தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு உள்ளது, அதை சரிக்கட்ட ஒரு புதிய மின் சேவை அவசியம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,
நீலகிரி மாவட்டத்தில், சில்ஹல்லா என்ற புதிய நீர் மின் திட்டம் துவக்கப்படும் என்று 2013 ஆம் ஆண்டு அறிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் இருப்பது தான் உண்மை. அதே சமயம் இந்த திட்டம் விரைவில் துவங்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின் வாரியம் செய்து வருகிறது என்கிறார்கள்.
ஏற்கனவே நீலகிரியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் முயற்சியால் பத்து மின்சார உற்பத்தி அணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கிய அணைகளான அவலாஞ்சி, குந்தா, அப்பர் பவானி, கெத்தை, பில்லூர் அணை என்று அனைத்தும் மின்சார உற்பத்தியை செய்து வருகிறது...
நீலகிரியை பொறுத்தமட்டில் பன்னிரெண்டு நீர் மின் அணைகள் உண்டு.. இவை தமிழகத்திற்கு மின்சார பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறது என்பது பெருமையான விஷயம். குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, பர்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா, முக்கூர்த்தி, சாண்டிநல்லா, கிளன்மார்கன் மற்றும் மாயார்.. இந்த அனைத்து அணைகளும் முன்னாள் முதல்வர் காமராஜ் நமக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதங்கள் என்று பலர் கூறிக்கொண்டிருப்பது இன்றும் காதில் ஒலிக்கும்...
இதற்கிடையில் காட்டுக்குப்பை என்ற இடத்தில் 2009 ஆம் வருடம் ஒரு நீர் மின் நிலையம் அமைக்க அன்றைய தி.மு.க. அரசு முடிவு செய்ய, அப்போதைய மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமி கடைசி நேரட்த்தில் திட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதற்கு பின் 2014-ல் ஜெ அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, ஒரு பக்கம் அந்த பணி நடக்க.. தற்போது குந்தா பகுதியில் சில்ஹல்லா நீர் மின் திட்டம் துவக்க அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
சில்ஹல்லா என்பது நீலகிரி படுக வார்த்தை. அதாவது சில் என்றால் சிறிய ஓடைகள்... ஹல்லா என்றால் இந்த ஓடைகள் சென்று அடையும் பெரிய அணை என்பது...
இந்த திட்டத்திற்கான பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் முழு மூச்சுடன் செயல் வடிவம் கொடுத்துக் கொண்டு வரும் சூழ்நிலையில் இத்திட்டத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பும் வலுத்துக் கொண்டிருக்கிறது.
சில்ஹல்லா நீர் மின் திட்டம் கட்டுமான பணிகள் நடந்தால், இந்தப் பக்கத்தில் உள்ள பல கிராமங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள் இப்பகுதி வாசிகள்....
இத்திட்டத்தின் மூலம்.. கண்ணெரிமந்தனை, தங்காடு, ஒரநள்ளி, மணிஹாட்டி, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, பெம்பட்டி, கல்லக்கோரை பாலடா, ஸ்ரீராம் நகர், மிக்கேறி, அப்புக்கோடு, துளித்தலை, முத்தோரை ஆகிய கிராமங்களின் விளை நிலங்கள், தேயிலை தோட்டங்கள் என்று 200 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என்று இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்தில், 2000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. குந்தா அருகே உள்ள ஸ்ரீராம் நகர்
அன்னாமலை கோயில் அடிவாரத்தில் மற்றும் எடக்காடு கன்னெறி மந்தனை ஆகிய பகுதிகளில் இரு அணைகள் கட்டப்படுகின்றன. இந்த நீர் மின் நிலையம் நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்படவுள்ளது. இதற்கான தற்போதைய செலவு மட்டும் ரூபாய் 4200 கோடி என்று இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த திட்டத்தை எதிர்க்கும் சிவலிங்கம் கூறும் போது,
“ஏற்கனவே பதிமூன்று மின் திட்டங்கள் உள்ள நீலகிரி மலையில், எதற்கு இன்னுமொரு திட்டம்? அதிலும், இருக்கிற நீர் மின் திட்டங்களை சற்று நவீன படுத்தினாலே 5000 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யலாம். காமராஜர் காலத்தில் உருவாகின அனைத்து மின் திட்டங்களும் காட்டினுள் உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை. தற்போது கொண்டு வரும் இந்த சில்ஹல்லா நீர் மின் திட்டத்தில், பல கிராமங்கள் பாதிக்கப்படுவது உறுதி. அதுவும் சுரங்கம் தோண்டி, அதில் பெரிய பைப்புகள் பொருத்தப் போகிறார்கள். இதன் கட்டுமான பணிகள் எத்தனை பாதிப்புகளை உருவாக்கும்? 270 அடி உயரம் அணைகள், அதை கட்ட நிலம் எப்படி தோண்டப்படும். ஏற்கனவே பூகம்பம் ஏற்படும் பகுதி இவை என்று கூறப்படுகிறது. அதிலும் இங்கு வரும் அனைத்து நீரோடைகளும், கழிவு நீரை தாங்கி வருபவை. அப்படியிருக்க சுற்று சூழல் கட்டாயம் பாதிக்கப்படும். 1964-ல் இங்கு வந்த காமராஜர் எந்தக் காரணத்தாலும், கிராமங்கள் பாதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அதனால் தான் அனைத்து கட்டுமான பணிகளும் வனத்தினுள் நடந்தன. தற்போது இந்த திட்டத்தினால் விவசாய பகுதிகள் பாதிக்கப்படும். அதுவுமின்றி இந்த அணைகள் கட்டப்படும் பகுதிகள் தனி பட்டாவில் வருபவை அல்ல. அனைத்தும் கூட்டு பட்டாவில் வருவதால், எப்படி நஷ்டஈட்டை பிரித்துக் கொடுக்க முடியும்?! தனிப்பட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சுற்றுசூழல் பாதிக்கப்படும் போது, முக்கூர்த்தி தேசிய பூங்கா பாதிக்கப்படும்.
ஈக்கோ சென்சிடிவ் ஏரியா இந்தப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும். விழ்ப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அதற்குள் கொரோனா பாதிப்பு... இந்த திட்டத்தின் செயல்பாடு உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை” என்று முடித்தார்.
படுகு தேச கட்சி நிறுவனர் மஞ்சை மோகனிடம் கேட்டோம், “இந்த சில்ஹல்லா நீர் மின் திட்டம், இந்தப் பகுதியில் உள்ள பல கிராமங்களின் வாழ்வாதாரத்தை சூறையாடிவிடும்... இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்த படும்போது என்ன இழப்பீடு கொடுப்பார்கள் என்ற திட்டம் இல்லை. 150 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டு... காய்கறி, தேயிலை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை என்று தான் தோன்றுகிறது. பாலகொலா கிராமசபையில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. மக்களின் கருத்து கேட்பு நடத்தப்படவேண்டும். நஷ்டஈடு எப்படி கொடுப்பார்கள் என்று தெளிவு படுத்த வேண்டும். அதை ரெட்டிப்பு ஈடாக கொடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது அனைவரின் கேள்வி!”
மேற்கு நாடு சீமை செயலரும் நீள்கோள் அமைப்பை சேர்ந்த ராமனிடம் பேசினோம்...
“இந்த சில்ஹல்லா நீர் மின் திட்டத்தால் இருபது கிராமங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது என்றால், எதற்கு இந்தத் திட்டம் சொல்லுங்க” என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்..... “2013 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க... அப்போதே நம்ம எம்.பி. ராசா மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளார்கள். இந்த திட்டத்தினால் இரண்டு அணைகள், பெரிய குழாய்கள் பொருத்தவும் பெரிய சுரங்க பாதைகள் கட்டப்பட இருக்கின்றன... இப்படி ஒரு பெரிய ப்ராஜெக்ட் காட்டுப் பகுதியில் நடந்தால் ஓகே... மக்கள் வாழும் இடத்தில் பல ஏக்கர் விளைநிலங்களை அழித்து குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்தி தான் இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடக்கும்... கழிவு நீர் வரும் ஆறுகளின் நீரை தான் இந்த மின் உற்பத்திக்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதும் உறுதி...
ஊட்டி ஏரி, முத்தோரை, தொட்டபெட்டா, பாலடா போன்ற பகுதியில் இருந்து வரும் கழிவு ஆறுகளின் நீர் சுற்று சூழலை பாதிக்கும். அதனால் பில்லூர் அணையும் பாதிக்கும். ஏற்கனவே பெரிய அணைகள் மற்றும் பத்து அணைகள் இருக்கும் போது, எதற்கு இந்த புதிய அணைகள்? வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட் பகுதி பாதிக்கும். அதை விட கிராமங்கள், சில காலணிகள் பாதிக்கப்படுவது உறுதி. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொட்டித் தீர்த்த மழையால் இந்த பகுதி கிராமங்கள்,
அவலாஞ்சி, குந்தா பகுதியில் ஏகப்பட்ட நிலச்சரிவு. இதனால் இரண்டாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது இந்த நீர் மின் நிலையம் கட்டுமான பணிகள் துவங்கினால், என்ன... என்ன பாதிப்பு வருமோ என்று தலை சுற்றுகிறது. கன்னெறி மந்தனை, பெங்கால்மட்டம், மஞ்சூர் அன்னமலை பகுதியில் சுரங்கப் பாதை தோண்டும் போது, பல பாதிப்புகள் வரலாம். ஏற்கனவே நிலச்சரிவு பகுதி, பெரிய பாதிப்புகளை தடுக்க தான் எதிர்க்கிறோம். விரைவில் நீதி மன்றத்தை அணுக இருக்கிறோம். நஷ்டஈடு நாலு மடங்கு தரவேண்டும். மின்சார வாரியம், இப்படிப்பட்ட அணைகள் கட்டுவதை எதிர்த்து மேத்தா பட்கரின் வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன என்பதை யாரும் மறக்கக்கூடாது. இந்தத் திட்டத்தை நிறுத்தா விட்டால் எங்களின் போராட்டம் தொடரும்” என்கிறார்.
தி.மு.க. மாவட்ட துணை தலைவர் ரவி குமாரை தொடர்பு கொண்டு பேசினோம், “இந்த சில்ஹல்லா திட்டம் ஒரு தெளிவாக இன்னும் இல்லை. அதிலும் அந்த அம்மா 110 விதியின் கீழ் அறிவித்ததால், அந்தத் திட்டம் ஒரு கேள்விக்குறி தான்” என்று முடித்து கொண்டார்.
நீலகிரி டாக்குமெண்டஷன் இயக்குனர் வேணுகோபால் கூறும்போது,
“ஏற்கனவே பன்னிரெண்டு அணைகள் நீலகிரியில் மின் உற்பத்தியை செய்து வருகின்றன. அது இல்லாமல் காட்டுக்குப்பை பகுதியில் மற்ற ஒரு நீர் மின் திட்ட அணை கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க சில்ஹல்லா நீர் மின் திட்டம் தற்போது ரெடியாகி கொண்டிருப்பது தேவையற்றது.
இந்த திட்டம் கோடை காலத்தில் சென்னை பெருநகரத்தின் மின்சார பற்றாக்குறையை போக்கத்தான் என்பது பலருக்கு தெரியாது... இந்த திட்டம் நீலகிரியின் மைய பகுதியில் இயற்கை சூழலை அழித்து, பல கிராமங்களை பலிகொண்டு 4000 கோடியில் அமைக்கப்படும் ஒரு ஆபத்தான திட்டம். இந்த திட்ட கட்டமைப்பின் போது இருபது கிராமங்கள் பாதிக்கப்படும், அவர்களின் வாழ்வாதாரமான இயற்கை விவசாயம்,
தேயிலை எஸ்டேட்டுகள் மற்றும் சுற்றுலா பாதிக்கப்படும் பல செயல் பாடுகள் அழிந்து, பலருக்கு வேலை இழப்பும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு. ஏற்கனவே 2016 பாரிஸ் ஒப்பந்தத்தின் படி, உலகம் வெப்பமயமாவதை தடுக்க இயற்கையை அழிப்பது, சுற்று சூழலை மாசு படுத்துவதற்கு தடை உண்டு. ஹிமாச்சல பிரதேசத்தில் இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால், அங்கு எந்த கட்டுமானமும் நடப்பது இல்லை. அதிலும் இயற்கையை அழித்து, இரண்டு அணைகள் கட்டுவது அவ்வளவு ஈஸியான ஒன்றா?.. அதே போல சுரங்க பாதை அமைப்பது மிக ஈஸியான ஒன்றா?.. எனவே மத்திய அரசு இந்த திட்டத்திற்கான அனுமதியை கொடுக்கக்கூடாது... இந்த நீர் மின் திட்டம் கைவிடப்பட வேண்டும். நீலகிரி பாதுகாக்க பட வேண்டும்” என்று முடித்தார்.
இந்த நீர் மின் திட்டத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய மின்சார வாரிய அதிகாரியை சந்தித்தோம்...
அவர் நம்மை நேரில் அழைத்து, இந்தத் திட்டத்தை பற்றி விரிவாக பேசினார்... அதன் வரைபடத்தை நம்மிடம் காண்பித்து திட்டத்தின் பயனை பற்றி கூறினார்... “சில்ஹல்லா நீர் மின் திட்டம் 1960ம் வருடமே இப்படிப்பட்ட ஒரு நீர் மின் திட்டம் அவசியம் என்று உணரப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 2014 ஆம் ஆண்டு இதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
நீலகிரியில் பன்னிரெண்டு அணைகள் உள்ளன. இதில் உள்ள உபரி நீர் மற்றும் ஊட்டி தொட்டபெட்டா மற்றும் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலம் வீணாகிக் கொண்டிருக்கிற எக்கச்சக்க நீரை தடுத்து நிறுத்தி இந்த புதிய நீர் மின் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் . ஏதோ சென்னைக்கு, கோடை காலத்தில் மின்சாரம் வழங்க தான் இந்த சில்ஹல்லா திட்டம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். சென்னைக்கு தெர்மல் பவர், கல்பாக்கம், பேசின் பிரிட்ஜ், மேட்டுர்.. மற்றும் வடநாட்டில் இருந்தும் மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, இந்த சில்ஹல்லா திட்டத்தை எதற்கு சென்னை வரை எடுத்துச் செல்லவேண்டும், சொல்லுங்க... இப்படிப்பட்ட மின் உற்பத்தி இருக்கும் போது இதை அவர்கள் நம்பி இருக்க வேண்டியது இல்லை. ஒரு விஷயம். எல்லா ஆய்வும் முடிந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.Central electricity authority of India மற்றும் Ministry of Environment and Forest ஒப்புதல் அளித்தவுடன் இதற்கான பணிகள் துவக்கப்படும்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது... “இந்தத் திட்டத்தில் ஸ்ரீராம் நகரின் மேல்புறம் ஒரு அணை கட்டப்பட்டு, அங்கிருந்து கீழே உள்ள அன்னமலை கோயில் பின்புறம் மற்ற ஒரு அணை கட்டப்படும், குழாய்கள் சுரங்க பாதையில் அமைக்கப்படும். மேலிருந்து தண்ணீர் கீழே வந்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட்டு, மீண்டும் திரும்பி மேலே சென்று விடும். இதனால் தண்ணீர் வீணாகாது. கழிவு நீர் என்று சொல்லப்படுவது கூட சுத்திகரிப்பு செய்து தான் உபியோகிக்கப்படும். முதலில் 1000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டம் முடிக்கப்படும். அது ஸ்டேஜ் ஒன்று. ஸ்டேஜ் இரண்டு அதற்கு பின் மற்ற ஒரு 1000 மெகாவாட் திட்டம் முடிக்கப்படும். இது காலத்துக்கும் நம் தமிழகத்திற்கு உதவும் ஒரு திட்டம் என்பதை புரிந்து கொண்டால், சரி... சோலார் பவுர் என்று எடுத்துக் கொண்டால் ஒரு இருபத்தி ஐந்து வருடம் தாங்கும். ஆனால் இந்த நீர் மின் திட்டம் நுறு வருடத்தை தாராளமாக தாண்டி செயல்படும் திறன் வாய்ந்தது. 2023 ல் காட்டுக்குப்பை நீர் மின் திட்டம் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும்... சில்ஹல்லா 2022 துவங்கினால் 2028 ஆம் வருடம் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்பதில் உறுதியாக இருக்கிறது எங்க மின்சார வாரியம். எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள் சகஜம் தான். அதை எதிர்கால வளர்ச்சிக்கு என புரிந்து கொண்டால் நல்லது. நம் மாநில அரசு செய்யும் ஒரு திட்டத்திற்கு நாமே தடை போட்டால் மத்திய அரசு வலுக்கட்டாயமாக அந்த திட்டத்தை செய்து முடிக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
மற்ற ஒரு விஷயம் National Thermal Power corporation இந்த சில்ஹல்லா திட்டத்தை எடுத்துச் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஹைட்ரா ப்ராஜெக்ட்டை, தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எடுத்து செய்வதை என்னவென்று சொல்லுவது.ஒரு விஷயத்தை எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.. இந்தத் திட்ட பணிகள் எந்த கம்பெனியிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அந்த நிறுவனம் திட்ட பணிகளை மேற்கொள்ளும் பகுதியில் வாழும் மக்களுக்கு கூட்டாண்மை சமூக பொறுப்பை (CSR - Corporate Social Responsibility) ஏற்றுக்கொண்டு நியாயமான நஷ்டஈட்டை வழங்கிட வேண்டும். மேலும் இந்த கூட்டாண்மை சமூக பொறுப்பை எந்த பகுதியில், ஒரு திட்டம் அல்லது பணி நடக்கிறதோ, அங்கு தான் இதை அமுல்படுத்த வேண்டும் என்பதில் சமூக அக்கறை கொண்டவர்கள் நிலை நிறுத்த வேண்டும்.
அந்த பகுதி முழுவதும் கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள், பாதிக்கப்படும் நபர்களுக்கு அரசு வேலை போன்ற நல்ல விஷயங்கள் இதன் மூலம் செயல் படுத்துவதை கவனமாக கண்காணித்து, அந்த வளர்ச்சிப் பணிக்கான செலவை வேறு எங்கோ செய்து விட்டோம் என்று சொல்லாமல் பாதிக்க பட்ட பகுதி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு செலவிடுமாறு கூறும் அழுத்தத்தை நாம் தான் முன்னிருத்த வேண்டும்...” என்று கருத்தாக கூறும் அந்த அதிகாரி... “இந்த சில்ஹல்லா திட்டம் கட்டாயம் துவக்கப்படும், தேவையற்ற எதிர்ப்பால், காலம் தள்ளி போகலாமே தவிர இந்த திட்டம் கட்டாயம் கட்டப்படும். இன்று கோரப்பட்ட 4000 கோடி என்பது கால தாமதமானால் இரட்டிப்பு ஆகலாம், அவ்வளவு தான்...” என்று முடித்தார் அந்த இளம் அதிகாரி.
Leave a comment
Upload