தொடர்கள்
பொது
ரெடிமேட் “தாய்ப்பால்”! – ஆர் .ராஜேஷ் கன்னா.

20200817091837902.jpg

குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பது என்பது மனித குலத்தின் வழக்கம். தாய்பாலில் இல்லாத சத்துக்களே இல்லை என்பதால் இதனை திரவ தங்கம் என அழைக்கின்றனர். பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.

தற்போது உலகம் முழவதுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தட்டுபாடு ஏற்படுகிறது. அதனை போக்க சில இடங்களில் தாய்ப்பால் வங்கி இருந்தாலும், உரிய நேரத்தில் அதனை பெற முடியாத நிலை உள்ளது.

சென்ற ஆண்டில் வெளிநாட்டில் வசிக்கும் ஸ்டிபன் கிங் என்ற பெண்மணிக்கு பத்து மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் சிசேரியன் மூலம் பிறந்தது. சிசேரியன் அறுவை சிக்கிச்சையால் ஸ்டிபன் கிங் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் பிடித்து எட்டு வாரங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். ஸ்டிபன் கிங்கின் இரு மார்பகங்களிலும் நோய் தொற்று காரணமாக, தாய்ப்பாலுக்கு பதில் சீழ் சுரக்க ஆரம்பித்தது. இதனால் தனது இரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்ட முடியாமல் அவதிப்பட்டார்.

அருகில் இருக்கும் தாய்ப்பால் வங்கிக்கு ஸ்டிபன் கிங் சென்று, குழந்தைக்கு தாய்ப்பால் தரும்படி கேட்ட போது... போதுமான ஸ்டாக் இல்லாததால் தங்கள் வங்கியால் தாய்பால் தர இயலாது என்று சொல்லி விட்டனராம். இதனால் தனது குழந்தைகளுக்கு மாற்று ஏற்பாடாக டின் பாலை வாங்கித் தந்து உள்ளார்.

தாய்ப்பாலுக்கு ஈடான மாற்று வழியை எப்படியாவது தேட வேண்டும் என்று ஸ்டிபன் கிங் முயற்சி செய்த போது, ஆய்வகத்தில் செயற்கையான மாற்று தாய்ப்பால் தயாரிக்க துவங்கி இருக்கும் நிறுவனத்தை அறிந்து தொடர்பு கொண்டார். மனித தாய்ப்பால் தயாரிக்க செய்த அந்த முயற்சி, வெற்றியும் பெற்றிருப்பதை ஆய்வக விஞ்ஞானிகள் சொல்லியுள்ளனர்.

20200817091923682.jpg

கடந்த ஜனவரி 2019ம் ஆண்டில் சிங்கப்பூரை சேர்ந்த டர்டல் ட்ரீ என்ற ஆய்வகத்தில், மனித தாய்ப்பாலை கொடையாளர்களிடம் பெற்று, அதிலிருக்கும் ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்த பின், ஒரு வெற்று ஃபைபர் கலத்தில் (hollow fibre bioreactor) இருக்கும் உயிரியக்க வளர்ச்சி திரவத்திற்குள் வைக்கப்படும் போது, அது ரத்த உயிரணுக்களை தூண்டி பால் சுரப்பதற்கு காரணமாக இருக்கும் பால் சுரப்பி லாக்டேட்டுகளை தூண்டுவதன் மூலம், தாய்ப்பாலை ஆய்வகத்தில் சோதனையின் அடிப்படையில் தயாரித்தனர்.

இப்படி ஆய்வகத்தில் தாய்ப்பால் தயாரிக்க மூன்று வாரங்கள் ஆகிறது. அதன் பின், 200 நாட்களுக்கு ஸ்டெம் செல் முலம் தொடர்ந்து தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும்.

ஏற்கனவே பசுமாட்டின் ஸ்டெம் செல்லில் இருந்து பாலை ஆய்வகத்தில் இந்நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஆய்வகத்திலும் சிங்கப்பூரில் இருக்கும் ஆய்வகத்தின் உதவியுடன் விஞ்ஞானிகள் மனித தாய்ப்பாலை உற்பத்தி செய்தனர்.

பெண்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பாலில் உள்ள மத்திய புரோட்டீன் மற்றும் குளுக்கோஸ் சத்துக்கள் அப்படியே இந்த செயற்கை தாய்பாலிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தாய்பாலுக்கு மாற்றாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை தாய்ப்பால் இருக்கும் என ஆராய்ச்சியின் முடிவு வெளியானது.

ஆஹா… இனி தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால், டின்களில் வரும் பவுடர் பாலுக்கு மாற்றாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை தாய்ப்பால் என்று ஆனந்தமடைய தேவையில்லை.

உலக விஞ்ஞானிகள் பலரும் இப்படி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் மாற்று தாய்ப்பாலுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மனிதன் தோலில் இருந்த செல்களை எடுத்து குரங்கின் கர்பப்பையில் வைத்து குரங்கு மனித சிமோராவை விஞ்ஞானிகள் உருவாக்கியது இயற்கை நியதிக்கு எதிரானது என விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வரும் வேளையில், தற்போது ஆய்வகத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்தால் பலவித உடல் நலக்கேடு பெண்களுக்கு ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

தாய்பால் எப்படி ஆய்வகத்தில் வைத்து பால் சுரப்பிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனை தற்போது விஞ்ஞானிகள் தெளிவாக்கியுள்ளனர். “மனிதர்கள் சாப்பிடும் ஆடு, மாடு , பன்றி போன்ற மிருகங்களின் உயிர்செல்களை ஆய்வகங்களில் வளர்த்து பின்னர் மாமிசமாக அறுவடை செய்து மனிதர்கள் உண்பதற்கு ஏற்றவையாக தயாரிக்கப்படுகிறது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மாமிசம் போன்று தான் தாய்ப்பாலும் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு சத்துள்ள தாய்ப்பாலாக குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் மரணம் தடுக்கப்படுவதோடு அவை சத்துள்ள குழந்தைகளாக வளர்ந்து, சமுதாய வளர்ச்சிக்கு உதவும்” என்கின்றனர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உணவு விஞ்ஞானிகள்.

ஆய்வகத்தில் தாய்ப்பால் தயாரிக்கப்படும் பயோமில்க் நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளார். சவுதி இளவரசர் கலீத் பின் அல்வாத் பின் தலால் தாய்ப்பால் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வருகிறது.

“செயற்கை தாய்ப்பால் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டால், பல பெண்கள் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதையே நிறுத்தி விடுவார்கள். தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பாசப்பிணைப்பு அறுப்பட்டு விடும் சூழ்நிலை உருவாகும்” எனக் குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

“குழந்தைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஆய்வகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தாய்ப்பாலில் முழு ஊட்டசத்துக்கள், நோயெதிர்ப்பு சக்தி இருக்காது” என்று ஜெர்மன்நாட்டு விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

“சோதனை முயற்சி வெற்றி என்றாலும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் தாய்ப்பால் உற்பத்தியாகி வெளி வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். இதற்குள் உலக விஞ்ஞானிகள், ஆய்வக தாய்ப்பால் உற்பத்திக்கு எதிராகக் குரல் எழப்புவது தேவையில்லாதது. ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் தாய்ப்பால் குழந்தைகளையும் அவர்களின் தாயையும் பெருமைபடுத்தும் விதமாகவே அமையும்” என பயோமில்க நிறுவனர் மற்றும் உணவு விஞ்ஞானி மிக்கேல் ஈகர் தெரிவிக்கிறார்.

ஆக, ரெடிமேட் தாய்ப்பால் விரைவில் அனைத்து நாடுகளிலும் கடைகளிலேயே கிடைக்கும்!.


பத்து வருடங்களுக்கு முன்பு வரை குழந்தை பிறந்து வளர்ந்த பின் சில வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்கள் தமிழகத்தில் உண்டு. பிரசவத்திற்கு பின்பு தாய்ப்பால் சுரக்க வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள், நாட்டுமருந்துகளை அரைத்து பெண்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்தது. தற்போது இந்த பழக்கம் பல வீடுகளிலும் குறைந்து வருவதால், தாய்ப்பால் சுரப்பு என்பதும் பலரிடத்தில் குறைந்து விட்டது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டினால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறப்பான வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மண்டலம் வலுப்பெறும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை, மிகுந்த ஆரோக்கியமானதாகவும், தாயுடன் அதிக பாசமாகவும் இருக்கும் என தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பல ஆய்வுகள் வெளியாகி உள்ளது.

என்னதான் சத்துணவு சாப்பிட்டாலும், சில பெண்களுக்கு உடல் அமைப்பு ரீதியாக குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் உரிய முறையில் சுரக்காமல் போய்விடுகிறது. வருடம் தோறும் தாய்ப்பால் இல்லாமல் சர்வதேச அளவில் கிட்டதட்ட ஒரு கோடி குழந்தைகள் இறக்கின்றன என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு தாயிடம் தாய்ப்பால் சுரக்காமல் போகும் போது, பசும் பால் கொடுக்கப்படுகிறது. பசும்பாலில் கொழப்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால், பிறந்த குழந்தைகளின் உள்ளுருப்புகளுக்கு அது அதிக வேலையை கொடுப்பதால், உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று இடையில் நிறுத்தி விடுவதும் உண்டு. தாயின் உடல் எடை, கருவுற்றிருக்கும் போது கூடும், தாய்ப்பால் கொடுப்பதால் மீண்டும் உடல் எடை குறைந்து, பழைய உடல் தோற்றத்திற்கு வந்துவிடும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால், பெண்களுக்கு மார்பக புற்று நோய், கர்பப்பை புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறைகிறது என்பதே மகளிர் மருத்துவர்கள் கருத்தாக உள்ளது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகத்தின் அளவு பெரிதாகிவிடும் என்று சில பெண்கள் கவலைப்படுவது உண்டு , மார்பகத்தின் அளவிற்கும் தாய்ப்பால் கொடுப்பதற்கும் எந்தவித தொடர்புமில்லை. மார்பக திசுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பின் அளவு நிர்ணயமாகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை தாமதப்படுத்துவதால், குழந்தை பேறுக்கு பின் இரத்த இழப்பும் சரி செய்யப்படுகிறது என தாய் சேய் நலமருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.