(களத்தில்... பால்கி)
சென்ற 30 ஜூன் 2024 அன்றே இந்தியா தென்னாஃப்ரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதும் உலகமே கொண்டாட ஆரம்பித்ததும் அத்தனை தொலை தொடர்பு வசதிகள் வாயிலாக எட்டுத் திக்கிலும் எட்டாத பூமி புள்ளியிலும் தன்னிச்சையாகவே நிரம்பி வழிந்தன.
யூரோ 2024ஐ பின்னுக்கு தள்ளியது இந்திய கிரிக்கெட் வெற்றி.
வெற்றிக் கொண்டாட்டங்கள் 4 ஜூலை 2024 அதிகாலையிலிருந்தே இந்தியாவிற்குள் புகுந்துவிட்டது.
16 மணி நேரம் ஒரே மூச்சில் மேற்கிந்திய தீவில் கிளம்பிய ஏர் இந்தியா தனி விமானம் புது தில்லியில் அதிகாலை இறங்கியது தான் தாமதம் கொண்டாட்டங்கள் இந்தியாவில் விரிந்து பறந்தது. கட்டுக்கு அடங்காத தன்னிச்சையாக தானாக வந்த கூட்டமிவை.
சுமார் முக்கால் மணி நேரம் பிரதமருடன் காலை டிஃபனுடனான உரையாடல் ஒரு பெரிய வரவேற்பு நிகழ்வு, அடுத்து வந்த மும்பை வரவேற்புகளுக்கு ஒரு முன்னுரை எழுதி விட்டது என்பது தான் சரி.
அதென்ன ட்ராஃபி வாங்கப்போகப் போன போது அந்த நாட்டிய நடை? அந்த பிச்சின் மண் சாப்பிடறதுக்கு டேஸ்ட்டா இருந்ததா? என்ற மோடியின் கலாய்ப்புகள் ரசிக்கும்படியாக இருந்தன. வந்த விருந்தினர் அனைவரையும் ஏதோ காலேஜ் ரீயூனியன் மீட்டிங்க் போலவே ஒரு ரிலாக்ஸடான சூழ்நிலையிலேயே நடந்தது.
மேக்சிமம் சிட்டி என்ற பேர் தாங்கிய மும்பை தனது பேருக்கேற்ப ஒரு பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தது.
மேற்கிந்திய தீவிலிருந்து புறப்படுவதற்கு முன்னமேயே நாலாந்தேதி சாய்ந்திரம் 5-7 மணி அளவில் மும்பை மரைன் டிரைவில் நரிமன் பாயின்ட்டில் ஆரம்பித்து வான்கடே ஸ்டேடியம் வரை நம்ம கொண்டாட்ட ஊர்வலங்களை ஆரம்பிச்சி ஸ்டேடியத்தில் வரவேற்பு நிகழ்சிகளை வச்சிப்போமா என்றே ரோஹித் ஷர்மாவின் எக்ஸ் பக்கம் அழத்தது. பிசிசிஐ சார்பில் ஜெய் ஷாவும் அதே தொனியில் அழைக்க, தயாராகி விட்டது மும்பை.
நானும் தான்.
மூன்று மணியளவில் அந்தேரி லோகல் ரயில் நிலையத்தில் நுழைய முடியாமல் எப்படியோ முண்டியடித்துக்கொண்டு ஒரு லோகலில் உள்ளே நுழைத்துக் கொண்டு விட்டேன் என்னை.
ஒரு மணி நேர பயணம். வழி நெடுக இந்தியா இந்தியா, வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய், ஆரவார கோஷங்கள். ரயில் பெட்டிக்குள் மட்டுமில்லாது அது கடந்து போன தண்டவாளப் பாதையின் அக்கம்பக்க குடியிருப்புகளில், பாதை சந்திப்புகளிலும் பிரதிபலித்தது. பெட்டிக்குள் கிளம்பிய கோஷம் வெளியே இருந்த மக்களைக் உசுப்பேற்றி மீண்டும் பெட்டிக்குள் இரட்டிப்பாகவே புகுந்து இடைவிடாது கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒரு பேட்டர்னில் கோஷங்கள் எழும்பி அடங்கும் மீண்டும் கிளம்பும். மும்பைச்சா ராஜா ரோஹித் ஷர்மா [மும்பையின் ராஜா ரோஹித் ஷர்மா] என்ற கோஷம் அனைவரில் அடங்க மறுத்தது.
சார்னி ரோட் ஸ்டேஷனிலிருந்தே மரைன் டிரைவ் தெரிய ஆரம்பித்தது. அடுத்து வந்தது மரைன் டிரைவ் ஸ்டேஷன். ஜன்னலூடே எப்போதும் பார்க்கும் கடல் அலையைக் காணவில்லை. கண்டது தலையலையை, கூடவே கோஷங்கள். எக்ஸ்டஸி. பரவசம். அந்த நிலையை எழுத்தில் கடத்துவது கஷ்டம்.
ஆடவர் பெண்டிர், சிறுவர், சீனியர் சிடிசன்கள் தன்னை மறந்த நிலையில் இயற்கையாகவே கேட்கும் ஒலிக்கேற்ப கோஷத்தின் பின் பாட்டானாலும் சரி, ட்ரம்ஸ் மேள இசைகேற்ப ஆட்டமும் சரி ஒரு வித கட்டுப்பாடு இன்றி சுய ரூபத்தில் ஏற்ற இறக்க தாழ்வின்றி நிர்மலமான நிலைமை மாறி இருந்தது சத்தியம். ஆயீ ஷப்பத் ! அம்மா சத்தியமாக.
அடுத்து கடைசீ ஸ்டேஷன் சர்ச்கேட் ஸ்டேஷன் தான்…லோக்கல் மெதுவாக ஊர்ந்து செல்ல குறுக்கிட்டது வான்கடே ஸ்டேடியம். நிறம்பி வழிந்தது தெரிந்தது.
சர்ச்கேட் ஸ்டேஷனும் வந்தது. ஸ்டேஷனில் ஏற்கெனவே நிரம்பியிருந்த கூட்டத்தில் கலந்தது பெட்டியிலிருந்து இறங்கிய ஆயிரங்கள்.
நானும் ஆயிரத்தில் ஒருவனானேன். கூட்ட அலைகளின் போக்கிலேயே என்னையும் சமர்பித்துக்கொண்டுவிட்டேன். வேற ஒண்ணும் மாற்றி பண்ணிவிடவும் முடியாது என்பது தான் அப்போதைய விதி. சுகமான விதிதான்.
சல சல மழை. குடைகள் விறிய மறுத்தன. இல்லை இல்லை மறந்தன. ஊர்ந்த பக்தர்கள் இதையெல்லம் மறந்தே விட்டனர். கோஷங்களும் தாரைத் தப்பட்ட ஓசைகளில் அங்கு ஒரு தனி சுகானுபவமே காணப்பட்டது.
அந்த பாதை நரிமன் பாயிண்டை நோக்கி இருந்தது. ஆனால் கடற்கரையை நெருங்க நெருங்க நெரிசல் நெருக்கியது. அது சரியான வான்டேஜ் பாயின்ட் தான். இந்தியக் கொடிகள் என்ன, வீரர்களின் படம் தாங்கிய பானர்கள் என்ன அனைத்தும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
ஓவென்று வந்து வந்து ஓலமிடும் கடல் அலைகளின் சப்தம் அடங்கிப் போனது. கோஷங்கள் வானைப் பிளந்தன. சப்தம் மட்டும் தானா, ரசிகர்களின் ஊர்தலே அலைகளைப் போலவே இருந்தன கண்டு கடல் அலைகளும் பிரம்மித்துப் போய்விட்டன என்றே சொல்லலாம்.
மும்பை ஸ்தம்பித்து நின்றது.
அனைத்து மதங்களும் கிரிக்கெட் மதத்திற்கு முன்னால் அழிந்து போயின.
புது தில்லியிலிருந்து ரோஹித் ஷர்மா படையினர் மும்பை வந்து சேர்வதே தாமதமானது.
ஒரு வழியாக லேட்டானாலும், முடியாத சிலர் விலகி போயிருந்தாலும் அங்கு மிஞ்சியிருந்த லட்சங்கள் கொண்டாட்டங்களில் திளைத்துப் போயினர். திறந்த வெளி டபுள் டெக்கர் பஸ்ஸில் வீரர்கள் கோப்பையை ஆட்டியபடியே ஆடியபடியே நத்தையும் தோற்றிடும் வேகத்தில் தள்ளப்பட்டது அந்த பஸ். பாதையின் ஓரத்தில் இருக்கும் மரங்களின் மேல் நின்று ஆரவாரம் செய்த பக்தர்களுக்கும் கேட்ட படியே போஸ் கொடுத்தபடியே அருள் பாலித்தனர்.
வான்கடே ஸ்டேடியத்தில் வரவேற்பு தட புடலாக ஒருவர் பின் ஒருவராக அழைக்கப்பட்டு பேசினர்.
ரோஹித் ஷர்மா ஹார்திக் பண்டியாவின் கடைசி ஓவரின் சிறப்பைக் கூறி சபாஷிட அதுவரை, ஹார்திக் பண்டியாவை ஏற்காத மும்பை பக்தர்கள் ஹார்திக் ஹார்திகென்று முழங்க ஆரம்பித்தனர்.
ஹப்பா..ஒரு வழியாக, சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல்லில் மும்பை இண்டியன்ஸ் கடைசி டீமுக்கு முன்னாடி நிலையில் இருந்தது. அந்த டீமில் ரோஹித் ஷர்மாவைத் தடாலடியாகத் தூக்கிவிட்டு ஹார்திக்கை கேப்டனாக முடி சூட்டியது பக்தர்களுக்கு சற்றும் பிடிக்காமல் போனதை யார் மறந்திருப்பார்கள்.
இந்த புகழார களிம்பு ஹார்திக்கிற்கு ஒரு பெரும் மருந்து. முக்கியமாக மும்பை இண்டியன்ஸ் டீம் ஓனர் நிதா அம்பானிக்கு தலைவலியைக் குறைத்திருக்கும் என நம்பலாம். வரும் ஐபிஎல் சீசனில் ரோஹித் ஷர்மா எந்த அணிக்கு செல்வார் என்பது ஒரு கேள்விக்குறியாகியிருக்கிறது.
இனி இந்தியாவிற்காக T20 மெட்சுகளில் ஆட மாட்டேன் என்று சொன்ன ரோஹித் ஐபிஎல்லில் தொடர்வேன் என்று தான் சொல்லியிருந்தார். ஆக இந்த உலகக் கோப்பையை வென்று வந்த கேப்டன் என்ற முறையிலும், இதுவரை மும்பை இண்டியன்ஸ்க்கே ஐந்து முறை ஐபிஎல் ட்ராஃபி ஜெயித்துக் கொடுத்த கேப்டன் என்ற முறையிலும் அவரது பவர் அதிகமாகியுள்ளது. இது வரை ஐபிஎல் ட்ராஃபியை ஜெயிக்காத டீம் ஓனர்களின் கவனத்திற்கு.
மும்பை ஸ்தம்பித்தா கிரிக்கெட் ஸ்தம்பித்ததா…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு முறை இறுதிப் போட்டியில் வந்தும் வெல்ல இயலவில்லை.
போன 2022 T20 போட்டியிலும் இறுதிப் போட்டியில் வந்தும் வெல்ல இயலவில்லை. இங்கிலாந்து தட்டிச் சென்றது.
2023 ல் ஒன் டே இன்டர்னேஷனல் உலகக் கோப்பையின் இறுதியிலும் ஆஸ்த்ரேலியாவிடம் தோற்றுப்போனோம். இந்த க(கொ)டும் நிலையை மனதில் கொண்டு ராஹுல் டிராவிட் விலக எண்ணுகையில் ரோஹித் ஷர்மா தான் பொறுங்கள், 2024 T20 உலகக் கோப்பையை அள்ளுவோம் என்ற ஊக்கம் அன்றிலிருந்து ஒரு பெரும் தவமாகவே நமது டீமில் இறங்கிட கிடைத்த பரிசு தான் இது.
அந்த மேடையிலேயே வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ125 கோடி பரிசு தொகையை பிசிசியை அறிவித்தது.
அடுத்த முறை உலகக் கோப்பையை ஜெயிக்கும் வரை இந்த கோஷங்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.
Leave a comment
Upload