தொடர்கள்
டேஞ்சர் தேசம் - 62 - சுதாங்கன்

20200401161237364.jpg

“பாகிஸ்தான் என்கிற தனி நாடு திட்டத்தை ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிற மாகாணங்களில் அவர்களது பாதுகாபு, செய்திப் போக்குவரத்து, அயல்நாட்டு விவகாரங்களைக் கவனித்தல் ஆகியவை. மத்திய சர்க்காரிடமே இருத்தல் வேண்டும்” என்பது இந்த கமிஷனின் சிபாரிசு.

பாகிஸ்தான் உருவாவதற்கு இது ஒரு முதற்படி என்றெண்ணிய முஸ்லீம் லீக் முதலில் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டது. பிறகு என்ன காரணத்தையோ கூறி ஒப்புதலை வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆகவே, முஸ்லீம் லீக் பிரதிநிதித்துவம் இல்லாமலே வைஸ்ராய் கவுன்சில் அமைக்கப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.


காங்கிரஸ் இயக்கத்திற்கு இது ஒரு வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் முஸ்லிம் லீகின் ஆத்திரத்தைக் கிளறிவிடவும் இது காரணமாயிற்று. “இந்தியாவில் ஒரு ‘ஜாதி இந்துக்கள் ஆட்சியை, உருவாக்க பிரிட்டன் முயற்சிக்கிறது’ என்று ஜின்னா குற்றம் சாட்டினார். அந்த ஆத்திரத்தின் விளைவாக ஏற்பட்டதுதான் ‘நேரடி நடவடிக்கை’ என்கிற அவலம்.

நேரடி நடவடிக்கை என்பது என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்களும் அதற்கு பகிரங்க விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. பல இடங்களில் இந்த நேரடி நடவடிக்கை தினம் கோஷம் போட்டு கோரிக்கைகளைத் தெரிவிக்கும் ஊர்வலங்களாகவே இருந்தது. சென்னையிலும் ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது. சவ ஊர்வலம் போல் முன்னால் ஒரு காலி சவப்பெட்டியின் மேலே பெரிய படுதாவைப் போர்த்தி நாலுபேர் தூக்கிச் சென்றார்கள். சவப்பெட்டியின் இருபுறமும் தொங்கும் அந்தப் படுதாவில் அபுல்கலாம் ஆசாத் என்று எழுதப்பட்டிருந்தது. மெளலானா அபுல்கலாம் ஆசாத் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். என்ன காரணத்தினாலோ அவர் மீது கோபம் கொண்டிருந்த முஸ்லீம்லீக், தங்களது ஆத்திரத்தை இப்படி சவ ஊர்வலம் நடத்தி வெளியிட்டனர்.

ஆனால், கல்கத்தாவில்? அது முஸ்லீம் லீக் குறிப்பாக ஜின்னா திட்டமிட்டுச் செய்த மகாபாதகம்.

1942 தான் பிரிட்டிஷார் கடைசி முறையாக காந்திஜியை சிறையிட்ட ஆண்டு. இதனுடன் சேர்ந்து 2338 தினங்களை அவர் சிறைச்சாலைகளில் கழித்திருக்கிறார். இதில் 249 நாட்கள் அவர் தென் ஆபிரிக்காவில் சிறையில் இருந்த நாட்கள்.

காந்திஜிக்கு மிகவும் பழக்கமான சிறைச்சாலை எரவாடா சிறைச்சாலைதான். ஆனால், இம்முறை அவர் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு சிறை வைக்கப்பட்ட ஐந்து மாதங்கள் கழித்து, பல காரணங்களுக்காக 21 நாட்களுக்கு தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்தார்.

உண்ணாவிரதம் இருந்த பத்தாவது தினத்திலிருந்தே, காந்திஜியின் உடல்நிலை வெகுவாக மோசமடைய ஆரம்பித்தது. அனேகமாக இம்முறை அவர் பிழைத்திருக்க மாட்டார் என்றே தோன்றியது. எதையும் விட்டுக்கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றும் மனநிலையில் இல்லாமலிருந்த பிரிட்டிஷ் அரசு, அவரது மரணத்திற்குப் பின் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளுக்கும் கூட திட்டம் போட்டு, தயார் நிலையில் இருந்தது. அவரது உடலை இந்து முறைப்படி தகனம் செய்ய இரண்டு பிராமணர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இருட்டும் நேரத்தில் தகனத்திற்கு உபயோகிக்க சந்தனக் கட்டைகளும் மற்ற சாமக் கிரியைகளும் கொண்டு வரப்பட்டன. காந்திஜி உயிர் விடும் நேரத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தார்கள்.

காந்திஜி அவர்களை ஏமாற்றிவிட்டார். தாமே விதித்துக்கொண்ட அந்தத் துன்பமயமான வேதனையிலிருந்து அவர் வெற்றிகரமாகவே மீண்டார். ஆனால் அவருக்காக சேமிக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் முதலிய சாமக்கிரியை பொருட்கள் காந்திஜிக்கு மிகவும் நெருங்கிய ஒருவரது உடல் தகனம் செய்யப்படுவதற்குப் பயன்பட்டன.

காந்திஜியின் மனைவியான கஸ்தூரிபாய் காந்தி ‘பிராங்க்கைடிஸ்’ என்கிற வியாதியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இயற்கை வைத்தியத்தில் தளராத நம்பிக்கை கொண்டிருந்த காந்திஜி என்னென்னவோ சிகிச்சை செய்து பார்த்தார். அதனால் பயனில்லை. இதை அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், அப்போது கிடைப்பதற்கு அரிதாக இருந்த அதற்கான மருந்தை விமானம் மூலம் தருவித்து உடனே அதை ஆகாகான் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அது ஊசி மூலம் செலுத்தப்படும் ஒரு மருந்து. ஊசி போடுவது மனித உடலின் மீது செலுத்தப்படும் ஒரு கொடுமையான ஆக்ரமிப்பு என்கிற கருத்தைக் கொண்டிருந்த காந்திஜி அந்த மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சரிப்படுத்த முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த கஸ்தூரிபாய், காந்திஜியின் மடியில் தலைவைத்தவாறு மரணமடைந்தார். கணவருக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் மனைவியின் சடலத்தை தகனம் செய்யப் பயன்படுத்தப்பட்டது.

கஸ்தூரிபாயின் மரணத்திற்குபின் காந்திஜியின் உடல்நில மேலும் நலிவுற்றது. மலேரியா, சீதபேதி ஆகிய வியாதிகளால் அவர் மிகவும் துன்பப்பட்டார்.


வெள்ளையர்கள் அனுப்பிவைத்த மருந்தைத் தமது மனைவிக்குக் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர் பிழைத்திருக்கலாம். அதை உபயோகிக்க விடாமல் தடுத்தது சரியா என்கிற வேதனையும், அதனால் மனைவி மரணமடைந்ததும் அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். காந்திஜி மேலும் உடல் நலம் குன்றி இம்முறை அவர் மீளமாட்டார் என்றே அனைவரும் நினைத்தார்கள்.

‘காந்தி ஏன் இன்னும் சாகவில்லை?’ என்று கேட்டு ஒற்றை வரி தந்தி அனுப்பினார் கர்வம் பிடித்த வின்ஸ்ட்டன் சர்ச்சில்.

காந்திஜியின் மோசமான உடல்நிலை காரணமாக அவர் உடனே விடுதலை செய்யப்படவேண்டும் என்று பல தரப்பிலும் எழுந்த கோரிக்கைகள் காரணமாகவும், ‘காந்தி எப்படியும் விரைவில் சாகத்தானே போகிறார். எதற்காக சிறையில் மாண்டார் என்கிற அபவாதத்தை ஏற்றுக்கொள்வது? அவர் வெளியில் சென்று சுதந்திர புருஷனாகவே உயிர் துறக்கட்டும்’ என்று முடிவு செய்த சர்ச்சில், காந்திஜியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

விசித்திரமான குணங்களும், முற்றிலும் மாறுபட்ட இயல்புகளும் உடைய ஏராளமான அந்நியர்களின் படையெடுப்புக்கு உள்ளான நாடு இது. பழச் சோலையை நாடி பறவைகள் வருவது போன்று பல இனத்தவர் இங்கு வந்தார்கள்.

(தொடரும்)