கோவில்பட்டி கடலைமிட்டாய் - நினைத்தாலே நாக்கில் எச்சில் சுரக்கும் அளவிற்கு பிரபலமானது! தமிழகத்தில் தயாரிக்கப்படும் காஞ்சி பட்டு, கொடைக்கானல் மலைபூண்டு, ஈரோடு மஞ்சள், பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் என 33 பொருட்களூக்கு புவி சார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இருந்து கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு 34-வது பொருளாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அப்படி என்ன தான் இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மவுசு என்று கேட்டபோது... மிட்டாய் தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் சொன்ன தகவல்… “கோவில்பட்டியில் கிட்டதட்ட 150-க்கும் மேற்பட்ட கடலைமிட்டாய் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் மிகுந்த சுவையும் தரமும் இருப்பதால், நாடு முழவதும் விற்பனைக்கு சென்று கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சுற்றியுள்ள விளாத்திக்குளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதியில் விளைநிலங்களில் இருக்கும் மண் கருப்பு நிறத்தில் இருப்பதால் இங்கு வேர்கடலை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் நவதானியங்கள் பயிரடப்படுகிறது. மழை பெய்யும் காலங்களில் நெல் பயிரிடுவதற்கு பதில் கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வேர்கடலையை பயிரிடுகின்றனர். கருப்பு மண்ணில் விளையும் வேர்கடலை மிகுந்த ருசியுடன், அதிக தரத்தில் இருக்கும். கோவில்பட்டிக்கு அருகில் தரமான மண்டைவெல்லம் கிடைக்கிறது. வெல்லத்துடன் தாமிரபரணி ஆற்று நீரை கலந்து முதலில் வெல்லப்பாகு தயாரிக்கப்படுகிறது. வெல்லப்பாகு தயாரிக்கும் போது, முதலில் வரும் ஜிகுடு போன்ற மண்டி அழுக்கு பொருளை அகற்றி விடுகிறார்கள். காய்ச்சிய வெல்லப்பாகை சிறிது நேரம் ஆறவைத்து, அதன் பின் மீண்டும் வெல்லப் பாகை வாணலியில் அடிபிடிக்காமல் முறுக்கேறிய நிலையில் காய்ச்சி, தெளிந்த நிலையில் எடுத்துக் கொண்டு ஏற்கனவே வறுத்த நிலையில் தயாராக வைத்திருக்கும் வேர்கடலையை அதில் போட்டு கிளறிவிடுகிறார்கள்.
சூடாக இருக்கும் வெல்லப்பாகு கடலைமிட்டாய் கலவையினை அருகில் இருக்கும் மர அச்சின் மீது கொட்டி இரும்பு உருளையால் சமமாக உருட்டுகின்றனர். அடுத்து, ஏலக்காய் மற்றும் கற்கண்டு நன்றாக பொடித்து தூளாக்கப்பட்டு கடலைமிட்டாய் கலவை மீது தூவியதும் பூ மாதிரி இருக்கும் தேங்காய் துருவலையும் கொஞ்சம் தூவிவிடுகின்றனர். அடுத்த ஐந்து நிமிடங்களில் கடலை மிட்டாய் தேவையான வடிவங்களிலும் உதிரியாகவும் பேக் செய்யப்படுகிறது. கடலைமிட்டாயை சூடாக சாப்பிட, கோவில்பட்டியில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அதன் சுவையே சுவை” என சப்புக் கொட்டி முடித்தார் நண்பர்.
“கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு (GI Tag) 2014ம் வருடம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மூலம் விண்ணபிக்கப்பட்டு, சென்ற வருடம் கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலசங்கம் மறுசீரமைப்பு செய்து மனுவினை தாக்கல் செய்ததால், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு முயற்சியில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இப்போது கோவில்பட்டியில் 3000 தொழிலாளர்கள் கடலைமிட்டாய் தயாரிப்பு பணியில் இருக்கிறார்கள். கோவில்பட்டி கடலைமிட்டாய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது இன்னும் நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் கிலோ ரூ150க்கு விற்கப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கோவில்பட்டி கடலைமிட்டாய் உலகப் புகழ் பெற்றது” என்கிறார் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர் சங்க துணைதலைவர் வி.வி.ஆர்.ராமசந்திரன்.
அடுத்த தடவை கோவில்பட்டிக்கு செல்பவர்கள் சூடான கடலைமிட்டாய் வாங்கி சாப்பிட்டுவிட்டு வாருங்கள்! என்னதான் அடைத்து வைத்த பாக்கெட்டே உங்களது திருவாய்களை ஹிப்போபோடமஸ் மாதிரி வாய் பிளக்க வைத்து மயக்கினாலும் அப்போபோடமஸ் என்பது ஒரு தனி ருசிதான்!!
Leave a comment
Upload