பெங்களூரில் கடந்த வாரம் போதைப் பொருள் கடத்திய வழக்கில் அனிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கன்னட திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்களுக்கு போதைப் பொருட்களை தான் விற்பனை செய்து வருவதாக அனிதா கூறியிருக்கிறார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில், பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ் புகார் அளித்தார். புகாரில், கன்னட திரையுலகில் 15 முன்னணி நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் மாஃபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கடந்த 2 நாட்களாக இந்திரஜித்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இப்புகாரின் பேரில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரையும் 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர். இருவரும் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. வரும் திங்களன்று ஆஜராவதாக ராகினியும், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சஞ்சனாவும் பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (4-ம் தேதி) பெங்களூர் எலகங்காவில் உள்ள நடிகை ராகினி திவேதி வீட்டுக்குள் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேர சோதனையில், அங்கிருந்த 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராகினி திவேதியை கைது செய்து, சாம்ராஜ்பேட்டையில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். அவரிடம் போதைப் பொருள் கடத்தும் மாஃபியா கும்பல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மற்றொரு நடிகையான சஞ்சனா கல்ராணி விரைவில் கைதாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் போதைப் பொருள் மாஃபியா வழக்கு சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்யப்பட்டார்.
இதே போதைப் பொருள் விவகாரத்தில், கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது அனூப், ரவீந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ரமீஸ் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தற்போது போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் மாஃபியா கும்பல் தொடர்பு விவகாரங்களால் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.
Leave a comment
Upload