என்ன அவசரம்?
என்னை விட வயதில் பல ஆண்டுகள் சிறியவர், செயல்படுவதில் என்னை விட பல மடங்கு ஆர்வம் காட்டுபவர், தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு என்னை காட்டிலும் பல மடங்கு தேவைப்படுபவர் -
சுதாங்கன் ஏனோ அவசரமாக அழைக்கப்பட்டு விட்டார்.
‘காலம் ஏகப்பட்ட விஷயங்களை நம் முன்னே விரித்து வைத்திருக்கிறது... எதையும் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடக் கூடாது’... என்று அவசரப்படுவார்! அது அவர் இயல்பாக இருந்தது. ஆனால் இப்போது ‘இந்த அவசரத்துக்கு’ அவர் காரணமல்ல. அது விதியின் குற்றம்.
விகடனுக்கு முன்பே என் கண்களில் பட்டவர்தான்! டிரைவ்-இன்-ஓட்டலில் வலியவந்து, புன்முறுவலுடன் அறிமுகப்படுத்திக் கொண்டவர், ‘அவரைப் பற்றி தெரிந்திருந்தது எனக்கு’ என்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
விகடனில் சேர்ந்த பிறகு, அவர் திறமை என்னை ஈர்த்தது. அதுவே பத்திரிகை வட்டத்தைத் தாண்டி இருவரிடையே ஒரு அன்பான சூழலை ஏற்படுத்த காரணமாயிற்று.
சில விஷயங்களில் அவரைத் தூண்டி கட்டாயப்படுத்தியது உண்டு. முகம் சுளிக்கமாட்டார்.
எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அரசியலில் அதிகம் அறிமுகம் இல்லாத ஒருவர் அங்கே செய்திகள் சேகரிக்க சென்றால் நல்லது என்று அவரை வற்புறுத்தினேன். புது மனைவியுடன் சினிமா செல்ல இருந்தவர், அதை கைவிட்டு மறு பேச்சின்றி பொறுப்பை ஏற்றார். அவர் கொண்டு வந்த செய்திகள் விறுவிறுப்பானவை. அதுமட்டுமல்ல. அந்த ஒரு மாத காலத்துக்குள் ஏகப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அவர் மிக மிக நெருக்கமானதுதான் விந்தை!
சுதாங்கன் பழகும் விதம் முற்றிலும் வித்தியாசமானது. ஒரு பிரமுகர் பழக்கமாகிவிட்டார் என்றால், அவர் வீட்டில் உள்ள அத்தனை பேரும் - தோட்டக்காரன் உட்பட - சுதாங்கனுடன் பழகுவார்கள்! ஏன்? பல பிரமுகர்களின் சில சின்ன வீடுகளும் அவருக்கு செய்திகள் தருபவர்களாக மாறியிருப்பதை பார்த்திருக்கிறேன்!
‘மிஸ்டர் கழுகு’ பகுதிக்கு அவருடைய பங்கு நிறைய! ‘வைகோ’ ரகசியமாக பிரபாகரனை சந்திக்க ஈழப் பயணம் போகும் செய்தியை வெளி உலகம் அறிய அவர்தான் காரணமாக இருந்தார்! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாக அது அமைந்தது.
நுணுக்கமாகவும், திறம்படவும், வேகமாகவும் அவரால் செய்திகள் சேகரிக்க முடிந்தது.
அவருடன் பழகப் பழக அவரிடம் உள்ள தமிழ் ஆற்றலை அறிய முடிந்தது. அவரை சிறு கதைகள் எழுதவும் உற்சாகப்படுத்தி இருக்கிறேன். அவர் நாவலே எழுதிக் காட்டினார்!
படாடோபம் விரும்பியதில்லை. ஆனால் எல்லாமே வேண்டும். எல்லாரும் வேண்டும். காதலிக்கத் தவறவில்லை. எடுத்துக் கொண்ட தொழிலில் உச்சத்தை தொட தவறவில்லை. எதையும் படிக்கத் தவறியதில்லை. பல்வேறு துறை நண்பர்களை பெருக்கிக் கொண்டார்! நன்றாகப் பாடுவார். பாட்டை ரசிப்பார். பிறர் எழுத்தை ரசிப்பார் - பொறாமைப் படாமல்!
வெளிப்படையாக, அச்சமின்றி கருத்தைச் சொல்வார். நிராகரிப்பை லட்சியம் செய்தது இல்லை!
ஒரு முழுமையான மனிதராக வாழப் பார்த்தவர் என்பதில் சந்தேகமில்லை.
பல ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்ததால், இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டு திகைத்து நின்றேன்.
நான் யாரையும் இறந்துவிட்டதாகக் கருதுவதில்லை.
வான் வெளியை விட மிக மிக விஸ்தாரமான எனது நினைவு வெளியில், அவர்களுக்கு நிரந்தரமான இடம் தந்துவிடுவேன்.
அந்த என் ‘நினைவு வெளியில்’ விஐபி அறை உண்டு. அதில் எனக்கு மிகப் பிடித்தமானவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். அந்த அறைக்கு அடிக்கடி சென்று வருவேன்.
சுதாங்கன் என் நினைவு வெளியின் - விஐபி அறையில் - எப்போதும் இருப்பார்.
Leave a comment
Upload