தொடர்கள்
பொது
"ஊட்டிக்கு 100 பேர் மட்டுமே வரலாம் " - மாவட்ட ஆட்சியர்... - ஸ்வேதா அப்புதாஸ்

உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் மலைகளின் அரசி ஊட்டி...

20200816213623556.jpg

சுற்றுலா தொழிலை நம்பி நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன...

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று உலகை கவ்விக் கொண்டிருக்கும் தருணம்... நீலகிரியை இந்த பெரும் தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே மார்ச் 17 ஆம் தேதியே நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சீல் செய்தார்...

20200816213947461.jpg

ஒரு சுற்றுலா கூட நீலகிரியில் இருக்கக்கூடாது என்று இருபத்தி நாலு மணிநேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதானால் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாக்களும் கட்டாயமாக வெளியேற வேண்டி இருந்தது... மாவட்ட ஆட்சியர் பெரியளவில் கொரோனா தொற்றில் இருந்து நீலகிரியை கண்ணும் கருத்துமாக காத்துவந்தார்.... பின்னர் சில தளர்வுகள் மற்றும் அத்து மீறி வெளியூர் சென்று வந்தவர்களால் தொற்று ஏற்பட்டு பரவ ஆரம்பித்தது... அதையும் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் வைத்திருந்தார்..

நீலகிரி படுக இன கிராம மக்கள் எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றாமல் இருந்ததின் விளைவு தொற்று அதிகமாகியது... செப்டம்பர் மாதம் மத்திய அரசும்... நம் தமிழக அரசும் மேலும் நிறைய தளர்வுகளை அறிவிக்க... மக்கள் வெளியூர் சென்று வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை... சுற்றுலா தலங்கள் திறக்கலாம் என்று அரசு அறிவிப்பை வெளியிட...

20200816215926353.jpg

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா, “பூங்காக்கள் மட்டும் திறக்கப்படும், அளவான சுற்றுலாக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள். உள்ளூர்வாசிகளை தவிர வெளியூர்வாசிகள் இ பாஸ் இல்லாமல் வர முடியாது” என உத்தரவு பிறப்பித்தார்...

அவ்வளவுதான்!..சுற்றுலாக்கள் என்ற பேரில்... தினமும் ஐயாயிரம் பேர் இ-பாஸ் அப்ளை செய்ய ஆரம்பித்து விட்டனர்... இவ்வளவு பேரை அனுமதித்தால், மேலும் கொரோனா தொற்று அதிகமாகலாம் என்று தற்போது ‘ஒரு நாளுக்கு 100 இ-பாஸ் தான் வழங்கப்படும்.. அதுவும் முதலில் அப்ளை செய்பவர்களுக்கு மட்டும்’ என்ற உத்தரவை ஆட்சியர் அறிவித்துள்ளார்..

20200816230826228.jpg
திறந்திருக்கும் சுற்றுலா பூங்காக்களை விகடகவிக்காக நாம் ஒரு ரவுண்டு அடித்தோம்....

முதலில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம்... உலக புகழ் பொட்டானிகல் கார்டன் வெறிச்சோடி காணப்பட்டது... சுற்றுலாக்களின் வருகை இல்லாததால் புல் தரை பச்சைபசேலென காட்சி அளிக்கிறது...

2020081623100699.jpg

இரண்டாவது சீசன் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.. பூங்கா பணியாட்கள் இரண்டாவது சீசனை முன்னிட்டு பூச்சட்டிகளை அடுக்குவது மற்றும் காய்ந்த இலைகளை அப்புறப்படுத்துவதில் படு பிசி...

20200816231134690.jpg

யார் பூங்காவிற்கு வந்தாலும், சானிடைசர் கொண்டு கைகளை கழுவி பின் தெர்மல் டெம்பரேச்சர் எடுத்த பின் தான் உள்ளே அனுமதி... நாமும் அனைத்து முன்னெச்சரிக்கையையும் எடுத்த பின் தான் உள்ளே சென்றோம்...

20200816231259526.jpg


கன்னியாகுமரியில் இருந்து வந்த லாரன்ஸ் குடும்பத்தாரை சந்தித்து பேசினோம், “கடந்த ஆறு மாதமாக எங்கேயும் போகாமல் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏகப்பட்ட அழுத்தம்.... எங்க ஊரிலே சுற்றினால் அதுவும் என் குடும்பத்தாருக்கு போர்... அதனால் சுற்றுலா தலங்கள் திறப்பு மற்றும் இ பாஸ் கொடுக்கிறார்கள் என்ற செய்தியை டிவியில் பார்த்ததும், முதலில் அப்ளை செய்தோம்.

20200816231430229.jpg

அதிலும் இத்தனை நாள் கார்டன் மூடப்பட்டிருந்ததால், ரொம்பவே ஃபிரெஷாக இருக்கும் என்பதால் இன்று வந்தோம்.... நாங்கள் மட்டும் தனியாக கார்டனை பார்ப்பது திரில்லிங்.... விடுதிகளில் தங்க ஒரு நாள் அனுமதி இருந்தும், எங்கேயும் ரூம் தர தயங்குகிறார்கள். ஊட்டி மிகவும் சுத்தமாக இருக்கிறது.... இனி யாரும் வெளிநாடுகளை தேடிச் செல்லவேண்டாம்... ஊட்டி.. ஏற்காடு.. கொடைக்கானல் போய் வந்தாலே போதும்.. இங்கு கொரோனா கூட மிக குறைவு என்பது நிம்மதியான ஒன்று.... இத்தனை நாளுக்கு பின் மனசு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.... அடுத்து ரோஸ் கார்டன் செல்கிறோம்... ஊட்டியில் தற்போது உணவு தான் சரியில்லை” என்று நகர்ந்தனர் அந்த கன்னியாகுமரி குடும்பத்தினர்....

20200816231552468.jpg
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த பத்து வருடமாக பணிபுரிந்து வரும் போட்டோக்ராபர் ஷெரிஃப், “என்னை போன்ற பல புகைப்படக்காரர்கள் நீலகிரி சுற்றுலா தலங்களில் வேலை செய்து வருகிறோம்...”

2020081623170153.jpg

சீசன் சமயத்தில் ஒரு நாளைக்கு 500 அல்லது 600 ரூபாய் வருமானம் கிடைக்கும்... இப்பொழுது வரும் சுற்றுலாக்கள் கையில் செல்போன் இல்லாமல் வருவது இல்லை... அவர்களே போட்டோ எடுத்துக் கொள்வதால் எங்களின் தொழில் ஏற்கனவே பாதித்திருந்தது... மார்ச் மாதம் லாக் டவுன் வந்தவுடன், எங்களின் வாழ்க்கையில் இடி விழுந்தது போல இருந்தது... கஷ்டப்பட்டு ஒரு லட்சம் சேர்த்து வைத்தேன். அதுவும் இந்த லாக்டவுன் சமயத்தில் காலியாகிவிட்டது...

2020081623195741.jpg

தற்போது கார்டன் ஓபன் என்றவுடன் நேற்று தான் உள்ளே வந்தோம், ஆனால் வருமானம் எதுவும் இல்லை... இன்று ஒரு குடும்பம் என்னிடம் ஊட்டி நிலவரம் குறித்து பேசினார்கள்... என் கதையைக் கேட்டு, ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள்.... பார்க்கலாம் கடவுள் விட்ட வழி. மீண்டும் தொழிலுக்கு வருவோமா என்று கூட எதிர்பார்க்கவில்லை.... சுற்றுலா தலங்களுக்கு அனுமதி என்ற செய்தி ஆறுதலாக இருந்தது.... இடிந்து போய் இருந்த எங்களுக்கு ஒரு ஆறுதல்” என்று கண்கலங்கி ஒரு சுற்றுலாக் குடும்பத்தை நோக்கி நடையை கட்டினார் தன் காமிராவுடன்....

20200816232815108.jpg
கடந்த வாரம் 11-9-2020 அன்று இரண்டாவது சீசனை மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துவக்கி வைத்தனர். நீலகிரியில் தற்போது மூன்று பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முக்கிய நிர்வாக பொறுப்பில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாகு மற்றும் ஊட்டி ஆர்.டி.ஓ. (ஊட்டி உதவி ஆட்சியர்) மோனிகா ராணா ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில், எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.... இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பது பற்றி யாருக்கும் தெரியாது... காரணம் கொரோனா...!

20200816233002752.jpg
அடுத்து நம்முடைய விசிட் நூற்றாண்டு நினைவு ரோஸ் கார்டன்.. அங்கும் கூட்டம் இல்லை... அப்துல் குடும்பத்தை சந்தித்தோம்...

20200816233135986.jpg

“வழக்கமாக நான் மட்டும் ஊட்டி வருவேன்... இந்த மாவட்டத்தில் வளரும் பழங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வியாபாரத்தை செய்கிறோம். இந்த முறை என் ஊட்டி விசிட் ஒரு சுற்றுலாவாக... என் குடும்பத்தார் உடன் வந்துள்ளனர். இ பாஸ் உடனே கிடைத்து விட்டது. ஒரு நாள் தான் எங்க ரௌண்டப். தங்கும் ஐடியா இல்லை... இத்தனை நாள் லாக் டவுனில் வீட்டில் முடங்கிக் இருந்த குழந்தைகளுக்கு புது உற்சாகம்...

2020081623335617.jpg

ஒரு விஷயம் கூட்டமே இல்லாத ஊட்டி மற்றும் கார்டனை சுற்றி பார்ப்பது நமக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். வருடம் முழுவதும் கூட்டம் மொய்க்கும் ஊட்டி, காலியாக இருப்பதை இப்பொழுது தான் பார்க்கிறோம்... கூட்டத்தில் எதையும் ரசிக்க முடியாது... இப்பொழுது நிதானமாக எல்லாவற்றையும் ரசித்து விட்டு கோவை செல்வோம்” என்று ரோஸ் கார்டனுக்குள் சென்றனர் அந்த குடும்பத்தினர்...

20200816233514391.jpg


நாம் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக கார்டன் பக்கம் தலையை காட்டினோம்.... ஒரு ஈ காக்காய் இல்லை... இந்த கார்டன் ஊட்டி நகரை விட்டு சற்று தொலைவில் மறைவாக இருப்பதால் புதிய சுற்றுலாக்களுக்கு இது பற்றி தெரியவில்லை... அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசிரித்தோம்...

20200816233705393.jpg

“இ பாஸ் ஒரு பிரச்சனை... அதை ஓகே பண்ணி வந்தாலும், எங்க கார்டனுக்குள் நுழைய சரியான ஆவணங்கள் இல்லை. அதனால் யாரும் அவ்வளவாக வருவதில்லை.. இன்னும் தளர்வுகள் வந்தால் தான் சுற்றுலாக்கள் சுதந்திரமாக வர முடியும்” என்று கூறுகின்றனர்.

நாம் ஊட்டி பொட்டானிக்கல் கார்டனின் உதவி தோட்டக்கலை அலுவலர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினோம்.... “ஆறு மாதத்திற்கு பின் அரசு உத்தரவின் பேரில் நம்ம அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது. சுற்றுலாக்கள் இ பாஸ் பெற்று வருகின்றனர். வழக்கமான கொரோனா கட்டுப்பாடுகளுடன் தான் சுற்றுலாக்கள் உள்ளே நுழைய முடியும்...

20200816234438590.jpg

கடந்த பதினோராம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டாவது சீசன் துவக்கி வைக்கப்பட்டது... ஏழாயிரம் பூத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 2.3 லட்சம் பூக்கள் பூத்து குலுங்கும் காட்சியை சுற்றுலாக்கள் கண்டு மகிழலாம். கண்ணாடி மாளிகை திறந்து இருக்கும், அதில் பத்து பத்து பேராக அனுமதிக்கப்படுவார்கள்.. மே மாதம் மலர் காட்சி நடத்த முடியவில்லை.... அடலீஸ்ட் இரண்டாவது சீசனுக்காவது கார்டன் திறந்தது ஒரு ஆறுதலான விஷயம்” என்று முடித்தார்.

20200816234655815.jpg

தளர்வுகள் வந்திருந்தாலும் கொரோனா அச்சம் இந்த மலை மாவட்டத்தை சற்று அதிகமாகவே தொற்றிக் கொண்டுள்ளது... என்னதான் சுற்றுலாக்களுக்கு இ பாஸ் கொடுத்தாலும், அவர்களின் வருகை குறைவு தான்... வழக்கமாக வருடம் முழுவதும் சுற்றுலாக்களின் கூட்டம் நீலகிரியை மொய்த்துவிடும்... இந்த வருடம் கொரோனா அனைத்திற்கும் ஏகப்பட்ட தடையை பிரயோகித்து விட்டது. இனி கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக மறைந்தால் தான், நீலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் சீசன் களை கட்டும்.........