சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
கடைச்சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர்களும் மிகவும் புலமை பெற்றவர்கள். அவர்களுக்கெல்லாம் முதன்மையாக விளங்கியவர் நக்கீரர். நக்கீரர் என்றால் நல்ல இனிய சொற்களையுடையவர் என்று பொருள். சிவபெருமான் பாடிய பாடலிலேயே குற்றம் கண்டுபிடித்து, அவர் தம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியும் “குற்றம் குற்றமே” என்று வாதாடியவர், எதற்காகவும் அஞ்சாதவர். சங்க காலப் பத்துப் பாட்டுகளுள் முதல் பாட்டாக உள்ள ‘திருமுருகாற்றுப்படை’யில் முருகனை பலவாறு துதித்து, ‘உலகம் உவப்ப’ என்று தொடங்கிய பாடலை பாடியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை முருகனது பெருமையைக் கூறும் மிகச் சிறந்த நூலாகும். இதில் முருகனுக்குரிய தமிழ் பெயர்களான முருகா, குமரா போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன.
நக்கீரர் வரலாறு:
நக்கீரர் வாழ்ந்த காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என தெரிய வருகிறது. சங்கப்பாடல்கள் சிலவற்றில், சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் நக்கீரன், நக்கீரனார், நக்கீரர் மதுரைக் கணக்கணார் மகனார் என்ற அடைச்சொல்லோடு குறிக்கப்பெறுகிறார். எனவே இவரின் தந்தையார் கணக்காயராக மதுரையில் பணியாற்றியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. இதனை,
“அன்னவர் பெயர்கணக் காயராம்அவர்
சொன்ன நூற் றுறையெலாம் தோய்ந்து ணர்ந்துநல்
இன்னிசைப் புலமையுறு றவர்மேற் றேனையோர்
தன்னிகர் இலாரனும் தகைமை சான்றவர்|| (17)
என்று சேய்த்தொண்டர் புராணம் குறிக்கிறது.
பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி நக்கீரருக்கு பல விருதுகளை அளித்து தன் அரசபையில் தலைமைப் புலவராக்கினார் என வரலாறு கூறுகின்றது.
நக்கீரர் எழுதிய நூல்கள்:
இவர் திருமுருகாற்றுப்படை, கைலை பாதி காளத்தி பாதி காளத்தி அந்தாதி, இறையனார் அகப்பொருள் உரை, திருவீங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக்கலிவெண்பா, திருக்கண்ணப்பத் தேவர் திருமறம் போன்றவற்றை இயற்றியுள்ளார். மற்றும் இவர் பாடிய அகநானூற்றில் பதினேழு பாடல்களும், குறுந்தொகையில் ஏழு பாடல்களும், நற்றிணையில் ஏழு பாடல்களும், புறநானூறில் மூன்று பாடல்களும் அமைந்துள்ளன. மொத்தம் 37 பாடல்கள், நக்கீரர் பாடியதாக சங்கநூல் தொகுப்பில் உள்ளன.
திருமுருகாற்றுப்படை:
இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா என்ற ஒரு முழுநீளப் பாட்டாகும். வீடுபேறு பெறத் தகுதியானவரை முருகப் பெருமானை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. (“ஆற்றுப்படுத்தல்” என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும்.)
பொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற முடியும். ஆனால் அருள் கடவுளால் மட்டுமே அருளப்படுவது. அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச் சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன், முருகனிடமிருந்து அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெற வழி சொல்வதாக, ஆற்றுப்படையென நக்கீரர் இந்நூலை இயற்றியுள்ளார்.
“உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, மறு இல் கற்பின் வாணுதல் கணவன்”
கதிரவன் புற இருளை அகற்றுவதைப் போல, திருமுருகப்பெருமான் தன்னை மனத்தால் கண்டு சிந்திப்பவர்களின் ஆணவமாகிய அக இருளைப் போக்கி அருள் புரிதலால் மேற்கூறிய உவமம் தொழில்-உவமமாக விளங்குகின்றது. மேலும், திருமுருகப்பெருமானைக் கண்குளிரக் காணும் பக்தர்களுக்குக் [கடலின் பசுமையும் ஞாயிற்றின்செம்மையும் போல்] மயிலின் பசுமையும் திருமுருகப்பெருமானின் திருமேனிச் செம்மையும் தோன்றலின் அவ்வுவமையை வண்ண-உவமமாகவும் கொள்ளலாம் என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்தாகும் [மாணிக்கனார் 1999:90].
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளை தனித்தனியாக கூறியுள்ளது. அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் அறுபடை வீடுகளும் மனிதர்களும் யோக சாஸ்திரத்துடன் எப்படி ஒருங்கிணைந்துள்ளது என்பதை காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர், மூன்றாம் பகுதியில் பழனி, நான்காம் பகுதியில் சுவாமிமலை, ஐந்தாம் பகுதியில் திருத்தணி, ஆறாம் பகுதியில் பழமுதிர்சோலை ஆகிய படை வீடுகள் பற்றி கூறப்பட்டுள்ளன. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடை” என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது. தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது.
காஞ்சி மகாபெரிவா படிக்க சொன்ன திருமுருகாற்றுப்படை:
ஒரு சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் மகா பெரிவா தங்கியிருந்த காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார். சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா! மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் – “அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை’ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும்” என்றார்.
“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். “அதனாலென்ன? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.
மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.
(வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு அருள்); (தெய்வத்தின் குரல் 7 பாகமும் தன் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டவர்).
திருமுருகாற்றுப்படை முருக பக்தர்களுக்கு முக்கியமான ஸ்துதி. திருமுருகாற்றுப்படையை படிப்பதனால் அறுபடை வீடுகளிலுள்ள முருகப் பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும்.
பலர் இதனை பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலன் அடைந்திருக்கிறார்கள். நாமும் திருமுருகாற்றுப்படை பாராயணம் செய்து நற்பலன்களை பெறுவோம்.
Leave a comment
Upload