தொடர்கள்
கதை
விற்பனைப் பொருள்... - ஆர்னிகா நாசர்

2020080413523484.jpg

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்தத் தொழிற்சாலை வளாகம். சீருடை அணிந்த ஹெல்மெட் ஊழியர்கள் அங்குமிங்கும் போய் வந்த வண்ணம் இருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சரக்கு ஏற்றிக் செல்லக் காத்திருந்தன. தொழிற்சாலையின் ராட்சச புகைபோக்கி சுத்திரிகரிக்கப்பட்ட புகையை கக்கிக் கொண்டிருந்தது.

குளிர்பதன மூட்டப்பட்ட அறை. சுழலும் இருக்கையில் அமர்ந்திருந்தார் ஸயீத் ரம்ஜான். உள்இணைப்புதொலைபேசியில் தொடர்பு கொண்டு “மார்கட்டிங் மானேஜர் மாயகிருஷ்ணனை உடனே வரச் சொல்லு!”

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் குறிப்பு புத்தகத்துடன் உட்பட்டார் மாயகிருஷ்ணன்

“சார்!”

“போன மாதம் பழுதுபட்ட இயந்திரத்தை நாம் எந்த தேதியில் வாங்கினோம்?”

‘கனரா வங்கி கடனில் 10.02.2008 வாங்கினோம் சார். இயந்திரத்தின் விலை 42லட்சம் ரூபாய் சார்!”

“கனரா வங்கியின் கடனை முழுதும் அடைத்து விட்டோமா?”

“ஓ... 30.03.2013ல் அடைத்து விட்டோம்!”

“அந்த இயந்திரம் வாங்கியதால் நமக்கு லாபமா நஷ்டமா?”

“இலாபம்தான்!”

“அந்தஇயந்திரத்தை பழுது பார்த்து குறைந்தபட்சம் இயங்கச் செய்ய முடியுமா?”

“பழுது பார்க்க கேட்கும் பணம் அதிகம். பழுது பார்க்கப்பட்ட பின்னும் அந்த இயந்திரம் பழைய வீரியத்துடன் இயங்காது!”

“விற்று விடுவோம் என்கிறாய்!”

“ஆம்!”

“என்ன விலைக்கு விற்க முடியும்!”

“அந்த இயந்திரத்திலுள்ள குறைபாடுகளை சொல்லாமல் விற்றால் 26 இலட்சத்துக்கு விற்கலாம். சொல்லி விற்றால் வெறும் ஆறு லட்சத்துக்கு மட்டுமே விற்கலாம்!”

ரம்ஜான் முறுவலித்தார். “சரக்கின் நிறைகுறைகளைக் கூறிதான் விற்பனை செய்ய வேண்டும் என்று எங்கள் நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ளார் கிருஷ்ணன். நீ ஒன்று பண்ணு. தொழில் நுட்ப உதவியாளர்களை அழைத்து இயந்திரத்தை சோதித்து இயந்திரத்தின் அனைத்து குறைகளையும் பட்டியலிடு. யாரிடம் விற்பதனாலும் இயந்திரத்தின் குறைகள் பட்டியலை ஒரு நகல் கையளித்து விடு. இயந்திரத்தை வாங்கிய விலை-இயந்திரத்தின் எதிர்கால பயன்பாடு பற்றிய தகவல்களும் அந்த நகலில் இருக்கட்டும். ஆறு லட்சத்துக்கு போனாலும் சரி அறுபதாயிரத்துக்கு போனாலும் சரி சந்தோஷமே!”

மாயகிருஷ்ணன், “குறுக்கிட்டு பேசுவதற்கு மன்னிக்கவும். இயந்திரத்தின் நிறைகளை விற்கும் போது சொல்லலாம். குறைகளை நாம் ஏன் சொல்ல வேண்டும்? இயந்திரத்தை வாங்க வருபவர் இயந்திரத்தை இயக்கி ஆராய்ந்து பார்த்து நிறைகுறைகளை தெரிந்து கொள்ளட்டுமே. தொழிலில் மதத்தை ஏன் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் சார்?”

“கிருஷ்ணன்! எங்க மதத்தை பற்றி உனக்கு அதிகம் தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு முஸ்லிம் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும்-எப்படி தூங்க வேண்டும்-எப்படி குளிக்க வேண்டும்-எப்படி தாம்பத்யம் பண்ண வேண்டும்- எதை சாப்பிட வேண்டும் என்று குண்டூசியிலிருந்து கடப்பாரை வரையிலான அனைத்து விஷயங்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வலியுறுத்தியிருக்கிறது. செய்யும் வியாபாரத்தில் நேர்மையாக இரு என்கிறது எங்க மதம். மதத்தை விடு உன் மனசாட்சியை கேட்டுப்பார் அதுவும் கூறும்-சரக்கின் நிறைகுறைகளை கூறித்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று. நேர்மையாளனாக இருக்கவே தொழிலில் மதக் கொள்கைகளை பொருத்திப் பார்க்கிறேன்!”

“நானும் இந்த தொழிற்சாலையில் ஐந்து வருடங்களாக பணிபுரிகிறேன். உங்களின் வெளிப்படையான வியாபார பேச்சுகளால் குறைந்தபட்சம் 6.5கோடி நஷ்டம் அடைந்திருப்போம்!”

“கிடைக்கும் லாபமே எனக்கு போதும் கிருஷ்ணன்!”

“உங்க ஓல்டு ஸ்கூல் ஆஃப் தாட்ஸ் எனக்கு உடன்பாடில்லை!”

“என்னுடைய ஸ்கூல் ஆப் தாட்ஸ் எவர்கிரீன் ஸ்கூல் ஆப் தாட்ஸ் கிருஷ்ணன். முதலாளி பேராசை படாதபோது முதலாளிக்கு பேராசை ஊட்டாதே கிருஷ்ணன். எதை கொண்டு வந்தாய் நீ எதையும் கொண்டு போவதற்கு?”

“கீதாசாரம் சொல்கிறீர்கள்!”

“இம் பகவத்கீதை வாசித்திருக்கிறேன். எம்பிஏ மாணவர்களுக்கு கீதை மிகமிக உதவும். நீ பேச்சைக் குறை. நான் சொன்னபடி இயந்திரத்தின் குறைகளை ஓங்கி உரக்க அறிவித்து போகும் விலைக்கு விற்றுவிடு!”

“அப்படியே செய்கிறேன் சார்!”

“நான் நாளை காலை பிரான்ஸ் புறப்படுகிறேன். திரும்பி வர பதினைந்து நாட்களாகும். எதுவானாலும் என்னைத் தொடர்பு கொள். இப்போது நீ போகலாம்!”

“அல்லாஹ்!” என நெட்டுயிர்த்தார் ரம்ஜான்.

பதினைந்து நாட்களுக்குப்பின்-...

பிரான்ஸிலிருந்து திரும்பியிருந்த ஸயீத் ரம்ஜான் தேங்கியிருந்த பதினைந்து நாட்கள் பணியினை தொடர்ந்து இரண்டுமணி நேரம் செய்தார். பின் கிரீன் டீ பருகினார். உள் இணைப்பு தொலைபேசியில் மாயகிருஷ்ணனை வரச் சொன்னார்.

“குட்மார்னிங் சார்!”

“வணக்கம். அந்த பழுதுபட்ட இயந்திரத்தை விற்றாகி விட்டதா?”

கிருஷ்ணன் முகம் சூரியனித்தது. “விற்று விட்டேன்!”

“என்ன விலைக்கு விற்றாய் கிருஷ்ணன்?”

“முப்பது லட்ச ரூபாய்க்கு விற்று விட்டேன்”

ரௌத்திரமானார் ரம்ஜான் “யாரிடம் விற்றாய்?”

“நிக்கல்ஸன் குரூப்புக்கு!”

“இயந்திரத்திலுள்ள குறைபாடுகளை அவர்களிடம் கூறினாயா?”

“இல்லை!”

“ஏன்?”

“நிக்கல்ஸன் மிகமிக அனுபவம் வாய்ந்த கம்பெனி. இயந்திரத்தை விலைக்கு வாங்க வந்தோர் அவர்களாகவே இயந்திரத்தை இயக்கிப் பார்த்து திருப்தியுற்றனர். 35 லட்ச ரூபாய் கூறினேன் பேரம் பேசி முப்பது லட்ச ரூபாய்க்கு முடித்தேன். நீங்கள் என் மீது கோபப்பட காரணமில்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை...”

“நான் உனது பேச்சை ரசிக்கவில்லை. நான் வலியுறுத்திக் கூறியும் நீ விற்பனைப் பொருளின் நிறைகுறைகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நீ நடத்தியது வியாபாரமல்ல வழிப்பறி. நிக்கல்ஸனின் 30-6=24 லட்சத்தை திருடி விட்டோம்!”

நெற்றியில் கை வைத்துக் கொண்டார் மாயகிருஷ்ணன். “அட தேவுடா! நான் எங்குபோய் முட்டிக் கொள்வேன்?”

“பணம் கட்டிவிட்டார்களா?”

“கட்டி விட்டார்கள்!”

“இயந்திரத்தை எடுத்துச் சென்று விட்டார்களா?”

“எடுத்துச் சென்று விட்டார்கள்!”

“பரவாயில்லை... உடனே நிக்கல்ஸன் அண்ட் நிக்கல்ஸனை தொடர்பு கொண்டு அவர்களது வர்த்தக மேலாளரை இங்கு வரச்சொல் அவரிடம் நான் பேச வேண்டும்!”

அடுத்த அரைமணிநேரத்தில் வர்த்தக மேலாளர் வந்து சேர்ந்தார்.

“குட்மார்னிங் சார்!”

“வணக்கம் அமருங்கள்.. நீங்கள் எங்களிடம் வாங்கிய இயந்திரத்தின் குறைபாடுகளை உங்களிடம் சொல்லாமல் விற்று விட்டார் எங்கள் மாயகிருஷ்ணன். தவறுக்கு வருந்துகிறேன். இந்தாருங்கள் இயந்திரத்தின் குறைபாடுகள் பட்டியல்!”

வாங்கி வாசித்தார் வர்த்தக மேலாளர். பின் சிரித்தார். “இந்த குறைபாடுகளை எங்களது தொழில் நுட்ப பணியாளர்கள் நிவர்த்தி செய்து அந்த இயந்திரத்தை நேற்றே 38இலட்ச ரூபாய்க்கு விற்று விட்டோம். ஸோ. நீங்கள் எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் எங்களிடம் வாங்கியவர்களை ஏமாற்றவில்லை. வியாபாரம் வியாபாரமாகவே நடந்திருக்கிறது. நோ வழிப்பறி, நோ ஏமாற்றல்!”

“ஆயிரம் பேசினாலும் என் மனம் ஒப்பவில்லை. உங்களிடம் கூடுதலாய் வாங்கிய 24லட்சத்தை காசோலையாய் இப்போதே கொடுத்து விடுகிறேன். உங்கள் எம்டியிடம் கொடுத்து விடுங்கள்!”

“பிசினல் எதிக்ஸ் உங்களுக்கு மட்டும்தானா? முஸ்லிம்கள் மட்டும்தான் நியாயவாதிகளா? வி டூ ஹாவ் மாரல் ஃபியர். உங்களுக்கும் எங்களுக்கும் ஆன வியாபாரம் முடிந்து விட்டது. பண்டமாற்றும் நடந்துவிட்டது. நீங்க கொடுக்கும் 24 லட்சத்தை நாங்கள் வாங்கிக் கொள்ளமாட்டோம்!”

“உங்கள் முதலாளியை கேட்டுச் சொல்!”

கைபேசியை எடுத்து வர்த்தக மேலாளர் தனது எம்டியிடம் பேசினார். நடந்தததை விவரித்தார். அந்த எம்டி ரம்ஜானிடம் பேசினார். “ஸாரி சார். ரெப்ரசன்டேட்டிவ் இஸ் கரெக்ட்!... முடிந்த வர்த்தகத்தை மறுதணிக்கை செய்வதில்லை நாங்கள்... எனி ஹவ்... உங்களின் நல்லெண்ணத்தை நாங்கள் வெகுவாக சிலாகிக்கிறோம்!”

வர்த்தக மேலாளர் விடை பெற்றார்.

மாயகிருஷ்ணன் “இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் சார், நான் செய்தது வழிப்பறி அல்ல. நியாயமான வர்த்தகம்!”

“என்ன சொன்னாலும் எனது மனம் அமைதிப்படவில்லை கிருஷ்ணன்!”

“அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?”

“திருவல்லிக்கேணி ஜமாஅத்தாரை உடனே வரச் சொல்லு!”

“என்ன செய்யப் போகிறீர்கள்?”

“இந்த வியாபாரத்தில் கூடுதலாக கிடைத்த 24இலட்சரூபாய் எனக்கு உரியது அல்ல. அதனை திருவல்லிக்கேணி ஜமாஅத்தின் பைத்துல் மால் பண்டுக்கு டொனேட் பண்ணப் போகிறேன். 24லட்சரூபாய் ஏழை எளியவருக்கு பயன்படட்டும்!”

-முத்தவல்லியிடம் 24லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் ரம்ஜான்.

காசோலை கிடைத்த விபரத்தை ஜுஆம்மா தொழுகைக்கு பின் அறிவித்தார் முத்தவல்லி.

தொழுகையாளிகளில் ஒருவர் “கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க அந்த ரம்ஜான் பாய் ஒரு கதை சொல்லியிக்கிறார், அதையும் முத்தவல்லி நம்பிக்கிட்டு வந்து இங்க அறிவிக்கிறார். நேர்மையான ஒரு பணக்காரனையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்லை!” பக்கத்து தொழுகையாளியிடம் கிசுகிசுத்தார்.

பக்கத்துத் தொழுகையாளி தொடையில் தட்டிச் சிரித்து “ஆமாமா!” என ஒத்து ஊதினார்.