பக்கத்திலிருந்த இரு இருக்கைகளிலும் யாரும் வராததால், ஜன்னலுக்குத் தாவிக்கொண்டேன்.
ஜன்னலுக்கு வெளியே, எந்தக் காட்சியையும் காட்டாத இருட்டு. காற்று கூட தட்டித்தான் போகும். நுழைய முடியாது.
பொதுவாக இங்கே, யாரும் யாரோடும் அவ்வளவாக உயர்ந்த குரலில் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதுவும் இந்தநேரம். ஏதோ யோசனையில் வெறித்தபடி நேரம் கடத்துவார்கள். பாட்டு கேட்பார்கள். வாயில் கொறித்தபடி இருப்பார்கள். தலை சாய்த்து ஒருக்களித்துக் கொள்வார்கள். சன்னமாய் காது ஒட்டி துண்டு துண்டாய்ப் பேசிக்கொள்வார்கள். கண்மூடிக் கிடப்பார்கள். எழுதிக்கொண்டிருந்த எனக்கு கண் சொக்கியது.
….
எனக்கு இணையான எதிர் வரிசை இரு இருக்கைகளில் இரு பெண்மணிகள். ஜன்னலோர முதிய பெண்மணி உறக்கத்தில். அருகிலிருந்த பெண்மணியின் கையில் ஒரு புத்தகம் மாதிரி... அதன் பெயரை வாசிக்க யத்தனித்தேன்.
என் சுவாரசிய எட்டிப் பார்த்தலைப் பார்த்த அவர் சிரித்துக்கொண்டே புத்தகத்தை என் பக்கம் உயர்த்தி நீட்டினார். ஓ… அது புத்தகம் மாதிரியில்லாத புத்தகம்.
வாசிக்கிற ஆர்வம் இருக்கிற இருவர் தள்ளி இருக்க முடியாதே! அறிமுகச் சிரிப்பு முடிந்து அடுத்த ஐந்தாவது நிமிடம் அருகில் வந்தமர்ந்தார்.
“எழுதிக்கிட்டிருந்தீங்க… உங்களை அங்க கூப்பிட முடியாதே! இங்க தான் சீட் இருக்கு!” ஐம்பத்தைந்து வயது என்று சொன்ன பிறகும் முப்பதாகத் தான் இருந்தார்.
கையில் இருந்த புத்தகம். பதிப்பிக்கப்பட்டதல்ல. எழுத்துக் காகிதங்களின் தொகுப்பு. ஆறு துளை வைத்து, நீண்டசணல் ஒன்று ஊடாகச் சென்று இறுக்கக் கட்டி, பக்கவாட்டுப் பிடிமானத்திற்கு மூங்கில் பட்டை ஒன்றை வைத்து, முன்பக்க அட்டையில், பச்சை மரம்… மூங்கில் இலை, இலைகளில் கிளிகள் போல்… இரசனையான நோட்டு.
…
ஜன்னலோரம் எழுபதின் வாசலில் அயர்ந்திருந்த அந்த முதிய பெண்மணியைக் காட்டி,
“அம்மாவோட எழுத்து தான். எப்பவோ எழுதினது. இதோட ஆயிரத்துப் பத்தாயிரம் தடவை வாசிச்சிட்டேன். எப்போ எங்கே போனாலும், ஐ யூஸ்ட் டு கேரி திஸ் அசெட் வித் மி!”
சரியான அம்மா பொண்ணு என்று புரிந்தது.
“சத்தியமா படிக்கக் கொடுங்கன்னு கேட்க மாட்டேன் மேடம்!”
கேட்டு மறுப்பதற்கு முன் நானாகவே கேட்க மறுத்துவிட்டதால், சிரித்துவிட்டார். தனது மடியில் அந்த மூங்கில் பச்சைநோட்டைக் கிடத்திவிட்டு…
“அம்மாவுக்கு…” என்று ஆரம்பித்தார்.
அம்மாவுக்கு வண்ணங்கள் பிடிக்கும்…
“அதுலயும் பச்சை, கிளிப் பச்சை வண்ணத்து மேல அப்படியொரு மோகம். தேடி வர்றதெல்லாம் பச்சைலயே வரும். வாங்கறது, உடுத்தறதெல்லாம் பச்சைல தான், சின்ன வயசுலருந்து.”
ஆர்வத்தில் அசைந்து அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். ஆடை நிறம் பார்க்க முடியவில்லை. முழுக்கப் போர்த்திக்கொண்டு, பச்சைக் குழந்தை போல் தூங்கிக்கொண்டிருந்தார்.
அம்மாவோட செல்லப்பேர் என்னவா இருக்கும் சொல்லுங்க?
“ஹலோ… அவங்க பேரண்ட்ஸ் என்ன பேர் வெச்சாங்கன்னே தெரியல… அப்புறம் எப்படி செல்லப் பேர்லாம் guess பண்றது?
“அது இருக்கட்டும்… செல்லப்பேர் என்னவா இருக்கும்?”
“தெரியலைங்க!”
பேர் ஆர்வம் கிளம்பியது.
“அம்மா!”
“அம்மாவா?” – திரும்பவும் கேட்டேன்.
“ம்…”
“சின்ன வயசுலயுமா?”
“எஸ்!”
“அப்போ அம்மாவோட பேர்?”
“அம்மாவே வெச்சுக்கிட்ட பேர்… தையல் நாயகி.”
…
அம்மாவுக்கு கல்யாணம் ஆனது மேடைல….
“ம்…”
“கல்யாண மேடைல இல்ல… பரத நாட்டிய மேடைல….”
“ஓ…..?”
“தானா குருவைத் தேடிப் போய், மூச்சு மாதிரி பரதம் கத்துக்கிட்டு, படிச்சு, மேடை ஏறக் கூட வசதி இல்லாம, ரொம்ப லேட்டா தான் அரங்கேற்றம் பண்ணினாங்க.
அப்புறம் நிறைய Gurus தேடி வந்து, எங்கிட்ட ஸ்டூடண்டா வந்துக்கோன்னு கேட்கற இடத்துக்குப் போனவங்க. பதினஞ்சு வயசுலயே அம்மா ஒரு டான்ஸ் ஸ்டார்.
அம்மா ஆடும்போது, அம்மா ஆடற மாதிரி இருக்காது. யாரோ ஒரு Goddess ஆடிட்டு மேடை இறங்கிப் போற மாதிரி ஒரு சக்திப் பிரவேசம்.
அப்படி ஒரு மேடைல தான் அம்மாவை கெளரவிக்க மேடை ஏறின Chief Guest மிஸ்டர். சபேசன்…
மைக்ல பாராட்டிக்கிட்டே இருந்தவரு... பக்கத்துல நின்ன அம்மா கால்ல தடால்னு விழுந்துட்டாரு. அரங்கமே ‘ஹோ’ன்னு ஒரு சத்தம்.
என்ன நினைச்சாரோ,
அதே மேடைல அம்மாட்ட சம்மதம் வாங்கி, அம்மாவுக்கும் அவரை பிடிச்சுப்போய், ஓரமா நடராஜர் மேல இருந்த மாலையை எல்லாம், கல்யாண மாலையா ஒருத்தருக்கொருத்தர் மாத்தி….
மேடைல இருந்து தம்பதிகளா இறங்கினாங்க. அவரோட வயசு இருபத்தஞ்சு. ஏழு வயசு வித்தியாசம். ஆனா, அம்சமா கண்ணு முன்னாடி கல்யாணம் பார்த்த சந்தோஷம் எல்லாருக்கும். கூட்டமே மேடைக்குக் கீழ நின்னு கைதட்டல் அமர்க்களம்.
“ப்பா… எவ்ளோ அன்யூஷ்வல் ஹேப்பனிங்? உங்க அப்பா அவ்ளோ எமோஷனல் பெர்சனா!”
“ம்… சபேசன் சார்… ரொம்ப அன்பானவர்…”
அம்மா ஒரு… ஒரு மாத மனைவி!
“………….என்னங்க இது?”
இருக்கையின் எதிரில் நான் குடித்துவிட்டுச் சொருகியிருந்த தாள் கப்பில் மிச்சமிருந்த கொஞ்சத் தண்ணீரைக்குடித்தேன். அவர் சொன்ன வாக்கியத்தை முழுங்க முயற்சித்தேன்.
“கஷ்டமா இருக்குங்க. விட்டுட்டுப் போயிட்டாரா? அவ்ளோ சீக்கிரம்? டூ மச்ங்க. அன்பானவர்னு சொன்னீங்களே?”
ஆற்றாமையில் கேள்விகளை அடுக்கினேன்.
“ம்… சபேசன் சார் ஓடிப் போகல… விட்டுட்டுப் போகலை… சொல்லிட்டுத் தான் போனாரு...
எல்லாரும் வியந்து போற மாதிரி அப்படியொரு புருஷன் பொண்டாட்டி. சபேசன் சார் கொஞ்சம் சோகமா இருந்தாக்கூட அம்மாவுக்குப் பொறுக்காது. அவரும் அப்படித்தான்.
அம்மா ஆடறதுக்கு என்னெல்லாம் உதவி செய்யணுமோ அத்தனையும் செய்வாரு. தனித்தனியா கடைக்குக் கூடப் போகாதவங்க.
காலைல ஆறு மணிக்கெல்லாம் அந்த வீட்டு பால்கனில காஃபிய வெச்சுக்கிட்டு, இவங்க உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கறதைப் பார்க்க முடியும்.
அம்மா செய்யற சாப்பாட்டை அவ்வளவு மெச்சி, சமையல் திண்டுல சாக் பீஸ்ல கவிதையா எழுதி வெச்சிடுவாரு.
அலுவல் நிமித்தமா ரெண்டு நாள் பிரயாணம்னாலும், தெருமுனைல இருந்து கார்ல திரும்பி வந்து, அம்மாவைக் கட்டிப்பிடிச்சு, “கூடவே இருந்திடறேன், நாயகி”ன்னு சொல்லிருக்கார்.
எந்த யோசனைன்னாலும், நடு ராத்திரில கூட எழுப்பி அம்மாட்ட கேட்பார். அம்மாகிட்ட எல்லாத்துக்கும் சாந்தமா ஒருபதில் இருக்கும். அதனால, வயசு தாண்டி அம்மாவைக் கொண்டாடினாரு.
ஒரு நாள், அவங்க ரெண்டு பேரும் மொட்டை மாடில வானத்துப் பட்சிகளுக்குக் கீழ, ஊஞ்சல்ல ஜோடியா உட்கார்ந்து சிரிப்பும் சிலாகிப்புமா எப்பவும் போல பேசிக்கிட்டிருந்தப்போ, அவர் ஏதோ கேட்டதுக்கு, அம்மா ஒரு பதில் சொல்ல, கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ரெண்டு பேரும் அமைதில மூழ்கிப்போயிருக்காங்க.
திடீர்னு கண்ணுல கரகரன்னு கண்ணீர் வழிய, சபேசன் சார் அம்மாவோட கையை இறுக்கப் பிடிச்சுக்கிட்டு,
“போதும். மனசு நிறைஞ்சிடுச்சு. எல்லாம் புரிஞ்சிடுச்சு. அவ்ளோ சந்தோஷமாயிருக்கேன். நான் போறேன். என்னை சந்தோஷமா வழியனுப்பு, நாயகி!”ன்னு அழுதிருக்கார்.
ஆயிரக்கணக்குல லாபம் வந்த பிஸினஸ், சொந்த வீடு, கார், கட்டிக்கிட்டிருந்த புது ஃபாக்டரி, என்னென்னல்லாம் அவர்கிட்ட இருந்ததோ, அந்த கணமே விட்டுட்டுத் துறவறம் போயிட்டாரு.
காம்பும் பூவுமா வாழ்ந்த தம்பதி, பரஸ்பரம் அன்பா பேசிக்கிட்டுப் பிரிஞ்சாங்க. அம்மா அவரை நிறுத்தலை. எந்த ஊர்ல சபேசன் இருக்காரோ… அவர் வயசுக்கு இப்போ இருப்பாரான்னு கூடத் தெரியல.
ஒரே மாச அத்யந்தப் பாச உறவு… ஒரே கணப் பிரிவு முடிவு. அம்மாவுக்கு அது அதிர்ச்சியா, இல்லையான்னு யாராலயும் தெரிஞ்சுக்க முடியல.
அவர் மேல அம்மாவுக்கு இப்பவும் அவ்ளோ மரியாதை இருக்கு. “என் கூட வாழ்ந்த உயிர், என்னை விட்டு, எல்லாத்தையும் விட்டு, இன்னும் சந்தோஷமா இருக்க ஆசைப்படுது. அதுக்கு நான் வழிவிடணும். அதான் தர்மம்!” – அம்மாகிட்ட எல்லாத்துக்கும் இப்படி ஒரு பதில் இருக்கும். பதிலில்லை. ஞானம். யாரும் வாய் திறக்கவேயில்லை.
சபேசன் சார் கிளம்பிப்போன அஞ்சாவது நாள், அம்மா அடுத்த மேடை ஏறியாச்சு. மளமளன்னு உயரம். அம்மா எழுதுன க்ளாசிகல் டான்ஸ் தியரில்லாம் நிறைய நாடுகள்ல ரொம்பப் பிரபலம். கல்யாணப் பேச்சே எடுக்காதீங்கன்னு கண்ணாலயே எல்லார்ட்டயும் சொல்லிட்டாங்க.
அப்போ தான் அவங்க கண்ணுல நான் பட்டிருக்கேன். பெத்தவங்க யார்னே தெரியாம, பொறந்த கணமே தனியாக்கிடந்த என்னைக் கைல தூக்கி, பொண்ணா வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ, அம்மாவுக்கு வயது பதினெட்டு.
பரதத்துல உச்சாணிப் புகழ், திடீர் கல்யாணம், அதீதக் காதல் புருஷன், கணவனோட துறவுப் பிரிவு, மறுபடியும் மேடை, தத்தெடுத்த குழந்தை-ன்னு பதினெட்டாவது வயசுலயே வாழ்க்கை கொடுத்த எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு, நதி மாதிரி ஒரு நில்லாத ஓட்டம். நிதான ஓட்டம்.
தையல் நாயகி என்னோட மதர் அண்ட் மென்டர். குருவும் கூட. படிப்பு, பாட்டு, பரதம், சமையல், தஞ்சாவூர் பெயிண்டிங், ஆட்டிசம் சில்ரன் கேர்னு… தனக்குப் பிடிச்சது, எனக்குப் பிடிச்சது எல்லாத்தையும் காட்டின தோழி.
சேர்ந்து ஆடிருக்கோம். முழு அலங்காரமும் எனக்குப் பண்ணிட்டு, பத்தே நிமிஷத்துல தயாராகி தேவதை மாதிரி வந்து நிப்பாங்க. அம்மாவோட ஜடைல ரெண்டு பேரைக் கட்டி இழுத்துக் கூட்டிட்டுப் போகலாம். சேர்ந்து சண்டைபோட்டிருக்கோம். பிரிஞ்சு அழுதிருக்கோம். கதை கதையா இருக்கு… போதும்ல..?
அம்மாவைப் பத்தி நீங்க எழுதற அளவு கொட்டிட்டேனோ… உங்களைத் தூங்க விடாமப் பண்ணிட்டேனா, சார்?”
மூங்கில் நோட்டை கைகளில் எடுத்துக்கொண்டு எழுந்தார்.
“அச்சோ… அப்படில்லாம் இல்ல மேடம்… விட்டா வீட்டுக்கே வந்திருவேன்.”
சிரித்துக் கொண்டே அவர் சீட்டுக்கு வழியனுப்பினேன்.
எழுந்தவர் இன்னொன்றை இருத்திவிட்டுப் போனார்.
“…. என்னை மாதிரியே அம்மாவும் அடாப்டட் சைல்ட் தான்!”
….. என் முக உணர்ச்சிகள் அவருக்குத் தேவைப்படவில்லை. அவர் என்னைப் பார்க்கவேயில்லை.
தன் இருக்கைக்குத் திரும்பினார்.
“அம்மா…. இறங்கப் போறோம்… வந்தாச்சு.”
என்று தலையை வருடி எழுப்பினார், மகள்.
போர்த்தியிருந்த சால்வையை விலக்கி எடுத்தார். பச்சை நிறச் சேலை… உறக்கத்தில் விழித்து மலர்ந்த கண்கள். சுமைகள் ஏறியும் எடை கூடாத தேகம். ஆண்டாள் மாலையைச் சரியாமல் தாங்கும்படியான சாண் அளவு தோள்கள்.
நகர்ந்து நகர்ந்து முட்டி அசைத்து, செருப்புகளைத் தேடும் கால்களைப் பார்க்கிறேன். பச்சை நரம்புகள் வெண் மலைமேல் புரள்கின்றன.
ஆறு வயதிலிருந்து சலங்கைக்குப் பிடித்த கணுக்கால்கள்.
“தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர்விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக –எனது
நெஞ்சந் துடித்ததடீ” -பாரதி பாட்டுக்கு ஆடி,
சபேசனை வயம் செய்த பாதங்கள்.
தையல் நாயகி… தளர்ந்து போகாமல் வாழ்ந்து காட்டிய நாயகியாகத் தான் என் கண்களுக்குள் நின்றார்.
…
ஜன்னலோடு ஒட்டிக்கொண்டு எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. முழித்து எதிர் வரிசையில் பார்க்கிறேன். அங்கேயும் இரு காலி இருக்கைகள்.
வெளியே பார்க்கிறேன். இருட்டு பூமியில் மினுக் மினுக்கென்று நட்சத்திரங்கள் போல் விளக்குகள், வெளிச்சக்கோடுகள் கொட்டிக் கிடக்கின்றன.
வானத்தின் கையை விட்டு விமானம் இறங்க… இறங்க… இன்னும் பிரகாசமாய் தரை தெரிய ஆரம்பித்தது.
இதுவரை, அமைதியாகப் பதுங்கியிருந்த அடிச்சக்கரங்கள் வீறிட்டு எழுந்து, பூமி தேய்த்து, பரபரவென்று ஒரு பெரு ஓட்டம் ஓடி ஓய்ந்தபோது, என்னுள் அந்த எண்ணம் எழுந்து நின்றது.
நாமும் கூட காலத்தின் தத்துப் பிள்ளைகள் தானே!
இதயம் வழிமொழியும் குமாரின் குரல் மொழி.
Leave a comment
Upload