தொடர்கள்
பொது
சபாஷ் ஷைலஜா மேடம்..! - தில்லைக்கரசி சம்பத்

20200804134030646.jpg

பிரிட்டன் பத்திரிகை வெளியிட்ட 50 சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா முதலிடம் பெற்றிருக்கிறார்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டப்பின், உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி, 2.5 கோடி பேர்களுக்கு அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கும் வேலைகள் புயல் வேகத்தில் நடந்து கொண்டு இருந்தாலும், முடிவு இன்னும் தெரியாத நிலையில் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு ஏற்ப ஒருபுறம் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இன்னொரு புறம் வேறு நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை, உலகின் மருத்துவர்கள் நோய்க்கு ஆளானவர்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க... அரசு சொல்லும் பாதுகாப்பு முறைகளை மக்களும் ஓரளவு கடைப்பிடித்து, நோய் வராமல் இருக்க கொரோனாவுடன் சடுகுடு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் அந்த வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் பட்டியலை பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) வெளியிட்டுள்ளது.

இதில்தான் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்குக் கிடைத்துள்ளது.

“பிராஸ்பெக்ட்” என்னும் மாதந்திர பத்திரிகை லண்டனிலிருந்து வெளியாகிறது. அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியாகும்.பொதுவாக இதில் பிரிட்டிஷ், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளின் அரசியல் சமூக பிரச்சினைகள், கலை, இலக்கிய, சினிமா, அறிவியல், வரலாறு, ஊடகங்கள், தத்துவம், உளவியல் பற்றிய கட்டுரைகள் வெளியாகின்றன‌.

2004 இல் இந்த பத்திரிகை வெளியிட்ட உலகின் பிரபல நூறு அறிவுஜீவிகளின் பட்டியலில் இந்தியாவின் அமர்த்தியா சென் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் ஷைலஜா முதலிடம் பெற்றிருக்கிறார்.

இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது.

சீனாவில் வுஹானில் சில நாவல் வைரஸ் பரவுகிறது என்று ஷைலஜா கேள்விப்பட்டபோது, ​​வைரஸ் நிச்சயமாக கேரளாவுக்கு வரும் என்று எதிர்பார்த்து, சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். வூஹானிலும் கேரளத்தவர்கள் வாழ்ந்து வருவதால், முன்கூட்டியே உஷாராக ஜனவரி மாதத்திலேயே இது குறித்து மீட்டிங்கில் கேரள அதிகாரிகளுடன் விவாதிக்க ஆரம்பித்தார்.

பின் 2020 ஜனவரி 18 இல் தான் WHO வூஹானில் ஒரு திறன் மிக்க வைரஸ் இருப்பதாக உலகிற்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த நேரத்தில் கூட இதை ஒரு தொற்றுநோய் என்று WHO அறிவிக்கவில்லை. ஆனாலும்
ஜனவரி 24 அன்றே மாநில கட்டுப்பாட்டு அறையை கேரள அளவில் திறந்தார்கள். மேலும் 14 மாவட்டங்களுக்கும், மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் (டி.எம்.ஓ) தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகளைத் தொடங்கினர். ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறையிலும் நிபுணர் குழுக்களைச் சேர்த்தார்கள். ஒவ்வொரு கூடுதல் டி.எச்.எஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கடமைகள் உள்ளன. தொடர்புத் தடமறிதலுக்கு ஒருவர் பொறுப்பு, தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மற்றும் கோவிட் மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு மற்றொருவர் பொறுப்பு, மேலும் ஒருவருக்கு தளவாடங்கள் சேகரிப்பு, மனநலத்தை ஏற்படுத்தும் பொறுப்பு கொடுத்து காத்திருந்தார்கள்.

எதிர்பார்த்தது போலவே முதல் கொரோனா பாஸிட்டிவ் நோயாளி ஜனவரி 30ம் தேதியும், பிப்ரவரி முதல் வாரத்தில் வேறு இரண்டு கொரோனா நோயாளிகளும் கண்டறியப்பட்டார்கள்.

பின் உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்த நிலையில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனைகள் செய்ய நல்ல தடமறியும் குழுவை விமானநிலையங்களில், துறைமுகங்களில், நெடுஞ்சாலைகளின் சோதனை சாவடிகளில் ஏற்படுத்தி, தீவிர கண்காணிப்புகள். அதனை தொடர்ந்த நடவடிக்கைகள் என அனைத்தும் புத்திசாலித்தனமாக நடத்தப்பட்டன.

அதாவது அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்றால் தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்தல், சோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை என்று அமைத்து செயல்பட்டனர்.

தமிழகத்தில் செப் 2 தேதியில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 7500 ஐ கடந்த நிலையில், கேரளாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 79,725 , இறந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் கொரோனா கட்டுப்பாட்டிற்கு அமைச்சர் ஷைலஜாவின் முன்யோசனை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகளே காரணம்.
கடந்த ஜூன் மாதத்தில் ஐநா சபை வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘பொது சேவை தினம்’ கொண்டாடிய போது அந்த விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஐ.நா-வின் உயர்மட்ட பிரமுகர்களும் பங்கேற்றனர்.

அவ்விழாவில் கொரோனா வைரஸுடன் திறம்பட போராடிய அனைத்து தலைவர்களையும் ஐ.நா. பாராட்டியது. அதிலும் நம் கேரள‌அமைச்சர் ஷைலஜாவை குறிப்பிட்டு பாராட்டினார்கள். இப்பொழுது “பிராஸ்பெக்ட்” பத்திரிகையின் மூலம் அடுத்த பெருமையும் சேர்ந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்..! யாருங்க அது நம்ம அமைச்சர் விஜயபாஸ்கர்... பெயர் ஏதாவது லிஸ்ட்டில் இடம் இருக்கா? எனக் கேட்பது..?? ரொம்ப தான் ஆசை போங்க..!! நம் பெயர்கள் இங்கே கொரோனா பாதித்தவர்கள் லிஸ்ட்டில் வராமல் இருப்பது போதாதா?