கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து நடைபெற்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த நவம்பர் 28-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் இதுவரை எம்எல்ஏவாகவோ, எம்எல்சியாகவோ தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அரசியல் சாசனப்படி, ஒருவர் மாநில முதல்வராக நீடிக்க வேண்டுமெனில், அவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ அல்லது எம்எல்சியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அதன்படி, வரும் 27-ம் தேதிக்குள் முதல்வர் உத்தவ் தாக்கரே எம்எல்ஏ அல்லது எம்எல்சியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி நீடிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாக உள்ள 9 எம்எல்சி இடங்களுக்கு கடந்த 24-ம் தேதி தேர்தல் நடக்கவிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததால், அத்தேர்தல் வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி மும்பையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மாநில கவர்னருக்கான 2 எம்எல்சி சீட் ஒதுக்கீட்டில், ஒரு இடத்தில் உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் கோஷ்யாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்றுவரை எந்தவொரு முடிவையும் தெரிவிக்காமல் கவர்னர் மவுனம் காத்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் சில அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து, உத்தவ் தாக்கரேவை எம்எல்சியாக நியமிக்க வலியுறுத்தினர். எனினும், அவர்களிடம் கவர்னர் எவ்வித உத்தரவாதமும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன், கவர்னரிடம் மீண்டும் உத்தவ் தாக்கரேவை எம்எல்சியாக நியமிக்க அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மேலும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்காவிட்டால், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிடும் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து அம்மாநில சிவசேனா வட்டாரங்கள் கூறுகையில்... ‘கடந்த 29-ம் தேதி பிரதமர் மோடியிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேசியுள்ளார். இப்பிரச்னையில் பிரதமர் தலையிடுமாறு உத்தவ் கேட்டுக்கொண்டார். மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில், இங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். உத்தவ் தாக்கரேவை எம்எல்சியாக நியமிக்க, மாநில கவர்னரிடம் ஒரு தூது குழு பேசி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சரவையின் முடிவு சட்டப்படி செல்லும். அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வது கடமை. அவர் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்’ என கூறுகின்றனர்.
Leave a comment
Upload