தொடர்கள்
பொது
ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் வடிவேலு ஆன மொமண்ட்??  -   ராம்.

20200817170304524.jpg

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் ரசிகர்கள் உலகமெங்கும் ஆவலோடு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் சாதனம் புதிய ஐபோன்.

ஒவ்வொரு வருடமும் ‘இத்தனை வருடமாக இருக்கும் அத்தனை ஐபோனும் குப்பை இந்த வருடம் தான் சிறந்த ஐபோன்’ என்று ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் தற்போதைய டிம் குக் வரை சொல்ல, அதை ஒவ்வொரு வருடமும் நம்பி சட்டை பாண்ட் ஜட்டி வரை கழட்டிக் கொடுக்கும் எண்ணற்ற டெக்னாலஜி காதலர்களில் நானும் ஒருவன்.

இந்த வருடம் எல்லோரையும் சக்கையாக ஏமாற்றி விட்டார் டிம் குக்.

அதற்காக எந்த சாதனமுமே வரவில்லை என்று சொல்ல முடியாது.

வாட்ச் 6 வந்திருக்கிறது.

20200817170331658.jpg

இதில் ஆக்சிமீட்டர் வசதி இருக்கிறது. அதாவது ரத்தத்தில் பிராணவாயு எவ்வளவு சதவிகதம் இருக்கிறது என்பதை காட்டும். கோவிட் வந்தவர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும்.

ஏற்கனவே வாட்ச் 5ல் இருக்கிறது ஈ.சி.ஜி. அது தவிர, கீழே விழுந்தால் உடனடியாக அனைவருக்கும் அவசர செய்தி / தகவல் அனுப்பும் அனைத்து சமாச்சாரங்களும் இருக்கின்றன.

வாட்ச் 6 கூட நெல்லுக்கு பாய்வது கொஞ்சம் புல்லுக்கும் பாயும் என்பது போல வாட்ச். se. என்ற சமாச்சாரமும் அறிமுக படுத்தியிருக்கிறார்கள்.

இது விலை குறைவு. உள்ளிருக்கும் சிப் கொஞ்சம் சல்லிசான சிப் போல. ஆனால் வாட்ச் 5, 6 செய்யும் பல சாகசங்களை se. செய்யும்.

புதிதாக வாட்ச் வாங்குபவர்களுக்கு அதிலும் பட்ஜெட்டுக்குள் வாங்குபவர்களுக்கு. se வரப்பிரசாதம்.

மற்றபடி உடற்பயிற்சி பாட்டரி என்ற சமாச்சாரமெல்லாம் தான் உங்களுக்கு கவலையெனில் ஆப்பிள் வாட்சுக்கு பத்தில் ஒரு பங்கு கொடுத்தால் போதும் ஷியோமி பாண்ட் 5 அத்தனை வேலையையும் துபாயில் பணிபுரியும் கேரளா ஆட்களைப் போல படு சல்லிசாக முடித்துக் கொடுக்கும்.

வாட்ச் ஒரு புறம் இருக்க, ஐபேடு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

20200817170503986.jpeg

ஐபேடை பொறுத்தவரை, எட்டாவது தலைமுறை ஐபேடு. விலை குறைவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அது போலவே ஐபேடு ஏர் என்ற புதிய சாதனமும் வந்திருக்கிறது.

20200817170531121.jpg

இந்த ஆப்பிள் அறிவிப்பு தினத்தில் கில்லர் அறிவிப்பு என்றால் ஆப்பிள் ஒன். என்ற சந்தா சிஸ்டம் தான்.

20200817170647614.jpg

ஐக்ளொடு, ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் நியூஸ், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி + மற்றும் ஃபிட்னெஸ் + (இந்த வருட கடைசியில் வருகிறது). இத்தனையையும் ஒரே சந்தாவிற்கு குடும்பம் மொத்தத்திற்கும் கிடைக்கும். இது ஒன்று தான் ஓரளவு வரவேற்கத்தகுந்த அறிவிப்பு.

IOS 14

2020081717055378.jpg

ஆப்பிளின் புதிய இயங்கு மென்பொருள்.

நிறைய வசதிகளும், டிசைன் மாற்றங்களும் வந்திருக்கின்றன.

என்னைப் பொறுத்தவரை சொல்லிக் கொள்ளும்படியான உடனடி மாற்றம் எனத் தெரிவது நீங்கள் காதில் மாட்டிக் கொள்ளும் ஏர் பாடு வைத்திருந்தால், ஐபேடும். ஆப்பிள் போனும் இருக்கும் பட்சத்தில் தானே எங்கிருந்து சத்தம் வருகிறதோ அந்த சாதனத்திற்கு மாறிக் கொள்கிறது.

ஏராளமான சின்ன சின்ன அனுகூலங்கள் இருக்கின்றன. ஆனால் தடாலடியாக பெரிய மாற்றம் கண்ணுக்கு தெரியும் அளவு இல்லை என்பது தான் உண்மை.

20200817170732887.jpg

ஐபோன் 12..?

பொறுங்கள் வருகிறேன்.

காத்திருந்து காத்திருந்து. அந்த அறிவிப்பு வரும் என்று தான் நினைத்தோம், ஆப்பிள் ரசிகர்கள் அனைவரும்.

20200817172719646.jpg

ஆனால் ஏறக்குறைய டிம் குக் வடிவேலு போல மாறி, இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு போன காட்சி தான் கண் முன்னே வந்து போனது.

கரோனாவினால் உற்பத்தி கடுமையாக பாதித்திருப்பதால் வரவில்லையா அல்லது இந்த கஷ்டமான நேரத்தில் யாரிடமும் ஐபோன் 12 வாங்கும் அளவு வசதி இருக்காது என்ற நல்லெண்ணமா தெரியவில்லை.

மொத்தத்தில் ஐபோன் 12 வரவில்லை.

கடவுள் வந்திருந்தார் கதையில் 9.00 மணிக்கு வரவேண்டிய கடவுளுக்காக ஊரே காத்திருக்கும்.

சுஜாதா அந்தக் கதையை இப்படி முடித்திருப்பார்.

அவர்கள் 9.01க்கு கலைந்து சென்றார்கள்.