" 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்... நீங்கள், சென்னை பல்கலைக்கழகம் போய் ஏற்பாடுகள் எல்லாம் எப்படி நடக்கிறது என்று பாருங்கள்' என்று என்னிடம் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய என்று ஓ.பி.எஸ் என்னிடம் வந்து கேட்டார். என்ன பண்ணலாம் சார் என்றார். நான் நாகரிகம் கருதி எல்லவற்றையும் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் எல்லாம் ஆம்பளையா இல்லையான்னு எனக்கு தெரியலை. நீங்க போய் அந்த அம்மா சமாதியில் உட்காருங்க... ஏதாவது வழி பிறக்கும்!" என்றேன். - துக்ளக் பொன் விழா சிறப்புக்கூட்ட வரிசையில், இரண்டாவதாக திருச்சியில் நடந்த விழாவில், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமுர்த்தி உதிர்த்த முத்து இது.
அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், இன்றைய துணை முதல்வர், இரண்டு முறை முதல்வராக இருந்த ஒ.பன்னிர்செல்வத்தை அவர் ஆம்பிளையா என்று அன்று கேட்டார் என கேட்டதும்... ஓ.பி.எஸ். - எடப்பாடி இருவரை தவிர, அதிமுக-வில் உள்ள மற்றவர்கள் கொதித்துத்தான் போனார்கள்.
வழக்கப்படி அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான நமது அம்மா நாளிதழில் 'திமிர் ஏறிய கழுதையின் நினைப்பும்.. தேசிங்கு ராஜா குதிரையின் நினைப்பும்..' என்று துக்ளக் ஆசிரியர் குருமுர்த்தியை வசை பாடி ஒரு கட்டுரை வெளியானது. அம்மா இருக்கும் வரை ஓரு வார்த்தை கூட அதிமுகவை எதிர்த்து பேசத் துணிச்சலற்ற கும்பல் என்று சோவையும் சேர்த்தே சாடியது அந்தக் கட்டுரை…
அதுமட்டுமல்ல... '1996 லேயே அதிமுகவை அழிக்கவும் ஒழிக்கவும், திமுக-வுடன் சேர்ந்து கொண்டு காங்கிரஸை உடைத்து தமாகாவை உருவாக்கி, அதற்கு ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்து... அதிமுக அந்தத் தேர்தலில் தோற்றதும்... அம்மா மீது அடுக்கடுக்கான வழக்குகளை புனைய வைத்து அதற்கென பிரத்யேக நீதிமன்றம் அமைக்கும் ஆலோசனையை எல்லாம் கருணாநிதிக்கு சொல்லிக் கொடுத்து, வாக்குகளாலும் கூடவே வழக்குகளாலும் அம்மாவை அழித்தொழிக்க திட்டம் தீட்டியதில் இந்த துக்ளக் கும்பலுக்கு பெரும்பங்கு உண்டு' என்று எழுதிவிட்டு... கடைசியில் குருமுர்த்தியை கண்டிக்கும் போது 'குறைந்தபட்சம் சோ பின்பற்றிய அதிகபட்ச கண்ணியத்தில் அரை சதவிகிதமாவது பின்பற்ற வேண்டும்' என்று சோவை புகழ்ந்தும் எழுதி இருக்கிறது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.
உடனேயே துக்ளக் ஆசிரியர் குருமுர்த்தி - 'ஆம்பிளையா என்று நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அரசியல் ஆண்மை பற்றித்தான் குறிப்பிட்டு மேடையில் சொன்னேன்' என்று கோனார் நோட்ஸ் ட்விட்டினார்.
யார் இந்த குருமூர்த்தி? ஆடிட்டர், திவிர காங்கிரஸ் எதிர்ப்பாளர், இந்திரா, ராஜீவ் இன்றைய ராகுல் காந்தி என்று அந்தக் குடும்பத்தை கடுமையாக விமர்சிப்பார். ஆரம்பத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் அரசியல் விமர்சன கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்துதான் அவரது பெரும்பலான கட்டுரைகள் இருக்கும். இந்துத்துவா மீது அதித அக்கறை காட்டுவார்.
முதலில் ஆர்.எஸ்.எஸ். அதன் பிறகு பாரதிய ஜனதா தலைவர்களுடன் நெருக்கமானார். ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக இவரை பாரதிய ஜனதா அரசு நியமித்துள்ளது.
மத்தியஅரசுக்கு, குறிப்பாக பிரதமர் மற்றும் அமித்ஷா இருவருக்கும் நெருக்கமானவர், ஆலோசகர்... இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்…
2017-ல் ஒருஆங்கில வார இதழ் இந்தியாவில் செல்வாக்குடைய ஐம்பது பிரமுகர்கள் பட்டியலை வெளியிட்டது… அந்தப் பட்டியலில் குருமூர்த்தி முப்பதாவது இடத்தில் இருந்தார்.
அதிமுகவில் இவர் சசிகலாவை விரும்பவில்லை. சசிகலாவை கடுமையாக இன்றுவரை விமர்சிக்கிறார்.
இபிஎஸ் - ஓபிஎஸ் இணைப்பிற்கு இவர்தான் முக்கியக் காரணம். அது பிஜேபி இவருக்குத் தந்த அசைன்மெண்ட். அதை சரியாக செய்தார். எடப்பாடியைவிட இவருக்கு பன்னிர்செல்வம்தான் பிடித்த தலைவர்.
ஆரம்பத்தில் சசிகலா வகையறா, பிஜேபியை சரிகட்ட நிறைய முயற்சி செய்தது. அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தது. ஆனால், குருமுர்த்தி அதற்கு தடையாக இருந்தார்.
அதன் பிறகு ரஜனியின் அரசியல் அறிவிப்பு வெளிவந்தது. அவரை பாரதிய ஜனதாவிற்கு இழுக்கும் பணியை டெல்லி ஒப்படைத்தது. பலமுறை இதற்காக குருமூர்த்தி ரஜினியை சந்தித்து பேசினார், வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் ரஜினி 'தமிழ் நாட்டு அரசியலுக்கு பாரதிய ஜனதா சரிபடாது, தமிழக மக்களும் ஏற்க மாட்டார்கள். நான் வேற மாதிரி யோசிக்கிறேன்' என்று சொல்லி அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே சமயம் நான் பாரதிய ஜனதாவிற்கு எதிராக செயல்பட மாட்டேன் என்ற உத்திரவாதத்தையும், ரஜனி குருமூர்த்திக்கு தந்தார்.
இப்போது எடப்பாடியின் அதிமுக வலுவாக நின்றுவிட்டதோ என்று யோசிக்கிறது பிஜேபி. எனவே பாரதிய ஜனதா தற்போது குருமூர்த்திக்கு தந்துள்ள அசைன்மெண்ட் அதிமுகவை கண்காணியுங்கள் என்பதுதான்.
அதிமுகவும் இப்போது எதற்கும் தயார் என்று இறங்கிவிட்டது. ரஜினி, கமல் மீது தாக்குதல்… குருமூர்த்தியை புறம்போக்கு என்று குறிப்பிட்டார் அமைச்சர் ஜெயகுமார். வேறு சில அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்தனர்.
அதே சமயம் மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் சமாதான தூதும் போனார்கள். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் அதிமுக மீது டெல்லியில் புகார் மழை பொழிகிறார்கள். பொன் ராதாகிருஷ்ணன் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட தயார் என்று பேசுகிறார். இதற்குக் காரணம் மாநாகராட்சியில் இரண்டு மேயர் பதவியை தங்களுக்கு தரச் சொல்லி கேட்டு வந்தது பாஜக. ஆனால் உள்ளாட்சி அமைப்பின் முக்கிய பொறுப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு பதில், தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கலாம் என்று சட்ட திருத்தத்தை அவசர சட்டம் முலம் கொண்டு வந்தது அதிமுக. இதைத் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் விரும்பவில்லை. இதுபோதாது என்று குருமூர்த்திக்கும் அதிமுக இணைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே சமயத்தில் சசிகலா தரப்பு சுப்பிரமணியசாமியை தாஜா செய்து வருகிறது. அதற்குக் காரணம்… அவர்கள் சேர்த்து வைத்துள்ள ஐம்பதாயிரம் கோடி சொத்தை பாதுகாத்துக் கொள்ள பேசி வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலாவை சிறையில் சாமி சார்பாக சந்திரலேகா சந்தித்துப் பேசினாராம்.
இந்தத் தகவலும் எடப்பாடியின் காதுக்கு எட்டியது. உடனே அந்த முகாமில் என்ன நடக்கிறது என்று உளவுத்துறை மூலம் விசாரிக்கிறார்.
ஒபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் இடையே உரசல் இருப்பதும் உண்மைதான். ஆனால், சசிகலா வகையறா இடையில் வரக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். அமைச்சர் ஜெயகுமார் தொடர்ந்து இதை சொல்லி வருகிறார்.
இதன் நடுவே அடுத்த ஆண்டு மே மாதம் இந்த ஆட்சியை கலைத்துவிட்டு, ஆறு மாதம் ஆளுநர் ஆட்சி… அதன் பின் தேர்தல். அப்போது பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும். இப்படி ஒரு திட்டம் மத்திய அரசின் பரிசிலனையில் இருக்கிறது என்ற தகவல் ஆளும் அதிமுகவின் காதுக்கு எட்டி இருக்கிறது.
தமிழகத்திற்கு ஒன்பது மருத்துவ கல்லூரி அனுமதி, உடனடி நிதி ஒதுக்கீடு கரிசனம் எல்லாம் இதனால்தான். நீட் தேர்வு விஷயத்தில் சாதகமான அறிவிப்பு சரியான சமயத்தில் வெளியிடப்படுமாம்.
அதிமுக இதை சமாளிக்க தயராகிவிட்டது.இது தவிர தேமுதிக, பாமக தமாக போன்ற கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறது. சட்டசபை தேர்தல் செலவிற்கு பொறுப்பேற்றுள்ளது.
அதே துக்ளக் திருச்சி கூட்டத்தில் காந்தி இயக்க தலைவர் தமிழருவிமணியன், அதிமுகவை கடுமையாக சாடினார். "வருமான வரி சோதனை நடத்துங்கள், பத்து அமைச்சர்களை ஊழல் வழக்கில் கைது செய்யுங்கள், இந்த ஆட்சியைக் கலையுங்கள். பாரதிய ஜனதா இந்த ஆட்சியை எப்படி சகித்துக் கொள்கிறது? குருமுர்த்தி அவரது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும். செய்யக் கூடிய இடத்தில் இருக்கும் நீங்கள், செய்யமால் இருப்பது ஓரு குற்றம்" என்று அவரை உசுப்பேத்தினார். கூடவே இந்த வார துக்ளக் இதழில் எச்சரிக்கை பகுதியில் அதிமுகவை எச்சரித்து ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்று ஆகாமல் அ.தி.மு.க. தலைவர்கள் நடந்து கொள்வது நல்லது என்றார்.
ஆக...திருச்சி கூட்டம் ஏதோ பேசி வைத்துக்கொண்டு பேசியது போல் இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கையில் ஏனோ சென்ற வார மாராட்டிய அரசியல் சம்பவம் நம் நினைவுக்கு வருகிறது...!
Leave a comment
Upload