தொடர்கள்
அரசியல்
வேண்டாம் சசிகலா... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20200818205733545.jpeg

சசிகலா என்ற பூச்சாண்டி பயத்தை அதிமுகவிற்கு யாரோ சிலர், ஊடகங்கள் மூலம் கிளப்பி விடுவது இன்று வரை தொடர்கிறது. ஆனால், உடன்பிறவா சகோதரி சசிகலா என்றுமே சர்ச்சைதான்.

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு வருட தண்டனை முடிந்து, அவர் எப்போது வேண்டுமானாலும் வெளி வருவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு இருந்த போது, பினாமி தடுப்பு சட்டம் பூதாகாரமாய் கிளம்பி தற்போது அவரை பாடாய் படுத்துகிறது.

சசிகலா ஆகஸ்ட் மாதம் வெளி வருவார் என்று பாரதிய ஜனதாவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். எந்த அடிப்படையில் யார் சொல்லி அவர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலை ஆகாமல் இன்று வரை சிறையில் தான் இருக்கிறார்.

2016 நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு ஒழிப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் இருந்ததாக, 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சசிகலாவின் சொத்துக்கள் வருமான வரித் துறையால் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், மேலும் சில சொத்துக்கள் 300 கோடி ரூபாய் அளவிற்கு போயஸ்கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பல்வேறு இடங்களில் 200 ஏக்கர் அளவுள்ள சொத்துக்கள் இருப்பதாக வருமான வரித்துறை தற்போது சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆனால், சசிகலா தரப்பு உலக்கையை முழுங்கி சுக்கு கஷாயம் சாப்பிடுகிற பார்ட்டி. முடக்கம் நோட்டீஸ், வருமான வரி சோதனை, இதெல்லாம் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்றுதான். இதெல்லாம் ஒரு விஷயமா, அபராதம் கட்டினால் முடிந்தது கதை என்று அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். வருமான வரித்துறையும் எப்படி வந்தது சொத்து என்றெல்லாம் விசாரிக்காமல், அவர் அபராதம் கட்டினால் போதும் என்ற அளவில்தான் அவர்களின் நடவடிக்கையும் இருக்கிறது.

20200818205752195.jpeg

சசிகலா புழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் தோட்டம் தற்போது அவரது கையை விட்டுப் போய்விட்டது. போயஸ் தோட்டத்துக்கு எதிரே, 24 ஆயிரம் சதுர அடியில் ஒரு மிகப் பெரிய பங்களா கட்டி வருகிறார் சசிகலா. விடுதலையானதும் அங்கு குடியேற திட்டம். ஆனால், அந்த சொத்தும் பினாமி தடுப்பு சட்டப்படி முடக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கட்டிடம் தொடர்ந்து கட்டப்படுவதை தடுப்பது, அவர் குடியேறுவது போன்றவற்றிற்க்கு அந்த நோட்டீஸில் தடை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இல்லாத அதிமுக என்ற பாதையில், ஆளுங்கட்சி அதிமுக வெற்றிகரமாகவே பயணிக்கத் துவங்கி விட்டது. யார் முதல்வர் என்பதில்தான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் போட்டி. இருந்தாலும் சசிகலா வேண்டாம் என்பதில் இருவருமே ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஸ்டாலின் மாதிரி டிடிவி தினகரன் கூட ‘இந்த ஆட்சி கவிழும், விரைவில் கட்சி ஆட்சி எங்கள் கட்டுக்குள் வரும். அதிமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்றெல்லாம் பேசி, கடைசியில் எதுவும் நடக்காமல் அவரும் தனிக்கட்சி துவங்கி விட்டார்.

ஆனால், செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் அறிக்கையில் டிடிவி தினகரன், ‘திமுக இன்னும் எட்டு மாதங்களில் நாங்களே ஆளும் கட்சி என்பது போல் பகல் கனவு காண்கிறது. திமுக என்ற தீய சக்தியை தலையெடுக்க விடக்கூடாது’ என்று அந்த குறிப்பிட்டுள்ளாரே தவிர எடப்பாடி ஆட்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை?

20200818205812560.jpeg

ஆனால், சுப்பிரமணிய சுவாமி சசிகலா விரைவில் விடுதலையாகி, அதிமுகவை கைப்பற்றுவார் என்று சொல்லி வருகிறார். தற்போது சுப்பிரமணியசாமி காலி பெருங்காய டப்பா. அவர் பேச்சை பாரதிய ஜனதாவே கேட்பதில்லை, அவரை ஒரு பொருட்டாகவும் நினைப்பது இல்லை. எனவே, சுப்பிரமணியசாமி பற்றி அதிமுக பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இதன் நடுவே சசிகலா விடுதலை பற்றி தகவல் அறியும் சட்டப்படி, சமூக ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கு... கர்நாடக சிறைத்துறை அனுப்பிய கடிதத்தில் ‘சட்ட விதிகளின்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார். அவர் கட்டவேண்டிய அபராதத் தொகை 10 கோடியை கட்டத் தவறினால், அவர் விடுதலை மேலும் ஒரு ஆண்டு தள்ளிப்போகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

20200819013257751.jpg

சசிகலா தரப்பு வழக்கறிஞர் இது பற்றி குறிப்பிடும் போது, ‘இது சிறை அலுவல் நடைமுறையை சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு நன்னடத்தை விதியின் கீழ் தண்டனை குறையக்கூடும், 10 கோடி ரூபாய் அபராதமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா என்பதால் சசிகலாவை சிறையில் சந்திக்க முடியவில்லை. அவரை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறோம், அவரை சந்தித்து ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்கிறார்கள்.

அதிமுகவை பொறுத்தவரை சசிகலா தான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்பது அடிமட்ட தொண்டன் வரை பரவி இருப்பதால், சசிகலா ஆதரவு அமைச்சர்கள் கூட இப்போது சசிகலா வேண்டாம் என்று முடிவுக்கு வந்து விட்டனர். மேலும் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதி என்பதால், சசிகலா அடுத்த 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது. திரும்ப வந்தாலும் அவர் சுறுசுறுப்பாக கட்சி வேலை பார்க்க அவரது உடல் நலம் அனுமதிக்குமா என்று தெரியவில்லை. அவரது ஆதரவு வட்டாரமே இந்த சந்தேகத்தை எழுப்புகிறது. தினகரன் கூட அவரது கட்சியில் சசிகலாவுக்கு எந்த பொறுப்பும் தரத் தயாராக இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இதன் நடுவே சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாவார் என்பதால், அவர் விடுதலைக்கு முன்பே பொதுக்குழுவை கூட்டி சசிகலா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. ‘வேண்டாம் சசிகலா’ என்பதுதான் தற்போதைய அதிமுகவின் புது கோஷம். இது பொதுக்குழுவில் தீர்மானமாகவும் ஒலிக்கலாம்!