தொடர்கள்
அனுபவம்
மனசே! டேக் டைவர்ஷன் 2 : "குற்றம் பார்க்கின்........." - மோகன் ஜி, [சித்திரம் : தேவா]

20250031125335525.jpg

அந்நாளில் என் நண்பன் வீட்டிற்கு அடிக்கடி போவதுண்டு. அவனுடைய அம்மா என் மேல் பரிவுள்ளவளும் கூட. அவள் சொல்வதை என் நண்பன் காதுகொடுத்துக் கேட்பதேயில்லை என்று அந்த அம்மணிக்குக் குறை.

நானோ எந்த சம்பாஷணைக்கும் இரண்டு காதுகளையும் கொடுத்து விடுகிறவன். எனவே நிறையவே என்னிடம் பேசுவாள்.

அந்த அம்மா பேசுகையில் ஒன்றை கவனித்தேன். யாரைப்பற்றி பேசினாலும், அவர்கள்மேல் ஆற்றாமையும் ஆதங்கமும் கொண்டு குறைகூறுவது அந்த அம்மாவின் வழக்கமாக இருந்தது.

ஒருநாள் சிதேகிதன் வீட்டில் இல்லை. அவன் அம்மா பேசத் தொடங்கினாள். வேலைக்கு வராத வீட்டு உதவியாளரைப் பற்றி எரிச்சல் பட்டாள். அவள் நேரத்துக்கு வராதது, அடிக்கடி பண உதவி கேட்பது என்று விலாவாரியாக ஒரு படலம் வாசித்தாள்.

‘இவள் இப்படின்னா இதுக்கு முன்னிருந்தவளோ வேறே மாதிரி!’ என்று முந்தைய வேலையாளைப் பற்றிய சித்திரம் தொடர்ந்தது. அவள் உடைத்த பாத்திரங்கள், காணாமல்போன கொலுசு என்று நீண்ட புகார் பட்டியல். நெடுநேரம் தன் பிள்ளைகள் பற்றி, கணவனைப் பற்றி, அடுத்த வீடு பக்கத்துவீடு என கண்டனங்களைக் குவித்தாள். அன்று, என்னை விட்டால் போதும் என்ற அளவு அந்தக் குற்றத் தாக்கல் நீண்டது.

குடும்பத்தினர்கூட அந்த அம்மணியிடம் பேசுவதைத் தவிர்ப்பதை உணர்ந்தேன்.

யாவரிலும் எதிலும் குறை காண்பவர்களை பிறர் ஒதுக்குவதைப் பார்க்கலாம்.

அத்தகையவர்களுக்கு நிறைய திறமையும் தகுதியும் கூட இருக்கும். பிறருடன் அவர் உறவாடும் விதத்தை இந்த குறைகாணும் மனப்பான்மையே தீர்மானிக்கும். இந்த மனப்பாங்கே அவருடைய தகுதிகளை பின்தள்ளி, அவரின் முசுட்டுத்தனத்தை மட்டுமே வெளியுலகத்திற்கு காட்டும்.

பிறர் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம், நாம் இருக்கும் சூழலின் எதிர்மறைத் தன்மை, கடந்தகால அனுபவங்கள் ஆகியவை நம் மனதில் தாக்கம் ஏற்படுத்தவல்லவை. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்கு,

குறைகளை மட்டுமே தேடி அடுக்கிக் கொள்ளும் மனநிலை நாளாவட்டத்தில் வந்துவிடும்.

நம்மைப் பதற வைக்கவும், எரிச்சலூட்டவும், வெறுப்பைத் தூண்டவும் பல விஷயங்கள் நம் வாழ்வில் அலைமோதிக் கொண்டுதான் இருக்கும். ஆனாலும், அவற்றை எதிர்கொள்ளும் பக்குவமும் மன திடமும் நம் வசம் இருக்கவேண்டியது அவசியம்.

அந்த பக்குவத்தை வளர்த்துக் கொள்ளாதவர்களே குறைகாணும் தன்மையை குத்தகை எடுத்துக் கொள்கிறார்கள்.

நாம் ஒதுக்கப்பட்டு விடுவோமா என்ற அச்சவுணர்வு, எதையும் விட்டுக் கொடுக்காத மனோபாவம், பிறருடனான ஒப்பீடுகள் ஆகியவையும் குறைகாணும் மனோபாவத்தை வளர்த்தெடுப்பவை.

இந்த மனோபாவம் வாய்த்தவர்களுக்கு எவரைப் பற்றியும் நல்லதாகச் சொல்ல ஒன்றுகூட இருக்காது. தேடித்தேடி குறைகளைக் கண்டுபிடித்து தனக்கு நெருங்கியவர்களிடம் புலம்பித் தீர்க்காவிட்டாலொழிய சமாதானமாகாது.

எதிர்மறை எண்ணங்கள் மனதுக்கும் புத்திக்கும் பெரும் பாரம். நம் செயல்களையும் நம் உயர்வையும் ஏன் ஆரோக்கியத்தையும் கூட அவை பாதித்துவிடும்.

எதற்கும் உபயோகப்படாததும் பிரச்சினைகளை மட்டுமே தருவதுமான குறை காணும் பொதியை சுமந்து பயணிப்பது நமக்குத் தேவையா? எனச் சிந்திக்க வேண்டும்.

நம் நேரத்தை, குறை காணும் சிந்தனைப்போக்கு மெல்ல விழுங்கிவிடும். பொருமலாகவும், பிறரிடம் முறையீடு செய்வதாகவும் நம் பொன்னான நேரம் கழிந்து விடும்.

தொடர்ந்து நீடிக்கும் மனக்கசப்பு நம் மனதில் ஆழமாக வெறுப்பின் சாயத்தை ஏற்றி விடும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை! என்பது அனுபவத்தின் மொழி.

மனிதர்களிடம் குற்றம் குறைகளையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களிடம் அன்பு செய்ய நமக்கு நேரம் இருக்காது என்பார்கள்.

குற்றம் காண்பது நம் மனத்தின் மயக்கச் செயல்பாடு.

நமது எண்ண ஓட்டமும் நாம் நடந்து கொள்ளும் விதமும் நமது மனப்பான்மையுமே நமது ஆளுமையையும் நாம் எப்படிப்பட்டவர் என்பதையும் தீர்மானிக்கின்றன.

இவற்றை அவ்வப்போது சீராக்கிக் கொள்வதே நலம் பயக்கும்.

எப்போதும் நமக்குள் நாம் பேசியபடியே இருக்கிறோம். இது இயற்கை தான்.

அந்த சுய உரையாடலில், பொருமல்களும் கசந்த எண்ணங்களும் கசிந்து விடாமல் பார்த்துக் கொள்வது ஒரு ஆன்மீக இலட்சணமும் கூட.

நமக்கு இந்த மனோபாவம் இருக்கிறதா என்பதை உணர்ந்து கொண்டால் மெல்ல இதிலிருந்து மீண்டு விடலாம்.

மீள்வது எப்படி என்று பார்க்கலாம்:-

-நம் கண்ணோட்டத்தையும், எதையும் அணுகுகின்ற முறையையும் சீர்தூக்கிப் பார்த்து, நம் எதிர்வினைகளை நிதானமாக வெளிப்படுத்துதல்.

-மக்களை அவர்களின் குறை நிறைகளுடன் ஏற்றுக்கொள்ளுதல்,

-பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்,

-பிறருடைய தவறுகளை பெரிதுபடுத்தாத தன்மையைப் பழக்கிக் கொள்ளுதல்,

-முக்கியமற்ற விஷயங்களை புறமொதுக்கி மனதைத் தளர்த்திக் கொள்ளுதல்.

-ஊக்கம் தரும் நூல்களை வாசித்தல்,

-கசப்பு, துரோகம், பகை முதலியவற்றை வெளிப்படுத்தும் ஊடக ஆக்கங்களைத் தவிர்த்தல் (உதாரணம்- சில தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சில திரைப்படங்கள்),

நேர்மறை சிந்தனைகள் ஆக்கபூர்வமான செயல்களை தூண்டும்.

உறவுகளை மதிக்க முயலுங்கள்.

இதுநாள்வரை ஒருவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை நன்கு ஆராயுங்கள்.

சாதாரணமாக அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் சிறு செயல்களையும் பாராட்டுங்கள். அது தருவித்துக் கொண்ட நடிப்பாக அன்றி, மனதாரப் பாராட்டுவதாக இருக்கட்டும். இந்த வகையில் அவர் மேல் கொண்டிருக்கும் கசப்புகள் மாறலாம்.

உறவுகளுக்கு இடையே நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியது பிரிக்கும் சுவர்கள் அல்ல.... இணைக்கும் பாலங்களே என்பதை மறவாதீர்கள்.

காஞ்சிரங்காய் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘எட்டி’யென்றும் அதற்குப் பெயர். மிகுந்த கசப்பை உடையது. சிலரின் எண்ணத்தில் இந்தக் கசப்பு மட்டுமே ‘எட்டி’யிருக்கும்.

யார் மீதும், எதன் மீதும் நம் மனதில் மண்டிப்போய் இறுகிவிட்ட கசப்பு பாறைகளாக இறுகியிருக்கும். இப்பாறைகள் மெல்ல உருகியகன்று விட்டால், நம் மனமும் துப்புரவாகி விடும் நம் நரம்பு மண்டலத்தின் இறுக்கம் விலகி மிக லேசாக உணர்வோம்.

அவ்வப்போது சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து, நமது எண்ண ஓட்டம் செல்லும் போக்கினை கூர்ந்து அவதானியுங்கள். அதில் விலக்க வேண்டியவற்றை விலக்கி நம் அணுகுமுறையை நேராக்கிக் கொள்ளலாம்.

நம்மைப் பிறர் எப்படி அணுக வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வண்ணமே அல்லவா நாமும் அவர்களை அணுக வேண்டும்?

பிறருடைய தவறுகளை மன்னிக்க தயங்காதீர்கள்.

இன்னும் ஒன்று. உங்களிடமும் எந்நேரமும் குறைப் பாட்டு பாடும் நபர்களை மெல்ல தவிர்த்து விடுங்கள். அல்லது உரையாடலின்போது எதிர்மறைப் பேச்சை மாற்றிவிடுங்கள். கண்டிப்பாக குறை சொல்வதை ஊக்குவிக்காதீர்கள்.

புன்னகையை ஒரு அணிகலனாக முகத்தில் அணிந்திருங்கள். எல்லாம் நன்றாக நடப்பதாக சொல்லிக் கொள்ளுங்கள். . யத் பாவம் தத் பவதி!

உணர்வுகளின் பிரவாகம் நம்மை அடித்துக் கொண்டு போகலாகாது. பொறுமையுடன் அவற்றை எதிர்கொண்டு நாம் நிம்மதியின் கரையைச் சேர வேண்டும்.

ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், நாம், சரி எது? தவறு எது? என்ற வரையறையை ஏற்படுத்திக் கொண்டிருப்போம்.

அவற்றின் யதார்த்த நிலையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள். வேகமாக மாறிவரும் இன்றையச் சூழலுக்கு ஏற்ப அவற்றை மறுநிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

சக மனிதர்களிடம் காணப்படும் நல்ல குணங்களிலும் நடக்கின்ற நல்ல விஷயங்களிலும் நம் கவனத்தை செலுத்துதலே முறையாகும்.

நம் குறை காணும் எண்ணங்களின் மூலம் குறைகூறும் சுபாவத்திற்கு தீனி போடாதீர்கள். மனதாரப் பிறரின் நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். உங்களின் பாராட்டுகள் எதிராளியின் முகத்தில் ஏற்படுத்தும் மலர்ச்சியைக் குறித்துக் கொள்ளுங்கள்.

பரிசோதனையாக, ஒரு நாளைத் தேர்ந்து கொள்ளுங்கள்.

-அன்றைய தினம் எந்தச் சூழலிலும் நான் குறை காணமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

-வழக்கமாக, நாம் பேசாதவர்களிடம் வலிந்து போய் நலம் விசாரியுங்கள்.

-இயன்ற வரையில் சக ஊழியர்களிடமும், உறவுகளிடமும் நேயம் பாராட்டுங்கள்.

-எந்த சூழலிலும் நல்லவற்றையே தேடி கண்டு கொள்ளுங்கள்.

-தானாக சென்று பிறருக்கு உதவுங்கள்.

-குறைபாடுகள் ஏதுமற்ற விஷயங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்ற பிடிவாதத்தைத் தளர்த்துங்கள்.

-பிறர் தன்னை நடத்த வேண்டிய விதம் பற்றிய எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக கைவிடுங்கள்.

-பிறருடைய கண்ணோட்டத்தில் நிகழ்வுகளை பற்றி யோசியுங்கள்.

மேற்சொன்ன ஒரு நாள் பரிசோதனையில் உங்களுக்கு ஏற்படும் மன உணர்வுகளைப் பற்றி ஆலோசியுங்கள். இவை ஆச்சர்யமான மாற்றங்களை ஏற்படுத்தும். உங்களையே உங்களுக்கு அடையாளம் காட்டும்.

-பிறர் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறரைப் பற்றி உணர்ந்து கொள்ள இறையனாரும்,

‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்’

என்றார்.

குற்றத்தை மட்டுமே நாடினால் எப்படி?!

குழந்தைகள் யாரைப் பற்றியேனும் குறை சொல்கையில், மென்மையாகத் திருத்துங்கள். மெல்லப் புரிய வையுங்கள்.

திருத்துறேன் பேர்வழி என்று ‘குத்தம் சொல்றதே உனக்கு வேலையாப் போச்சு! இப்பவே இப்படின்னா….’ என்று அந்தக் குழந்தையிடமும் குற்றம் பாராட்டாதீர்கள்.

இனி ஒரு நகைச்சுவையுடன் குறை களைவோம்.

“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!” என்று ஒரு மனைவி மனமுருகிப் பாடிக்கொண்டிருந்தார்.

கணவன் பாட்டின் நடுவே குறுக்கிட்டார்.

“இரும்மா தங்கம்! காலையிலெழுந்தது முதல் தூங்கப்போகும் வரை எல்லாவற்றிலும் உனக்கு குறையிருக்குன்னு புலம்புவியே..... இப்போ ‘குறை ஒன்றும் இல்லை கண்ணா’ன்னு பாடினா, கண்ணனும் ‘அப்ப சரி!’ ன்னு அடுத்த வீட்டுக்கு வரம் கொடுக்க போயிட மாட்டாரா?”

“அட ஆமாங்க! அப்போ இந்தப் பாட்டை எப்படி பாடணுங்க?’’

“குறை ஒன்று இல்லை மறைமூர்த்தி கண்ணா!

கூடை கூடையாக இருக்கே கண்ணா!

பார்த்து ஏதாவது செய் கண்ணா!

பார்த்து ஏதாவது செய் கண்ணா!! “ன்னு பாடு!

“பாட்டு நல்லா இருக்குங்க! அடுப்பில் பால் காய்ச்ச வச்சீங்களே! இறக்கிட்டீங்களா?”

“ஆஹா !மறந்துட்டேனே!”

“எனக்குன்னு வந்து வாய்ச்சீங்க பாருங்க!உங்களுக்கு என்னைக் கட்டிவச்ச என் அப்பனைச் சொல்லணும்!”