தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 27- பத்மா அமர்நாத்

20240514160717300.jpg

It’s a very strange phenomenon, but when we reduce what we own and essentially “detox” our house, it has a ‘ detox ‘ effect on our bodies as well. - Marie Kondo

தேவையற்றப் பொருட்களை அப்புறப்படுத்திய பின், தேவையான பொருட்களை எங்கே வைப்பது என்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் இடம் உண்டு. அதை மாற்றி வைப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

துணிகளைச் சீராக அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் நான் கவனிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான ஆடைகள் ஹேங்கரில் மாட்டி வைக்கப்படுகிறது. வழு வழுப்பான நைலெக்ஸ், கனமான லெதர் (leather), கம்பளி (woollen) அல்லது மடித்து வைக்க முடியாத விலை உயர்ந்த ஆடைகளை ஹேங்கரில் மாட்டிவிடலாம். அன்றாடம் உபயோகப்படுத்தும் சுடிதார், காட்டன் புடவைகளுக்கு, ஹேங்கர் தேவை இல்லை. ஆடைகள் மற்றும் பிற பொருட்களின் எண்ணிக்கையும் அதற்கேற்றவாறு இருக்கவேண்டியது அவசியம்.

சிறு வயதில் நான் பார்த்து வளர்ந்த காட்சி, எங்கள் வீட்டோடு தங்கியிருந்த சங்கரம்மா, மாலை வேளைகளில், துவைத்துக் காய்ந்த ஆடைகளைக் கொண்டு வந்து, ஹாலில் போடுவார். அதற்காகவே காத்திருக்கும் என் (அம்மா வழி) பாட்டி, அமர்ந்துகொண்டு, ஒவ்வோரு ஆடையாக உதறி, நன்கு தேய்த்து, சீராக மடிப்பார். தேய்த்து மடிக்கும்போதே, உள்ளாடை சீராக துவைக்கப்பட்டிருக்கா, சட்டையில் பட்டன் இருக்கா, பாவாடை நாடா சீராக உள்ளதா, சீருடையில் பேனா மைக் கறை போய்விட்டதா என்று ஒவ்வொன்றாகப் பார்த்து மடிப்பார். இந்த காட்சி இன்று எத்தனை வீடுகளில் உள்ளதென்று தெரியவில்லை.

ஆடைகளை, இஸ்திரி செய்தார் போல, நன்கு தேய்த்து மடிப்பது ஒரு கலை. அத்துடன், ஆடைகளை நம் கைகளால் தேய்த்து மடிக்கும்போது, நம்முடைய (positivity) நேர்மறை ஆற்றல், ஆடைகளுக்குள் செல்லும் என்று கேத்தி ஹிரானோ (Cathy Hirano) என்ற ஜப்பானிய எழுத்தாளர் தன் புத்தகத்தில் எழுதி உள்ளார். நம்மை பாதுகாக்கும் ஆடைகளை, நாமும் அன்புடன் பாதுகாக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் கேத்தி.

தனிக் குடும்பங்களாக, அனைவரும் வேலைக்குச் செல்லும் இன்றைய காலக்கட்டத்தில், பொறுமையுடன் அமர்ந்து ஆடைகளை மடிப்பது சற்று கடினம் தான். ஆனால், தேவையற்ற ஆடைகளைக் கழித்த பின்னர், இருப்பவற்றை சீராக மடித்து, அடுக்கிவைத்தால், பார்க்க மிக அழகாக இருக்கும். அதேசமயம், அலமாரியில், அடுக்கி வைத்த ஆடைகளின் உயரம், வலதுபுறம் உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இடதுபுறம் கீழ்நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்ற குறிப்பையும் தந்துள்ளார். பொருட்களை குறைவான அளவில், எளிமையான முறையில் அடுக்கிவைத்தால், பார்த்தவுடனே நம்மிடம் என்ன இருக்கு, எத்தனை இருக்கு, எது எங்கே இருக்கு என்பவைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிடும்.

அடுத்து, நாம் கவனிக்கத் தவறும் முக்கிய பொருள், கைப்பை தினசரி வீடு திரும்பிய உடன், நாம் சுத்தம் செய்யவேண்டிய பொருள், நம்முடைய கைப்பை. பெண்களின் ஹேன்ட்பேக்கைப் பற்றி பல காமெடிகள் உலா வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். நமக்குக் கோபம் வந்தாலும், ‘நம்ம பேக் அப்படி தானே இருக்கு…’ என்று பலர் மனதிற்குள் சொல்லிக்கொள்வோம். தினசரி வீடு திரும்பியதும், பையிலிருந்து ஐடி கார்ட், பஸ் பாஸ், ரயில் பாஸ், பணம், சாவி, கைக்குட்டை, ஆவணங்கள், கைப்பேசி, பேனா, தண்ணீர் பாட்டில், சார்ஜர் என அனைத்தையும் வெளியேற்றி, பையை காலியாக்குங்கள்.

நமக்காக சுமந்து உழைக்கும் பையை, நாம் தான் நன்றியுணர்வுடன் பாதுகாக்க வேண்டும். உபயோகப்படுத்தாத சமயங்களிலும் கூட, சதா சர்வகாலமும், அதனுள் பொருட்களைத் திணித்து வைத்திருந்தால், உங்கள் கைப்பைகள் விரைவிலேயே சோர்ந்து போய், அதன் தன்மையை இழந்துவிடும்..

அச்சோ… ஐடி கார்டை அந்த ஹேன்ட்பேக்கிலேயே விட்டு விட்டேன்...”

ஓ காட்… பேனா அந்த பேக்ல இருக்கு...” என்று சொல்லி, தேவையில்லாமல் நம்மில் எத்தனைப் பேர் புதிய பேனா வாங்கி இருப்போம்!

அலமாரியில் அதற்கென்று ஒரு அழகான டிரே ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். வாலெட், சாவி, ஐடி கார்ட், மணி பர்ஸ், பேனா, கூலிங் கிலாஸ், லிப் பாம், என்று அனைத்தையும் அதில் வைத்துவிடுங்கள். எல்லாவற்றையும் வெளியேற்றினால், மறுநாள் வேறு பையை எடுத்துச் செல்லும்போது, வெளியேற்றியப் பொருட்களை, அப்படியேப் போட்டுக்கொள்ளலாம். விடுபட்டுப் போகும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

சமையல் அறை குளியல் அறை போன்ற இடங்களிலும் கூட, பொருட்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். உபயோகிக்காத சாம்பிள் பாக்கெட்டுகள், இலவச பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரீம், ஷாம்பூ, சோப்பு போன்றவற்றை வாங்கி குவித்திருப்போம். அவ்வாறு வாங்குவதை நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்.

காலாவதியான மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் அப்புறப்படுத்த வேண்டும். நீங்கள் வசிக்கும் வீட்டிற்கும், அதிலுள்ளப் பொருட்களுக்கும் இடையே சமநிலையை உண்டாக்கும் செயலாக, இந்த சீரமைப்புப் பணி அமையும்.எல்லாவற்றிற்கும் மேலாக, தேவையற்றப் பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டைச் சீரமைக்கும் பணி, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

தொடர்ந்து பேசுவோம்…. இணைந்திருங்கள்.

Evolve Encourage Empower