பன்னிரு தமிழ் மாதங்களில் ஒன்று தான் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் என்றதும் அனைவருக்கும் ‘கார்த்திகைத் தீபத் திருவிழா’ தான் நினைவிற்கு வரும். தமிழகத்தில் தான் கார்த்திகை தீப விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தமிழரின் தொன்மையான பண்டிகை. தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளைக் கொண்டாட ஆரம்பிக்கும் முன்னதாகவே கார்த்திகை திருவிழா கொண்டாடியதாக சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
கார்த்திகை மாத பௌர்ணமி தினமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளன்று நாம் ‘கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றோம். கார்த்திகை தீபம் என்றவுடன் திருவண்ணாமலை தீபம்தான் நம் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.
கார்த்திகை தீபத் திருநாளில் இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே தமிழர்கள் அனைவரும் கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டிற்கு உள்ளேயும் தீபங்களை ஏற்றி வணங்கும் பழக்கம் தொன்று தொட்டு வருகின்றது.
புராதனப் பண்டிகை ‘கார்த்திகை தீபத் திருவிழா’:
தமிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ‘கார்த்திகை தீபத் திருவிழா’ ஒன்றாகும்.
விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், சிவன் காட்சியளித்த நாள் கார்த்திகை பெளர்ணமியாகும்.
கார்த்திகை தீபத் திருவிழாவை, திருஞானசம்பந்தர் ‘விளக்கீடு’ என்று கூறியுள்ளார்.
“கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்” என்று பொய்கையாழ்வார் கார்த்திகை தீப சிறப்பினைப் பற்றி குறிப்பிடுகிறார்.
கார்த்திகை தீபத் திருநாளில வீட்டின் வாசற்படிகளில் மாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்து கார்த்திகை விழாவை கொண்டாடியதாக அகநானூற்றில் சொல்லப்பட்டிருக்கிறது.
திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து திரும்பப் பெற்றான்.
“குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ் குவளை பைந்தார்”
என சீவக சிந்தாமணி கூறுகிறது.
“நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி...”
என்று கார்நாற்பது கூறுகிறது.
சங்க இலக்கியத்தில் “அழல்”, “எரி” என்னும் சொற்கள் கார்த்திகை தீபத்தை குறிப்பதாக உள்ளது.
சிலப்பதிகாரம் “அழல்சேர் குட்டத்து” என்று கார்த்திகை தீபத்தை கூறுகின்றது.
கார்த்திகை தீபத்தை “அழல்குட்டம்” எனப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
“கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவே” என களவழி நாற்பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் சிறப்பினை துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார் இயற்றிய சோணசைல மாலையில் காணலாம்.
மிகப் பழங்காலத்திலேயே கார்த்திகை விளக்குகள் இருந்துள்ளன என்பதை அகழ்வாய்வுகள் தெரிவிக்கின்றன.
மகாபலிச் சக்கரவர்த்தியின் வரலாறு:
இறைவன் சந்நதியில் ஏற்றப்படும் தீப ஒளியின் மகிமை பற்றி மகாபலிச் சக்கரவர்த்தியின் வரலாறு கூறுவதை பார்ப்போம்.
முற்பிறவியில் எலியாக இருந்த மகாபலிச் சக்கரவர்த்தி, சிவன் கோவில் ஒன்றில், தீபம் ஏற்றப்பட்ட விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் மீது ஏறி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த எலியின் வால் பட்டு, விளக்கின் திரி தூண்டப்பட்டது, கர்ப்பக்கிரகத்தினுள் விளக்குப் பிரகாசமாக ஒளிரச் செய்தது, அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான். பிறகு ஸ்ரீ விஷ்ணு பகவான் வாமனாவதாரம் எடுத்து, தனது திருவடியையே மகாபலித் தலையில் வைத்து மகாபலிக்கு முக்தி கொடுத்ததாக கூறப்படுகின்ற நன்னாளும் இந்த கார்த்திகைப் பௌர்ணமி தான். மகாபலி கேட்டுக்கொண்டதற்கிணங்க, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற ஸ்ரீ விஷ்ணு பகவானும் அருள் புரிந்தார். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள். மகாபலியின் ஞாபகமாகத்தான் “மாவளி” சுற்றப்படுகிறது. அன்றைய தினம் பௌர்ணமியானதால், இயற்கையாகவே ஒளியுள்ள இரவாகும்; இருந்தபோதிலும் கோவில்களில் சொக்கப்பானை கொளுத்துவதின் மூலமும், வீடுகளில் தீபங்கள் ஏற்றுவதின் மூலமும் ஜனங்கள் ‘மாவளி’ சுற்றுவதின் மூலமும் மேலும் ஒளியை அதிகப் படுத்துகிறோம். இதன் காரணமாக அறியாமை அஞ்ஞானம் அகன்று, ஞானவொளி, அறிவொளி, அன்பொளி, மற்றும் மங்கலவொளியும் பெருகும். இந்தக் கார்த்திகை உற்சவத்தில் சொக்கப்பானை கொளுத்துவது சிவன் கோயில்களில் மட்டுமில்லாமல், விஷ்ணு கோவில்களிலும், மற்றும் கிராமக் கோவில்கள் உள்பட எல்லாக் கோவில்களிலும் கொளுத்துவது மிகவும் விசேஷமாகும்.
தீப ஒளியின் மகிமை:
வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருவது தொன்றுதொட்டு வருகிறது. ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தரும் என்று வேத புராணங்களிலும் கூட விளக்கேற்றுவதே பற்றி கூறப்பட்டுள்ளது. அன்றைய காலங்களில் அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை தீப தினத்தன்று என்ன செய்ய வேண்டும்?
கார்த்திகை தீப தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் சாலச் சிறந்தது.
இந்த நாளன்று மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்றவேண்டும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ அல்லது நூலாலோ ஆன திரியைப் போட்டு விளக்கு ஏற்றப்பட வேண்டும். பின் பூஜை செய்து, நெல் பொரியை நைவேத்தியம் செய்து சிவபெருமானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால் நமது பாவ வினைகள் நீங்கப்பெற்று சிவபெருமானின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இரவை பகலாக்கும் இந்த தீபத் திருநாள் மூன்று நாள் கொண்டாடுப்படுகிறது.
தீபம் ஏற்றும் முறை:
அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘தீபம்’ என்று அழைக்கப்படுகிறது. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும்.
நெய் தீபமும், நல்ல எண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது. மண் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் செய்வாள். பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் அனைத்து தேவதைகளும் அருள் புரிவார்கள். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.
குத்து விளக்கினை நெய் ஊற்றி விளக்கேற்றி நடு முற்றத்தில் (ஹாலில்) வைத்தால் வறுமை நீங்கும்.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி... வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்!!!
Leave a comment
Upload