பொது
“தனித்திருக்கும் தர்மயுத்தம்...” - பொன் ஐஸ்வர்யா

20200401160236911.jpg

“தனித்திரு... வீட்டிலிரு...” என்பது இன்றைய தேதியில், எல்லோராலும் ஓதப்படும் வேதம். எல்லா ஊடகங்களிலும் பெரும்பகுதியாய் காணப்படும் பொது வாசகம் - புதிய திருவாசகம்.


யுகம் யுகமாய் மனித குலம் பாதுகாத்து வந்த கூடி வாழும் கொள்கையை ஒரே இரவில் ஈவு இரக்கம் இல்லாமல் மறுதலிக்க வேண்டிய மாபெரும் துர்ரதிஷ்டம். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று கட்டளையிட்ட ஔவையாரையும், “கூடிவிளையாடு பாப்பா” எனறு பாடிய பாரதியாரையும் செய்வதறியாது ஒதுங்கி நிற்கச் செய்து விட்டோம்.


“தனித்திருக்கச் செய்தல்” என்பது குற்றவியல் தண்டனை முறை. என்ன குற்றத்திற்காக ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்த முரட்டுத் தண்டனை..?


மீண்டும் யாராவது பாற்கடலைக் கடைந்து ஆலகாலத்தை கையில் அள்ளி விட்டார்களா அள்ளிய விஷம் கைமாறிக்கொண்டே இருப்பதால்தான் எல்லோரும் கைகழுவி மாய்கிறோமா?.. ஏற்கனவே விடமுண்ட நீலகண்ட பெருமான் இதையும் விழுங்கி நம்மைக் காத்தருள உடனுறை பார்வதி தேவியாரின் அனுமதி கிடைத்திடுமா..?


வந்திருக்கும் வைரஸே, நீ என்ன வகை வித்து? விதைத்த நொடியில் விருட்சமாய் வளர்கிற வித்தை தெரிந்திருக்கிறாய்..! நீ உன்னை லட்சக்கணக்கில் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள உனக்கு நாங்கள் நடமாடும் நகலகமா..?


எங்கும் நிறைந்திருக்கிறாயே..! நீ என்ன எலக்ட்ரோ மேக்னட்டிக் வேவா.. இல்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த க்வாண்டம் துகள்களின் ஒன்று விட்ட சகோதரனா.. யார் நீ.. எங்கு வந்தாய்..?


மனித உடம்பில் மர்மாய் ஊடுருவி... உரமில்லாமல் வளரும் ராட்சச புல்லுருவியே.. பெயர் தெரியாத பேரிடரே.. நீ வந்த நோக்கம்தான் என்ன..?

நாங்கள் செவ்வாயைத் தாண்டி வெவ்வேறு கிரகங்களுக்கு சேட்டிலைட் விட்டதால் சீற்றம் கொண்டாயோ..?


எங்கள் ஏவுகணைகளை வேவு பார்க்க வந்த வேற்று கிரகவாசியா..? வந்த வேலை முடிந்ததென்றால் விரைந்து நீ வெளியேற மாட்டாயா? இன்னும் எதைத் தேடி மொத்த பூமியையும் புரட்டிப் போடுகிறாய்..?


தீண்டாமை எனும் கொடிய அரக்கனை சென்ற நூற்றாண்டில் நாங்கள் கொன்று புதைத்து விட்டோம். இன்று சந்தடி சாக்கில் உன் காலடி நிழலில் அத்தீயவனின் பிம்பத்தை தெரிய வைத்து விட்டாயே..!


ஆனானப்பட்ட ஜாம்பவான்களால் கூட மூட முடியாத, “டாஸ்மாக்”கின் பலம் வாய்ந்த பெருங்கதவுகள், உன் வரவு கண்டு தானாய் மூடிக் கொண்டதே..! நீ என்ன தேவாரம் பாடிய எங்கள் சம்பந்தரிடம் ஏவல் செய்த காவலாளியா..?


முதலாளித்துவத்தை முன்னிருத்தி வளர்ந்து நின்ற வல்லரசுக்கும், ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடில்லாத சோசலிசத்தை சொல்லிக் கொடுக்க வந்த சுயம்பு வாத்தியாரா..!


பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் பக்கம் நின்று தர்மத்தைக் காத்த கிருஷ்ண பரமாத்மா போன்று, எங்களால் துன்பமுற்ற இயற்கையின் பஞ்ச பூதங்களும் உன்னைத் துணைக்கு அழைத்து வந்து மீண்டும் ஒரு தர்மயத்தம் நடத்துகின்றனவா..?


கலியுகத்தை முடிக்க வந்த காலப் புருஷனா.. சத்ய யுகம் தொடங்கி வைக்கும் முன் நடத்தும் சம்ஹாரப் படலமா.. என்ன இது..?


அணுவைத் துளைத்து உலகை அழிக்கும் குண்டுகளை கையில் ஏந்தி குறிபார்த்து நின்றது என்னவோ எங்கள் குற்றம்தான். அதற்காக மிரட்டி விட்டாய். போதும் போ, திருந்திக் கொள்கிறோம். அடியோடு எங்களை அழித்து விட்டால் நாங்கள் எழுவது எப்படி?


கண்ணுக்குத் தெரியாத கலியுக அரக்கனே.! நான் என்னும் தலை கனத்தை நார் நாராய் கிழித்தெரியும் நரசிம்ம மூர்த்தியே..! தூணிலும் இருப்பாய்.. துரும்பிலும் இருப்பாய்.. என்பதை நன்றாக புரிந்து கொண்டோம். எம்மை மன்னித்து விட்டு விடு. உறவுகளின் மகிமை உணர்த்த வந்த அசுர தூதனே.. உண்மை உணர்ந்து விட்டோம். உடனேத் திரும்பிப் போ!

எங்கள் அகந்தை அழிந்ததையா.. அரூப வாமனனே! உன் விஸ்வ ரூபம் போதுமய்யா.. வேண்டாம் இனி பாடங்கள்... மானுடம் திருந்தியது. மறுபடியும் வந்திடாதே. இங்கு ஏழைகள் வாழ வேண்டும். எங்கள் பிள்ளைகள் பிழைக்க வேண்டும். வாழ்வாதாரம் நிலைக்க எம் வாகனங்கள் இயங்க வேண்டும். வாழ்வுக்கும் சாவிற்கும் நாங்கள் வரிசை கட்டி தள்ளித் தள்ளி நின்றது போதுமய்யா..!


முகம்மூடி வாய்பொத்தி கைகட்டி எமை நடுங்க வைக்கும் நாசக்கார கொள்ளை நோயே.. எங்கள் காவல் தெய்வம் கருப்பசாமி தெரிந்து வந்து வீச்சருவாள் எடுத்து உன்னை வெட்டிச் சாய்ப்பதற்குள், ஊரை விட்டு ஓடி விடு..!