லால்குடி ஜெயராமன் அவர்களின் 90 வது பிறந்த நாளில் ஒரு புகழ் மாலை..!
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்த ‘பல்லவி’ ராமய்யரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தவத் துறை க்ஷேத்திரம் எனப்படும் லால்குடிக்கு, சத்குரு தியாகராஜ சுவாமிகள் எழுந்தருளி ‘லால்குடி பஞ்சரத்தினம்’ எனும் பொக்கிஷத்தை இயற்ற, வழி அமைத்துத் தந்தது இந்த ராமய்யர்தான்!
தன்னுடைய தந்தை வி.ஆர். கோபாலய்யரையே குருவாகப் பெற்ற பெரிய பாக்கியசாலி ஜெயராமன். அவரின் தந்தை உபதேசித்தபடி, எவ்வளவு பெரிய பெருமைகள், சாதனைகளை செய்தாலும், அந்த வெற்றியால் அவர் தலைக்கனம் கொண்டதே இல்லை. இந்த அரிய பண்புக்குக் காரணம், “வெற்றியை உன் தலைக்கும் தோல்வியை உன் இதயத்துக்கும் எடுத்துச் செல்லாதே” என்னும் ஜெயராமனின் தந்தை கோபாலய்யர் வழங்கியிருந்த உபதேசம் தான்..
தொடக்கத்தில் பக்கவாத்தியக்காரராக தன்னுடைய வயலின் இசைப் பயணத்தைத் தொடங்கிய லால்குடி ஜெயராமன், பின்னர் அவரின் சகோதரி ஸ்ரீமதி பிரம்மானந்தத்துடன் சேர்ந்து வாசித்து, தன்னுடைய கலையை மெருகேற்றிக்கொண்டார். அதன் பின்னர் தனியாக வயலின் கச்சேரிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலஷ்மி என தமது மகனையும் மகளையுமே தனது தேர்ந்த வாசிப்பின் நாளைய இசை வாரிசுகளாக்கி எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
‘சிருங்காரம்’ எனும் திரைப்படத்துக்கு இசையமைத்து, தேசிய விருதையும் அவர் பெற்றுள்ளார். தான் பேசாமல், தன் வயலினை மாத்திரம் பேச வைத்தவர் ஜெயராமன் அவர்கள்.
வயலின் வித்தகர்...
ஜெயராமன் வயலின் வாசிக்கும் பாணி அலாதியானது. ராகத்தின் ரசானுபவத்தை அப்படியே பிழிந்து தந்து விடுவார். எந்தவொரு ராகமாக இருந்தாலும், அதன் ஜீவ ஸ்வரங்களின் அடிப்படைப் பிரயோகங்களை ரசிகர்களுக்கு கோடிட்டுக் காட்டி, பின் அதன் மேலே அற்புத பிரயோகங்களால் சிறந்த நாத அனுபவத்தை தருவது லால்குடி பாணி என்றே அழைக்கப்படுகிறது.
வானவில்லின் வர்ணங்கள் கொண்டு அழகிய ஓவியங்களாக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வர்ணங்களாய் இசையுலகுக்குக் காணிக்கையாக்கிவிடும் வல்லமை லால்குடியின் வயலின் இசைக்கு உண்டு.
ஸ்ருதி சுத்தம், நயத்துடன் கலந்த லயக்கோவை, ஜீவனான மென்மையான வாசிப்பு. சக கலைஞர்களுடன் அனுசரித்த வாசிப்பு, ராஜ கம்பீரத்துடன் அபூர்வ ஞானம், மந்தகாசமாய்க் கலந்துவரும் ‘வில்’ வீச்சு... இவையே லால்குடி வாசிப்பின் சிறப்பம்சங்கள்.
அன்றைய அரியக்குடி முதல், செம்பை, ஜிஎன்பி என அவர் “பக்கா” வாத்தியம் வாசித்த மேதைகள் பாலமுரளி, சேஷகோபாலன் என தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்திய கலாச்சார தூதுக்குழுவில் நமது இந்திய அரசாங்கத்தால் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட பெருமை இவருக்கு உண்டு. 1965 ல் நடந்த எடின்பர்க் இசை விழாவில் கலந்து கொள்ள மாபெரும் விரலின் இசை மேதை யெஹுதி மெனுஹினால் அழைக்கப்பட்டு, அங்கே சென்று இசை மழை பொழிந்தார். இவரின் வாசிப்பையும், மேதமையையும் கண்ட அவர், தன்னுடைய இத்தாலிய வயலினை லால்குடிக்கு பரிசாக அளித்தார். “செவிவழி புகுந்து சிந்தையில் நிறையக் கூடியது லால்குடியின் வாசிப்பு. அவரது சுனாதமான வயலின் வாசிப்பு, கேட்போர் நெஞ்சங்களைக் குளிர்வித்து இன்ப லோகத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது” என்று புகழாரம் சூட்டினார். அவருடைய இந்திய விஜயத்தின் போது, அவருக்கு தந்தத்தால் செய்த நடராஜர் சிலையை பரிசளித்து மகிழ்ந்தார் லால்குடி.
1966-ல் வீணா, வேணு, வயலின் என்ற ஒரு புதுமையான நிகழ்வினை துவங்கி பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தந்திருக்கிறார்.
தில்லானா சக்ரவர்த்தி!
லால்குடியின் தில்லானாக்கள் மிகவும் பிரபலம். முன்னணி நாட்டிய மேதைகள் பலரும் இவரது தில்லானாக்களுக்கு முத்திரை பதிக்கும் அபிநயங்களை விரும்பி வழங்கி, நடனக் கச்சேரிகள் செய்துள்ளனர். இன்றும் கூட லால்குடியின் தில்லானாவிற்கு ஆடாமல் பரதக் கச்சேரிகள் நிறைவு பெறுவதில்லை. நாகஸ்வர இசைக் கலைஞர்கள் பலரும்கூட லால்குடியின் தில்லானாக்களை விரும்பி இசைத்துள்ளனர். “லால்குடி ஜெயராமனை தில்லானா சக்ரவர்த்தி என்று தாராளமாக அழைக்கலாம்” என்றார் நாகஸ்வர மேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்.
நாதம் என் ஜீவனே....
கச்சேரிகளின் தொடக்கத்தில், ஜெயராமன் – வயலின் – அதிலிருந்து வெளிப்படும் இசை – ரசிகர்கள் என தனித்தனியாக தெரியும். இறுதியில் வயலின் இசை ஒருபுறம்.. அதில் நனைந்து கோபியராய் உருகும் ரசிகர்கள் மறுபுறம்.. என பரமாத்மாவும் ஜீவாத்மாவும் போல வாழ்க்கைத் தத்துவம் இணையும்.
லால்குடியைப் போன்று நாதோபாஸனை நிகழ்த்தும் நாதபிரம்மாக்கள் இசையுலகுக்கு இன்னும் அதிகமாய்த் தேவை. ராக தேவதைக்கு வில்லால் பூஜை செய்த லால்குடி ஜெயராமன் எனும் இசை மேதையின் 90-ம் ஆண்டு பிறந்த நாளில் அவரது திகட்டாத தில்லானாக்களை கேட்டு அவரை நினைவு கூறுவோம்.
Leave a comment
Upload