லால் பேட்டை...
ஜாமியா அரபியா மன்பவுல் அன்வார் என பெயர் கொண்ட அரபி பாடசாலை கம்பீரமாக காட்சியளித்தது.
அந்த அரபி பாடசாலையில் 150 மாணவர்கள் படித்தனர். அவர்கள் ஐந்து வருடம் படித்து ஆலிம் பட்டம் பெறுவார்கள். தமிழ்நாட்டில் 120 மதர்ஸாக்கள் உள்ளன. ஒவ்வொரு மதர்ஸாவிலும் படித்து பட்டம் பெறுவோர் ஒவ்வொரு விதமாய் பட்டம் பெறுவர். ரியாஜி, பாகவி, ஜலாலி, மஹ்லவி, உஸ்மானி, ரஹ்மானி, ஹைரி, மன்தஹி, மிஸ்பாஹி என பல பட்டங்கள். பட்டங்களை பார்த்தே அந்த ஆலிம் எந்த அரபி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார் என்பதனை விளங்கிக் கொள்ளலாம். அரபிக்கல்லூரிகளுக்கென பொதுவான பாடதிட்டம் இல்லை. முதலில் ஆலிம் பட்டம் பெற ஏழுவருடம் படிக்க வேண்டும். இப்போது ஐந்து வருடமாக சுருக்கி விட்டார்கள். முதல் மூன்று வருடங்கள் அரபி இலக்கணம், திருக்குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் படிக்க வேண்டும். பொதுவாக அரபி கல்லூரிகளில் படிப்போர் அங்கேயே தங்கிதான் படிக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் ஆலிமுக்கு படிப்போர் வெகுவாக குறைந்து விட்டனர்.
வகுப்பறை.
மாணவர்கள் ரைகாலில் அரபிமொழி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தனர்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
குரல் வந்த திசை பக்கம் திரும்பினார் ஹாஜா மைதீன் மன்பயீ “வஅலைக்கும் ஸலாம்!”
எதிரே ஒரு ஐந்து வயது சிறுவன் நின்றிருந்தான். வெள்ளை கைலி வெள்ளை ஜிப்பா தலையில் துருக்கிய தொப்பி. ஆப்கானிஸ்தானிய முகம். கையில் குர்ஆன் ஷரீப் வைத்திருந்தான்.
“யாரப்பா நீ?”
“என் சொந்தஊர் அதிராம்பட்டினம். என் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். என் உறவினர்கள் என்னை பராமரிக்க தயாரில்லை. லால்பேட்டையில் படிக்க வேண்டும் என வேண்டி விரும்பி வந்துள்ளேன். என்னை மதர்ஸாவில் சேர்த்துக் கொள்வீர்களா?” சிறுவனின் தமிழ் உச்சரிப்பு அலாதியாக இருந்தது.
கையிலிருந்த பிரம்பை தரையில் ஊன்றி எழுந்தார் மன்பயீ...
“இப்போதெல்லாம் மதர்ஸாவுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வீட்டுக்கு அடங்காதவர்கள், பொதுக்கல்வியில் நாட்டமில்லாதவர்கள், பசி பட்டினியால் வாடுபவர்கள். உன்னை எங்கள் அரபி கல்விக்கூடம் மனமார வரவேற்கிறது. நீ இங்கேயே தங்கி படிக்கலாம். ஏற்கனவே நீ ஓதியிருக்கிறாயா?”
“ஓதியிருக்கிறேன் உஸ்தாத்!”
“உன் பெயர் என்ன?”
சிறுவன் நொடி தயங்கினான்.“இஸ்மாயீல்!”
“நீ தமிழ் முஸ்லிமா, உருது முஸ்லிமா?”
“தமிழ் முஸ்லிம்!”
“பொதுக்கல்வி கற்க போயுள்ளாயா?”
“எல்கேஜி யுகேஜி படித்திருக்கிறேன். தமிழும் ஆங்கிலமும் வாசிக்கத் தெரியும்!”
ஹாஜா மைதீன் மன்பயீ இஸ்மாயீலை நிர்வாகியிடம் அழைத்துச் சென்றார். நிர்வாகி சற்றே தயங்கினார்.
“உன் தந்தை பெயர் என்ன?”
“இபுராஹிம்!”
“அதிராம்பட்டினத்தில் எந்த முகவரியில் இருந்தீர்கள்? உங்கள் ஜமாஅத்தின் முத்தவல்லி பெயர் என்ன?” கேள்விகளை அடுக்கினார் நிர்வாகி.
சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மௌனித்தான் இஸ்மாயீல்.
“மன்பயீ! இந்த சிறுவனின் கார்டியனாக நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால் இவனை நம் மதர்ஸாவில் சேர்த்துக் கொள்ளலாம்!”
ஹாஜாமைதீன் மன்பயீ கார்டியனாக கையெழுத்திட்டார்.
வகுப்பறையில் போய் அமர்ந்தான் இஸ்மாயீல்.
இளையராஜாவின் ஸிம்பொனி இசை போல இருந்தது. இஸ்மாயீலின் அரபி உச்சரிப்பு.
தினமும் அதிகாலையில் பஜ்ரு தொழுகை. தொழுகைக்கு பின் யாஸின் ஸுரா ஓதலும் துஆவும். பின் காலை டிபன். காலை 9.00மணியிலிருந்து 12.30 மணிவரை நான்கு வகுப்புகள். மதியம் ஒரு மணிக்கு தொழுகை. மதியம் இரண்டு மணிக்கு மதிய சாப்பாடு. மதியம் மூன்று மணியிலிருந்து 4.30மணிவரை இரண்டு வகுப்புகள் பின் சாயங்கால தொழுகை. இரவு தொழுகைக்கு பின் பகலில் படித்தததை மறுவாசிப்பு. இரவு 9.30மணிக்கு தூங்க செல்லுதல்.
ஹாஜாமைதீன் மன்பயீ இஸ்மாயீலுக்கு இரண்டு செட் ஆயத்த ஆடைகள் எடுத்துக் கொடுத்தார்.
இஸ்மாயீலின் நீலநிறகண்கள் மன்பயீக்கு ஏதோ செய்தி சொல்ல விழைந்தன.
இஸ்மாயீல் சகமாணவர்களுடன் அதிகம் பேச மறுத்தான். ஐந்து வயது சிறுவன் என்றாலும் பத்து வயது சிறுவனின் உயரம் இருந்தான்.
இஸ்மாயீல் சிரிப்பதை நாள் முழுக்க நின்று ரசிச்கலாம். வினோதமான சங்கீத சிரிப்பு.
“உஸ்தாத்! உஸ்தாத்!” என்று ஹாஜா மைதீன் மன்பயீயையே சுற்றி சுற்றி வந்தான். சுலைமான் நபிகளை பற்றி நிறைய பேசினான்.
நபிகள் நாயகத்தின் மனைவிமார்களில் கதீஜா அம்மையாரா ஆயிஷா அம்மையாரா யார் சிறந்தவர் என வாதித்தான். வாதத்தின் முடிவில் கதீஜா அம்மையார்தான் சிறந்தவர் என அறிவித்தான். நபிகள் நாயகத்திற்கு வந்த இறைசெய்தியை முழுமையாக நம்பி நபிகள் நாயகத்திற்கு மாரல் சப்போர்ட் கொடுத்தது கதீஜா அம்மையார்தான் என கதீஜா அம்மையாரின் பெருமையை வான் உயர்த்தினான். பூமிக்கு அனுப்பப்பட்ட 124000 நபிமார்களில் மாற்றுமதத்தை சேர்ந்த ஞானிகளும் சித்தர்களும் அடங்குவர் என உறுதிபட கூறினான்.
அடிக்கடி ஹாஜா மைதீன் மன்பயீயின் கால்களை கட்டிக் கொள்வான்.
“பொதுவாக ஆலிம்கள் திருக்குர்ஆன் மனனம் செய்து ஓதுவார்களே தவிர, சொந்தமாக அவர்களுக்கு அரபியில் பேச வராது. நீங்களோ அரபி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கிறீர்கள். அரபு நாட்டவருடன் சர்வ சாதாரணமாக அரபி பேசுகிறீர்கள். உங்களின் அரபி உச்சரிப்பு மக்காவில் தொழுகை நடத்தும் இமாமின் உச்சரிப்புக்கு சமமானது. நான் உங்களை நேசிக்கிறேன் உஸ்தாத்!”
இஸ்மாயீலின் கைகளை பற்றிய ஹாஜாமைதீன் மன்பயீ அடுத்த நொடி கைகளை உதறினார். “ஏன்டா உன் கை இவ்வளவு கொதிக்குது?”
பதில் பேசாமல் சிரித்தான் இஸ்மாயீல்.
“நூறு மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் உஸ்தாத் மேன்மையானவரா, ஐநூறு பேருக்கு தொழுகை நடத்தும் இமாம் மேன்மையானவரா உஸ்தாத்?”
“இருவரும் அவரவர் பணியில் மேன்மையானவர்தான் இஸ்மாயீல்!”
“என்னை பொறுத்தவரை உஸ்தாத்களே மேன்மையானவர்கள். இமாம்களை உருவாக்குவது உஸ்தாத்கள் தானே?”
சிரித்தார் ஹாஜா மைதீன் மன்பயீ.
ஒரு வருடம் உருண்டோடியது.
சில மாணவர்கள் உஸ்தாத்தின் முன் வந்து நின்றனர். அழகிய முகமன் பரிமாற்றம்.
“இஸ்மாயீல் பத்தி சில விஷயங்கள் உங்ககிட்ட சொல்லனும் உஸ்தாத்!”
“சொல்லுங்கப்பா...”
“இஸ்மாயீல் எங்களோட உக்காந்து சாப்பிடுறதே இல்லை. என்னதான் சாப்பிடுறான்னு சில நாள் உளவறிஞ்சோம். எலும்புத்துண்டுகள் சாப்பிடுறான்...”
திகைத்தார் உஸ்தாத்.
“ராத்திரிகள்ல தூங்கரப்ப காணாம போய்டுரான். இரவு 11 மணிக்கு காணாம போறவன் அதிகாலை நாலு மணிக்குதான் திரும்பி வரான்!”
“ஓவ்!”
“இரவு நேரங்கள்ல எங்க அறைக்கு வெளியே ஒரு வெள்ளைநிற குதிரைக்குட்டி நிக்குது. அதுக்கு இறக்கைகள் கூட இருக்கு உஸ்தாத்!”
“நிஜமாவா?”
“இரவு நேரங்கள்ல அவனுக்கும் எங்களுக்கும் மார்க்க சம்பந்தமாக வாதங்கள் வருது. அப்ப திரும்பி சீறுவான் பாருங்க உஸ்தாத்... தீ ஜ்வாலைகள் பறக்கும்... உண்மைல அவன் யாருன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு. விசாரிச்சு பாருங்க உஸ்தாத்!”
தனது தனியறைக்கு இஸ்மாயீலை கூட்டி சென்றார் உஸ்தாத்.
“உண்மையை சொல்லு. நீ யார்? நீ சொல்லாமலே நான் யூகிச்சிட்டேன். இருந்தாலும் உன் வாயால சொல்லு. நீ யார்?”
சரேலென இருபது அடி உருவமாக மாறினான் இஸ்மாயீல். உடலின் நிறம் மாறியது.
“உஸ்தாத்! நான் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் கூட்டத்தை சேர்ந்தவன். நாங்களும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்கள்தான். எங்கள் வாழ்க்கை முறையும் உங்களை போலதான். நாங்கள் மனித நடமாட்டமில்லாத இடங்களில் வசிக்கிறோம். எங்களது உணவு எலும்பு துண்டுகள். நான் பலதடவை உங்கள் கண்களுக்கு தெரியாமல் உங்கள் பாடம் நடத்தும் அழகை கண்டு ரசித்திருக்கிறேன். குர்ஆன் முப்பது ஜுஸ்வும் உங்களிடம் ஓதவேண்டுமென ஆவலாதி கொண்டேன். என் பெற்றோர் அனுமதியுடன் உங்களுடன் தங்கி ஐந்து வருடம் படிக்க வந்துள்ளேன். என்னை காட்டிக் கொடுத்துவிடாதீர்கள். நான் உங்களுக்கு சிஷ்யன் மாதிரி. ஐந்து வருடங்கள் படித்து மன்பயீ ஷனது ஆக வேண்டும் என்பது என் ஆசை!”
விக்கித்துப் போனார் உஸ்தாத். ஒரு ஜின் தன்னிடம் திருக்குர்ஆன் ஓதுகிறதா?
“உனக்கு தமிழ் எப்படி தெரியும்?”
‘கற்றுக் கொண்டேன்!”
“உன் உண்மையான வயது என்ன?”
“ஜின் உலக கணக்குப்படி எனக்கு வயது 12...”
“மதர்ஸா மாணவர்களை எந்தவிதத்திலும் காயப்படுத்த மாட்டேன் என வாக்குறுதி கொடு. உன்னை மீதி நான்கு வருடங்கள் என் பராமரிப்பில் வைத்து ஆலிம் பட்டம் பெற்றுத்தருகிறேன்!”
“என்னை படைத்த இறைவனின் மீது ஆணையாக கூறுகிறேன்... பாடசாலை மாணவர்களுக்கு என்னால் சிறு தீங்கும் நேராது உஸ்தாத்!”
“நன்றி. உன் உண்மையான பெயர் என்ன?”
“இஸ்மாயீல்தான் உஸ்தாத். உங்களை நான் ஒரு தடவை கட்டி அணைக்கலாமா?”
“பொசுங்கிவிட மாட்டேனே!”
“மாட்டீர்கள் உஸ்தாத்!”
மீதி நான்கு வருடங்களுக்கு இஸ்மாயீலை தனது அறையில் தங்க வைத்துக் கொண்டார் உஸ்தாத். ஏராளமான எலும்புகளை உண்ணக் கொடுத்தார்.
வெள்ளைக்குதிரையில் வந்து போகும் இஸ்மாயீலின் பெற்றோரை சந்தித்தார்.
-ஐந்து வருடங்களுக்குப் பின்...
இஸ்மாயீல் ஜாமியா அரபியா மன்பவுல் அன்வாரின் மிகச்சிறந்த மாணவனாய் தேறினான்.
வெள்ளைக்குதிரை காத்திருந்தது.
கண்ணீருடன் பிரியாவிடை பெற்றான் இஸ்மாயீல். “உஸ்தாத்! உங்களுக்கு எதாவது ஒரு குருதட்சணை தர விரும்புகிறேன்!”
“என் கடமையைத்தானே செய்தேன்!”
வெள்ளி பிரம்பில் தங்க பூண் பொருத்தப்பட்டிருந்தது. அதனை ஹாஜாமைதீன் மன்பயீயிடம் நீட்டினான். “இது என் நினைவுப்பரிசு!”
வெள்ளைக்குதிரையில் ஏறினான் இஸ்மாயீல். குதிரை சீறிப் பாய்ந்தது மறைந்தது.
Leave a comment
Upload