தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம் 13 - பொன் ஐஸ்வர்யா

20240513162844781.jpg

வரவும் - செலவும்

அமெரிக்க இந்தியர்களின் சராசரி தனி நபர் வருமானம் என்று பார்த்தால் இந்திய சம்பளத்தைவிட தோராயமாய் நான்கு/ஐந்து மடங்கு வரை அதிகம் இருக்கலாம். இந்தியாவில் மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கியவர் இங்கே ஆரம்பத்தில் இந்திய ரூபாயில் ஆறு லட்சம் பெறக்கூடும். இது பெரும்பாலான ஐ.டி தொழில்நுட்ப பொறியாளர்கள் போன்ற உத்யோக மாற்றலில் சென்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மருத்துவம் படித்து சிறப்பு மருத்துவர்களாக பணிபுரிபவர்கள், வணிகர்கள் தொழிலதிபர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்களது வருமானம் நிறைய வேறுபடும்.

வரவு நான்கு மடங்கு அதிகமானாலும் அதற்கு ஏற்ப செலவும் இந்தியாவை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகம். மாத வருமானத்தில் கணிசமான பகுதி வீட்டு வாடகையாக சென்றுவிடும். சென்னையில் வசதியான மூன்று பெட்ரூம் ப்ளாட் முப்பது ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்கு கிடைத்து விடும். அமெரிக்காவில் ஒரு நல்ல இரண்டு பெட்ரூம் ப்ளாட்டே இரண்டு லட்சம். வருமான வரி கிட்டத்தட்ட நம்மூர் மாதிரிதான், 20-25% சம்பளத்தில் பிடித்து விடுவார்கள். இதற்கு மேல் கட்டாய இன்சூரன்ஸ் வகையில் ஒரு தொகை போகும். மொத்தத்தில் வருமானவரி, விட்டு வாடகை, இன்சூரன்ஸ் வகையறா மட்டுமே சம்பளத்தில் சரிபாதியை சாப்பிட்டு விடும்.

கார் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்வது கடினம் அல்லவா? . சுமாரான கார் வாங்கினாலே இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிகர் டாலர் தேவை. லோனில் வாங்கினால் அதற்கான EMI தனி. ஆனால் பெட்ரோல் செலவு அதிகமில்லை. அன்றாடம் மாறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் விலை காலன் மூனேகால் மூன்றரை டாலர். அதாவது 3.8 லிட்டர் பெட்ரோல் 285 ரூபாய் என்றால் லிட்டர் சுமார் 75 ரூபாய். சாலைகள் பிரமாதமாக இருப்பதால் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

வீட்டு உபயோக மின்சார கட்டணம் யூனிட்டுக்கு தோராயமாய் எட்டு ரூபாய் வருகிறது. அமெரிக்க மக்கள் சாப்பிடும் ப்ரெட் ஓட்ஸ் பால் சிக்கன் முட்டை வெண்ணெய் ஐஸ்கிரீம் உருளைக்கிழங்கு ஆப்பிள் வாழைப்பழம் போன்றவை ஏறத்தாழ இந்திய விலைதான். ஆனால் இந்திய உணவு வகைகள், காய்கறிகள் பக்கம் போனால் ஐந்தாறு மடங்கு அதிக கிராக்கி. தக்காளி கிலோ முன்னூறு நானூறு ரூபாய் மற்றைய காய்கறிகள் கிலோ ஐநூறு அறுநூறு ஆகும் .பொருட்கள் அனைத்தும் கடுமையான தரக் கட்டுப்பாட்டுடன் மிகவும் சுத்தமானதாக இருக்கும் என்பது உண்மைதான்.

20240513162956798.jpg

வெங்காயம் தக்காளி விலையும் ஆப்பிள் ஆரஞ்சு விலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். தேங்காய் “கோஸ்டா ரிகா” நாட்டிலிருந்து வருகிறது, சுமாரான சைஸ் தேங்காய் மூன்று டாலர் (ரூ 250). மட்டன் மீன் போன்ற அசைவ விலையும் இதே அளவில்தான்.

20240513162404822.jpg

நம்மூர் ஜியெஸ்டி போல இங்கு கூட்டு விற்பனை வரி உண்டு. புளோரிடா மாகாணத்தில் சூப்பர் மார்கெட்டில் வாங்கும் பெரும்பாலான பொருட்களுக்கு கூட்டு விற்பனை வரி. ( combined sales tax )7% பெரும்பாலான உணவுப் பண்டங்களுக்கு வரி இல்லை என்பது ஆறுதல்.

20240513163209993.jpg

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இந்தியாவை விட மலிவு. நல்ல தரமாகவும் இருக்கும். லேப்டாப், டி.வி, மியூசிக் சிஸ்டம் எல்லாம் நம்மூரைக் காட்டிலும் 25-30% விலைக் குறைவு, இங்கே வீடுகளில் சாதாரணமாய் பயன்படுத்தும் ரெப்ரெஜிரேட்டர் கொள்ளளவில் பெரியதாகவும் நவீன வசதிகளும் கொண்டவை. விலை சுமார் இரண்டாயிரம் டாலர். நம்மூர் 165 லிட்டர் சிங்கிள் டோர் டைப்பெல்லாம் கண்ணில் படவில்லை.

வால்மார்ட், பப்லிக்ஸ், லொட்டே, டார்கெட் போன்றவை பிரபலமான சில்லரை பல்பொருள் அங்காடிகள். Costco என்பது மொத்த வியாபார அங்காடி என்பதால் பொருட்கள் விலை இங்கே சற்று குறைவு. ஆனால் ஆண்டு சந்தா செலுத்திய உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி. Taaza Mart போன்ற இந்தியக் கடைகள் இந்தியர்களுக்கு தேவையான எல்லா மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். வாழைத்தண்டு கருவேப்பிலை எல்லாம் கிடைக்கும் ஆனால் விலை ஒரு துண்டு முன்னூறு ரூபாய்.

ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் டின்னர் சாப்பிட நாற்பது டாலர் பில்லும் 10% டிப்ஸும் ஆகிறது. அதே காசில் பத்து நாட்களுக்கு வேண்டிய மளிகை வாங்கி விடலாம் அல்லது ஒரு சுமாரான டிவியோ அல்லது ஒரு பிராண்டட் ஜீன்ஸோ வாங்கலாம்.

20240513163317449.jpg

சூப்பர் மார்கெட்டுகளில் செயல்படும் சுய செக்கவுட் (Self Check Out) சிஸ்டம் மிகவும் சிறப்பு. வாடிக்கையாளர்கள் தாங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து பார்கோடுகளை SCO மெஷினில் ஸ்கேன் செய்து, மெஷின் காட்டும் தொகையை கார்ட் மூலம் செலுத்தி விட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு நடக்கலாம். இருபது பில்லிங் கவுண்டர்களில் இருபது ஊழியர்களுக்கு பதில் ஒரே ஒரு சூப்பர்வைசர் தூரத்தில் நின்று கண்காணிக்கிறார்.

20240513163055991.jpg

“எதை எடுத்தாலும் நூறு ரூபாய்” என்பது மாதிரி அமெரிக்காவில் டாலர் ட்ரீ (Dollar Tree) என்கிற கடை இருக்கிறது. எந்தப் பொருளை எடுத்தாலும் ஒன்றேகால் டாலர். நிறைய நல்லப் பொருட்களும் கிடைக்கும். பிறந்த நாள் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு அலங்காரப் பொருட்கள், எழுதுபொருட்கள், விளையாட்டு சாமான்கள், சமையலறை உபகரணங்கள், ஒப்பனைப் பொருட்கள் என்று நிறைய பொருட்களை தலா ஒன்றேகால் டாலருக்கு விற்கிறார்கள்.

மொத்தத்தில் ஒற்றை சம்பளமாக இருந்தால் அமெரிக்கா வந்தாலும் பெரிதாய் எதுவும் கையில் நிற்காது என்பது நிதர்சனம்.கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால் கணிசமாக சேமிக்கலாம்.

அமெரிக்க வாழ்வில் வரவுக்கு தகுந்த அளவில் செலவும் பெருகும் என்பதே நிதர்சனம்!

ஆனால் அன்றாடம் தண்ணீர் வரவில்லை, மின்சாரம் இல்லை என்பது போன்ற இம்சைகள் இல்லாமல், இயல்பு வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட தேவையில்லாத தேசம்.....

பயணம் தொடரும் …