தொடர்கள்
அனுபவம்
யோகக் கலையை புனிதம் கெடாமல் வழங்க வேண்டும் - யோகா குரு தீ.ஆ.கிருஷ்ணன் - புவனகிரி ஜெயபாலன்

20240710090706825.jpeg

திருமூலரின் திருமந்திரமே யோகா

​திருமூலர் 3000 வருடங்களுக்கு முன்பே யோகா கலைக்கான சூட்சுமங்களை திருமந்திரத்தில் கூறியுள்ளார். இன்று உலகம் முழுவதும் யோகாக்கலை பரவியிருந்தாலும் அது வெவ்வேறு வடிவில் பயிற்றுவிக்கப்பட்டு வந்தாலும் அதன் ஆதித்தோற்றம் தமிழகத்தில் தான் தொடங்கியுள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்று.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எத்தனையோ சித்தர்களும், ஞானிகளும் மனித உடலின் நோய்களையும் அவற்றைக்களையும் முறைகளையும் உடல் மற்றும் மனம் சார்ந்துநுணுக்கமாக ஆய்ந்து மனித குலம் உயர்வதற்கு வழங்கி இருப்பது யோகாக்கலை.

1940 ஜனவரி 8-ல் திருச்செந்தூரில் பிறந்தவர் தீ.ஆ.கிருஷ்ணன் தற்போது வயது 84இவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் படிப்புடன் சிலம்பாட்டத்தை கற்க ஆரம்பித்தார். இந்த விளையாட்டை கற்க வேண்டாம் என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் பல நூல்களை படிக்க ஆரம்பித்தார். அதில் திருமூலரின் திருமந்திரமும் ஒன்று. திருமந்திரத்தில் உள்ள பாடல்களைப் படித்த போது யோகாக்கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் தேடல்களில்கிடைத்தது பெல்லூர் சுந்தரம் நூல்கள். அதன் மூலம் ஆசனங்களைப் பயிலத் தொடங்கினார். பின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களில் ஒருவரான கவியோகி சுத்தானந்த பாரதியாரிடம் யோகாக்கலையைக் கற்றுக் கொண்டார்.

​அகத்தியர் வழி தோன்றிய வழி வழி வந்தவர்கள் வரிசையில் கிரியா பாபாவும் ஒருவர் இவர் தன்னை காற்றில் கரைத்துக் கொண்டதாக சொல்கிறார்கள். இமயமலைப் பகுதியில் இவர் வசித்த அந்தக் குகையில் இப்போதும் காற்று வடிவில் நம்மை அவர் தீண்டுவதை உணர முடிகிறது என்று சொல்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் கிரியா பாபாவின் குகைக்கு சென்றுள்ளார் என்பது பத்திரிக்கைச் செய்தி.

​1972 காலகட்டத்தில் சிவானந்தா யோகாசன சாலையில் அவர் பயின்றபோது, அங்கே குருவின் பெயரை ஐந்தாயிரம் முறை எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். அதுதான் நாம் அவர்களுக்கு தரக்கூடிய கட்டணம்.

​கிரியா பாபாவின் வழியில் வந்த எஸ்.ஏ.ஏ.ராமையாவிடம் 1975-இல் யோகா பயின்றதாக கூறும் அவர், அந்த ஆசிரமத்தில் 10 முதல் 15 வகை ஆசனங்கள் வரை செய்வார்கள்.

​அப்போது அங்கே வேறு எந்த விதமான சிந்தனையும் இருக்கக் கூடாது என்றவர், பல குருமார்களை நாடி குமரியில் தொடங்கி இமயமலை வரையும் யோகத்திற்காக பயணப்பட்டு இருக்கிறேன். அந்தப் பயணங்கள் மூலம் கிடைத்த கருப்பொருள்தான் எனக்கு கிடைத்திருக்கும் யோகம் என்னும் பொக்கிஷம்.

​சமீபத்தில் இலங்கையில் உள்ள யோகாப்பள்ளிகளின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச் சென்று சிவயோகி திருச்செந்தூர் அ.கிருஷ்ணனுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பதுடன், குரு பாரம்பரிய முறைப்படி பாத பூஜை மற்றும் மரியாதை செய்து ஆசீர்வாதம் பெற்றனர் என்றார்.

2024071009085044.jpeg

​‘இலங்கையிலுள்ள சில இடங்களில் யோகாக்கலை குறித்து கருத்தரங்கம் மற்றும் பயலரங்கு நடத்தினேன்’ என்றவரிடம் யோகாவின் தன்மை பற்றி கேட்க யோகாக்கலையில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான ஆசனங்களை செய்ய வேண்டும் என்றால் வாழ்நாள் போதாது. நம் உடலும் மனமும் உயர்வடைய போதுமான ஆசனங்களை செய்தாலே போதுமானது என்பதை உணர வேண்டும். எனவே மனிதனுக்கு உகந்தவாறு மனித உடலுக்கும், மனதுக்கும் அறிவுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தையும் உறுதியும் தரக்கூடிய சில ஆசனங்களை செய்தாலே போதும். உலகெங்கும் தற்போது பரவியுள்ள யோகா, தற்போது சில இடங்களில் வியாபார பொருளாக மாறி வருகிறது.

​நாம் ஏதோ கை கால் அசைப்பது, ஏசி அறையில் அமர்ந்து செய்வது, வியர்த்துக் கொட்டும் அளவுக்கு அதை ஒரு உடற்பயிற்சி போன்று செய்வது, சிலர் சில விதமான உபகரணங்களை வைத்துக் கொண்டு யோகா செய்வது, சில நாற்காலிகளில் அமர்ந்தபடி யோகா செய்வது என்பதெல்லாம் சீர்கேடு என்றே சொல்லலாம் இன்னும் சிலர் விதவிதமான முறைகளில் யோகா செய்து பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

​சிலர் வியாபார நோக்கில் கொண்டு செல்லும் போது, அதனால் நடக்கிற குறைபாடுகள் மிகுந்த கவலை அளிக்கிறது. யோகா கலையை அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு அதன் புனிதம் கெடாமல் வழங்க வேண்டும்.

​இயல்பான சுவாசத்தில் சுகமான நிலையில் இருந்து செய்வதே யோகாசனம். அரை சுகம்,ஸ்ரிதம், ஆசனம் என்று மூன்று பிரிவாக வைத்து செய்வது நல்லது.

​​ யோகாக் கலையை வளர்ப்பதற்கும் அதன் மூலம் பல யோகிகளை உருவாக்குவதற்கும் இறைவன் வாய்ப்பளித்து இருக்கிறான் என்பதை உணர்ந்து தொண்டு ஆற்றுகிறேன் என்றார்.

​திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை மந்தைவெளி குருகுல யோகா ஆசிரமத்தில் “திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு ஆராய்ச்சி நிறுவனம்” என்ற பெயரில் யோகாக்கலையை குரு பாரம்பரிய வழியில் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற சில சீடர்கள் ஹாங்காங், இலங்கை, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பிரசித்திப்பெற்றவர்களாக விளங்கி யோகாவை பயிற்றுவித்து வருகின்றனர்.