தொடர்கள்
கவர் ஸ்டோரி
முடிசூட்டு விழா !! ஹோல்ட் ஆன்-விகடகவியார்

20240626173749617.jpeg

கடந்த ஒரு ஆண்டாகவே உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் என்ற வதந்தி றெக்கை கட்டி பறந்து கொண்டு இருருக்கிறது என்று கூறிக்கொண்டு அலுவலகம் வந்த விகடகவியார் இதை குறித்து கொள்ளும் சேதியை என்று மடமடவென்று சொல்ல ஆரம்பித்தார்..

பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்ற பிறகு விரைவில் துணை முதல்வர் உதயநிதி என்ற செய்தி வலம் வரத் தொடங்கியது.

முதல்வர் இந்த மாதம் இறுதியில் வெளிநாடு செல்ல இருந்தார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்ற செய்தி கிட்டத்தட்ட உறுதி என்பது போல தான் எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.

சில தினங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 100 ஐஏஎஸ் அதிகாரிகளை துறை மாற்றி முதல்வர் அறிவித்தார்.

எல்லாமே உதயநிதி ஸ்டாலின் வசதிக்காக இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் கிட்டத்தட்ட ஸ்டாலினுக்கு அடுத்து அவர்தான் என்று ஏற்கனவே திமுக தலைமை அவருக்கு தரும் முக்கியத்துவம் மூலம் எல்லோருக்கும் தெளிவாக சொல்லிவிட்டது.

முரசொலியில் அவருக்கு புகழ்ந்து வரும் விளம்பரங்கள் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தரும் முக்கியத்துவம் இவை தவிரஅமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசும் உரைகள் இது எல்லாமே உதயநிதி ஸ்டாலின் முக்கியத்துவம் வெளிப்பாடுதான்.

இதன் நடுவே கட்சியை சீரமைக்க ஒரு குழுவை அமைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்தக் குழுவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, ஏவா வேலு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ் .பாரதி ஆகியோர் இந்தக் குழுவில் இருப்பார்கள் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த குழு செய்ய வேண்டியது கட்சியை அமைப்பு ரீதியாக சீரமைக்க கட்சியில் மாறுதல் போன்ற பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தக் குழு அறிவிப்பதற்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் இவர்களை அழைத்து என்ன பரிந்துரை செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று ஒரு பாடம் எடுத்துவிட்டு தான் இந்தக் குழுவையே அமைத்தார் என்ற பேச்சு அறிவாலயத்தில் வரத் தொடங்கிவிட்டது.

20240626173953697.jpg

இந்தக் குழு அமைத்ததில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு கடும் கோபம் கட்சியை மாற்றி அமைப்பது பற்றி கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த தலைவர் என்னிடம் யாரும் பேசவில்லை. அந்தக் குழுவிலும் நான் இல்லை இந்தக் குழுவில் இருப்பவர்கள் கட்சிக்கு எப்போது வந்தார்கள் ? இவர்களை வைத்து கட்சியை சீரமைப்பதா என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.

இந்த விஷயம் முதலமைச்சர் ஸ்டாலின் காதுக்கும் எட்டியது. ஆனால் முதலமைச்சர் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்தக் குழுவிடம் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டார். அந்தக் குழு அறிவித்த மறு தினமே தங்கள் ஆலோசனையை ஆரம்பித்துவிட்டது.

அதற்கு மறுநாள் அந்த குழுவை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்த குழுவை நீங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி உறுப்பினர்களிடமும் கருத்து கேளுங்கள் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என சொல்லுவார்கள் என்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் சொன்னார்.

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவில் மூத்த தலைவர்கள் எல்லாம் இருக்கும்போது சமீபத்தில் அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா என்று கேட்டிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திமுகவில் வன்னியர்கள் அதிகம் உள்ள கட்சி. ஆனால் வன்னியர்களுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

மூத்த அமைச்சர் வன்னியரான துரைமுருகன் புறக்கணிக்கப்படுகிறார் என்பதைத்தான் இப்படி சூசகமாக டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டார்.இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துரைமுருகன் சொல்லிதான் எடப்பாடியும் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார்கள் என்று உளவுத்துறை முதல்வருக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது கட்சியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரத் தொடங்கி இருக்கிறது.

இப்போதைக்கு முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

முதல்வர் தனது குடும்பத்தின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினை அழைத்து அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

எனக்கு கூட துணை முதல்வர் பதவி உடனே கிடைக்கவில்லை கலைஞர் ரொம்பவும் தயங்கி இப்போது வேண்டாம் என்று சொல்லி தள்ளி வைத்துக் கொண்டே இருந்தார்.

பேராசிரியர் தான் எனக்கு சிபாரிசு செய்து எனக்கு துணை முதல்வர் பதவி வாங்கித் தந்தார்.

அப்போது எனக்காக அண்ணன் அழகிரியிடம் சம்மதம் வாங்கி, அவர் பேசி சம்மதம் என்றெல்லாம் விளக்கம் சொல்லி சமாதானம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

அதனை தொடர்ந்து தான் இளைஞர் அணி கூட்டத்தில் பேசும்போது துணை முதல்வர் பதவியை விட இளைஞர் அணி பதவியை தான் பெரிதாக நினைக்கிறேன் என்று பேசி சமாளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

இப்போதைக்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி முடிசூட்டு விழா ஹோல்ட் ஆன் என்கிறார்கள் அறிவாலயம் தரப்பில்…!என்று சொல்லிவிட்டு அடுத்த விமானத்தில் டெல்லிக்கு செல்ல வேண்டும் நேரம் ஆகிவிட்டது என்று கூறி விகடகவியார் விடைபெற்று சென்றார்.