முருகபெருமானின் பெருமைகளை பாடிய அடியார்கள் பலர் இருந்தாலும், முருகனின் அருள் பெற்ற அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத நூல்கள் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது.
தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் அமைந்துள்ளது, அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்.
அருணகிரிநாதர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று, முருகன் திருத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்து, முருகபெருமானின் பெரும் புகழை திருப்புகழாக பாடியவர். இவர் எழுதிய திருப்புகழில் ஆயிரத்து முன்னூற்று ஏழு பாடல்கள் உள்ளன. இது சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது. இவற்றுள் ஆயிரத்து என்பதெட்டுக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன.
அருணகிரிநாதர் பிறப்பு:
கி.பி15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்ததாகவும், இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கூறப்படுகிறது. இவரது சிறுவயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால், இவருடைய தமக்கையார் அருணகிரிநாதரை வளர்த்து வந்தார். ஊழ்வினைப் பயனால் கொடிய நோயினால் வருந்தினார் அருணகிரிநாதர். தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்த குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரிநாதர், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார்.
தாங்கிப்பிடித்த முருகப் பெருமான்:
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து கீழே குதித்த அருணகிரிநாதரை முருகப் பெருமான் தம் திருக்கரங்களால் தாங்கி, அருணகிரிநாதருக்கு ‘சும்மா இரு சொல்லற’ என்று முருகர் உபதேசமும் செய்தார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும் முருகப் பெருமான், அவரது நோயை குணப்படுத்தினார். முருகனின் உபதேசத்தை ஏற்று பேச்சைக் குறைத்து மௌனம் விரதம் பூண்ட அருணகிரியார், நாடெங்கும் உள்ள திருத்தலங்களில் குடிகொண்டுள்ள முருகன் கோயில்கள் சென்று தரிசனம் செய்ய யாத்திரையை தொடங்கினார்.
வயலூர் வந்த அருணகிரிநாதர்:
திருச்சிராப்பள்ளிக்கு வந்த அருணகிரிநாதர் அங்கிருந்து அருகிலுள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அதில் மிக முக்கியமானது குமார வயலூர். இது அருணகிரிநாதரின் வாழ்வில் மிக முக்கியமான இடம் பெற்று, திருப்புகழ் பாட அருள் கிடைத்த ஸ்தலம் ஆகும்.
வயலூர் பொய்யாக் கணபதி அருள்:
வயலூர் வந்த அருணகிரியார் முருகனைத் தரிசித்து அங்குள்ள பொய்யாக் கணபதியை வணங்கி விட்டு அங்கேயே உறங்கிய போது, கனவில் வந்த முருகப் பெருமான், அருணகிரிநாதர் நாவில் தனது வேலால் பிரணவமந்திரத்தை எழுதினார். அதன் பின் மடைதிறந்த வெள்ளமென பக்திப் பெருக்குடன் பரசவமாகி பாடல் புனையத் தொடங்கினார். முதன்முதலாக பொய்யாக் கணபதியை முறைப்படி பூஜித்து,
“கைத்தலம் நிறைகனி, அப்பமொடு அவல்,பொரி கப்பிய கரிமுகன்......” என பாடினார்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:
முருக பெருமானே, “முத்தை தரு” என்ற பாடல் அடியை எடுத்து கொடுத்து,
“முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்” என பாடத் தொடங்கிய அருணகிரிநாதர், முருகன் அருளால் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு பல்வேறு ஸ்தலங்களுக்கு சென்று திருப்புகழ் என்ற பதினாறாயிரம் பாடல்களை இயற்றிப் பாடியதாக சொல்லப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைத்திருப்பதோ ஆயிரத்து முன்னூற்று ஏழு பாடல்கள் மட்டுமே. திருப்புகழ் பாடல்கள் முழுவதிலும் முருகனது பெருமைகளை பக்தி ரசம் பெருக பாடியுள்ளார். இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை.
அருணகிரிநாதர் எழுதிய நூல்கள்:
கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
கந்தரனுபூதி (52 பாடல்கள்)
திருப்புகழ் (1307 பாடல்கள்)
திருவகுப்பு (25 பாடல்கள்)
சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
மயில் விருத்தம் (11 பாடல்கள்)
வேல் விருத்தம் (11 பாடல்கள்)
திருவெழுகூற்றிருக்கை
அருணகிரிநாதரின் திருப்புகழை படித்து நாமும் முருகப் பெருமானின் அருளை பெறுவோம்!!
ஓம் சரவணபவ! முருகா!! முருகா!!
Leave a comment
Upload