதிக்கும் உங்களிடம்இல்லையோ அது போலவே என்னிடத்திலும் இல்லை. எனவே ஊகங்களோடு என்னிடம் பேச வேண்டாம். இந்த நாட்டில் கேஜி வகுப்புக்கு கூட டியூஷன் செண்ட்டர்களும் கோச்சிங் செண்ட்டர்களும் நகரங்களில் மட்டுமல்ல...சிற்றுர்களிலும் உண்டு. அதில் சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கும் அவா கூலிக்காரனிடமிருந்து பணக்காரன் வரை பொதுவான ஒரு ஆசையே!”
நீட் எதிர்ப்பாளர்களின் அடுத்த கேள்வி!
ஏழை நடுத்தர வர்க்க கிராமப்புற புத்திசாலி மாணவர்களுக்கு, சிபி எஸ்.ஈக்கு இணையான நல்ல கல்வி கிடைக்காத வகையில் இந்த கல்வி சேர்க்கை முறையை அமைத்தது யார்? அது ந்டைமுறையில் இல்லாத நிலையில் இந்த அனைவர்க்குமான ஒரே நீட் தேர்வு எப்படி சரியாகும்?!
நீட் ஆதரவாளர்களின் பதில் இதுவே!
“சபாஷ்!..இப்போதுதான் நீங்கள் சரியான கேள்வியினை கேட்டிருக்கிறீர்கள். நீட் வரப்போகிறது என தெரிந்ததுமே அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்று ஒரு வருடத்திற்கு அதிலிருந்து விலக்கு வாங்கிய தமிழக அரசு அப்போதே ஏன் NCERT முறைப்படியான கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தி எதற்கும் இருக்கட்டுமென நம் அரசுப்பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் மாணவர்களை தயார் படுத்தவில்லை?! சட்டப்போராட்டம் ஒரு புறம்..கல்வி சீர்திருத்தம் மறு புறம் என செயல்பட்டிருக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? அந்த கடமையினை ஏன் அன்று ஆண்ட ஜெயலலிதா அரசு செய்யவில்லை? 2018 வரை தங்களது மனப்பாட முறையிலான பாடத்திட்ட முறைக்கு ஏன் இந்த மாநில அரசு மூடு விழா நடத்தவில்லை? மிகவும் தாமதமாக விழித்துக் கொண்டு பாடத்திட்டங்களை நீட்டை சந்திக்க ஏற்றாற் போல மாற்றியது இந்த அரசின் குற்றம் என்றால் அப்படி எந்தவொரு கோரிக்கையினையும் ஆக்கபூர்வமாக வைக்காமல் நீட்டை வைத்தே அரசியல் செய்து வந்தது இங்குள்ள எதிர்க்கட்சிகளின் குற்றமில்லையா? அதை யாராவது கேட்டீர்களா சாமி?!”
உண்மைதான்! நீட்டை வைத்து இங்கே தொடர்ந்து அரசியல் நடைபெறுகிறதே ஒழிய மற்ற மாநிலங்களைப் போல அதனை எதிர் கொள்ள நம் மாணவர்களை சரியான முரையில் தயாரிக்கும் முஸ்தீபுகள் இங்கு சரிவர நடைபெறவில்லை என்பது கசப்பான உண்மையே! உணர்ச்சி முழங்க பேசி மாணவர்களின் பிணங்களின் மீது அரசியல் செய்து பிழைத்த அரசியல்வாதிகள் கொஞ்சமாவது மனசாட்சியுடன் இது குறித்து கவலைப்பட்டிருக்கலாம்!
எனது நண்பர் ஒருவர் சொன்னார்... “அனிதாவின் மரணம் கூட தடுக்கப்பட்டிருக்கலாம், எதிர்கட்சிகள் நினைத்திருந்தால்” என்று!
நான் எப்படியெனக் கேட்டேன்..
“சிம்ப்பிள். அவரை உச்ச நீதிமன்றம் வரை சென்று நீட்டை எதிர்த்து போராட பத்து லட்சம் வரை தமிழக எதிர்கட்சி ஒன்று அன்று செலவு செய்ததில்லையா? அதற்கு பதிலாக அதில் இருபது சதவீத பணம் செலுத்தி அவரை ஏதாவது நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். அடுத்த ஆண்டே அந்த புத்திசாலி மாணவி நீட்டை வெற்றிகரமாக ஜெயித்திருப்பார். மாணவியின் தற்கொலையும் தடுக்கப்பட்டிருக்கும்!..ஒரு மாணவர், நீட் தேர்வினை 3 ஆண்டுகள் வரை எழுதலாம் எனபதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் அந்த நண்பர். எனக்கு அவர் சொன்னது இப்போது நியாயமாகவே பட்டது!
அன்று மட்டும் அனிதாவின் முதல் தற்கொலை மரணம் தடுக்கப்பட்டிருந்தால் இன்று இத்தனை மாணவ மரணங்கள் தமிழகத்தில் அனி வகுத்திருக்காதோ?!
திமுக “இன்னும் 7 மாதங்களில் நீட் தேர்வு தூக்கி வீசப்படும்” என்று சூளுரைத்திருக்கிறது.
இது போன்ற அறிக்கைகள் மாணவர்களை மேலும் குழப்பும் வேலையாகும்.
பல அனிதாக்கள் பலியானது போதும். அரசியல்வாதிகளே..தயவு செய்து பிண அரசியல் செய்வதை நிறுத்துங்கள்! மாணவ மணங்களை குழப்பாதீர்கள்! இதற்கு சட்ட ரீதியாக சாத்தியமே இல்லை என சூளுரைக்கும் அதிமுக ‘அப்படி ஒரு சாத்தியம் இருந்தால் அதனை இப்போதே சொல்லி பெருமை கொள்ளுங்களேன்’ என சட்டமன்றத்திலேயே திமுகவிடம் கெஞ்சுகிறது. இதற்கு இப்போது வரையிலும் திமுக பதில் சொல்லவில்லை!
இதற்கிடையே தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்த தற்கொலைகளை, அரசு ஊக்குவிப்பது போல உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
மேலும் ஒரு நல்ல செய்தியாக...அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளங்கலை படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஒரு மசோதாவை செப் 15 அன்று சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றியது.
மருத்துவ படிப்புகளில் இதுவரை 0.15 சதவீத இடங்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன. தற்போது நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி புதிய ஒதுக்கீட்டின் மூலமாக, 300 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் இவர்களுக்கு செல்லும். கார்ப்பரேஷன் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கல்லா மீட்புப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசு துறைகளால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை படித்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைவார்கள் என்கிற செய்தி நம் மனதை ஆறுதல் படுத்துகிறது.
மேலும் ஒரு நல்ல செய்தியாக இந்த வருட நீட் தேர்வில் 97% மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப் பட்டிருக்கிறது.
நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்குமான வெற்றிகரமான தேர்வாக மாற என்ன செய்யலாம்?
1) நாடு முழுவதும் தரமான கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட்டு, ஒரே கல்விமுறை கொண்டு வரப்பட வேண்டும்.
2) அது நடைமுறையில் சாத்தியப்படாத பட்சத்தில், தமிழக அரசு வரும் காலங்களில், அரசு பாடத்திட்டங்களை மேலும் தரம் உயர்த்துவதோடு, தகுந்த ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். 8ம் வகுப்பிலிருந்தே நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள தரமான பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
3) தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள் நுழையும் மாணவர்களுக்கும் அரசு கல்லூரி கட்டண முறைகளையே பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால், நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத திறமையான ஏழை மாணவர்களும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் யாருடைய தயவும் இன்றி மருத்துவம் பயில முடியும்.
4. தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து, அதனை சந்திக்கும் மாணவர்களுக்கும், தேவைப்பட்டால் அவர்களின் பெற்றோர்களுக்கும் சேர்த்து மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இதற்காக பிரபலங்களைக் கொண்டே கூட அரசாங்கம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
5.இனியாவது ஓர் உயிர் கூட பலியாகாத நிலையை தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
Leave a comment
Upload