தொடர்கள்
பொது
ஃபாலோ-அப் - ஏன் விலகினார் சித்த டாக்டர் வீரபாபு…! ஆர் .ராஜேஷ் கன்னா.

20200817202404817.jpg

சென்னை சாலிகிராமத்தில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் எந்தவித சிறப்பு கொரோனா கவச உடையின்றி வெறும் முககவசம் மட்டும் அணிந்து கொரோனா சிறப்பு வார்டுகளில் சித்த மருத்துவர் டாக்டர் வீரபாபு சுற்றிச் சுழன்று நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளித்து வந்ததை சென்ற வார விகடகவியில், ‘5000 பேரை கொரோனாவில் இருந்து மீட்ட சித்த வைத்தியரின் பேட்டி’ என பிரசுரித்து இருந்தோம்.

திடீரென சென்ற புதன்கிழமையன்று பிரஸ்ஸை சந்தித்தார் டாக்டர்.

“தற்போது வரை உயிரிழப்பின்றி 5400 கொரோனா நோயாளிகளுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளித்து நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி உள்ளேன். இன்னும் 200 கொரோனா நோயாளிகள் மட்டும் சிறப்பு வார்டில் கொரோனா நோய்க்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும் தருவாயில் உள்ளனர். தற்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, அதன்பின் எனக்கு ஒதுக்கப்பட்ட ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு பணியிலிருந்து இருந்து விலகுகிறேன்.எனக்கு ஒய்வு தேவை என்பதால் நான் கொரோனா பணியில் இருந்து விலகி செல்கிறேன்” என்று சித்த டாக்டர் வீரபாபு நிருபர்களிடம் தெரிவித்தார்.

தமிழக அரசு உதவினால், தமிழகம் முழுவதும் தன்னுடைய சித்த மருத்துவ சேவையை கொரோனா நோயாளிகளுக்கு தொடருவேன் என்று சித்த டாக்டர் வீரபாபு நமக்கு அளித்த பேட்டியில் சென்ற வாரம் தெரிவித்து இருந்தார்.

திடீரென என்ன ஆனது? விசாரித்தோம்...,

கொரோனா சித்த வைத்திய சிறப்பு வார்டில் அலோபதி மருத்துவர்களுடன் சேர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவது பற்றியும், சமீபத்தில் மூச்சுத்திணறலுடன் வந்தவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வெளியில் இருந்து வாங்கியதால் அதற்கு நோயாளிகள் பணம் செலுத்தியது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் சித்த மருத்துவரிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. எதற்காக கொரோனா நோயாளிகளிடம் இருந்து பணம் பெறப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சித்த டாக்டர் வீரபாபு மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளாராம்.

இதுவரை 5400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்கு தமிழக அரசு ஒரு 5 பைசா கூட தனக்கு தரவில்லை என்றும் தன்னுடைய சுய முயற்சி மற்றும் செலவில் தான் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்துக்கள், முலிகை தேநீர் உட்பட மருந்துகள் வழங்கினேன். என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள் என் மீது எந்த புகாரும் இதுவரை தெரிவிக்கவில்லை எனவும் சித்த டாக்டர் வீரபாபு நிருபர்களிடம் தெரிவித்தார்.

சாலிகிராமத்தில் ஜவஹார் பொறியியல் கல்லூரியில் தற்போது இயங்கி வரும் கொரோனா சிறப்பு வார்டில் இருந்து சித்த டாக்டர் வீரபாபு விரைவில் வெளியேறும் நிலையில், சென்னை அண்ணா சித்த மருத்துவமனையில் இருந்து சித்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

2020081720243642.jpg

இதற்கிடையே மகாளாய அமாவாசை தினமான வியாழக்கிழமை அன்று சென்னை, சாலிகிராமம், அருணாசலம் ரோட்டில் சித்த டாக்டர் வீரபாபு, ஒய்வு பெற்ற ஆங்கில மருத்துவர் ஒருவருடன் இணைந்து உழைப்பாளி மருத்துவமனை என கிளினிக் ஒன்றைத துவக்கி, நபர் ஒருவருக்கு ரூ10/- கட்டணம் பெற்று கொண்டு சிகிச்சை அளிக்கத் தொடங்கி விட்டார். கொரோனா சிறப்பு வார்டில் இருந்து தீடீர் விலகலுக்கான காரணம் என்ன என்று சித்த டாக்டர் வீரபாபுவிடம் கேட்ட போது, விகடகவிக்கு அவர் அனுப்பிய வீடியோவை இங்கே பதிவிட்டுள்ளோம்.

சித்த டாகடர் வீரபாபு, கொரோனா சிகிச்சை பணியிலிருந்து விலகுவது பற்றி தமிழக முதல்வருக்கு ஏதாவது தெரியுமா? அவருக்கு தெரிந்து தான் இந்த விவகாரம் நடந்ததா என்பதே தற்போது மக்கள் எழப்பும் கேள்வி!