தொடர்கள்
கவிதை
திருப்புமுனை - மாலா ரமேஷ் 

20200804134806915.jpg

• பொத்தி வளர்க்கப்படும் பூப்போல - ஆங்கே
கூட்டுக்குள் புழுவாய் ஒளிந்திருந்து
அவமானத் தடயமில்லா அக்மார்க் மனதுக்கு
திருப்புமுனையின் தடம் தெரியுமா?

• மோகன்தாஸ் மகாத்மாவானது - அன்று
அவமான வலியாலன்றோ
ரயில் பயணத் தள்ளல் - அது
சுதந்திரப் பயணத் துள்ளல்

• விழும் முன் தூக்கப்படும் குழந்தைக்கு - ஆங்கே
வலியின் வேதனை புரியுமா?
விழுந்து படும் வலியும் காயமும்
வலுவாக்காமல் போகுமா?

• முயல்பவனுக்கே அனுபவம் - கை
தவறினால் மட்டுமே முயற்சிகள்
உலகப் பள்ளி அள்ளித்தரும்
அனுபவப் பாடம் - திருப்புமுனை

• தோல்வியும் அவமானமும் உரமாக்கும் –ஆங்கே
போட்டியும் பொறாமையும் வலுவாக்கும்
திருப்புமுனைகள் காத்திருக்கும் – தளராமல்
கதவைத் திற வாய்ப்பு பூத்திருக்கும்

• வண்டிக்கு அச்சாணி -பெரும்
யானைக்கு அங்குசம் -ராட்சத
பலூனுக்கு அடைப்பான்
பேரணைக்கோ சிறு மதகு

• உருவத்தில் அல்ல திறன்
உழைப்பில் மட்டுமே உண்டென்னும்
தாரக மந்திரமே - என்றும்
திருப்புமுனை உன் வாழ்வில்

• பூக்களாய் மட்டுமே இருக்கவேண்டாம்
பெரும்காற்று உதிர்த்துவிடும்
மென்மையான மனம் - அது
தோல்விகளால் துவண்டுவிடும்

• கடினமான மன உறுதி – என்றும்
நம்பிக்கை தங்கும் பேச்சு
அயராத உழைப்பு - அங்கே
பிறர்க்கிரங்கும் சிந்தை

• தவறாமல் கொண்டு சேர்க்கும்
சத்தியப் பாதை தன்னில்
வலி தாங்கும் நெஞ்சமே
வையத்தில் திருப்புமுனை.