தொடர்கள்
அழகு
முதிர் மந்திரப் புன்னகை - மோகன் ஜி, சித்திரம் - தேவா

20250316225142120.jpg

ஓடிஓடிக் களைத்து விட்டாய் என்றிருந்தேன்.

ஓடாகத் தேய்ந்தனையோ எனப் பதைத்தேன்.

சலிப்பேயுன் சங்கீதமானதோ எனக் குமைந்தேன்.

சரிந்திடும் இளமையின் சலசலப்போ என விதிர்த்தேன்.

பெற்றுநீ செதுக்கிய பிள்ளைகள் திசைக்கொருவராய்.

பெருங்காயப் பாண்டமென நினைவின் வாசம் மட்டும்.

நீயும் நானுமடி எதிரும் புதிருமடி என்றேயானோம்.

காய்ந்திடும் மௌனச்சூடு நம்மிடை வாய்த்ததடி.

சோர்வினால் உன் மலர்முகம் வாடினால்,

சூரியனும் உதிப்பதில்லை என் வானில்.

அன்பினை வார்த்தெடுக்கும் எந்திரம் நீ என்றிருந்தாய்.

அனைத்தும் உன்வழியே என்றாகிப் போனதடி.

எத்தனை நாள்கழித்தே இந்தமலர்ச் சிரிப்படி?

என்றுமிலா திருநாளாய் எழிற்குறிஞ்சி பூத்ததுவோ?

துலங்கிடும் குலமகளே! தூயமணி விளக்கே!

மலர்ந்திரு இதுபோலே எந்நாளும் தேவதையே.