தொடர்கள்
கதை
ரெங்கம்மா மாத்திரை - பொன் ஐஸ்வர்யா

20200818205043607.jpeg

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், அந்தக் காலத்து எங்கள் ரெங்கம்மாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ரெங்கம்மா சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் வாழ்ந்து வந்த மருத்துவச்சி. சர்வ ரோகங்களையும் தன் கை வைத்தியத்தால் குணப்படுத்தி மக்களைக் காத்த மருத்துவ தேவதை.

நான் தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் அந்தம்மாவை நேரில் பார்த்திருக்கிறேன். அப்போதே ரெங்கம்மாவுக்கு அறுபது வயதைத் தாண்டியிருக்கும். அள்ளிச் செருகிய கொண்டை. எப்பொழுதும் அழுக்கு நிறத்தில் உடம்பில் சுற்றிய நூல் புடவை. தீர்க்கமான கூரிய பார்வை. எந்த சிக்கலையும் லாவகமாய் கையாளும் தைரியம். பெரும்பாலான நேரங்களில் வெற்றிலைப் புகையிலை அடக்கிய வாய். அதனாலேயே அதிகமாய் பேசாமல், சைகையில் சேதி சொல்லி வைத்தியம் பார்த்த, படித்து பட்டம் வாங்காத பரம்பரை செவிலியர் எங்கள் கிராமத்து ரெங்கம்மா.

இரவு பகல் எந்த நேரத்திலும் நோய் நொடி என்று மருந்து கேட்டு ரெங்கம்மா வீட்டு வாசலில் போய் நிற்கலாம். அலுப்பு பார்க்காமல், பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டு விட்டு, வேலிப்பக்கம் போய் பச்சை இலைகளை தேடிப் பறித்து கசக்கி கட்டி விட்டு “போ.. சரியா போயிடும்” என்று நம்பிக்கையாய் சொல்லும் நற்சேவை நாயகி. சொன்னது போலவே எந்த நோயும் ரெங்கம்மா கைபட்டால் உடனே பறந்து போய் விடும்.

ரெங்கம்மாவுக்குன்னு தனியாய் குடும்பம் எதுவும் கிடையாது. தன் இளம் வயசிலேயே கணவனை இழந்து விட்டதாகக் கேள்வி. இரத்த உறவு என்று யாரும் கிடையாது. ஆனாலும் மொத்த ஊர் ஜனங்களும் ரெங்கம்மாவுக்கு சொந்த உறவுதான்.

மழைக்காலம் வந்தால் தேள் கடிச்சு (கொட்டி) அலறி துடித்துக் கொண்டு தினம் நாலு பேராவது ரெங்கம்மா வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்.
“சாக்கு மூட்டைய பெரட்டி வைச்சேன்.. கருந்தேள் கொட்டிடுச்சு.. கடுக்குது.. ஆத்தா.. கடுக்குது.. “ - கதறிப் புரள்வார்கள்.
தோட்டத்துல... வாய்க்கால்லன்னு.. எங்காவது தேள்கடி பட்டு ரெங்கம்மா வீட்டைத் தேடி ஓடி வருபவர்கள் ஏராளம்.

“ந்தே ஏன் கூச்சல் போடுற.. சித்த பொறு.. இதோ வர்ரேன் ..” - என்று சொல்லிக் கொண்டே கொல்லைப் பக்கம் போய் ஏதோ பச்சையும் மஞ்சளுமாய் கசக்கிக் கொண்டு வந்து யார் கண்ணிலும் காட்டாமல் அப்படியே அப்பிக் கட்டித் தன் குலசாமியை வேண்டி விபூதி பூசி விடும். வீடு போவதற்குள் கடுகடுத்த வலி காணாமல் போய் விடும்.
அழுதவன் அரையாணா ஒரணா கொடுத்தால் அதை தன் கையில் வாங்காது.

“அந்த விபூதித் தட்டுல போட்டுட்டு போ..” என்று சொல்லும்.
வைத்தியக் காசைச் சுருக்குப் பையில் சேர்த்து வைத்து வாரச் சந்தையில் தேவைப்படும் மருந்துப் பொடிகளை வாங்கிக் கொண்டு வரும். மற்றபடி தன் வயிற்றுப் பிழைப்புக்கு அப்பப்போ நாற்று நட களை எடுக்கன்னு ஊருக்குள் கூலி வேலை செய்து கிடைக்கும் காசில் ஜீவனம் நடத்தும்.

பலவகையான மூலிகை மற்றும் சில பல நாட்டு மருந்துகளை கலந்து பச்சிளங் குழந்தைகளுக்காக ரெங்கம்மா தானே தயாரித்த மூலிகை மாத்திரை அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி வாய்ந்த “பேபி புராடெக்ட்”. சுற்றுவட்ட பதினெட்டு கிராமத்தில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும், ரெங்கம்மா மாத்திரை அவசியம் வந்து வாங்கிக் கொண்டு போவார்கள். இப்போ வர்ற கம்யூட்டர் சாம்பிராணி அளவில் பச்சை நிறத்தில் உருளையாய் அந்த மாத்திரைகள் இருக்கும். மாத்திரைகளை கையால் உருட்டி வெய்யிலில் நன்றாக காய வைத்து மண் கலயத்தில் போட்டு மூடி வைத்திருக்கும். மாத்திரை கேட்டு வருபவர்களுக்கு அஞ்சு பைசாவுக்கு ஒன்று என்ற விலையில் விற்பனை செய்யும்.

அந்தக் காலத்தில் எங்கள் வீட்டுக்கு சின்னம்மா பெரியம்மா அத்தை மாமின்னு யார் வெளியூரில் இருந்து எந்த வேலையாய் வந்தாலும் முதல் வேலையாய் ரெங்கம்மா மாத்திரை வாங்குவது என்ற வழக்கத்தை வைத்து இருந்தார்கள். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் பத்து காசை என் கையில் திணித்து “ஓடிப்போய் ரெண்டு ரெங்கம்மா மாத்திரை வாங்கிட்டு வா“ என்பார்கள். நானும் அதை வேத வாக்காய் எடுத்துக் கொண்டு அலைந்து திரிந்து ரெங்கம்மா இருக்கும் இடம் தேடிக் கண்டு பிடித்துக் கையோடு ரெண்டு ரெங்கம்மா மாத்திரைகளை வாங்கி பழைய பேப்பரில் சுற்றிக் கொண்டு போய் கொடுத்து விட்டு “சமத்துப் பையன்” என்று சபாஷ் வாங்கிக் கொள்வேன்.

ரெங்கம்மா மாத்திரை என்பது குழந்தைகளின் மேஜிக் மருந்து, சர்வ நோய் நிவாரணி, காயகல்பம், கைகண்ட மருந்து, கண்கண்ட தெய்வம் இன்னும் எப்படி வேண்டுமானாலும் சொல்லி அழைக்கலாம். அப்படி தலைமுறை தாண்டிய பாரம்பரிய மாமருந்து.

“குழந்தை மோஷன் போகலயா.. ரெங்கம்மா மாத்திரையை ரெண்டு இழைப்பு இழைச்சுக் குடுங்க.. சரியாப் போகும்..”

மந்தமா.. மாந்தமா.. சளியா.. ஜூரமா.. எல்லாத்துக்கும் கைகண்ட மருந்து ரெங்கம்மா மாத்திரை.

அந்த காலத்தில் ஊர்லேர்ந்து சிங்கப்பூர்ல கல்யாணம் பண்ணிக் கொடுத்த பொண்ணுங்களுக்கு கூட பிரசவம்னா இங்கிருந்து திருக்கை கருவாடும் ரெங்கம்மா மாத்திரையும் கண்டிப்பாய் கடல் கடந்து போகும்.

இது தவிர ரெங்கம்மா பிரசவம் பார்ப்பதில் எக்ஸ்பர்ட். அறுபதுகளின் இறுதி வரை அந்த ஊரில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளை பிடித்துத் தூக்கிய முதல் மனுஷி ரெங்கம்மாதான். ஊரில் யாருக்கு பிரசவ வலின்னாலும் ரெங்கம்மா கூப்பிடாமலேயே ஓடி வந்து விடும்.
“சுடு தண்ணியப் போடு.. ஆம்பளைங்க வெளிய நில்லுங்கன்னு..” கட்டளைகள் பறக்கும். கடிகாரம் போட்டவங்க மணியப் பார்த்துக் குறிங்கப்பா.. ஒரு மணி நேரத்தில் சுகப்பிரசவம் உறுதி.

ஆணா பொண்ணான்னு சொல்லிட்டு சிட்டா பறந்திடும் ரெங்கம்மா. சீனி தரேன் மிட்டாய் தாரேன்னு பின்னாலேயே கொண்டு ஓடினாலும் விரல் தொட்டு எடுக்காது. வீட்டுக்குப் போய் துவைச்சு குளிச்சு தானே கஞ்சி வச்சு குடிச்சாதான் உண்டு. யார் வீட்டிலேயும் கை நனைக்காது ரெங்கம்மா.

அரைக்கால் ட்ரவுசர் குழந்தைகள் யாரைக் கண்டாலும் “வாண்டு.. சிண்டு..”ன்னு செல்லமாய் வாஞ்சையாய் கூப்பிட்டு தன் சொந்தக் குழந்தையாய் கொஞ்சி மகிழும்.

காது வலின்னு போனால் கற்றாலை மாதிரியான செடியை கசக்கி சூடு பண்ணி ஆறவச்சு காதில் ஊத்த வலி காணாமல் போகும். மூச்சுப்பிடிப்புன்னு சொன்னால் உலக்கை வைத்தியம். மூட்டுவலிக்கு வேற ஏதோ வேரை வெட்டி ஒத்தடம் கொடுத்ததும் சரியாப் போகும். சளி, காய்ச்சல் சாதாரண வியாதிக்கெல்லாம் ரெங்கம்மாதான் லோக்கல் டாக்டர்.

ரெங்கம்மா இன்று உயிரோடு இருந்திருந்தால் கொரோனாவுக்கு நிச்சயம் மருந்து கொடுத்து “சரியா போச்சு போ..”ன்னு சொல்லி இருக்குமோன்னு ஏக்கமாய் தோன்றுகிறது.

சமீபத்தில் நான் கிராமத்துக்கு சென்றிருந்த போது, ரெங்கம்மா வாழ்ந்த வீட்டருகே காரை நிறுத்தி இறங்கிப் போய் இப்போது ரெங்கம்மா மாத்திரை யாராவது தயாரித்து விற்கிறார்களா.. என்று விசாரித்தேன்.
அங்கிருந்த இந்த தலை முறையினர் யாருக்கும் ரெங்கம்மாவையும் தெரியவில்லை, ரெங்கம்மா மாத்திரையையும் தெரியவில்லை!