நேரடி நடவடிக்கை என்பது என்ன என்பதை மற்ற கட்சிக்காரர்களோ, பொதுமக்களோ புரிந்து கொள்ளவில்லை. தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்களும் சற்று உஷாராக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. பல இடங்களில் இது வெறும் கோஷம் போடும் ஊர்வலமாக இருந்தது.
சென்னையில் ஒரு சவ ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னால் செல்லும் மூடப்பட்ட காலி சவப்பெட்டியை நாலுபேர் தூக்கிச் சென்றார்கள். இந்தக் காலிச் சவப்பெட்டியின் மீது ஒரு பெரிய படுதா போர்த்தப்பட்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் மெளலானா அபுல்கலாம் ஆசாத் என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அபுல்கலாம் ஆசாத் அவர்கள் மீது அவர்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. மற்றபடி அது ஒரு ஒழுங்கான மெளன ஊர்வலம். ஆனால் கல்கத்தாவில் …?
நேரடி நடவடிக்கை என்கிற கொலை வெறித்தாண்டவம் கல்கத்தா நகரில் ஷகீம் சுஹ்ரவர்த்தி என்கிற வங்காள அரசியல்வாதியின் உதவியினால் நடத்திக் காட்டப்பட்டது.
லஞ்ச ஊழலுக்கும், அக்கிரமமான ஆடம்பர வாழ்க்கைக்கும் புகழ் பெற்ற வங்காள முதல்வர் சுஹ்ரவர்த்தி ஒருமுறை பதவிக்கு வந்துவிட்டால் எதையாவது செய்து தொடர்ந்து அந்தப் பதவியில் நிலைத்திருப்பதுதான் முறை என்கிற கொள்கையுடைய கொடூரமான அரசியல்வாதி. மத உணர்வுகளைத் தூண்டி விட்டு, ஏராளமான பொருட்செலவில் அவர் ஒரு பெரிய குண்டர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். பல வழிகளிலும் ஊழல் புரிந்து சர்க்காரின் பொருட்செலவிலேயே இந்தக் குண்டர்கள் கூட்டத்தை அவர் பராமரித்து வந்தார்.
அவருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரையும் இந்தக் குண்டர்கள் உயிருடன் விட்டு வைப்பதில்லை. தேர்தலில் அவரை எதிர்த்து நிற்பவர் ஒருநாள் திடிரென்று காணாமல் போவார். மறுபடியும் கிடைக்க மாட்டார். ஆக, சுஹவர்த்தியே வெற்றி வீரராக அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942-ல் வங்காளத்தில் பஞ்சம் தலை விரித்தாடியபோது, அங்கிருந்த மக்களுக்கு அனுப்பப்பட்ட பல லட்சம் டன் தானியங்களை இடைமறித்து அவற்றை கறுப்பு மார்க்கெட்டில் விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷிகீத் சஷ்ரவர்த்தி என்கிற பெருமகன் இவரேதான். உயர்ந்த நட்சத்திர ஹோட்டல்களில் மூக்கு முட்ட ஷாம்பெயின் மது அருந்துவது, எல்லா காபரே நடனக்காரிகளுடனும் கல்கத்தாவின் அதிக விலை கேட்கும் உயர்ரக வேசிகளுட்னும், படுக்கைக்குச் செல்வது அவரது இரவு நேரப் பழக்கம். பகலில் பயங்கரவாத அரசியல். அப்போது வங்காள முதலமைச்சராக இருந்த சுஹ்ரவர்த்தி 1946 ஆகஸ்ட் 16ம் நாளான நேரடி நடவடிக்கை தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். தனது குண்டர் படையிடமும், முஸ்லீம் லீக் ஆட்களிடமும் ‘போலீஸ் உங்களைக் கண்டு கொள்ளாது. நடத்துங்கள் உங்கள் வேலையை’ என்று தூண்டிவிட்டார்.
கல்கத்தாவின் தெருக்களிலும், நெருக்கமான சந்துகளிலும், குடிசைகளிலும் , தெரு ஒரங்களிலும் வசித்த ஏராளமான முஸ்லீம்கள் கைக்கு கிடைத்த கத்திகள், கடப்பாரைகள், தடிகள் போன்ற ஆயுதங்களுடன் வெறிக் கூச்சல் எழுப்பியவாறு கிளம்பிச் சென்று கண்ணில்பட்ட எல்லா இந்துக்களையும் அடித்துக் கூழாக்கினார்கள். குத்திக் கொன்று பாதாளச் சாக்கடைகளில் எறிந்தார்கள். கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்கள் ஏராளம். இந்துக்களின் கடைத்தெரு கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்தித் தரைமட்டமாக்கப்பட்டது. எரியக்கூடிய எல்லாவற்றிற்கும் தீ வைக்கப்பட்டு நகரின் பல பகுதிகளில் கோபுரங்கள் போன்ற
தீச்சுவாலைகள் கிளம்பின. வானமே புகையால் மறைந்தது.
தாமதமாக விழித்துக்கொண்டு, என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட இந்துக்கள் கூட்டம் அதே ஆயுதங்களுடன் வெளிக்கிளம்பி கண்ணில்கண்ட அத்தனை முஸ்லிம்களையும் அடித்துக் கொன்றது, பெண்களை பலாத்காரம் செய்து முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களுக்கு தீ வைத்தது. வன்முறை சம்பவங்களுக்கு பேர் போன இந்த நகரில் சரித்திரத்திலேயே இரத்தத்தை உறைய வைக்கும் இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சிகள் இதற்கு முன் நடந்ததில்லை. தெருக்களிலும், சாலைகளிலும் பல விதமான சிதைத்துக் கொல்லப்பட்ட மனித உடல்கள் இறைந்து கிடந்தன. பல நடை பாதைகள், வீடுகளின் வாயில்கள் போன்ற இடங்களில் நிஜமாகவே மனித ரத்தம் அருவியைப் போல் ஓடியது. ஹுக்ளி நதியில் எராளமான பிணங்கள் மிதந்து கடலுக்குச் சென்றன. அன்று மாலை கணக்கற்ற பிணந்தின்னி கழுகுகள் நகரை முற்றுகையிட்டு கேட்பாரற்றுக் கிடந்த பிணங்களைக் கொத்தித் தின்றன. நகரமெங்கும் மரண ஓலம் கேட்டது. அன்றைய ஒரு நாள் வெறித் தாக்குதலில் ஆறாயிரம் மனித உயிர்கள் பலியாயின என்பது சர்க்கார் கணக்கு. உண்மையான இழப்பு பத்தாயிரத்திற்கும் மேலே என்பது பொது மக்கள் கணக்கு.
இந்தக் கலகத்தில் கொல்லப்பட்டவர்களில் பெருபான்மையான மக்கள், வழிவகை அற்ற எளிய பாமர மக்கள் என்பதுதான் இதில் பரிதாபகரமான விஷயம். இரு சமுதாயங்களையும் சேர்ந்த இந்த திக்கற்ற மக்களுக்கு அரசியலும் தெரியாது. ஏன் கொல்லப்படுகிறோம் என்பதும் தெரியாது.
இந்த கல்கத்தா கொலைச் சம்பவங்கள் வெகுவிரைவில் நவகாளி, பீகார் அடுத்த பக்கத்திலுள்ள பம்பாய் என்று பல பகுதிகளுக்கும் பரவி, ஏராளமான உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்திய சரித்திரத்தின் போக்கில் பெரிய மாறுதலை ஏற்படுத்திய சம்பவம் இது என்பதில் சந்தேகமில்லை. ‘பாகிஸ்தான் என்ற எங்களது கோரிக்கை மறுக்கப்படுமானால் என்ன நடக்கும்?’ என்று முகமது அலி ஜின்னாவும், முஸ்லிம் லீகும் தெரிவித்த இந்த வழிமுறை, இந்தியாவையே சுடுகாடாக்கும் உள்நாட்டுப் போராக உருவெடுக்கும் என்பதை அனைவருமே உணர்ந்திருந்தார்கள்.
‘இந்துக்கள் மூன்று பங்குக்கு மேல் இருக்கிறார்கள். அப்படி ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படுமானால் ஒன்றும் குடி முழுகிவிடாது. எப்படிப் பார்த்தாலும் அதிகப்படியாக உள்ள இந்துக்களே கடைசியில் வெற்றி பெறுவார்கள். ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் ஒழித்துவிட்டு அகண்ட ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்’ என்பது அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரின் கருத்தாக இருந்தது.
(தொடரும்)
Leave a comment
Upload