அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 1982&83 இல் 22 கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. ஜாதி வழியில் ஆசிரியர்களைப் பிரிக்கும் முயற்சியும் நடந்தது. அது பலிக்கவில்லை. நிர்வாகத்தின் ஜாதியைச் சேர்ந்தவர் சிலர், எதிர்தரப்பில் தீவிரப் போராட்டக்காரர்களாக இருந்தார்கள். அதனால் நிர்வாகம் சங்கடப்பட்டது.
போராட்டம் தீவிரமடைவதற்கு முன்னதாகவே அவன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குளறுபடிகள் பற்றி தொடர்ந்து சில செய்திக் கட்டுரைகளை எழுதி வந்தான். அது நிர்வாகத்தினரை உலுக்கியது. துணைவேந்தர் B.S.சோமசுந்தரம் ஐந்து பேராசிரியர்கள் கொண்ட குழுவை சென்னைக்கு அனுப்பி ஹிண்டு நிர்வாக ஆசிரியர் G.கஸ்தூரியை சந்திக்கச் செய்தார். கஸ்தூரி அந்த குழுவிற்கு சில நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கினார். அப்போது அவர் சொன்னார், ‘‘நாங்கள் விசாரித்தவரையில் எங்கள் நிருபர் எழுதிய செய்தி எதுவும் உண்மைக்கு புறம்பானது அல்ல. நீங்கள் போகலாம்’’ என்று சொல்லிவிட்டார்.
இதையடுத்து துணைவேந்தர் சோமசுந்தரம் அவனது சக நிருபர்கள் மூலம் செய்திக்கட்டுரைகளின் சூட்டை தணிக்கச் சொன்னார். அவன் அதற்கு உடன்படவில்லை. பிறகு பதிவாளர் ஏ.ஆர்.லெட்சுமணனை அழைத்து, ‘‘அந்த ஹிண்டு நிருபர் உங்கள் முன்னாள் மாணவர் தானே? உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறார் என்கிறீர்களே? செய்திகள் எழுதும்போது கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் எழுதச் சொல்லக்கூடாதா?’’ என்று கேட்டுக் கொண்டார். பதிவாளர் சொன்ன பதில், ‘‘அவன் என் மாணவனாக இருந்தபோது, உண்மையையே பேசவேண்டும், உண்மையையே எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இப்போது அதற்கு மாறாக நான் அவனுக்கு அறிவுரை தரமுடியுமா?’’ என்றார்.
துணைவேந்தர், பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.கணேசனைப் பார்த்து, ‘‘நீங்களும் அந்த நிருபரின் ஆசிரியர் தானே? நீங்கள் அந்த நிருபரை சில செய்திகளை எழுத வேண்டாம் என்று ஏன் சொல்லக்கூடாது’’ என்று கேட்டிருக்கிறார். கனேசன் சொன்ன பதில், ‘‘எங்கள் துறை சங்கடப்படும்படி சில விஷயங்களை எழுதியிருக்கிறான். அது உண்மையென்றால் கூட அவன் எழுதாமலும் இருந்திருக்கலாம். ஆனாலும் நான் அவனிடம் எதுவும் சொன்னதில்லை. தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட்டால் அவனுக்குப் பிடிக்காது. நானும் பதிவாளரும் அவனை 16 வயதில் இருந்தே அறிந்திருக்கிறோம்.’’
இப்படிப் பிறரைத் தொடர்பு கொள்ளாமல் துணைவேந்தர் சோமசுந்தரம், நேரடியாகவே அவனை அழைத்து கேட்டிருக்கலாமே?- ஏன் அப்படிச் செய்யவில்லை? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
முதல் காரணம், வெளிநபர் யாரையோ, பகுதிநேர ஆராய்ச்சியாளராக பி.எச்.டி.பட்டம் பெற ஆராய்ச்சிக்காக சேர்க்க விரும்பிய அவர், அவனை அழைத்து, ‘‘நீயும் அப்படிச் சேர விரும்பினால், சேரலாம், வாய்ப்பு தருகிறேன்’’ என்றார். அவன் அதை ஏற்கவில்லை. ஏற்றுக்கொண்டால், பல்கலைக்கழக மாணவன் ஆகிவிடுவதால் நிர்வாகத்தை எதிர்த்து எதுவும் எழுத முடியாமல் போகும், பேனாவின் முனை முறியும் என்று நினைத்து அந்த வாய்ப்பு வேண்டாம் என்று உதறிவிட்டான்.
இரண்டாவது காரணம், பல்கலைக்கழகத்தின் பொன்விழா 1978இல் கொண்டாடப்பட்ட போது, தகுதியைப் பற்றிக் கவலையில்லாமல் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 50 நபர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதை, அவன் அவர் முகத்துக்கு எதிரேயே விமர்சித்தான். விழா நடந்து முடிந்து 2 நாட்கள் கழித்து, துணைவேந்தர் கேட்டார், ‘‘விழாவைப் பற்றி எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க?’’
‘‘ஐயா, பிஸ்கெட் கம்பெனிக்கு போனால் அன்பளிப்பாக பிஸ்கெட் பாக்கெட் தருவார்கள். ஆடைகள் தயாரிப்பு அலுவலக விழா என்றால் ஆடைகளை அழகாக பேக் செய்து அன்பளிப்பாக கொடுப்பார்கள். நீங்கள் தயாரிப்பது கௌரவ டாக்டர் பட்டம், வந்தவர்களுக்கெல்லாம் அதைக் கொடுத்தீர்கள் அன்பளிப்பாக என்றான். துணைவேந்தர் அதைக்கேட்டு நொந்து போனார். அன்றிலிருந்து சகஜமாகப் பேசுவதில்லை. ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்தது, அவன் தினமும் அண்ணாமலை நகருக்கு வந்து சென்றான். போராட்டம் பற்றிய செய்திகளை அவ்வப்போது தந்துகொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் வரலாற்றுத் துறையில் பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்களாக இருந்த க.தெய்வசிகாமணி மற்றும் ரசாயனத்துறையில் பி.எச்.டி மாணவர் R.T.சபாபதி மோகன். அந்த தெய்வசிகாமணி தான் பின்னர் தமிழ்நாட்டின் அமைச்சரான பொன்முடி. சபாபதி மோகன் பிறகு ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தார் ஆனார்.
(ரகசியத்தை கசிய விட்ட பொன்முடி)
நெய்வேலியில் வசித்து வந்த அவன், போராட்டம் உச்சகட்டத்தை எட்டியபோது, துணை வேந்தரின் கருத்தை அறிய காலை 8 மணிக்கே அவரை வீட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். 2 முறையும் அவரது உதவியாளர் ஷண்முகம் தான் பேசினார். அப்போது, ‘‘துணைவேந்தருக்கு பேதியாகிறது. அவர் அடிக்கடி பாத்ரூம் சென்று வருகிறார். அதனால் பேசமுடியவில்லை’’ என்றார். சற்று அவகாசம் கொடுத்து அவன் 3ஆம் முறையும் தொடர்பு கொண்டான். பேதி என்ற பதிலே வந்தது.
அது நிஜமா, பொய்யா என்று தெரியாத நிலையில் அவன், சொன்னான், துணை வேந்தர், இப்படி அடிக்கடி கழிப்பறைக்கு செல்கிறார் என்றால் நிஜமாகவே அவருக்கு ஏதோ பிரச்சனை. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள். இப்படி அவன் பேசியதை, துணை வேந்தர் இணை சாதனத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மதியம் சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.
அன்று அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு வந்த அவன் துணைவேந்தர் வீட்டு ஊழியர்களை தொடர்பு கொண்டு, அவருக்கு நிஜமாகவே உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்து கொண்டான். ஆசிரியர் சங்கத்தினர், மூலம் அவன் காதில் விழுந்த விஷயம், அவர் சென்னை சென்றதும் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்வார் என்பது. இதையெல்லாம் தெரிந்து கொண்ட அவன், சிதம்பரத்தில் இருந்தபடியே துணைவேந்தருக்கு உடல்நலம் சரியில்லை, சென்னை சென்றிருக்கிறார், விரைவில் ராஜினாமா செய்யப்போகிறார் என்று எழுதினான். இந்த செய்தி வந்த தினத்தில் அவனும் வேறொரு வேலையாக சென்னைக்கு வந்திருந்தான். அன்று மதியம் சோமசுந்தரம், ஹிண்டு எடிட்டருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நிருபரின் தகவல் பொய் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது மறுப்பை வெளியிடலாமா என்று செய்தி ஆசிரியர் கேட்டபோது அவன் சொன்னான், ‘‘இன்று வெளியிடுங்கள், நாளை அவர் ராஜினாமா செய்த செய்தியையும் வெளியிட வேண்டியிருக்கும்’’ என்றான். துணைவேந்தரோ முன்னாள் நீதிபதி, அவரது மறுப்பை எப்படி வெளியிடாமல் இருப்பது என்று நினைத்த செய்தி ஆசிரியர் அந்த மறுப்பை வெளியிட்டார். மறுநாளே சோமசுந்தரம் உடல் ந்லம் குன்றியதால் ராஜினாமா செய்த செய்தியும் வெளிவந்தது. இந்த செய்திச் சங்கிலியில் பாவப்பட்டு நின்றவர் துணைவேந்தர் சோமசுந்தரம் தான். அந்த நிருபரின் செய்தி உண்மையாயிற்று.
இந்த நிலையில் நிர்வாகம் புதியதொரு துணைவேந்தரை நியமிக்கவேண்டி இருந்தது. ஆசிரியர் சங்க போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது, எந்தக் கல்வியாளர், துணைவேந்தர் பொறுப்பை ஏற்பார் என்ற சந்தேகம் நிர்வாகத்திற்கு வந்ததால் இடைக்கால துணைவேந்தராக, எஸ்.ஆர்.கெய்வார் என்ற முன்னாள் ஐ.சி.எஸ். அதிகாரியை நியமித்தது. அவர் பல வருடங்களுக்கு முன்பு தென்னாற்காடு மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர். அவர் நிருபர்களுடன் பேசுவதைத் தவிர்த்தார். இருந்தாலும் அவனிடம் பேசினார். அது நிருபர் என்பதால் அல்ல அவன் அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன், முன்னாள் செனட் உறுப்பினர் என்பதனால்.
Leave a comment
Upload