குண்டு ராஜா அடிப்படையில் அவ்வளவு மோசமானவன் அல்ல. இருந்தாலும், காலக்கொடுமை சில சமயங்களில் அவனை அப்படி ஆக்கி விடுவதில் எங்ஙனம், யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
இரண்டு வாரங்களுக்குமுன், கிராமத்திலிருந்து வந்த தனது ஒரே பாட்டி, கீதாப்பாட்டியின் கழுத்தில் இருந்த மூன்று வடச் சங்கிலியை, "பாலிஷ் போட்டுத் தரேன் ஆயா...!" என்று வாங்கிச் சென்றான்.
இரண்டு மணி நேரம் கழித்து தாமதமாக வந்தவன், சோர்ந்துபோய் மோடாவில் உட்கார்ந்தான்.
"ருக்கு, உடனே ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வா. படபடப்பாக இருக்கு...!" என்றான்.
கணவன் இட்ட கட்டளையை அவள் உடனடியாகச் செய்தாள். இருந்தாலும் பாட்டி விடுவாளா என்ன?
"புருஷன்காரன் எள்ளுன்னா எண்ணையா நிக்கணும்டீ. புள்ளை களைத்துபோய் வந்திருக்கான். இவ்வளவு பொறுமையா தேர்மாதிரி ஆடி அசைந்து தண்ணியைக் கொண்டுவரே...?" என்று சண்டையை விரும்பி அழைத்தாள்.
அடிமாடு படக் படக் என்று கழுநீரைக் குடிபோதுபோல, வேகமாய் தண்ணீரைக் குடித்தான் குண்டு.
"சொறி நாய் துரத்துனமாதிரி ஏன்டா இப்படி வெளிரிப்போய் கிடக்கிறே...?"
"தப்பு நடந்து போச்சு ஆயா...!" என்றான் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.
*****
அப்பாராவ் ஆளும் உடம்பும் வளர்ந்தானே தவிர, அவனது பொருளாதாரம் ஆப்பிரிக்க நாடுகளைப்போல கடும் வீழ்ச்சியில் இருந்தது. என்னென்னமோ செய்து ஏதேதோ செய்து சமாளிக்கப் பார்த்தான். முடியவில்லை. ஒண்டிக்கட்டையான அவனது ஒரு நாளை ஓட்டவே துட்டுக்குத் தட்டுப்பாடு.
ஒரு ஜிம் மாஸ்டரிடம் உதவியாளனாகச் சேர்ந்தான். அந்த மாஸ்டர் வரும் கஸ்டமர்களுக்கு புரோட்டீன் பவுடரை விற்பதிலும் ஸ்ட்ரீராய்ட் ஊசி போடுவதிலேயும் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
ஒரு கஸ்டமர், மருத்துவரின் ஆலோசனைக் கேட்காமல் கிலோ கணக்கில் சிக்கன் சாப்பிட்டு, புரோட்டீன் அருந்தி, அடிக்கடி ஊசி போட்டவர், "கஷ்டமர்" ஆகி மண்டையைப் போட்டுவிட, மாஸ்டருக்காக கேசும் கோர்ட்டுமாக அலைந்ததுதான் மிச்சம்!
அங்கிருந்து புறப்பட்டு, பரோட்டா மாஸ்டராகப் பணி பிசைந்தான். பணம் கிடைத்தாலும் செமத்தியான கால் வலி. புலால் உண்ணா, மது அருந்தா அனுமன் பக்தனாதலால், அந்த வேலையும் அவனுக்கு தும்ப கஷ்டமாகிப் போனது.
சினிமாவில் ஸ்டண்ட் உதவியாளனாகப் பணிபுரிய, மகாமட்டமான கதாநாயகன் நூறு பேரை பந்தாடுவதில் இவனும் ஒருத்தனாக இருப்பதில் மனசு இடம் கொடுக்கவில்லை.
ராவ் மாற்று வழி தேடிக் கொண்டிருந்தபோது, சிந்தாதிரிப்பேட்டை மதன்லால் சேட்டிடம் அடியாள் வேலைக்குச் சேர்ந்தான். அந்த சேட், சொக்கலால் பீடி அடிப்பவன். சமயத்தில் மூக்கு வடிநீரைச் சமாளிக்க, மூக்குப்பொடியும் போடுவதுண்டு. அந்த வகையில் சுப்புசாமியின் நட்பும் கிடைத்த பெரும் பாக்கிய சேட்டானான்!
அன்று பாட்டியின் நகையை கபளீகரம் செய்ததும், உடனடியாகக் குண்டு ராஜாவுடன் சேட்டை பார்க்க வந்தார் சுப்புசாமி.
"அரே ராம்...ராம்...பையா...!"
"அரே சுப்பு பையா... ராம்... ராம்...!"
என்று பரஸ்பரம் அவர்கள் கட்டித் தழுவிக் கொண்டதை குண்டு ஆச்சரியமாகப் பார்த்தான்.
அந்த நேரம் பார்த்தா அப்பாராவ், சேட்டுக்கு கண்ணாடி கிளாசில் டீ வாங்கிக் கொண்டு வர வேண்டும்?
தனது நண்பர்களைப் பார்த்ததும் ஷாக்கடித்து பின் வாங்கினான் ராவ். தன்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மானம் போய்விடும் என்று பக்கத்தில் இருந்த நகை பாலீஷ் போடும் கடையில் ஒண்டிக்கொள்ளப் பார்த்ததை, சேட்டு பார்த்து விட்டான்.
"அரே பாகல், ஜல்தி ஆவோ! ஒரு சாயா வாங்கி வர இத்தனா நேரமா...?" என்று சேட்டு கத்த, சுப்புசாமியும் குண்டு ராஜாவும் திரும்பிப் பார்த்தனர்.
"அட, நம்பள் கி பையன்...!" என்றார் தாத்தா.
"ஏண்டா மவனே,
சிங்கம்மாதிரி இருக்கும் நீ
சிங்கிள் டீ
வாங்கலாமாடா...?" - என்று குண்டு ராஜா கவிப்பேரரசு தொனியில் துக்கமிட்டான்.
இவற்றையெல்லாம் தாங்கமாட்டாத ராவ், காட்டிக் கொடுத்த சேட்டை,' ஒரு கிலோ தங்க பஸ்பம் கொடுத்து காவு வாங்கலாமா? 'என்று கொதித்தான்.
*****
"அப்புறம்...?" என்றார் தாத்தா.
"நேரா ரத்னா கஃபே. ஆளுக்கொரு வெங்காய தோசை, மெது போண்டா, பில்டர் காபி...!"
அப்பாராவ் யோசனையிலிருந்தான்.
"இந்த தடிப் பயலுக்கு ரெண்டு மைசூர் போண்டா...!" என்றான் குண்டு.
"ரொம்ப ஓவரா பேசறே...!"
"சண்டை போடாதீங்கடா செல்லங்களா...!" என்ற தாத்தா, "பத்திரிகை நிறுவனர் ரேவண்ணாவை எப்போது சந்திக்கப் போகிறோம்?" என்றார் குண்டுராஜாவைப் பார்த்து.
"இருட்டப் போகுது. தடுமாறாம வீடு போய்ச் சேருங்க தாத்தா. காலையிலே எட்டு மணிக்கு நீங்களும் ராவும் வந்திடுங்க. பணத்தை ரேவண்ணாவிடம் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் உங்கள் நாற்காலியில் பதவி ஏற்றுக்கொள்ளுங்க. டேய் ராவ், மறக்காம வேலைக்கான விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு வந்துடு. நீதான் உதவி ஆசிரியர்...!" என்றான் குண்டு ராஜா அலட்சியமாக.
"டேய்...என் பணம்...?"
"இந்தாங்க, என்னை நம்பலை நீங்க. நீங்களே எடுத்திட்டுப் போங்க. ராவோட ராவா எவனாவது ராவிக்கிட்டுப் போகட்டும்...!"
"என் குள்ள குண்டுப் பையா, தாத்தாகிட்டே கோபிக்கலாமா? நீ சொல்றதும் வாஸ்தோ வாஸ்தவம்... நான் இதை எடுத்துட்டுப்போய் கிழவி பார்த்தா அவ்வளவுதான். நீயே வெச்சிருந்து, காலையிலே கொண்டு வா...!"
குண்டுராஜா, ஒரு லட்சம் ரூபாய் இருந்த மஞ்சப் பையை அலட்சியமாக வாங்கியபடி, வேண்டா வெறுப்பாகத்
தலையாட்டினான்.
(குறும்பு தொடரும்...)
Leave a comment
Upload