பாலமுரளியின் சங்கீதத்தையும் மதுரை சேஷகோபாலனின் சங்கீதத்தையும் சரியான விகிதத்தில் கலந்து மிக்சியில் அடித்தால் என்ன வரும்? அபிஷேக் ரகுராமின் மிரட்டும் இசை வரும்! பிரம்ம கான சபாவில் சம்பிரதாய துவக்க விழா முடிந்து, தமிழக கவர்னர் உள்பட பெரிய தலைகள் மேடையிலிருந்து இறங்கிய பின், முதல் கச்சேரியாக அபிஷேக் அமர்ந்தார்! அப்புறம் இரண்டு மணி நேரத்திற்கு ஒரே சர்க்கஸ் வித்தை தான்! கணிதம் தான்! பாலமுரளி சேஷகோபாலன் கச்சேரிகளில் கூட இவ்வளவு பிர்க்கா இருக்காது. ‘கண்ணுக்கு மை அழகு, கவிதைக்குப் பொய்யழகு’ என்பார் கவிஞர் வைரமுத்து. அத்தோடு சங்கீதத்திற்கு பிர்க்கா அழகு என சேர்க்கலாம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால்? அதுவே வெறுப்பு தட்டி விடாதா? மிருதங்க மேதை பாலக்காடு ரகுவின் பேரன் அபிஷேக், அதை உணர்ந்ததாக தெரியவில்லை. கச்சேரியில் ராகம் பாடுகிற போதும், ஸ்வரத்தின் போதும் ஆராய்ச்சி மாணவனைப் போல வித்தை காட்டுவார் பாலமுரளி. அதைக்கூட 60 வயதிற்கு மேல்தான் அவர் செய்தார். 34 வயதிலேயே செய்கிறார் அபிஷேக்.
விளைவு? சங்கீத சுகம் பக்கத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்தது. அபாரமான ஒரு ஞானம் திசைமாறிப் போகிறதே என்கிற வருத்தம்தான். அவர் பாடிய ரீதி கௌளை ராக ஆலாபனையில் சங்கதிகள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சீறிக் கொண்டுவந்தன. ஆனால் சுகமான சங்கீதம் மிஸ்ஸிங். சுப்பராய சாஸ்திரியின் கற்கண்டு கீர்த்தனையான ‘ஜனனி நின்னுவினா’வை எடுத்துக்கொண்டது அழகுதான். ஆனால் கீர்த்தனையில் லயிப்பதை விட அதில் வரும் சிட்டை ஸ்வரங்களில் கவனம் செலுத்தி, தன் வேக ஆசையை நிறைவேற்றினார். இறுதியாக வந்த ஸ்வரங்களில் அசாத்திய ஸ்பீடு. கணக்கு வழக்கு. அந்தக் காலத்தில் மணக்கால் ரங்கராஜன் என்றொரு மகா வித்வான் இப்படித்தான் புல்லட் வேகத்தில் ஸ்வரம் போடுவார். அதனாலேயே கொஞ்சம் பெயரையும் கெடுத்துக் கொண்டார்.
அப்புறம் வந்த மாளவி ராக தியாகராஜ கீர்த்தனை யான ‘நினருஞ்சினா’வை கொஞ்சம் அடக்கி வாசித்தார். இறுதியில் அவர் பாடிய ‘பாவயாமி’ முழு ராமாயணத்தையும் சொல்லும் பாவபூர்வமான கீர்த்தனை. எம்.எஸ். உருகுவார். அதிலும் சிலம்பம் ஆட ஆரம்பித்து விட்டார் அபிஷேக். ‘எமோஷன்’ போயே போச்சு!
மிருதங்கம் பத்ரி சதீஷ் ஜோராக ஈடுகொடுத்தார். இந்த கச்சேரியில் வயலினுக்கு பதில் ரூப் சாகரின் புல்லாங்குழல். யார் ஐடியாவோ..? ஒட்டவில்லை. மிதமிஞ்சிய ஞானமே அபிஷேகத்திற்கு சத்ருவாகி விட்டதோ?
‘கண்ணான கண்ணே’வும் ‘மறுவார்த்தை பேசாதே’யும் சித் ஸ்ரீராமை எங்கோ கொண்டுபோய் விட்டுள்ளது. அடுத்து ‘கண்ணு, தங்கம், ராசாத்தி’ காத்திருக்கு. பாரதிய வித்யா பவன் ஹாலில் மட்டுமல்ல... மேடையை சுற்றிலும் ரசிகர்கள் ரவுண்ட் கட்டி இருந்தனர். அதுவும் பவனில் ஹாலின் பின் வரிசையிலிருந்து முன்னே பார்த்தால், வழக்கமாக நரைத்த தலைகளும் வழுக்கைகளுமே தெரியும். சித்துவுக்கு கருப்பு தலைகள் பரவலாக தெரிந்ததே பெரிய ஆறுதல். அவர்களில் அவரது குரலை கேட்க வந்தவர்கள், சங்கீதத்தை ரசிக்க வந்தவர்கள், அழகை ரசிக்க வந்த இளம் பெண்கள் என பிரித்து கணக்கிடுவது சற்று சிரமம்தான். ஆரம்பத்திலேயே ஸ்ரீ ரஞ்சனியில் அமைந்த. ‘சொகஸு கா மிருதங்க தாளமு’ கீர்த்னையை அழகாக பாடி திருவையாறு ஆராதனை நெருங்கிவிட்டதை நினைவு படுத்தினார்.
இந்தக் கச்சேரியில் சுப பந்துவராளி, கல்யாணி, பைரவி ஆகிய மூன்று ராகங்களை பிரதானமாக பாடினார். பைரவியும், கல்யாணியும் ஓஹோ. நயன்தாரா ஜொலிப்பு. தலைமுடியை கோதி விட்டு கொண்டு, அவர் அடுத்தடுத்து சங்கதிகளை அசராமல் இறக்கிய விதம், பெரிய ஞானம். மாமூல் பாட்டிலிருந்து வெளியே வரும் அவரது முரட்டு தைரியம் பாராட்டுக்குரியது தான். ஆனால் சில சமயங்களில் அவர்மேல் பஞ்சமத்தில் நின்று விளையாடும்போது சட்டென்று கண்களை மூடி கேட்டால், உருக்கம் போய் கத்துவது போல தோன்றுகிறது. மேற்கத்திய இசையை கற்ற சித்துவுக்கு அந்த பாதிப்பு வந்து விடுகிறதோ என்ற கவலை தருகிறது. சினிமா இசை அதைத் தாங்கும். ஏன் ரசிக்கும். ஆக, இந்த இளைஞர் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் குரலை கொண்டு வந்துவிட்டால் போதும். அடுத்து, ஸ்வரங்களில் வெளுத்து வாங்கினார். கணினி மூளை.
கச்சேரி ஆரம்பித்து இரண்டே கால் மணி நேரம் ஆனபோது, பக்கதில் இருந்த சபாக்களில் மட்டுமே சந்திக்கும் தோழி ‘கவனிச்சீங்களா... இதுவரை ஒரு தமிழ் இல்லை...’ என்றார். ஆமாம் என வருத்தத்துடன் யோசித்தபோது, ‘எப்போ வருவாரோ... எந்தன் கலி தீர..’வென்று மதுரை மணி அய்யரின் மறக்க முடியாத ஹிட் பாடலை ஆரம்பித்தார். பலமான கைதட்டு. நம்மைப்போல தமிழுக்காக ஏங்கியவர்கள்! (சீமான்களும் திருமாக்களும் சபாக்கள் பக்கமும் வர வேண்டுமோ). அப்புறம் மகாராஜபுரத்தாரின் தில்லானாவை முடிப்பதற்கு முன்பே ஜீன்ஸ் பெண்கள் கையெழுத்து நோட்டுடன் மேடையை நோக்கி படையெடுத்தனர். டெண்டுல்கர் போல சித் சாதிக்கப் பிறந்தவர் என்று மட்டும் புரிகிறது!
பாரதிய வித்யா பவனில் காயத்ரி வெங்கட்ராகவன் பாடிய வலஜி ஆலாபனை கௌரவமானது. ஸ்ருதி சுத்தமான சங்கீதம். அதில் அனாவசிய அலட்டல்கள் இல்லை. அப்புறம் வந்தது கரகரப்பிரியாவும், சக்கநி ராஜா..’வும்! இந்தப் பெண்ணிற்கு மயில் இறகு வருடுவது போன்று மென்மையான குரல். சற்று பாம்பே ஜெயஸ்ரீயைகூட நினைவு படுத்துகிறது. எல்லாம் சரி, காயத்ரி பாட்டில் சௌக்கியம் மட்டுமே உள்ளது. அட... என்ற எந்த பிரமிப்பும் இல்லை. எதிர்பார்த்ததை அப்படியே தருகிறார். அவ்வப்போது வெகுளியாக சிரிக்கிறார். இவை போதுமா? எப்படி இருந்தாலும் அன்று நல்ல கூட்டம்!
இந்த வருடம் ஆறாம் தேதியே பாரதி கொண்டாட்டம் ஆரம்பமானது கிருஷ்ண கான சபாவில். மஹதி அகடமி உள்பட 3 இசை பள்ளியிலிருந்து வந்திருந்த குழந்தைகள் முண்டாசு கவியின் அற்புத 5 பாடல்களை கோரஸாக பாடியது, சிலிர்ப்பான அனுபவம். இதற்காக இரண்டு மூன்று முறை ரிகர்சல் செய்து, ரொம்பவும் மெனக்கெட்டு உள்ளது வானவில் பண்பாட்டு மையம். குறிப்பாக வழக்கறிஞர் ரவி, டான்ஸர் ஷோபன ரமேஷ் மற்றும் மஹதியின் தாயார் வசந்தி. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்பட பல வி.ஐ.பி.க்களை கொண்டு வந்தது வானவில்லின் சிரத்தையை காட்டியது.
அக்கப்போர்:
அந்த நல்ல பாடகி அண்மைக் காலமாக ஓவராக மது அருந்தியே பாட முடியாமல் திணறுகிறார் என்று அவரது அபிமானிகள் வருத்தப் படுகிறார்கள்.
இரு ஜோடி பாடகிகளுக்கு இடையே செம போட்டா போட்டி நடக்கிறதாம்.
‘எப்போதும் கெட்டவார்த்தை, மாமிச உணவு... அதனால்தான் பாட்டு போச்சு’ என்கிறார்கள் ஆசார பாடகரை பற்றி.
பெரிய மிருதங்கக்காரர்தான் அவர். இளசுகளுக்கு வாசிக்க ஆசைப்பட்டாலும், அவர் எப்போதும் தன்னையே முன்னிலைப்படுத்துவதால் பலரும் அவரிடமிருந்து ஒதுங்குகிறார்கள்.
Leave a comment
Upload