காட்சி 1:
திரையை விலக்கியவுடன் ஒல்லியாய் சாட்டை போல் ஒரு முதியவர் தலையில் மயிற்பீலியுடன் ஒரு பெண்மணிக்கு போதனை நடத்திவிட்டு புன்னகைத்துக் கொண்டே சென்றார். தலையில் கைவைத்து செய்வதறியாமல் அந்தப் பெண்மணி அமர்ந்தார். ஆர்ப்பாட்டமாய் ஒரு சோக இசை வாசிக்கப்பட்டது. அவர்கள் முறையே கிருஷ்ண பரமாத்மா, குந்தி என்று புரிந்தது.
மாநகராட்சி கலை அரங்கத்தில் நாடக விழா அரங்கேறிக் கொண்டிருந்தது. மகாபாரதக் கதை. ஐம்பது வருட அநுபவக் கிருஷ்ணர் என்றால், எப்படி இருக்கும்? கண்கள் ஒடுங்கி, முகமெல்லாம் சுருக்கம். பெரும்பாலும் வயதான நடிகர்கள். ஆனாலும், அவர்களின் நாடகத் தமிழ் நாற்காலிகளை நிரப்பிக் கொண்டிருந்தது.
அடுத்த காட்சி… மேடையில் வண்ண வெளிச்சம் சிதறடிக்க… கர்ணன் நுழைந்தார். கருத்த தேகம். சிறு தொப்பை. முன்வழுக்கை வரை இழுத்து அமைத்த கிரீடம். வயதை மறைக்க எதுவும் செய்யவில்லை. வேஷம் போட்டவரிடம் ஏதோ ஒரு வசீகரம். வாய் திறந்து பேச ஆரம்பித்த நொடியே வாய் பிளந்து பார்த்தார்கள். அவர் பாடப் பாட கர்ணனே இப்படித்தான் யதார்த்தமாய் உலவியிருப்பானோ என்று பட்டது. எத்தனை முறை பார்த்துக் களித்த கதை. தாடையில் முட்டுக் கொடுத்து சுவாரசியமாக இரசிக்கும்படிச் செய்து கொண்டிருந்தார்.
“அம்மா… அம்மா… இப்போது என் செவிக்கு மட்டும் கேட்கும்படியாவது, மைந்தனே என்று இயம்புவாயா? உன் முலைப்பால் அருந்தா மகவாக இருப்பினும், போரில் மடிந்தால், மடி மீது என் உடல் ஏந்தி, “கர்ணன் என் மூத்த மகன்… என் ஆசையில் பெற்ற மகன்… நான் ஆசையாய்ப் பெற்ற மகன்!” என்று உலகத்தோர் கன்னத்தில் அறையும்படி முழங்குவாயா… அம்மா?” என்று குந்தியின் கை பற்றி சத்தியம் வாங்கிக் கொண்டிருந்தார்.
துவண்டு போன யானையின் பிளிறல் போல கர்ணன் உகுத்த கண்ணீர், அந்த அரிதாரத்தையே அழ வைத்தது. திரை சோகமாய் தரையைத் தொட, கீழே கைதட்டல் சரசரவென்று பரவியது.
எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்த அடுத்த காட்சியிலேயே திடீரென பரபரவென்று வசனங்கள் குறைய, காலில் தேரைக் கட்டிக் கொண்டதைப்போல கதாபாத்திரங்கள் அங்குமிங்கும் ஓட, ஏனோ தானோவென்று நாடகம் சட்டென்று அடுத்த மூன்றே காட்சிகளில் முடிவுக்கு வந்தது. “இதென்னடா கூத்து?” என்று எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம்.
அரங்கில் நுழைந்த அமைச்சருக்காக அரங்க விளக்குகள் போடப்பட்டன. நாடக மேடையில் நாற்காலிகள் முற்றுகையிட்டன. நாடகக் குழுவினர் அழைக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, விழாப் பேச்சு ஆரம்பமானது.
காட்சி 2 :
இருட்டு. அரங்க வளாகத்தின் ஓரம். ஷாமியானாவின் உள்ளே… ஒப்பனை கலைத்துக் கொண்டிருந்த அந்தக் கர்ண வேஷக் கலைஞரிடம் ஒரு பெரியவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் சின்ன வயதுப் பேத்தி. “என்ன சார் அநியாயம்? கர்ணன் கதை தெரிஞ்சுக்கட்டும்னு கூட்டிட்டு வந்தேன். தலைக்கும் வாலுக்கும் நடுவுல உயிரே இல்லாம ஒரு ப்ளே! அஞ்சு ஆறு சீன்ல முடிச்சுட்டு ஓடறீங்களே?”
எந்த பதிலும் சொல்லாமல், அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று, அங்கே இருந்த சற்று விசாலமான பொதுக்கழிப்பிடத்தின் முகப்புப் பகுதியில் நின்று கொண்டார். இவர்களுக்கு இரு நாற்காலிகள் போட்டு உட்கார வைத்தார். தலையில் கிரீடம் இல்லை. கலைக்கப்பட்ட அரைகுறைச் சாயங்கள் தோய்ந்த முகம். துடைக்காத வியர்வை. ….ஆரம்பித்தார்.
அடுத்த இருபது நிமிடம் ஒரு நாடகம் நடந்தது, அங்கே. அதுதான், நிஜமான ‘கர்ண பிரதாபம்’. விவரிக்க முடியாத கலை ஆக்ரோஷம். விடுபட்ட காட்சிகளைத் தனி ஆளாக நடித்துக் காட்டினார். சண்டை போட்ட பெரியவர், காலில் விழப் போனார். பிறகு, பேத்தியை காலில் விழ வைத்தார். அந்தக் கலைஞரை ஆசிர்வதிக்கச் சொல்லிக் கெஞ்சினார்.
அவர்கள் போனபிறகு, எதுவும் நடக்காத தோரணையில் மீண்டும் ஷாமியானாவுக்குள் ஆடை கலைக்க நுழைந்த அவரிடம், (இந்தக் கர்ண மகாராஜாவுக்கு அறுபது வயதென்று யார் நம்புவார்கள்?) என்னை முறையாக அறிமுகம் செய்துகொண்டு, “உங்க கூட ஒரு photo எடுத்துக்கறேன்.” என்றேன். “ஏன் தம்பி, அதெல்லாம் வேண்டாம். நாம என்ன பிரபலங்களா? கூப்பிடறாங்க. வந்தோம். பண்றோம். திடீர்னு முடிக்கச் சொன்னாங்க… முடிக்கறோம். மூட்டை கட்டறோம்.” விரக்தியில்லாத நிஜம்.
அதன் பிறகு அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒப்பனை கலைத்த சக கலைஞர்கள் வேன் வரை சென்று விட்டார்கள். அந்தக் கலை விழாவில் கிடைத்த அழைப்பிற்காக, வெகுவெகு சொற்பத் தொகைக்காக, அதிகமான கதாபாத்திரங்களோடு, மெனக்கெடல் மிகுந்த தயாரிப்போடு ஆரம்பித்து, நாடக நடுவிலேயே அரசியல் பிரபலம் வந்துவிட்டதால், மொத்தக் காட்சிகளையும் சுருக்கி, ஆற்றாமையோடு முடித்துக்கொண்டு, அதே நாடகத்தை கழிப்பிடத்தின் அருகில், இரு பார்வையாளர்களுக்காக மூச்சு முட்ட நடித்துக் காட்டிவிட்டு, திருப்தியோடு கிளம்பிய தஞ்சை குழந்தை மாறன் என்கிற கர்ண பார்ட் கலைஞன், அன்றுதான் என் நண்பரானார்.
காட்சி 3:
குழந்தை மாறனுக்கு சின்ன வயதில் படிப்பும் ஏறியது. நடிப்பும் ஏறியது. அப்பா கூத்துப் பாட்டு எழுதும் திறம் வாய்ந்த குயவர். அவர் செய்யும் ஒவ்வொரு பானையும் ஒரு பாட்டோடு முடியும்.
அப்பா பாடிக் கேட்டு, அப்பாவுக்குத் தெரியாமல் கண்ணாடி முன்னால் நடித்துப் பார்த்து. ‘நான் நடிகன்’ என்று பத்து வயதிலேயே தீர்மானித்துக் கொண்ட சிறுவன், குழந்தை மாறன். கலை, சோறு போடுமா, குழம்பு ஊத்துமா? என்றெல்லாம் வயிற்றிடம் விசாரிக்காமல், முகத்தில் வண்ணம் பூச ஆரம்பித்துவிட்டான்.
அப்பாவுக்காகச் சட்டியும் பானையும் விற்கப் போகும் இடத்தில் விழா இருக்கிறதா, நாடகம் போடட்டுமா? காசு வேண்டாம். பார்க்க ஆட்கள் தயார் பண்ணுங்க. ஜமாய்ச்சுடுவோம்… என்று திரையைச் சுருட்டிக்கொண்டு ஒரு பெட்டியில் ப்ராபர்டிகளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றினான்.
முப்பது பக்கங்களை மனனம் செய்யப் பத்து நிமிடம் போதும். அப்படி ஆன முப்பதும் ஆயுசுக்கும் மறக்காது. (”கூரத்தாழ்வார் மாதிரி நீயும் ‘ஏக சந்த கிராஹிதான்பா குழந்தை!’ - ஒரு துறவி முதுகு தட்டினார்.)
நாடகத்திற்குக் கூட்டம் குறைவாக வரக் காரணமே, சினிமா தான் என்கிற கோபம் குழந்தை மாறனுக்கு உண்டு. அதிலும், அப்போது எல்லோரும் ஒருவரை ஆரவாரமாகப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். நாடக வாழ்க்கையில் சில பதக்கங்களை இருபது வயதுக்குள்ளாகவே வாங்கியிருந்த குழந்தை மாறனுக்கு அந்தப் பெயரைக் கேட்டாலே, ஒரு அசெளகரியமும் காரணமற்ற கோபமும் வந்துவிடும்.
அந்தப் பெயர்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
காட்சி 4:
திருமணத்திற்கு சொந்தத்தில் ஒரு பெண் இருந்தும், குழந்தை மாறன் ஒரு கூத்துக்காரன் என்பதால், “ஒரு வகைல மல்லிகா உனக்கு தங்கச்சி முறை ஆகுதுப்பா!” என்று மறுத்துவிட்டு, தெரிந்த உறவுக்கார குடிகாரனுக்கே கட்டிக் கொடுத்துவிட்டார்கள்.
அயலூரிலிருந்து நடிக்க வரும் பெண்களில் இரண்டு பேருக்கு ஒரு மயக்கம் இருந்தது, குழந்தை மேல். என்ன காரணமோ, ‘அதெல்லாம் நடிப்போட நிறுத்திக்கோங்க உரசலை!’ என்று தட்டிவிட்டான். பீடி, சிகரெட், வெற்றிலை, பாக்கு, சீவல் இத்யாதியெல்லாம் இல்லை. சிற்றின்பன் அல்லன் என்பதால் நாடகம் புக் செய்கிறவர்களுக்கு பெரிய பதற்றம் இருக்காது. டாண்… டாண்… என்று தன்னாலே நடக்கும். உடுப்பு மாட்டும் முன் ஒரு சொம்பில் சுக்கு காப்பி வேண்டும். அது போதும்.
ஸ்த்ரீ பார்ட் முதல் பிச்சைக்காரக் கிழவன் வரை மாறி மாறி எத்தனையோ வேஷம் போட்டதால் தன் நிஜ வயது என்னவென்றே தெரியாத மனநிலை வந்துவிட்டது. இனி, பெண் கேட்டுப் படையெடுக்கவா? நாடக வாய்ப்பு கேட்டு அலையவா?
நடக்கும்போது நடக்கட்டும் என்று விட்டபோது தான், வந்தாள் பிரேமா. கலைஞன் மணவாளன் ஆனான். “உன் கல்யாணத்துல உன்னோட நாடகம் இல்லாமலா?” நண்பர்கள் உசுப்பிவிட, சாந்தி முகூர்த்த நேரத்தில், வீட்டுக் கூடத்தில் எல்லா உறவுகளையும், ஊரையும் உட்காரவைத்து யாரும் தூங்க முடியாதபடிக்கு, கொட்டாவி கூட விட முடியாமல், அப்படி ஒரு பாட்டு நாடகம்.
‘எனக்குத் தாலி கட்டியவனா இப்படித் துள்ளிக் குதித்து, ஆடிப் பாடி… கண நேரத்தில் மாயாவி போல் சிரித்து, அரசத் தேரைத்தனி ஆளாகத் தூக்குவதுபோல் சிரம பாவனை செய்து…. அப்பாடி…. இந்த ஆள் சாமானியன் இல்லை. நான் கொடுத்து வைத்தவள் தான். கைத்தட்டு வாங்கற புருஷன்!’ என்று பீற்றிக் கொள்ள ஆரம்பித்தாள்.
குழந்தை மாறனுக்கு மேடைக்கு வெளியே கிடைத்த முதல் சந்தோஷம் பிரேமா.
குழந்தை மாறன் ஒருமுறை அல்ல பல முறை சொன்னது… “அட… நம்ம வீட்டுல என்ன இருக்குதோ இல்லையோ கெளம்பும்போதும், நொழையும்போதும், இருக்கும்போதும் நிம்மதி இருக்கும்.” எல்லா குழந்தை மாறன்களுக்கும் இப்படி பிரேமாக்கள் வாய்க்க வேண்டும்.
(பிரேமாக்கள் வாய்க்காதவர்களும், நாடகப் பிரேமையால் கல்யாணம் செய்ய மறந்த கலைஞர்களும் உண்டு. கலைகளையும், எளிய மனிதர்களையும் போற்றிய என் சிறிய தாத்தா ரா. லெ. நரசிம்மன், ஒரு இரவு அவசரமாக அழைத்து அறிமுகம் செய்து வைத்த பெரியவர் அருணகிரியும் அப்படிப்பட்டவரே.
மேடைகளில் வெற்றி முரசறைந்த ‘மயில் ராவணன்’ நாடகத்தைப் படைத்தது இந்த ஒடிசலான தேகமா? ‘நாடகப் பணி’ அருணகிரியின் இளமைத் தமிழும் கொத்து நரை மீசையும் அழகிய முரண்.
தனது தோள்பையில், தான் எழுதிய சரித்திர நாடகங்களைத் தான் பெற்ற வாரிசுகள் போல் திருவல்லிக்கேணி வீதிகளில் அணைத்துக் கொண்டே சுமந்து செல்வார். பலருக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்து, கவலைக்கெல்லாம் இடம் கொடுக்காமல் பறந்த கலைப் பட்சி!)
காட்சி 5:
குழந்தை மாறனின் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு நிறைய முகங்கள் உண்டு. அத்தனையும் குழந்தை மாறனின் முகங்கள். எழுதாத நாடகப் பாத்திரங்களைக் கூட கண்ணாடி முன்பாக நின்று, நடித்துப் பார்க்கும் பழக்கம் உண்டு.
ஆண்டபோது வெள்ளைக்காரன் கண்ணில் கூடப் பார்த்திராத எத்தனையோ சிறு கிராமங்களைக் கூட குழந்தை மாறனின்குரல் தொட்டு விட்டது. எந்த ஊருக்குப் போனாலும் அந்த நிலைக் கண்ணாடியும் துணியில் சுற்றப்பட்டு தகரப் பெட்டியில் பயணிக்கும். அரங்கேறும் முன் ஒரு முறை தன் பார்ட்டை தனியாகக் கண்ணாடியிடம் கொட்டிவிட்டுத் தான் ஆடை தரிப்பான். அந்தக் கண்ணாடி தான் குழந்தை மாறனின் முதல் பார்வையாளன்.
காட்சி 6:
திருநெல்வேலிப் பக்கம் ஏற்பாடு. ஒரு வாரம் தங்கி பத்து நாடகங்கள் போடும்படி ஒப்பந்தம்.
“எப்பவும் வம்சம், சபதம், போர், சூழ்ச்சி, வீர மரணம்னு எழுதிக்கிட்டேவா இருப்பீங்க… எல்லாந்தானே வாழ்க்கை. எல்லாத்தையும் எழுதுங்க. புதுசாப் போடுங்க!” என்று பிரேமா ஒரு தீ மூட்டிவிட, உள் அறையிலேயே உட்கார்ந்து மூன்றே நாட்களில் குழந்தை மாறன் எழுதி முடித்தான், காதல் சாறு சொட்டும்படியான நாடகம், ‘கிளி இளவரசி’.
ஊர்ப் பள்ளியில், இரண்டு நாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டபோது, “பாருங்கண்ணே…. இதான் போட்டு மொழக்கப் போவுது. ஹைலைட் ஆகும்ணே!” என்று நடிக்கும்போதே சக கலைஞர்கள் கொண்டாடினார்கள்.
திருநெல்வேலிக்குப் போய், அந்த கிராமத்தில் முந்தைய நாளே டேரா போட்டு, மேடை வாகு, கூட்டத்திற்கு எடுப்பாய் நிற்க வேண்டிய இடம் எல்லாம் சரி பார்த்ததும் குழந்தை மாறனுக்குப் பரம மகிழ்ச்சி.
கடைசி நாள் சிறப்பு நாடகமாக, ‘கிளி இளவரசி’ காதல் நாடகத்தைப் போட்டுக்கொள்ளலாம் என்று முடிவானது. காரணம், புதுநாடகம். அரங்கப் பொருட்கள், முக்கியமாக ஒரு பஞ்சவர்ணக் கிளி செய்ய வேண்டும்.
அதே கிராமத்தில் இதையெல்லாம் கைவினையாக அச்சு அசலாக செய்யத் தெரிந்த ஒரு இளைஞன் இருக்கிறானென்று கேள்விப்பட்டான் குழந்தை மாறன். வாங்கிய முன் பணத்தில் ஒரு தொகையை எடுத்துக்கொடுத்து விஷயத்தைச் சொன்னதும் அந்த இளைஞன் மலர்ந்து போனான். “சும்மா ஆசைக்காக எதையோ அட்டைல ஒடைச்சு, வளைச்சு, வெட்டி, கலர் தாள் ஒட்டிப் பண்ணுவேன். இப்போ உங்களுக்குப் பண்றது... என்னான்னு சொல்ல… ரொம்ப நன்றிய்யா. மூணு நாள் போதும். கதைநோட்டு இருந்தாக் கொடுங்க. படிச்சிட்டு லிஸ்ட் வெச்சுப் பண்ணிடுவேன்.”
கதையைப் புரிந்துகொள்ள ஏதுவாக, ‘கிளி இளவரசி’, அவன் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் நாடகம் திருநாள் மாதிரி போனது. செலவு செய்து புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடானது. பத்தாவது நாடகத்திற்கு, மறு ஒத்திகை பார்க்க வேண்டும். “பொருட்களாவது அப்புறம் தரட்டும். அந்தப் பையன்கிட்ட இருந்து டிராமா ஸ்கிரிப்ட் வாங்கிட்டு வந்திடுங்க!” என்று தன் ஆளை அனுப்பினான், குழந்தை மாறன். போன ஆள் மட்டும் தான் வந்தார். அவர் வியர்த்துப் போய் சொன்ன விஷயம்…
அந்தப் பையன் ஏற்கனவே காதல் வசப்பட்டு இருந்த பெண்ணோடு ஊரைவிட்டு ஓடிப் போய் விட்டானாம். இரண்டு நாட்களாக, ‘கிளி இளவரசி’யும் கையுமாக இருந்திருக்கிறான். நண்பர்களிடம் வசனமெல்லாம் பரவசப்பட்டு சொல்லிக் காட்டியிருக்கிறான். இப்போது வீட்டில் எங்கு தேடியும் அந்த ஸ்கிரிப்ட் இல்லை. அந்தப் பெண்ணோடு, ‘கிளி இளவரசி’யையும் தூக்கிக்கொண்டு ஓடியிருக்கிறான். கேள்விப்பட்ட குழந்தை மாறனுக்கு இதற்கு என்ன உணர்ச்சியை வெளிக்காட்டுவது என்றே தெரியவில்லை. திரும்பவும் நாடகம் எழுத எங்கே நேரம்? நினைவிலிருந்தே எடுத்து, வாயால் சொல்லிச் சொல்லி பயிற்சி கொடுத்து, கையில் ஸ்கிரிப்ட் இல்லாமல், ஓடிப்போன ‘கிளி இளவரசி’ அரங்கேறினாள்.
காட்சி 7:
தனது அப்பாவை நடிகனாக அல்லாமல் நாயகனாகப் பார்த்தாள், நீலவேணி. குழந்தையின் குழந்தை. புரிகிறதோ இல்லையோ அப்பா நடிக்கும்போது சத்தமே வராது. உற்றுப் பார்ப்பாள். அப்பாவின் சீன் முடிந்தால் சிணுங்க ஆரம்பித்துவிடுவாள். ஒத்திகை சமயங்களில் எல்லாக் கலைஞர்களின் மடியிலும் தாவித் தாவி விளையாடுவாள். கதையில் குழந்தை ரோல் வந்தால் சம்பளம் வாங்காமல் நடிப்பாள். (காட்சி வந்ததும் அவர்களாகவே கையில் தூக்கி வைத்துக்கொள்வார்கள்!)
குழந்தை மாறன் வெளி மாநிலத்திற்கு பத்து நாட்கள் சென்றிருந்த சமயம், பிரேமா மஞ்சள் காமாலை கண்டாள். வயதில் மூத்த உறவுகள், ஏதோ காரமான அசைவம், எண்ணெய் தலைக்குளியல் என்று முரட்டு வைத்தியம் செய்யப்போய், ஜன்னியில் படுத்த இரவே இறந்துபோனாள். வந்து சேர்ந்த குழந்தை மாறன் நீலவேணிக்குட்டியை அணைத்துக் கொண்டு அழுத அழுகையில், ஊரே உறைந்து போனது. ‘அம்மாடி… அம்மாடி…’ என்று கன்னத்தை வருடி வருடிக் கொஞ்சினான். பிரேமாவை எரிக்கும்போதுகூட ஏதோ பாடிக்கொண்டே எரித்தான்.
“பிரேமா காட்டுன வழில தான போய்க்கிட்டிருந்தேன்... பிரேமாவே போனப்புறம் என்ன செய்வேன்?” - கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தன் நாடகக் குழுவினரைக் கூடச் சந்திக்காமல், குழந்தை நீலவேணியோடு, இராமேஸ்வரம், கன்னியாகுமரி என்று கடல் இருக்கும் ஊர்களுக்கு திடீர் பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் வந்தான்.
இனிக்க இனிக்க எவ்வளவு நடந்தாலும் உப்புக் கரிக்கிற கண்ணீர் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு என்றுஉணர்ந்துகொண்ட விதமாய், ஊர் திரும்பிய அந்த இரவு தான் எழுதினான், ‘கர்ண பிரதாபம்’. வீரத்துக்கு வீரம்… கொடைக்குகொடை… அழுகைக்கு அழுகை… அமரத்துவ குணம்.
பார்த்தவர்கள் எல்லோரும் கர்ணனாக மேடை ஏறும் குந்தை மாறனை இறக்க விடாமல் அழுவார்கள். (நானூறு முறை மேடை கண்டு, பெரும் வரவேற்பைப் பெற்ற அப்படிப்பட்ட நாடகத்தைத் தான் அந்தப் பெரியவர் திட்டி, பிறகு மனம் கலங்கி, காலில் விழப்போனார்.)
காட்சி 8:
அந்த நாடக இரவுச் சந்திப்பிற்குப் பிறகு, குழந்தை மாறன் அடிக்கடி விடுத்த அன்பு அழைப்பை மறுக்கப் பிடிக்காமல், தஞ்சை கிராமத்திற்கே போய்ப் பார்த்தேன்.
அறுபத்து இரண்டு வயது தொட்ட குழந்தை மாறனுக்கு கைபேசியைக் கையாளத் தெரியவில்லை. மகள் சொல்லிக் கொடுத்தும் வரவில்லை. அந்தக் கைபேசி, ஒரு வயதுப் பேத்தி உருட்டி விளையாட, வாயில் வைத்து எச்சில் வடிக்கப் பயன்பட்டது. அழ ஆரம்பித்த பாப்பாவை நீலவேணியின் கணவர் வந்து தூக்கிக்கொண்டு போனார்.
“ஷீல்ட், பதக்கம் எல்லாம் வெச்சிருப்பீங்களே…” என்றேன், ஆர்வத்தில். எந்த நாடகத்திலும் செய்யாத ஒரு சிரிப்பை உதிர்த்தார். கவனித்தேன். அவரது அறையின் சுவற்றில் நிலைக்காண்ணாடிக்குப் பக்கத்தில் இரண்டே புகைப்படங்கள் தான் இருந்தன. ஒன்று பிரேமா. இன்னொன்று… நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
“சின்ன வயசுல அப்படியொரு கோவம் இவர் மேல. நம்மள மாதிரியெல்லாம் நடிக்க முடியுமா இவரால! எல்லாம் சினிமா மோகத்துல தூக்கி வைக்கறாங்கன்னு ஒரு எரிச்சல். அந்த ஆளுமாதிரி நடிக்கறய்யான்னு என்னைச் சொல்லிடுவாங்களோன்னு தான் அவரு படத்தையே பார்க்காம விரதம் மாதிரி இருந்தேன்.
ஒரு நாள் பிரேமா தான், “அப்படி என்னய்யா ரோஷம்.. பார்த்துப் பழகாத ஆள் மேல?”ன்னு இவரோட படத்துக்குக் கூட்டிட்டுப்போச்சு.
தியேட்டருல லைட்ட அணைச்சு, திரைல வெளிச்சம் வந்து ஒரு அஞ்சு நிமிஷம் ஆச்சு… இவரு வந்தாரு… யப்பா… நிக்கறதும், நடக்கறதும், அந்தக் கண்ணுல என்னென்னமோ உணர்ச்சியெல்லாம் கொட்டுது…. தோள்பட்டைலயே ஒரு அசைவு… குரலா அது…. குழந்தை மாறா… இந்த மனுஷனையா பொறாமை பிடிச்சுப் பார்க்காம இருந்தே…. அச்சோ… ஒக்கார முடியாம, உடம்பெல்லாம் வேர்த்து…. பிரேமாவோட கையப் புடிச்சு அழுத்தி…. ஜூரமே வந்திருச்சு.
தம்பி! இவரு சினிமா நடிகரெல்லாம் இல்ல… யோகிய்யா… யோகி!
சின்ன வயசுல இந்த வீடு முழுக்க நான் வேஷம் போட்ட படமாத் தான் தொங்கும். அன்னைக்கு ராத்திரியே எல்லாத்தையும் பரண்ல ஏத்திட்டேன். அடுத்த நாளே யோகி அய்யா படத்தை மாட்டினேன். மனசு கொஞ்சம் சமாதானமாச்சு.”
குழந்தை மாறனின் வீட்டுச் சுவரில், சின்ன ஃப்ரேமுக்குள் பிரம்மாண்டமாய் சிவாஜி கணேசன் என்கிற யோகி இடம் பிடித்திருந்தார்.
காட்சி 9:
அந்த வீட்டுச் சந்திப்பிற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் படப்பிடிப்புக்கு நடுவே ஒரு எண்ணம் வந்தது. வயது முதிர்ந்த, அநுபவமிக்க ஒரு சிறந்த நாடகக் கலைஞனை ஒலிப்பதிவுக் கூடத்திற்கு அழைத்து வந்து, ஆடை, அலங்காரம், ஒப்பனையின்றி, அப்படியே முழு நாடகத்தையும் பேச வைத்து, பாட வைத்து, உணர்ச்சிகரத் தனி ஆவர்த்தனமாய், ‘ஒரு குரல் நாடகம்’ பாணியில் பதிவு செய்தாலென்ன என்று தோன்றியது. சொன்ன மாத்திரத்தில் இசையமைப்பாளரும் உற்சாகமானார். அவருக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிப்பதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்த சிலரில், எனது விருப்பம், குழந்தை மாறன்…
கேட்டுவிடலாம். அழைத்தேன். கைபேசி ஒலித்துக்கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை நீலவேணியின் குரல் எடுத்தது. அறிமுகம் செய்து கொண்டு ஞாபகம் ஊட்டினேன்.
“ஆங்… தெரியுது. ஒரு முறை வந்தீங்களேண்ணா… ” என்றாள்.
விஷயத்தைச் சொன்னேன்.
“எப்போ வசதிப்படுமோ, இந்த வாரத்துக்குள்ள அப்பாவை அனுப்பி வைக்க முடியுமா? மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றேன்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த நீல வேணி,
“இல்லண்ணா… அப்பா நடிக்கறதை நிறுத்திட்டாரு…” என்றாள்.
ஏன்? ஒரு வருத்தம் எழுந்தாலும், அதற்கு மேல் வற்புறுத்த விருப்பமில்லை. முடியும்போது தஞ்சைப் பக்கம் வருகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டேன். நேரில் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை. அந்த ஒலிப்பதிவு முயற்சியும் வேறொரு விஷயமாக மாறி விட்டது.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தை மாறன் குழுவிலிருந்த ஒரு நடிகரைச் சந்திக்க நேர்ந்தது.
“அய்யா நல்லா இருக்காருல்ல…?” என்று விசாரித்ததும்,
“தெரியாதா… ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஆசான் தவறிட்டாரே….” என்று அதிர்ச்சிப் படுத்தினார்.
“ரெண்டு வருஷமாச்சா?” நம்ப முடியாமல் மீண்டும் விசாரித்தேன்.
இருக்கிறார் என்றே ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறோமே… அவர் இல்லையா இத்தனை வருடங்களாக? இனி, ‘கர்ண பிரதாபம்’ குழந்தை மாறனின் குரலில் ஒலிக்காதா?
சமீபத்தில் அழைப்பு விடுத்தபோது கூட நீலவேணி இதைச் சொல்லவில்லையே…
நீலவேணி சொன்னதும் சரிதான்…. “அப்பா… நடிக்கறதை நிறுத்திட்டாரு!” எத்தனை நயமான பதில். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!
கால மேடையில் நான் சந்தித்த அந்தக் கலைஞன்…. சாகவில்லை தான்!
குழந்தை மாறனின் ஞாபகார்த்தமாக பத்திரப் படுத்தவேண்டிய.......
Leave a comment
Upload