சீறி எழுந்த சித்திராபதி...
பசிப்பிணி தீர்க்கும் மணிமேகலையின் அறப்பணி புகார் நகரத்தின் உலக அறவியில் துவங்கியது. அமுதசுரபியில் வளர்ந்துக் கொண்டே இருந்த அன்னத்தை அவள் அள்ளித் தந்து மக்களின் பசியைத் துடைத்தாள். இதைக் கண்ட மாதவியின் தாய், சித்திராபதி கடும் கோபம் கொண்டாள். சோழகுலத்தின் அரசகுமாரன் உதயகுமாரன் காதலிக்கும் ஓர் அழகிய மங்கை துறவு பூண்டு, பிக்குணியின் கோலம் எடுத்து தெருக்களில் பிச்சைப் பாத்திரத்துடன் அலைவது அவளுக்கு வருத்தத்தைத் தந்தது. தான் பிறந்த கணிகையர் குலத்தின் வழக்கங்களுக்கு மாறாக மணிமேகலையின் செயல்கள் அமைந்ததைக் கண்டு, சித்திராபதி எதிர்வினை ஆற்றியதைப் பதிவு செய்கிறது “உதயகுமாரன் அம்பலம் புக்க காதை”.
மணிமேகலையின் தோற்றம் கண்டு, சித்திராபதியின் உள்ளம் ஆற்ற இயலாத புண்ணுக்குள் பழுக்க காய்ச்சிய சூட்டுக்கோலை நுழைத்தது போல கொதிப்புற்றது. மாதவியின் அடியொற்றி மணிமேகலையும் துறவு வாழ்வு மேற்கொண்டது அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. ‘இததகைய வாழ்க்கை நம் போன்ற கணிகையருக்கான வாழ்க்கை முறையா?’ என்று வினா எழுப்பினாள். அவள், “இந்த அறவொழுக்கத்தை நான் தீர்த்துக் கட்டுவேன்” என்று அவளை ஒத்த நாடக கணிகையர்களிடம் சூளுரைத்தாள். மேலும் அவர்களிடம் சொல்வாள். “கோவலன் இறந்த பின்னர் மாதவி தவத்தை மேற் கொண்டு அறவண அடிகளின் புத்தப்பள்ளியில் சேர்ந்த செயல் நகைப்புக்கு உரிய செயல் அல்லவா? தன் அன்புக்கு உரியவன் இறந்து போனால், குளிர்ந்த பொய்கையில் நீராடிய பின்னர் தீயில் புகுந்து உயிரைப் போக்கிக் கொள்ளும் பத்தினி பெண்களின் வழி வந்தவர்கள் அல்லவே நாம்! பலரின் கைகளில் இருந்து பொருளைப் பெற்று வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கை அன்றோ?” என்று முறையிட்டாள்.
காதலன் வீய கடுந் துயர் எய்திப்
போதல்செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே
(உதயகுமாரன் அம்பலம் புக்க காதை :11-16)
மேலும் “யாழினை இசைக்கும் பாணன் ஒருநாள் இறந்து போனால், இன்னொருவன் கைகளுக்குச் செல்லும் யாழினைப் போன்றவர்கள் நாம். மனம் நிறைந்த மலரினைச் சுற்றும் வண்டு, அப்பூவில் உள்ள தாது குறைந்தால் வேறு மலரைச் சேர்வதை போல இயல்புடையவர்கள் நாம். செல்வம் நீங்கிய காலத்தில் ஆடவர்களைக் கை விடும் குணம் படைத்தவர்கள் நாம். நம் குலத்தில் பிறந்தவள் பிக்குணி கோலம் கொள்வது எத்துணை நகைப்புக்குரிய செயல்” என்று ஆதங்கப்பட்டாள்.
“மணிமேகலை பெற்ற செல்வமகளை இந்நாட்டை ஆளும் உதயகுமாரன் விரும்புகிறான். அவன் அனுபவிக்கப் பிறந்த மணிமேகலையை நான் கைப்பற்றிக் கொண்டு வருவேன். அவள் கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்தை, பிச்சை எடுத்துண்ணும் மக்களின் கையில் தந்து விட்டு வருவேன். மணிமேகலையை உதயகுமாரனின் பொன் தேரில் ஏற்றி வருவேன். இவற்றை நிறைவேற்றா விட்டால், நான் மரபு கெட்ட குலத்தைச் சார்ந்தவள் ஆவேன். நாடக கணிகையரின் வீட்டில் நுழையவும் தகுதி அற்றவள் ஆவேன்” என்று சபதம் செய்தாள்.
வஞ்சினம் உரைத்த சித்திராபதி, கணிகையர் பின் சூழ்ந்து வர தேர்வீதியில் நடந்துச் சென்று உதயகுமாரனின் அரண்மனையை அடைந்தாள். அங்கு ஆரவாரம் செய்யும் வண்டுகளுடன், தேனீக்கள் ஒலி எழுப்பும் மண்டபத்தில் செல்வத்தின் மணம் கமழ்ந்தது. பவளம் இழைத்த தூண்களும், பசும் பொன்னால் ஆன சுவர்களும், ஒளி மிகுந்த முத்துக்களை விதானமும் கொண்டு விளங்கியது அந்த பளிங்கு மண்டபம். அங்கு இருபுறமும் பெண்கள் வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்க, மலர் மஞ்சத்தில் அமர்ந்திருந்தான் உதயகுமாரன். சித்திராபதி உதயகுமாரனின் பாதத்தை வணங்கினாள்.
அவளைக் கண்ட உதயகுமாரன் ஏளனமாக நகைத்துக் கொண்டே, “உன் மகள் மாதவியுடன் மணிமேகலை கொண்ட பிக்குணி கோலம் எந்த தவறும் இன்றி நடக்கிறதா?” என்று கேட்டான்.
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப்
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த்
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித்
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன்
‘மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ?’ என
(உதயகுமாரன் அம்பலம் புக்க காதை: 43-54)
அவன் மனதின் ஆசையை அறிந்த சித்திராபதி, மேலும் அதைத் தூண்டும் விதமாக பேசினாள். “வாழிய வேந்தே, இதழ் விரிந்த பூ அழகாக விரிந்து மலர்ந்துள்ளது. உதயகுமாரனாகிய வண்டு அதன் தேனை அருந்த உதவி செய்யவே நான் வந்தேன். அம்மலர் புகார் நகரின் புறங்காட்டில் உள்ள உலக அறவியில் இப்போது உள்ளது” என்றாள்.
சித்திராபதியின் சொற்கள் இளவரசனுக்கு நம்பிக்கையைத் தந்தன. நடுக்கடலில் மரக்கலம் உடைந்த ஒருவன், தப்பிப் பிழைக்க கிடைத்த தெப்பத்தைப் போல, அவன் கண்களுக்கு சித்திராபதி தோன்றினாள். முன்பொரு பொழுதில் உவவனத்தில் பளிக்கறையில் தான் பார்த்த மணிமேகலையின் காந்தள் மலர்கள் போன்ற விரல்களும், அழகிய தோற்றமும், செவ்வொளி படர்ந்த இதழ்களும், கூர் தீட்டிய முத்துக்களை ஒத்த பற்களும் அவன் கண் முன் சிரித்தன. கருங்குவளை மலரென விளங்கும் கண்கள் இரண்டும் கெண்டை மீன்களைப் போல காதளவு ஓடிய அழகை சித்திராபதியிடம் நினைவு கூர்ந்தான். அவ்விரு கண்களும் நள்ளிரவு தாண்டிய இடையாமத்திலும் தன் உறக்கத்தை இழக்க வைத்த நாட்களைப் பற்றி கூறினான்.
மேலும் உதயகுமாரன், “தெய்வத்தன்மை பொருந்திய பெண் ஒருத்தி என் முன் தோன்றி ‘தவ வாழ்வு மேற்கொண்ட மணிமேகலை மேல் கொண்ட காமத்தினை விட்டு விடுவாயாக’ என்று சொன்னது. அவ்வாறு சொன்னது தெய்வம்தானோ அல்லது தெய்வத்தன்மை கொண்ட வேறு எதுவோ, நான் தீராத குழப்பத்தில் உள்ளேன்” என்றான்.
உதயகுமாரனையும், மணிமேகலையும் இணைத்து அதனால் பல பயன்களை பெற்று விடலாம் என்ற கனவில் இருந்த மணிமேகலையின் தாய், அவன் குழப்பங்களைக் கண்டு “இளவரசே, அந்த சம்பவத்தையே மறந்து விடுங்கள், இவை தேவர்கள் செய்யும் விளையாட்டுகள்!” என்றாள் அமைதியாக.
- தொடரும்
Leave a comment
Upload